ஒரு காலத்தில் இந்த கிராமம் பசுமையாக இருந்ததாக இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். "நாங்கள் இயற்கையுடன் வாழ்ந்துள்ளோம், அதிலிருந்து எங்கள் தேவைகளை எப்போதும் பூர்த்தி செய்துள்ளோம்", என்று ஒரு குறு விவசாயியான, பழங்குடியின மூப்பர் அட்யா மோட்டா கூறுகிறார். "ஆனால் பஜாரியா (நவீன மனிதர்கள்) இங்கு வந்த பிறகு காடு தரிசாகிவிட்டது, நாங்கள் சந்தையைச் சார்ந்திருக்க தொடங்கிவிட்டோம்."
62 வீடுகளைக் கொண்ட இக்கிராமத்தில், வாழும் 312 பில்களில் அத்யா மோட்டாவும் ஒருவர். குஜராத்தின் நகரங்களில் தொழில்துறை மற்றும் பிற நலன்களுக்காக கண்மூடித்தனமாக மரம் வெட்டியதால் அவர்களின் காடுகள் அழிக்கப்பட்டன.
ஜல்சிந்தி கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பழங்குடியின பெரியவரான பாவா மகாரியா கூறுகையில், "நாங்கள் எப்போதும் வனத்தைப் பாதுகாத்து, எங்களுக்குத் தேவையான அளவு மட்டுமே பயன்படுத்தினோம். காடுகளை நாங்கள் ஒருபோதும் சுரண்டவில்லை. ஏனெனில் அவை எங்களின் ஒரே வாழ்விடமாகவும், வாழ்க்கையாகவும் உள்ளது.“
பில்கள் நீண்ட காலமாக வன நிலங்களை பயிரிட்டு வந்தனர். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை 1957-ம் ஆண்டிற்குப் பிறகு மாநில வனத்துறையால் அப்புறப்படுத்தப்பட்டன. அப்போது இந்த பகுதிகள் 'பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக' மாறின.
இந்திய வனச் சட்டம் (1927), விவசாயிகளின் பகுதி பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்கப்படும்போது அவர்களின் நில உரிமைக்கோரல்களைத் தீர்ப்பதற்கான சட்ட செயல்முறையை வழங்குகிறது. இருப்பினும், இந்த சட்டங்கள் குறித்த பழங்குடிகளின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்ட வனத்துறையினர், அவர்களின் நிலத்தை ஏமாற்றினர். இதன் விளைவாக, பல பில்கள் தங்கள் மூதாதையர் நிலங்களில் விவசாயம் செய்ய முடியவில்லை.
1987-ம் ஆண்டில், கெதுட் மஸ்தூர் சேத்னா சங்கத்தை உருவாக்கினர் - அட்யா மோட்டாவும் அதில் ஒரு உறுப்பினர் - தங்கள் உரிமைகளுக்கு போராடுவதற்காக, மீண்டும் பயிரிடத் தொடங்குவதற்காக அது அமைக்கப்பட்டது. இது ஒரு நீண்ட போராட்டத்திற்கு வழிவகுத்தது. 2006-ம் ஆண்டில் வன உரிமைச் சட்டத்தை இயற்ற அது பங்களித்தது. 2008-ம் ஆண்டு முதல், மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பல ஆயிரம் பழங்குடியின குடும்பங்கள் இந்த போராட்டத்தின் விளைவாக தங்கள் முன்னோர்களின் வன நிலங்களுக்கு உரிமைகளைப் பெற்றுள்ளன.
இந்த கட்டுரைக்கான சில புகைப்படங்களை கெடுட் மஸ்தூர் சேத்னா சங்கத்தின் உறுப்பினர் மகன் சிங் காலேஷ் எடுத்தார்.
தமிழில்: சவிதா