“என் குடும்பம்தான் என்னை ஏற்றுக்கொள்ளத் தயங்கியது. மீனவர்கள் அல்ல. படகு உரிமையாளர்கள் எனக்கு கைராசி இருப்பதாகப் பார்க்கிறார்கள். அவர்கள் என்னை புறக்கணிக்கவில்லை. நான் யார் என்று அவர்கள் கவலைப்படவில்லை. அவர்களது மீனை நான் விற்கவேண்டும் என்று மட்டும்தான் நினைக்கிறார்கள்.”

கடலூர் பழைய நகர் துறைமுகத்தில் மீன் ஏலம் விடும் 30 பெண்களில் ஒருவரான மனீஷாவுக்கு 37 வயது. “என்னால் சத்தமாக விற்க முடிவதால், அதிக விலைகளையும் பெற முடிகிறது. பலரும் என்னிடமிருந்து மீன் வாங்க விரும்புகின்றனர்,” என்னும் அவரின் குரல், பிற வியாபாரிகளின் குரல்களை தாண்டி உயர்ந்து வாடிக்கையாளர்களை அழைக்கிறது.

பாலினம் உறுதிப்படுத்தும் அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கு முன்பிருந்தே மீன் ஏலம் விடுவது, கருவாடு விற்பது ஆகிய வேலைகளை செய்து வருகிறார் அவர். வாழ்வாதாரத்துக்கான இந்த வேலைக்காக அவர் தினமும் படகு உரிமையாளர்கள், மீனவர்களோடு பழக வேண்டியிருக்கிறது. “அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மற்றவர்களைவிட நான் நன்றாக ஏலம் விடுவேன்.”

படகு முதலாளிகளின் தார்மீக ஆதரவு இல்லாமல் 2012-ம் ஆண்டு அந்த அறுவை சிகிச்சையை அவர் செய்துகொண்டிருக்க முடியாது. அவர்களில் ஒருவரை, தனது நெருங்கிய நண்பராக, நம்பிக்கைக்கு உரியவராக ஆக்கிக்கொண்ட மனீஷா அறுவை சிகிச்சைக்குப் பிறகு உள்ளூர் கோவில் ஒன்றில் அவரையே, திருமணமும் செய்துகொண்டார்.

Maneesha (right) is a fish auctioneer and dry fish trader. Seen here close to Cuddalore Old Town harbour (left) where she is one among 30 women doing this job
PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: மனீஷா (வலது), மீன் ஏலம் விடுகிறவர். கருவாட்டு வியாபாரியும் ஆவார். கடலூர் பழைய நகர துறைமுகம் அருகே (இடது) இந்த வேலையில் ஈடுபடும் 30 பெண்களில் ஒருவர் அவர்

No one discriminates against her, says Maneesha, a trans woman who interacts every day with boat owners and fishermen: 'They don’t have a problem '
PHOTO • M. Palani Kumar
No one discriminates against her, says Maneesha, a trans woman who interacts every day with boat owners and fishermen: 'They don’t have a problem '
PHOTO • M. Palani Kumar

நாள்தோறும் படகு முதலாளிகளிடமும், மீனவர்களிடமும் தனது வேலை நிமித்தம் பழகும் திருநங்கையான மனீஷா தன்னிடம் யாரும் பாகுபாடு காட்டுவதில்லை என்கிறார்: ‘அவர்களுக்குப் பிரச்சினை ஏதுமில்லை’

கருவாடு வியாபாரத்தில் கொடி கட்டி பறந்த வணிகர் ஒருவரிடம் தன் 17 வயதில் வேலைக்குச் சேர்ந்த மனீஷா, தொழிலைக் கற்றுக்கொண்டு, அடுத்த பத்தாண்டுகளில் சொந்தமாகத் தொழில் தொடங்கி நிலைநிறுத்திவிட்டார். “இந்த தொழில் மூலம் எனக்கு நிறைய தொடர்புகள் கிடைத்தன. அவர்களில் சிலர் வெயிலில் மீனை காயவைக்கும் வேலைக்குப் பதில் மீனை ஏலம் விடும்படி கூறினார்கள். மெதுவாக அந்த தொழிலில் நுழைந்தேன்.”

