இந்திரா காலனி எனப்படும் பழங்குடியினர் கிராமத்தில் எனது வீடு உள்ளது. இங்கு பல்வேறு பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த 25 குடும்பங்கள் வசிக்கின்றனர். எங்களுக்கு என நீர்த்தேக்க தொட்டி, கழிப்பறை, குடிநீர் வசதிகள் உள்ளன.
இக்கிராமத்தில் சிலரிடம் உள்ள விவசாய நிலத்தில் நெல், கத்திரிக்காய், சோளம், ஜூலானா, வெண்டைக்காய், பாகற்காய், பரங்கிக்காய், பருப்பு வகைகளில் கொலாதா[கொள்ளு], கந்துலா [துவரம் பருப்பு], பாசிப்பருப்பு போன்றவற்றை விளைவிக்கின்றனர். பெரும்பாலானோர் நாம் உண்ணும் நெல்லை விளைவிக்கின்றனர். மழைக் காலங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
அறுவடை காலத்தில் சொந்த பயன்பாட்டிற்கு கொஞ்சம் நெல் வைத்துக் கொண்டு மிச்சத்தை விற்போம். உரங்கள் போன்ற உள்ளீட்டுச் செலவுகள் போக நெல் விற்பனையில் கொஞ்சம் பணம் மிஞ்சும்.
எங்கள் கிராமத்தில் சில கூரை வீடுகள் உள்ளன. கூரை வீடுகள் நம்மை வெப்பம், மழை, குளிரிலிருந்து காக்கிறது. ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூரையை மாற்ற வேண்டும். வீடுகளை சீரமைக்க நாங்கள் அகுலி புல், சாலுவா, மூங்கில், லாஹி மற்றும் காட்டில் உள்ள மரங்களை பயன்படுத்துகிறோம்.
இந்த பாகுலி புற்களைக் கொண்டு கூரை வேய்வோம். வனங்களில் இருந்து இந்த புற்களை வெட்டி எடுத்து வெயிலில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் காய வைப்போம். அவற்றை மழையில் மட்டும் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டின் மேற்கூரைக்கு எங்கள் கிராமத்தில் செய்யும் களிமண் கற்களை பயன்படுத்துகிறோம்.
இந்த மாட்டு வண்டியில் சக்கரங்களைத் தவிர அனைத்து பிற பாகங்கள் மரம் அல்லது மூங்கிலில் செய்யப்பட்டது. வயல்களில் நெல் அறுத்து கொண்டு வரவும், காடுகளில் மரங்களை சேகரித்து எடுத்து வரவும் இந்த வண்டியை பயன்படுத்துவோம். சில சமயங்களில் வயல்களுக்கு இதில் எரு ஏற்றிச் செல்வோம். இப்போதெல்லாம் இதுபோன்ற வண்டிகளின் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது.
எங்கள் கிராமத்தில் பெரும்பாலானோர் பசுக்கள், எருதுகள், ஆடுகள், கோழிகளை வளர்க்கின்றனர். அவற்றுக்கு சோறு, அரிசி தவிடு, பாசிப்பயறு போன்றவற்றை உணவாக தருகிறோம். இரவு நேரங்களில் அவை வைக்கோல் உண்ணுகின்றன. வனப்பகுதி அல்லது வயல்வெளிகளில் பசுக்கள், காளைகளை மேய்ச்சலுக்கு நாங்கள் அழைத்துச் செல்கிறோம்.
வயல்களில் எரு உரமாக பயன்படுத்தப்படுகிறது- இதற்காக சாகுபடி தொடங்கும் முன் எங்கள் வயல்களுக்கு மாட்டு எருவை தூவுகிறோம். பசுக்கள், எருதுகளை விற்று கிராம மக்கள் வருவாய் ஈட்டுகின்றனர். ஒரு பசுவின் விலை சுமார் 10,000 ரூபாய்.
கூடுதல் வருவாய்க்காக இப்போது எங்கள் கிராமப் பெண்கள் சிலர் கெண்டு இலைகள், சாலபத்ரா [சால் இலைகள்], இலுப்பை இலைகளை பறிக்கின்றனர்.
இது காய்ந்த இலுப்பைப் பூ. கிராமப் பெண்கள் காலையில் காட்டிற்குச் சென்று அவற்றை பறித்துக் கொண்டு மதியம் 11 மணிக்கு வீடு திரும்புகின்றனர். பூக்களை சேகரித்து ஆறு நாட்கள் வரை வெயிலில் காய வைக்கின்றனர். பிறகு சாக்குகளில் மூட்டையாக அவற்றை கட்டி இரண்டு அல்லது மூன்று மாதங்கள் காய வைக்கின்றனர். நாங்கள் இலுப்பைச் சாற்றை ஒரு குவளை 60 ரூபாய்க்கு விற்கிறோம். ஒரு குவளை நிறைய இலுப்பைப் பூ 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த இலுப்பைப் பூக்களை பறிப்பது மிகவும் கடினம்.
எங்கள் சமூகமே ஒரு குடும்பமாக செயல்பட்டு, ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்கிறோம்.
இக்கட்டுரைக்கு உதவிய கிராம் விகாஸ் குடியிருப்பு பள்ளிகளின் புதுமை மற்றும் உத்தி மேலாளர், ஷர்பானி சட்டோராஜ், சந்தோஷ் கவுடா ஆகியோருக்கு பாரி கல்விக் குழு நன்றித் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழில்: சவிதா