“எல்லாவற்றையும் சீர்செய்ய ஒரு வழி கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன்.”
சுனில்குமார் ஒரு தத்தேரா (பாத்திரம் செய்கிறவர்) ஆவார். “வேறு யாரும் சரி செய்ய முடியாதவற்றை மக்கள் என்னிடம் கொண்டு வருகிறார்கள். சில நேரங்களில் மெக்கானிக்குகள் கூட அவர்களின் கருவிகளை கொண்டு வருவார்கள்.”
செம்பு, வெண்கலம், பித்தளை போன்றவற்றைக் கொண்டு பலவகை சமையலறைப் பாத்திரங்களை செய்யும் நெடிய மரபில் வந்திருக்கிறார் சுனில்குமார். “கைகளில் அழுக்கு படிவது யாருக்கும் பிடிப்பதில்லை. அமிலம், நிலக்கரி, வெப்பம் ஆகியவற்றோடு நாள் முழுவதும் புழங்குகிறேன். எனக்கு மிகவும் பிடிப்பதால் இந்த வேலையை செய்கிறேன்,” என்று கூறும் அவருக்கு 40 வயது. கடந்த 25 ஆண்டுகளாக தத்தேரா கைவினைஞராக வேலை செய்கிறார் அவர்.
தத்தேரா (தாத்தியார் என்றும் அழைப்பதுண்டு) சமூகத்தவர், பஞ்சாபில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் வருகிறார்கள். இரும்பு தவிர்த்த பிற உலோகங்களையும் உருக்கி, உறுதியான கதவு கைப்பிடிகள், பூட்டுகள் போன்ற பல வடிவங்களில் வார்ப்பது இவர்களது மரபான தொழில். இந்த வேலையை இவர்கள் கைக்கருவிகளின் உதவியோடு செய்கிறார்கள். தனது தந்தை கேவல் கிரிஷன் (67 வயது) உடன் இணைந்து, ஓட்டை, உடைசல் பொருட்களை வாங்குகிறார் இவர். இவர்களது பாத்திரம் சீர் செய்யும் வேலையில் இவை பயன்படுகின்றன.
கடந்த சில பத்தாண்டுகளில் எஃகு போன்ற இரும்பு வகை பாத்திரங்களை பயன்படுத்துவது கூடிவிட்டதால், இந்த கைவினைஞர்களுக்கு வாழ்க்கை சவாலாகிவிட்டது. இன்று பெரும்பாலான சமையலறைக் கருவிகள் எஃகினால் செய்யப்படுகின்றன. வலுவான, விலை அதிகமான பித்தளை, செம்பு பொருட்களுக்கான தேவை சட்டென வீழ்ந்துவிட்டது.
பஞ்சாபின் சங்ரூர் மாவட்ட லெஹரா காகா நகரில் சுனில் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக இந்தக் கைவினைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதே நகரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இன்னும் இரண்டு தத்தேரா குடும்பத்தினர் வாழ்ந்தனர். “இன்னொருவர் கோயிலுக்கு அருகே பட்டறை வைத்திருந்தார். அவருக்கு லாட்டரியில் 3 லட்சம் ரூபாய் விழுந்ததும், இந்த தொழிலைக் கைவிட்டு பட்டறையை மூடிவிட்டார்,” என்று கூறும் சுனில், வருவாய் இல்லாமல்தான் அவர் இந்த தொழிலை விட்டார் என்கிறார்.
தொடர்ந்து தொழிலைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்பதற்காக, சுனில்குமார் போன்ற தத்தேராக்கள் எஃகு வேலையிலும் இறங்கிவிட்டார்கள். எஃகு பொருட்களை தயாரிப்பது, சீர் செய்வது என்று இரண்டுமே செய்கிறார்கள்.
லெஹரா காகா நகரில் பாத்திரங்களை சுத்தம் செய்து, சீர் செய்து, பாலிஷ் செய்வதற்கு உள்ள ஒரே பட்டறை சுனிலுடைய பட்டறைதான். அந்தக் கடைக்கு பெயரோ, பெயர்ப்பலகையோ இல்லை என்றாலும், மக்கள் இதை தத்தேரா பட்டறை என்றே அழைக்கிறார்கள்.