மீன் ஏலம் விடும் உரிமை பெற வேண்டும் என்றால், மீன் ஏலம் விடுகிறவர்கள் (இவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள்) படகு உரிமையாளர்களுக்கு முன் பணம் கொடுக்கவேண்டும். “நான்கு படகுகளுக்கு நான் ஏலம் விட்டுவந்தேன். அவர்கள் எல்லோருமே சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி வந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் 3-4 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து தொழில் செய்து வந்தேன். என்னிடம் கொஞ்சம் சேமிப்பு இருந்தது. ஆனால், நண்பர்களிடம் இருந்தும் கொஞ்சம் கடன் வாங்கியிருந்தேன். மீன் ஏலம் விடுவதிலும், கருவாட்டு வியாபாரத்திலும் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு கடனை அடைத்து வந்தேன்,” என்கிறார் மனீஷா.

சுருக்கு வலை பயன்படுத்தும் பெரிய படகுகளும், குடும்பங்களாகப் போய் மீன் பிடிக்கும் சிறிய ஃபைபர் படகுகளும் பிடிக்கும் மீன்கள் துறைமுகத்துக்கு வந்தவுடன், மனீஷா போன்ற மீன் ஏலம் விடுவோர் களத்தில் இறங்குவார்கள்.

“மீன் கெட்டுப்போயிருந்தால், அதை கோழித் தீவனம் தயாரிப்பதற்காக காய வைத்துக்கொள்வேன். இல்லாவிட்டால், கருவாடு தயாரிக்கப் பயன்படுத்துவேன்,” என்று கூறும் மனீஷா தன் வியாபாரத்தில் இருந்து வந்த லாபத்தை மீண்டும் தொழிலேயே முதலீடு செய்ததால், அவரது தொழில் கிடுகிடுவென வளர்ந்தது.

Auctioneers like Maneesha get to work once the fish comes into the harbour. Some fish need to be kept in a ice box to prevent them from getting spoilt while some are kept in the open (left)
PHOTO • M. Palani Kumar
Auctioneers like Maneesha get to work once the fish comes into the harbour. Some fish need to be kept in a ice box to prevent them from getting spoilt while some are kept in the open (left)
PHOTO • M. Palani Kumar

துறைமுகத்துக்கு மீன் வந்தவுடன், மனீஷா போன்ற மீன் ஏலம் விடுவோர் களத்தில் இறங்குவார்கள். கெட்டுப்போகாமல் இருப்பதற்காக சில மீன்களை ஐஸ் பெட்டியில் வைக்க வேண்டியிருக்கும். மற்றவை திறந்த வெளியில் வைக்கப்படும் (இடது)

Left: Maneesha waits with other women for the fish auction to begin. Right: All sellers leave the bridge around 5 p.m.
PHOTO • M. Palani Kumar
Left: Maneesha waits with other women for the fish auction to begin. Right: All sellers leave the bridge around 5 p.m.
PHOTO • M. Palani Kumar

இடது: மீன் ஏலம் தொடங்குவதற்காக மற்ற பெண்களோடு மனீஷா காத்திருக்கிறார். வலது: எல்லா வியாபாரிகளும் பாலத்திலிருந்து மாலை 5 மணிக்கு கிளம்புவார்கள்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, மனீஷா மீன் காயவைக்கும் இடத்தை புதிய துறைமுகத்துக்கு படகுத்துறை கட்டுவதற்காக எடுத்துக்கொண்டபோது எல்லாம் மாறிப்போனது. தங்கள் வீட்டுக்கு அருகே அழுக்கு சேர்ந்து துர்நாற்றம் வீசுவதாக சிலர் புகார் அனுப்பினார்கள். இதையடுத்து ஏற்பட்ட தொடக்க நிலை சவால்களில் அவரது வியாபாரம் தப்பிப் பிழைத்தது. ஆனால் தொழில் நடத்த இடமும் இல்லாமல், மீன் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டு அவர் தனது தொழிலை மூடிவிட்டார்.

