ஜார்கண்டின் பொரோதிகாவில் சிக்கலான பிரசவத்தை எதிர்கொள்ள வேண்டிய ஒரு பெண், மருத்துவரை சந்திக்கவே எல்லை கடந்து ஒடிசாவுக்கு செல்ல வேண்டியிருக்கும்.

அவர் மட்டுமல்ல - கிராமப்புற இந்தியாவை சேர்ந்த பெண்ணாக நீங்கள் இருக்கும் பட்சத்தில் மகளிர் நோய் மருத்துவரையோ ஓர் அறுவை சிகிச்சை மருத்துவரையோ சந்திப்பதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. இருக்கும் கட்டமைப்பில் இங்குள்ள சமூக சுகாதார மையங்களில் தேவைப்படும் மகளிர்நோய் மற்றும் மகப்பேறு மருத்துவர்களில் 74.2 சதவிகித இடங்கள் நிரப்பப்படவில்லை.

நோயுற்ற குழந்தை கொண்ட ஓர் இளம்தாயாக நீங்கள் இருந்தால், ஒரு சமூக சுகாதார மையத்தில் குழந்தை நோய் மருத்துவரை இங்கு நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் அவர்களுக்கும் பொது மருத்துவர்களுக்குமான இடங்களில் 80 சதவிகிதம் நிரப்பப்படாமல் உள்ளது.

இது போன்ற தரவுகளை நாம் Rural Health Statistics 2021-22 அறிக்கையில் கிடைக்கப் பெறுகிறோம். இவையும் இன்னும் பிற முக்கியமான அறிக்கைகள், ஆய்வறிக்கைகள் மற்றும் களத் தரவுகள், சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் பாரியின் சுகாதாரப் பெட்டகத்தில் இருக்கின்றன. இந்தியப் பெண்களின் ஆரோக்கிய நிலையை புரிந்து கொள்ளவும் விளக்கவும் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பெண்களின் ஆரோக்கியம், குறிப்பாக கிராமப்புற இந்தியாவில், இருக்கும் ஆபத்தான நிலையை இப்பகுதி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இனவிருத்தி ஆரோக்கியம் தொடங்கி பாலியல் அச்சுறுத்தல் வரை, மனநலம் தொடங்கி கோவிட் தொற்று தாக்கம் வரை பாரியின் சுகாதாரப் பெட்டகம் பெண்களது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை கொண்டிருக்கிறது. 'அன்றாட மக்களின் அன்றாட வாழ்க்கைகள்' என்கிற பாரியின் நோக்கத்தை அது வலுப்படுத்துகிறது.

PHOTO • Courtesy: PARI Library
PHOTO • Courtesy: PARI Library

பாரி நூலகத்தின் உட்பிரிவான பாரி சுகாதாரப் பெட்டகத்தில் அரசாங்கம், சுயாதீன அமைப்புகள் மற்றும் ஐநா அமைப்புகள் ஆகியவற்றின் அறிக்கைகள் உள்ளிட்ட 256 ஆவணங்கள் இருக்கின்றன. தேசிய அளவில் தொடங்கி சர்வதேச அளவு வரையிலான பிரச்சினைகளும் நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் நிலவும் போக்குகளும் கவனப்படுத்தப்பட்டிருக்கின்றன.

"சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்புச் சத்து குறைபாடு இருப்பதாக அவர் என்னிடம் சொன்னார். தரையில் நான் அமரவே கூடாது," என்கிறார் மேற்கு வங்க முர்ஷிதாபாத்தை சேர்ந்த பீடித் தொழிலாளரான தனுஜா.

" ரத்தம் என்பதே இல்லை என்னும் அளவுக்கான நிலையில் பல பழங்குடி பெண்கள் இன்னும் எங்களிடம் வருகின்றனர். ஒரு டெசிலிட்டர் ஹீமோகுளோபினுக்கு 2 கிராம் ரத்தம்தான் இருக்கும். இன்னும் குறைவாகக் கூட இருக்கும். எங்களால் அளக்க முடியாது," என்கிறார் நீலகிரி பழங்குடி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஷைலஜா.

சமீபத்திய தேசிய குடும்பக் கணக்கெடுப்பின்படி ( NFHS-5 2019-21 ) 2015-16 முதல் நாடு முழுவதுமுள்ள பெண்களுக்கு ரத்தசோகை தீவிரப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு 28 மாநிலங்கள், எட்டு யூனியன் பிரதேசங்கள் மற்றும் 707 மாவட்டங்களின் மக்கள்தொகை, ஆரோக்கியம், ஊட்டச்சத்து பற்றிய தரவுகளை கொண்டதாகும்.