“எங்கள் வீட்டில் பித்தளைப் பாத்திரங்கள் உள்ளன. அவற்றின் பண மதிப்புக்காகவும், மன மதிப்புக்காகவும் அவற்றை வீட்டில் வைத்திருக்கிறோம். நாள்தோறும் பயன்படுத்துவதற்காக அல்ல. தொடர்ந்து பயன்படுத்தினால், எஃகு பாத்திரங்களின் மதிப்பு போய்விடும். மீண்டும் விற்றால் ஒன்றுமே தேறாது. ஆனால், பித்தளைப் பாத்திரங்களுக்கு மதிப்பு இருக்கும்,” என்று கூறுகிறார் ஒரு பெண் வாடிக்கையாளர். 25 கி.மீ. தொலைவில் உள்ள திர்பா கிராமத்தில் இருந்து வந்து பாட்டி எனப்படும் கிண்ணங்கள் நான்கை சுனில் பட்டறையில் சுத்தம் செய்துகொண்டார் அவர்.
பித்தளை உருப்படிகளுக்கு புத்துயிர் அளிக்கவேண்டும் என்பதே சுனில் போன்ற தத்தேராக்களுக்கு வழக்கமாக வரும் கோரிக்கை. செப்டம்பர் மாதம் நாங்கள் அவரை சந்தித்தபோது அவர் வேலை செய்துகொண்டிருந்த பாத்திரங்கள், ஒரு தாய் அவரது மகளுக்கு திருமண சீதனமாக கொடுத்தவை. இந்த உருப்படிகள் பயன்படுத்தப்படவே இல்லை. பல ஆண்டுகளில் அவற்றின் நிறம் மட்டுமே மாறியிருந்தது. அவற்றை மீண்டும் புத்தம் புதிதுபோல செய்ய சுனில் முயல்கிறார்.
பித்தளைப் பாத்திரங்களை சுத்தம் செய்யும் பணி, ஆக்சிஜனேற்றத்தால் பச்சைநிறப் படிவுகள் உருவாகி இருக்கிறதா என்று பரிசோதிப்பதில் தொடங்குகிறது. பிறகு அந்தப் படிவுகளை நீக்க பாத்திரங்களை சின்ன உலைக்களத்தில் வைத்து சூடாக்குவார்கள். சூட்டால், அந்தக் கரை கருப்பாகிவிடும். பிறகு நீர்த்த அமிலத்தின் மூலம் அதை அகற்றுவார்கள். பிறகு பாத்திரம் முழுவதும், உள்ளேயும், வெளியேயும் புளிக்கரைசல் தடவி பளபளப்பை மீட்டெடுப்பார்கள். மரகதச் சிவப்பு நிறத்தில் இருந்த பாத்திரங்கள், பொன்னிறத்துக்கு மாறும்.
சுத்தம் செய்யும் வேலை முடிந்தவுடன், தேய்க்கும் இயந்திரத்தைக் கொண்டு அதைப் பொன்னிறமாக்குகிறார் சுனில். “தேய்க்கும் இயந்திரம் வருவதற்கு முன்பு, இதே வேலையை உப்புக் காகிதம் வைத்து செய்வோம்,” என்கிறார் அவர்.
அடுத்த கட்டமாக, பொட்டு பொட்டாக, வழக்கமான டிசைன் போடும் வேலை நடக்கும். ஆனால், சில வாடிக்கையாளர்கள் வெறுமனே பாலிஷ் மட்டும் போதும் என்பார்கள். சிலர் குறிப்பாக ஏதோ ஒரு டிசைன் கேட்பார்கள்.
தான் வேலை செய்துகொண்டிருந்த வாணலியில் (பெரியது) புள்ளி போடுவதற்கு முன்பாக, புள்ளி துல்லியமாக, பளபளப்பாக வரவேண்டும் என்பதற்காக சுத்தியல், மரச்சுத்தியல் ஆகியவற்றை தேய்த்து மெருகேற்றுகிறார் சுனில். மெருகேற்றிய கருவிகள் கண்ணாடி போல பளபளக்கின்றன. பிறகு அவர் மரச்சுத்தியலில் வாணலியை வைத்து வட்டவட்டமாக சுத்தியல் போடுகிறார். பொட்டு பொட்டான வடிவ ஒழுங்கில், பளபளப்பாக, பொன்னிறமாக மாறுகிறது பாத்திரம்.
முறையாக பயன்படுத்தப்படாத, சில ஆண்டுகள் தொடர்ந்து பயன்படுத்தப்படாத, பித்தளைப் பாத்திரங்கள் மீண்டும் பொன்னிறமாவதற்கு, சுத்தம் செய்து மெருகேற்றுவது அவசியம்.