*****

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2020-ம் ஆண்டில் போக்குவரத்திலும், விநியோகச் சங்கிலியிலும் ஏற்பட்ட இடையூறு காரணமாக கொஞ்சம் படகுகளே மீன்பிடிக்கச் சென்று துறைமுகம் திரும்பின. தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு முறைப்படுத்தல் விதிகளில் செய்யப்பட்ட திருத்தம் காரணமாக, 2021-ம் ஆண்டு சுருக்கு வலைகளுக்கு விதிக்கப்பட்ட தடை மனீஷாவின் தொழில்மீது இரண்டாவது தாக்குதலைத் தொடுத்தது. படிக்க: மீன் உலர்த்துதலும், காய்ந்துகொண்டிருக்கும் அதிருஷ்டமும்

2019-ம் ஆண்டுதான் தனது கணவர் உலோகப் படகு வாங்குவதற்கு முதலீடு செய்திருந்தார் மனீஷா. “இந்தப் படகுகளில் முதலீடு செய்ய, பல பேர் கடன் கொடுத்திருந்தார்கள்,” என்றார் அவர். “எங்களிடம் படகுகள் இருந்தன. நான்கு படகுகளில் தலா ரூ.20 லட்சம் முதலீடு செய்திருந்தேன். ஆனால், அரசாங்கம் விதித்த தடையால், அவற்றை எங்களிடம் இருந்து யாரும் வாங்கத் தயாராக இல்லை. படகுகள் மீன்பிடிக்கச் செல்லாதபோது, நாங்கள் ஒன்றும் சம்பாதிக்க முடியவில்லை. பிறகு எப்படி எங்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும்?”

ஆனால் 2023 ஜனவரி மாதம் தமிழ்நாடு கடல் எல்லையில் இருந்து தள்ளி ஒரு தனித்த பொருளாதார மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிக்குள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு சுருக்கு வலைகளைப் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், கடலூரில் சுருக்குமடி தொழில்நுட்பத்தை ஒட்டி, மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனீஷா, மீன் ஏலம் விடுகிற படகுகள் தற்போது புதுச்சேரிக்கு செல்லும் நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. தற்போது மனீஷா தனது 105 பவுன் நகைகளை அடகு வைத்தும், தனது மூன்று அறை கொண்ட கான்கிரீட் வீட்டை வங்கியில் அடமானம் வைத்தும் பெற்ற கடனில் ரூ.25 லட்சம் நிலுவையில் இருக்கிறது.

Maneesha in front of the house (left) she built with her earnings. She also keeps cows (right), goats and chickens to supplement her income from selling fish
PHOTO • M. Palani Kumar
Maneesha in front of the house (left) she built with her earnings. She also keeps cows (right), goats and chickens to supplement her income from selling fish
PHOTO • M. Palani Kumar

தன்னுடைய வருமானத்தை வைத்து தான் கட்டிய வீட்டின் (இடது) முன்பாக மனீஷா. இது தவிர அவர் மாடுகள் (வலது), ஆடுகள், கோழிகள் ஆகியவற்றை வளர்த்து கூடுதல் வருமானம் ஈட்டுகிறார்

கடலூர் பழைய டவுன் வார்டில் 20 சுய உதவிக் குழுக்கள் இருந்தாலும் அவர் தனியாரிடம் இருந்து மட்டுமே கடன் வாங்கி முதலீடு செய்திருக்கிறார். அவர்கள் கேட்கிற எல்லா ஆவணங்களையும் கொடுக்க அவர் தயார்.  ஆனால், "அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்," என்கிறார் அவர். “நான் திருநங்கை என்பதால் எந்த வங்கியும் எனக்கு கடன் தரவில்லை; அவர்கள் என்னை நம்ப மறுக்கிறார்கள்."