PHOTO • Design Courtesy: Aashna Daga

"பிரசவத்தில் எனக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டது. குழந்தை பிறப்பதற்கு முன்பே, எனக்கு தீவிர ரத்தசோகை இருப்பதாக கூறிய செவிலியர், அதிக பழங்களும் காய்கறிகளும் உண்ணும்படி அறிவுறுத்தினார்," என்கிறார் பிகாரின் கயா மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சனி யாதவ்.

இந்தியப் பெண்களில் 15-49 வயதுகளில் இருப்பவர்களில் 57 சதவிகிதம் பேர் 2019-21ம் வருட நிலவரப்படி ரத்தசோகை கொண்டிருந்தனர். உலகளவில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு ரத்தசோகை இருக்கிறது. ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்ட The State of Food Security and Nutrition in the World 2022 அறிக்கையின்படி, “ஏழ்மை நிறைந்த குடும்பங்களிலும் கிராமப்புறங்களில் இருக்கும் முறையான கல்வி பெறாத பெண்களை அதிகமாக ரத்தசோகை பாதிக்கிறது.”

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் கிடைக்க முடியாத சூழல் இந்த குறைபாடுகளை மோசமாக்குகிறது. 2020 Global Nutrition Report -ன்படி ஊட்டச்சத்து மிகுந்த (முட்டை, பால் போன்ற) உணவுகளுக்கான அதிக விலை பெரிய தடையாக இருக்கிறது. ஆரோக்கியமான உணவுக்கான விலை 2.97 அமெரிக்க டாலர்களாக அல்லது 2020ம் ஆண்டு இந்திய நிலவரப்படி 243 ரூபாயாக இருப்பது, இந்தியாவின் 97 கோடியே 33 லட்சம் பேரால் கொடுக்க முடியாத விலை ஆகும். மேலும் வளங்களை ஒதுக்கீடு செய்வதில் குடும்பங்களிலும் பிற இடங்களிலும் பெண்கள் பின்னணியில் இருப்பதும் ஆச்சரியத்துக்குரிய விஷயமாக இருக்கவில்லை.

PHOTO • Design Courtesy: Aashna Daga

இருக்கும் சுகாதார கட்டமைப்பை சேர்ந்த அனைத்து இந்திய அறிக்கைகளும் பாரி நூலகத்தில் இருக்கின்றன. இந்தியாவின் 20 சதவிகித குடும்பங்கள் கழிவறை வசதி கூட இல்லாத நிலையில், “இரவு நேரங்களில் ரயில் தண்டவாளங்கள்தான் எங்களுக்கு இருக்கும் கழிவறைகள் ,” என்கின்றனர் பாட்னா குப்பத்து பெண்கள்.

நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்களில் 90 சதவிகிதம் பேருக்கு சுகாதாரமான மாதவிடாய் பொருட்கள் கிடைக்கும் நிலையில்  கிராமத்து பெண்களிலோ வெறும் 73 சதவிகிதம் பேருக்குதான் அவை கிடைக்கின்றன எனக் குறிப்பிடுகிறது National Family Health Survey-5 (2019-2021). சானிடரி நாப்கின்கள், மாதவிடாய் கோப்பைகள், பஞ்சு தக்கைகள், குறைந்தபட்சம் ஒரு துண்டு துணி போன்றவைதாம் ‘சுகாதாரமான மாதவிடாய் பொருட்கள்’ ஆகும். பல சானிடரி நாப்கின்களில் நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்கள் இருப்பதையும் பல ஆய்வுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.

PHOTO • Design Courtesy: Aashna Daga

பெண்களின் இனவிருத்தி ஆரோக்கியம் “பாரபட்சமின்றி, வற்புறுத்தலும் வன்முறையும் இன்றி” இருப்பதற்கான முடிவுகளை எடுக்கும் பெண்களுரிமையை The Indian Women’s Health Charter வலியுறுத்துகிறது. இந்த உரிமைகள் நிறைவேற்றப்பட, விலை மலிவான சுகாதார வசதிகள் கட்டாயம். தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (2019-21)ன்படி, 80 சதவிகித பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையை, நகராட்சி மருத்துவமனை அல்லது சமூக சுகாதாரம் மையம் போன்ற அரசு சுகாதார மையங்களில் எடுத்துக் கொள்கின்றனர். எனினும் நாட்டிலுள்ள இந்த நிறுவனங்களில் பற்றாக்குறை நிலவுகிறது.

ஜம்மு கஷ்மீரின் வசிரிதல் கிராம மக்களுக்கு உள்ள அருகாமை ஆரம்ப சுகாதார மையத்துக்கே ஐந்து கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும்.