பித்தளைப் பாத்திரத்தில் சமையல் செய்ய வேண்டுமானால், அதன் உட்புறத்தில் ஈயம் பூசவேண்டும். இரும்பு அல்லாத, பித்தளை, செம்பு போன்ற பிற உலோகங்களில் செய்யப்பட்ட பாத்திரங்களில் சமையல் செய்தாலோ, அதில் உணவை வைத்திருந்தாலோ பாத்திரமும், உணவும் வேதி வினைபுரியும். இதைத் தவிர்ப்பதற்காக அத்தகைய பாத்திரங்களின் உட்புறத்தில் வெள்ளீயத்தைப் பூசுவார்கள். இதைத்தான் ஈயம் பூசுதல் அல்லது கலாய் பூசுதல் என்பார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்புவரைகூட ‘பாந்தே காலாய் காராலோ’ என்ற குரல் தெருக்களில் ஒலிக்கும். தங்கள் பித்தளை, செம்பு பாத்திரங்களில் ஈயம் பூசுவதற்காக வாடிக்கையாளர்களை அழைக்கும் கைவினைஞர்களின் குரல் அது. ஒருமுறை ஈயம் பூசி, பாத்திரங்களை முறையாகப் பயன்படுத்தினால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஈயம் பூசவேண்டியதில்லை என்கிறார் சுனில். ஆனால் சிலர் ஈயம் பூசி ஓராண்டிலேயே மீண்டும் பூசுவார்கள்.
இப்படி ஈயம் பூசுவதற்கு முன்பாக, பித்தளைப் பாத்திரத்தை நீர்த்த அமிலம், புளிக்கரைசல் கொண்டு சுத்தம் செய்வார்கள். பிறகு, வெப்பத்தில் இளஞ்சிவப்பாக ஆகும் அளவுக்கு நெருப்பில் வைப்பார்கள். பிறகு பாத்திரத்தின் உட்புறத்தில் வெள்ளீயக் கம்பியைத் தேய்ப்பார்கள். அதைத் தொடர்ந்து, காஸ்டிக் சோடா - அமோனியம் குளோரைடு சேர்ந்த பொடிக் கலவையோடு தண்ணீர் சேர்த்து ‘நௌசதார்’ தெளிப்பார்கள். பிறகு, பாத்திரத்தை சுழற்றி, சுழற்றி அதன் உட்புறத்தை பழைய துணி கொண்டு தேய்ப்பார்கள். அப்போது வெள்ளைப் புகை கிளம்பும். ஆனால், சில நொடிகளில் மாயாஜாலம் போல பாத்திரத்தின் உட்புறம் வெள்ளி போல மாறியிருக்கும். உடனே பாத்திரத்தை தண்ணீரில் முக்குவார்கள்.
கடந்த சில பத்தாண்டுகளில், பித்தளையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, எஃகு பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. காரணம், எஃகு பாத்திரங்களை துலக்குவது எளிது; உணவோடு பாத்திரம் வேதி வினை புரிந்துவிடுமோ என்ற அச்சமும் இல்லை. பித்தளைப் பாத்திரங்கள் நீடித்து உழைக்கக்கூடியவை, அவற்றின் மதிப்பும் அதிகம் என்று கருதப்படுகிறது. ஆனாலும், அவற்றை கவனத்தோடு பராமரிக்கவேண்டும். பயன்படுத்திய பிறகு உடனடியாக அவற்றைத் துலக்கிவிடவேண்டும் என்று தன் வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை கூறுகிறார் சுனில்.
*****
சுனிலின் அப்பா கேவல் கிரிஷன், 50 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 12-வது வயதில் மலேர்கோட்லா என்ற இடத்தில் இருந்து லெஹராகாகாவுக்கு இடம் பெயர்ந்து வந்தார். “தொடக்கத்தில் சில நாட்களுக்கு வந்து போய்க்கொண்டிருந்தேன். பிறகு இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டேன்,” என்கிறார் அவர். தலைமுறை தலைமுறையாக அவரது குடும்பத்தினர் பாத்திரம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். கேவலின் தந்தை கேதார்நாத், தாத்தா ஜோதி ராம் ஆகியோர் திறமையான கைவினைஞர்கள். ஆனால், தன் மகன் இந்தத் தொழிலில் தொடர்வாரா என்று சுனிலுக்குத் தெரியாது. “தனக்குப் பிடித்திருந்தால், என் மகன் இதைச் செய்வான்,” என்கிறார் அவர்.