வங்கிக் கடனும், அரசாங்க ஆதரவும் இருந்திருந்தால் உதவியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறார் அவர். “அரசாங்கம் திருமாணிக்குழியில் 70 திருநங்கைகளுக்கு ஓர் அறை கொண்ட வீடுகளைக் கொடுத்தது. ஆனால், கொடுத்த இடம் காட்டுக்கு நடுவே இருக்கிறது. தண்ணீரோ, போக்குவரத்து வசதியோ இல்லை. யார் அங்கே போவார்கள்? வீடுகள் மிகவும் சிறியதாகவும், தனித்தனியாகவும் இருக்கும். யாராவது எங்களைக் கொன்று போட்டாலும் யாருக்கும் தெரியாது; நாங்கள் கத்தினாலும் யாருக்கும் கேட்காது. நாங்கள் அந்த வீட்டுப் பட்டாக்களை அரசாங்கத்திடம் திருப்பித் தந்துவிட்டோம்.”

*****

பிறப்பால் ஆணாக, பெற்றோருக்கு ஐந்து பிள்ளைகளில் கடைசியாகப் பிறந்த மனீஷா தனது 15 வயதில் சம்பாதிக்கத் தொடங்கினார். புதுச்சேரி அருகில் உள்ள பிள்ளைச்சாவடியில் பிறந்த அவரது தந்தை ஒரு சுங்கத்துறை அதிகாரி. ஆனால், அவர் கடலூர் பழைய நகரத் துறைமுகத்தில் வேலையில் இருந்தார். அவரது தாய், அவரது தந்தையின் இரண்டாவது மனைவி. பட்டியல் சாதியைச் சேர்ந்தவரான அவர், அருகே டீக்கடை நடத்தி வருகிறார்.

மனீஷாவின் தந்தையின் முதல் மனைவியும், அவரது பிள்ளைகளும் அவரது கிராமத்தில் உள்ளனர். குடிகாரரான அவர் வருவதும் அரிது, கடலூரில் தன் இரண்டாவது குடும்பத்தின் பராமரிப்புக்குப் பணம் தருவதும் அரிது. தற்போது 50 வயதாகும், மனீஷாவின் பெரிய அண்ணன் சௌந்தரராஜன் தன் தாய்க்கும், உடன் பிறந்தோருக்கும் உதவி செய்வதற்காக தனது 15-வது வயதில் மீன் பிடிக்கத் தொடங்கினார். மனீஷாவுக்கு சகுந்தலா (45), ஷகீலா (43), ஆனந்தி (40) என்று மூன்று சகோதரிகள். ஷகீலா மீன் வியாபாரி. மற்றவர்கள் திருமணமாகி தங்கள் குடும்பங்களைப் பார்த்துக்கொள்கிறார்கள்.

Besides fish, Maneesha also sells milk (right)
PHOTO • M. Palani Kumar
Besides fish, Maneesha also sells milk (right)
PHOTO • M. Palani Kumar

மீன் வியாபாரம் மட்டுமில்லாமல், மனீஷா பால் வியாபாரமும் செய்கிறார் (வலது)

மனீஷாவுடன் பிறந்த எல்லோருமே 15 வயதில் வேலை செய்யத் தொடங்கினார்கள். மனீஷாவின் தாயும், சகோதரியும் துறைமுகத்தில் தேநீரும், தின்பண்டங்களும் விற்றார்கள். எல்லோரையும் விட இளையவரான மனீஷா தன் தாய் செய்யச் சொன்ன வேலைகள் எல்லாவற்றையும் செய்தார். 2002-ம் ஆண்டு 16 வயதான மனீஷா தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சேர்ந்து ஓராண்டு வெல்டர் படிப்பை முடித்தார். ஒரு வெல்டிங் பட்டறையில் ஒரு மாதம் அவர் வேலையும் செய்தார். ஆனால், அந்த வேலை அவருக்குப் பிடிக்கவில்லை.