போதுமான அளவுக்கு பணியாளர்களும் கிடையாது. வசதிகளும் இல்லை. கஷ்மீரின் பந்திப்போர் மாவட்டத்தின் படுகம் ஆரம்ப சுகாதார மையத்தில் ஒரே ஒரு செவிலியர்தான் இருக்கிறார். ‘அவசரத் தேவையிலோ கருக்கலைப்புக்கோ கருச்சிதைவுக்கோ கூட அவர்கள் நேராக குரேஸுக்குதான் செல்ல வேண்டும்,” என்கிறார் வசிரிதலின் அங்கன்வாடிப் பணியாளரான ராஜா பேகம். “அறுவை சிகிச்சை தேவைப்பட்டால், ஸ்ரீநகரிலுள்ள லால் தெத் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். குரேஸிலுருந்து அப்பகுதி 125 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. கடினமான வானிலையில் அங்கு செல்ல கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரங்கள் ஆகும்,” என்கிறார் அவர்.

PHOTO • Design Courtesy: Aashna Daga

மார்ச் 31, 2022 நிலவரப்படி துணை மையங்களிலும் ஆரம்ப சுகாதார மையங்களிலும் துணை செவிலியர்களுக்கான 34,541 இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக Rural Health Statistics 2021-22 அறிக்கை குறிப்பிடுகிறது. பெண்கள் பெரும்பாலும் சமூக சுகாதார ஊழியர்களையும் துணை செவிலியர்களையும் அங்கன்வாடி ஊழியர்களையும்தான் அணுகுவார்கள் என்கிற யதார்த்தச் சூழலில் இது பெரிய எண்ணிக்கை ஆகும்.

ஆக்ஸ்ஃபாம் இந்தியாவின் Inequality Report 2021: India’s Unequal Healthcare Story அறிக்கையின்படி, நாட்டின் மக்கள்தொகையில் ஒவ்வொரு 10,189 பேருக்கும் ஓர் அரசு ஆங்கில மருத்துவரும் ஒவ்வொரு 90,343 பேருக்கு ஒரு அரசு மருத்துவமனையும் இருக்கிறது.

PHOTO • Design Courtesy: Aashna Daga

இந்தியாவிலுள்ள சுகாதாரச் சேவைகளின் தேவை, தற்போதைய உள்கட்டமைப்பை மிஞ்சி இருக்கிறது. பாலின பேதத்தின்படி உலக நாடுகளை வரிசைப்படுத்தும் சர்வதேச பாலின இடைவெளி அறிக்கை யில் 2022ம் ஆண்டின்படி 146 நாடுகளில் இந்தியா 135வது இடத்தில் இருக்கிறது.  ‘ஆரோக்கியம் மற்றும் பிழைத்தல்’ ஆகியவற்றுக்கான வரிசையிலும் கடைசி வரிசையைத்தான் இந்தியா பிடித்திருக்கிறது. அமைப்புப்பூர்வமான இத்தகைய இடைவெளிகள் இருக்கும் சூழலில் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு இருக்கும் நிலையையும் அது பெண்களின் வாழ்க்கைகளில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் புரிந்து கொள்ளுதல் மிகவும் முக்கியம் ஆகும்.

இதற்கு பாரி நூலகம்தான் வழி.

வடிவமைப்புக்காக பாரி நூலக தன்னார்வலர் ஆஷ்னா தாகாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்

முகப்பு படம்: ஸ்வதேஷ ஷர்மா

தமிழில்: ராஜசங்கீதன்

PARI Library Team

পারি লাইব্রেরি দলের সদস্য দীপাঞ্জলি সিং, স্বদেশা শর্মা এবং সিদ্ধিতা সোনাভানে সেই সমস্ত নথি সংবদ্ধ করা এবং বিন্যাসের দায়িত্বে আছেন যা পারি-র ঘোষিত লক্ষ্য অর্থাৎ জনসাধারণের দৈনন্দিন জীবনের একটি আর্কাইভ তৈরি করার প্রচেষ্টার সঙ্গে সাযুজ্যপূর্ণ।

Other stories by PARI Library Team
Editor : Priti David

প্রীতি ডেভিড পারি-র কার্যনির্বাহী সম্পাদক। তিনি জঙ্গল, আদিবাসী জীবন, এবং জীবিকাসন্ধান বিষয়ে লেখেন। প্রীতি পারি-র শিক্ষা বিভাগের পুরোভাগে আছেন, এবং নানা স্কুল-কলেজের সঙ্গে যৌথ উদ্যোগে শ্রেণিকক্ষ ও পাঠক্রমে গ্রামীণ জীবন ও সমস্যা তুলে আনার কাজ করেন।

Other stories by Priti David
Translator : Rajasangeethan

রাজাসংগীতন চেন্নাইবাসী লেখক। এক প্রখ্যাত তামিল খবরের চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করেন।

Other stories by Rajasangeethan