ஏற்கெனவே சுனிலின் சகோதரர், இந்தக் குடும்பத் தொழிலில் இருந்து விலகிச் சென்று தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்கிறார். மற்ற உறவினர்களும் இந்த தொழிலில் இருந்து வெளியேறி, கடை வைத்து வியாபாரம் செய்கின்றனர்.
தன் தந்தை கேவல் கிரிஷனிடம் இந்த தொழிலை எடுத்துக்கொண்டார் சுனில். “நான் 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது என் தந்தைக்கு காயம்பட்டது. எனவே, பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, வருவாய் ஈட்டுவதற்காக இந்த தொழிலில் நான் இறங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பள்ளி செல்லும்போதே, சும்மா இருக்கும் நேரத்தில் இங்கே வந்து ஏதாவது செய்து பார்த்து சோதனை முயற்சியில் ஈடுபடுவேன். ஒரு முறை, ஏர் கூலர் மாதிரி ஒன்றை பித்தளையில் செய்தேன்,” என்று தன் சுத்தியலை அடித்துக் கொண்டே பெருமையாக கூறுகிறார் அவர்.
முதல் முறையாக அவர் செய்து விற்றது ஒரு கிண்ணம். அப்போதிருந்து வழக்கமான வேலையில் இருந்து ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் புதிதாக ஏதாவது ஒன்றை செய்ய முயற்சி செய்துகொண்டே இருப்பதாக கூறுகிறார் சுனில். “என் சகோதரிக்கு, முன்புறம் முகம் இருப்பதைப் போன்ற பணப்பெட்டி ஒன்றை செய்துகொடுத்தேன்,” என்று நினைவுகூர்ந்தார் அவர். தனது வீட்டுக்கும் அவர் தண்ணீர் பிடிப்பதற்காக ஓரிரண்டு பித்தளைப் பாத்திரங்கள் செய்துகொடுத்திருக்கிறார்.
துலக்குவது எளிது, உணவோடு வேதி வினைபுரியும் அபாயம் இல்லை என்பதால் கடந்த சில பத்தாண்டுகளில் பித்தளைப் பாத்திரங்களைவிட எஃகு பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது
பஞ்சாபில் உள்ள தத்தேரா சமூகத்தை, ‘கண்ணுக்குப் புலனாகா பண்பாட்டு மரபு’ என்ற பிரிவின் கீழ் 2014-ம் ஆண்டு அங்கீகரித்தது யுனெஸ்கோ. இந்த அங்கீகாரம் காரணமாகவும், அமிர்தசரஸ் முழுவதிலும் குருத்வாராக்களில் தொடர்ந்து பித்தளைப் பாத்திரங்கள் பயன்படுத்துவதாலும், தத்தேரா சமூகமும், அவர்களது தொழிலும் இன்னும் பிழைத்திருக்கும் சில வெகு சில இடங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.
பெரிய தேக்சாக்கள், பால்டிகள் (வாளிகள்) ஆகியவை இன்னும் குருத்வாராக்களில் உணவு சமைக்கவும் பரிமாறவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சில குருத்வாராக்கள், பராமரிப்பதில் உள்ள சிரமம் காரணமாக, பித்தளைப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதைக் கைவிட்டுவிட்டன.
“பெரும்பாலும் நாங்கள் சீர் செய்யும் வேலைதான் செய்கிறோம். புதிய பாத்திரங்கள் செய்ய எங்களுக்கு நேரமில்லை,” என்கிறார் சுனில். பித்தளை, வெண்கலப் பாத்திரங்களை அவர்களே புதிதாக செய்துவந்த காலத்தில் இருந்து இப்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய மாற்றம். ஒரு கைவினைஞர் ஒரு நாளைக்கு 10-12 பட்டில்லாக்கள் (உணவு வைக்கும் கிண்ணங்கள்) செய்துவிடமுடியும். ஆனால், தேவை, செலவு, நேரச்சிக்கல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்த பாத்திரக் கைவினைஞர்களின் கவனம் உற்பத்தியில் இருந்து சீர் செய்யும் வேலையை நோக்கித் திருப்பியுள்ளது.