ஒரு கருவாட்டு வியாபாரியிடம் அவர் வேலை செய்யத் தொடங்கியபோது, மீன்களை தலையில் சுமப்பது, மீன் சுத்தம் செய்வது, உப்பு போட்டுக் காயவைப்பது ஆகிய வேலைகளைச் செய்து தினமும் ரூ.75 சம்பாதித்தார்.

கருவாட்டு வியாபாரம் செய்வதற்குத் தேவையான திறமைகளை வளர்த்துக்கொண்ட அவர் தனக்கு 20 வயது ஆனபோது 2006ல் மரம், செடிகொடிகளுக்கு நடுவே ஒரு இடத்தை சுத்தம் செய்து அங்கே சொந்தமாக மீன்களைக் காயவைக்கத் தொடங்கினார். அவரது இரண்டு சகோதரிகளின் திருமணத்துக்குப் பிறகு கடன் சுமை அதிகரித்தது. அப்போதுதான், மீன் வியாபரத்தோடு இரண்டு மாடு வாங்கி பால் வியாபாரமும் செய்யத் தொடங்கினார் அவர். தற்போது, மீன் விற்கிற, ஏலம் விடுகிற தொழில் தவிர, அவரிடம் 5 பசுக்கள், 7 ஆடுகள், 30 கோழிகள் உள்ளன.

*****

10 வயதிலிருந்தே தன்னுடைய பிறவிப் பாலினமான ஆண் பாலினம் குறித்து அவருக்கு அசௌகரியம் இருந்தது. ஆனால், பதின் பருவத்தில் வேலை செய்து சம்பாதிக்கத் தொடங்கிய பிறகே அவர் அது குறித்துப் பேசத் தொடங்கினார். தனது தாய்க்கும், சகோதரிகளுக்கும் நகை, புடவை வாங்கும் அவர், தனக்கும் சிலவற்றை வைத்துக்கொள்வார். 20 வயது ஆனபோது, பாலினம் உறுதி செய்யும் அறுவை சிகிச்சையை செய்துகொள்ள அவர் முடிவு செய்தார்.

Maneesha with a friend (left) after work and outside her home (right)
PHOTO • M. Palani Kumar
Maneesha with a friend (left) after work and outside her home (right)
PHOTO • M. Palani Kumar

இடது : ஒரு நண்பருடன் மனீஷா. வலது : தனது வீட்டுக்கு வெளியே

பிற திருநங்கைகளோடு அவர் பழகத் தொடங்கினார். அவரது நண்பர்களில் ஒருவர் மும்பை சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அவர் அங்கேயே 15 ஆண்டுகாலம் வாழ்ந்துவிட்டுப் பிறகு கடலூர் திரும்பி வந்தார். அவர் மனீஷாவுக்கு உதவ முன்வந்தார். ஆனால், மனீஷா தன் குடும்பத்தை விட்டுவிட்டு மும்பை செல்ல விரும்பவில்லை.

அதற்குப் பதிலாக கடலூரில் ஒரு தனியார் மருத்துவமனையை அணுகினார். உளவியலாளர், வழக்குரைஞர் ஆகியோரிடம் பெற்ற சான்றிதழ்களை அங்கே சமர்ப்பித்தார். அறுவை சிகிச்சைக்கான காரணங்களை விளக்கி அதிகாரிகளின் ஒப்புதலையும் பெற்றார்.  தன்னுடைய வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தைக் கொடுத்து தன் சொந்த முயற்சியிலேயே அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

பாலினம் மாறும் காலத்தில் அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் இடையிலான உறவு சிக்கலாக இருந்தது. வீட்டுக்கு அருகிலேயே அவர் வசித்தாலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு பல ஆண்டுகளுக்கு அவருடைய தாயும், சகோதரிகளும் அவரிடம் பேசவில்லை. இதனால், அவரது தாய் மனமுடைந்துபோய் சரியாக சாப்பிடுவதுகூட இல்லாமல் இருந்தார். மற்ற திருநங்கைகள் செய்வதுபோல தெருவில் பிச்சை எடுக்கக்கூடாது என்று அவர் மனீஷாவுக்கு சொல்லி அனுப்பினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மனீஷாவின் தாய்க்கு குடல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது அறுவை சிகிச்சைக்கும்,  தொடர் சிகிச்சைக்கும் மனீஷா ரூ.3 லட்சம் கொடுத்தார். அதற்குப் பிறகே இருவருக்கும் இடையில் மனக்கசப்பு போனது. ஓராண்டுக்குப் பிறகு அவரது தாய் இறந்துவிட்டார். ஆனால், அவர் தன் தாயைப் பார்த்துக்கொண்ட விதம், அவரது சகோதரிகளுடனான உறவை மீண்டும் புதுப்பித்தது.

பெரும்பாலான திருநங்கைகள், மற்றவர்களைப் போலவே உழைக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், போதிய அரசாங்க ஆதரவு இல்லாமல் போவதால், அவர்கள் நலிந்தவர்களாக, மற்றவர்களின் வம்புக்கு இலக்கானவர்களாக ஆகிறார்கள் என்கிறார் மனீஷா. “இந்த வீட்டில் தனியாக இருக்கும்போது சில நேரம் வீட்டைத் திறந்துவைக்கக்கூட எனக்குப் பயமாக இருக்கும். என் சகோதரிகள் அருகிலேயே இருந்தாலும் அவர்கள் தனியாகவே வாழ்கிறார்கள். கூப்பிட்டால் வந்து விடுவார்கள்,” என்கிறார் அவர்.

மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்

Nitya Rao

নিত্যা রাও ইউকের নরউইচ ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়ায় জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট-এর অধ্যাপক। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে নারীর অধিকার, কর্মসংস্থান এবং শিক্ষা ইত্যাদি বিষয়গুলির উপর গবেষক, শিক্ষক এবং প্রবক্তা হিসেবে ব্যাপকভাবে কাজ করছেন।

Other stories by Nitya Rao
Photographs : M. Palani Kumar

এম. পালানি কুমার পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার স্টাফ ফটোগ্রাফার। তিনি শ্রমজীবী নারী ও প্রান্তবাসী মানুষের জীবন নথিবদ্ধ করতে বিশেষ ভাবে আগ্রহী। পালানি কুমার ২০২১ সালে অ্যামপ্লিফাই অনুদান ও ২০২০ সালে সম্যক দৃষ্টি এবং ফটো সাউথ এশিয়া গ্রান্ট পেয়েছেন। ২০২২ সালে তিনিই ছিলেন সর্বপ্রথম দয়ানিতা সিং-পারি ডকুমেন্টারি ফটোগ্রাফি পুরস্কার বিজেতা। এছাড়াও তামিলনাড়ুর স্বহস্তে বর্জ্য সাফাইকারীদের নিয়ে দিব্যা ভারতী পরিচালিত তথ্যচিত্র 'কাকুস'-এর (শৌচাগার) চিত্রগ্রহণ করেছেন পালানি।

Other stories by M. Palani Kumar
Editor : Shaoni Sarkar

শাওনি সরকার কলকাতা ভিত্তিক স্বতন্ত্র সাংবাদিক।

Other stories by Shaoni Sarkar
Translator : A.D.Balasubramaniyan

A.D.Balasubramaniyan, is a bilingual journalist, who has worked with leading Tamil and English media for over two decades from Tamil Nadu and Delhi. He has reported on myriad subjects from rural and social issues to politics and science.

Other stories by A.D.Balasubramaniyan