“யாராவது ஆர்டர் கொடுத்தால் செய்கிறோம். நாங்களே செய்து வைத்திருப்பதில்லை,” என்று கூறும் இவர், பெரிய கம்பெனிகள் தத்தேராக்களிடம் இருந்து பாத்திரங்களையும், பிற பொருட்களையும் வாங்கி நான்கு மடங்கு விலைவைத்து விற்கின்றன என்கிறார்.
உலோகங்களின் எடை, தரம், உருப்படிகளின் தன்மை ஆகியவற்றை வைத்து பித்தளைப் பாத்திரங்களின் விலையை தத்தேராக்கள் நிர்ணயிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு வாணலியை ஒரு கிலோ ரூ.800 விலைக்கு அவர்கள் விற்பார்கள். பித்தளைப் பாத்திரங்களின் விலைகள் அவற்றின் எடைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுவதால், எஃகு பாத்திரங்களைவிட அவை அதிக விலைக்கு விற்கப்படும்.
“இங்கே நாங்கள் புதிய பாத்திரங்கள் தயாரித்துக்கொண்டிருந்தோம். 50 ஆண்டுகளுக்கு முன்பு துத்தநாகமும், செம்பும் மானிய விலையில் வாங்க அரசாங்கமே ஒதுக்கீடு அளித்தது. ஆனால், இப்போதெல்லாம் அரசாங்கம் பெரிய தொழிற்சாலைகளுக்குதான் மானியம் தருகிறது. எங்களைப் போன்ற சிறிய வியாபாரிகளுக்குத் தருவதில்லை,” என வருத்தத்துடன் கூறுகிறார் கேவல் கிரிஷன். 60-வயதுக்கு மேல் ஆகும் நிலையில், கடையில் நடக்கும் வேலைகளை மேற்பார்வையிடும் இவர், அரசாங்கம் மீண்டும் மானியம் தரும் என்றும் எதிர்பார்க்கிறார்.
26 கிலோ துத்தநாகத்துடன், 14 கிலோ செம்பு கலந்து தாங்கள் பாரம்பரியமாக பித்தளை தயாரித்தது எப்படி என்பதையும் அவர் விளக்குகிறார். “இந்த உலோகங்களை உருக்கி ஒன்றாக்கி சின்ன கிண்ணங்களில் ஆற வைப்பார்கள். இந்தக் கிண்ண வடிவிலான உலோகக் கட்டிகளை பட்டைகளாக உருட்டி, வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு விதமான பாத்திரங்களாக வடிப்பார்கள், அல்லது கைவினை மூலம் செய்வார்கள்,” என்கிறார் அவர்.
கலை வேலைப்பாடுகள் செய்யவும், பாத்திரங்கள் வடிக்கவும் உலோகப் பட்டைகளை வழங்குவதற்கு இந்த வட்டாரத்தில் ஒரு சில உருட்டாலைகள் மட்டுமே தற்போது உள்ளன. நாங்கள் பட்டைகளை அமிர்தசரசில் உள்ள ஜன்டியாலா குரு (லெஹர் காகாவில் இருந்து 234 கி.மீ. தொலைவு) அல்லது ஹரியானாவின் ஜெகதாரி (203 கி.மீ.) ஆகிய இடங்களில் இருந்து தருவிக்கிறோம். பிறகு இந்தப் பட்டைகளை வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப பாத்திரங்களாக வடிக்கிறோம்,” என்கிறார் சுனில்.
செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட பிதமரின் விஸ்வகர்மா திட்டம் கருமார், பூட்டுத் தொழிலாளிகள், பொம்மைத் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 15 வகை கைவினைஞர்களுக்கு ஜாமீன் இல்லாமல் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குவதாக கூறுகிறது. இந்தப் பட்டியலில் தத்தேராக்கள் இல்லை என்பதை கேவல் சுட்டிக்காட்டுகிறார்.
பழைய பாத்திரங்களை சீர் செய்யும் வேலையில் வருவாய் நிச்சயமற்றது. ஒவ்வொரு நாளைப் பொறுத்து தினம் சுமார் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். எனவே, புதிய பாத்திரங்கள் செய்வது தங்கள் வணிகத்துக்கு உதவும் என்று நினைக்கிறார் சுனில். பித்தளைப் பாத்திரங்களை நோக்கி மீண்டும் ஆர்வம் திரும்புவதாக உணரும் சுனில், பாரம்பரியம் பிழைத்திருக்கும் என்று நம்புகிறார்.
மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்