சட்டீஸ்கரின் ஜாஷ்பூர் மற்றும் சுர்குஜா மாவட்டங்களில் ஷைலா ந்ருத்யா பிரபலமான நடனமாக இருக்கிறது. ராஜ்வடே, யாதவ், நாயக், மானிக்புரி சமூகங்களை சேர்ந்தவர்கள் இந்த நடனமாடுகின்றனர். “சட்டீஸ்கரிலும் ஒடிசாவிலும் சேர்சேரா என அழைக்கப்படும் ஷேத் விழாவிலிருந்து நாங்கள் ஆடத் தொடங்குவோம்,” என்கிறார் சுர்குஜா மாவட்டத்தின் லஹ்பத்ரா கிராமத்தை சேர்ந்த கிருஷ்ண குமார் ராஜ்வடே.
சட்டீஸ்கரின் தலைநகரமான ராய்ப்பூரில் 15 ஷைலா ந்ருத்யா கலைஞர்களின் குழு, கைவினைத் தொழிலுக்கென நடத்தப்படும் அரசு விழாவில் நடனமாட இருக்கிறது. கிருஷ்ண குமார் அக்குழுவில் ஒருவர்.
இந்த நடனம் வண்ணங்கள் மிகுந்தது ஆகும். கலைஞர்கள் அனைவரும் பிரகாசமான நிறங்களில் ஆடைகளும் அலங்கார தலைப்பாகைகளும் அணிந்து கையில் குச்சிகளை ஏந்தி ஆடுவர். புல்லாங்குழல், மந்தர் மேளம், மகுடி, ஜுகால் போன்ற இசைக்கருவிகள் இந்த நடனத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
ஆண்கள் மட்டுமே ஆடும் இந்த நடனத்தில் சிலர் மயிலிறகை ஆடையில் சேர்த்துக் கொண்டு, மயில் போன்ற தோற்றம் தரித்து ஆடுவார்கள்.
சட்டீஸ்கரில் பழங்குடி மக்கள்தொகை அதிகம். பெரும்பாலான மக்கள் விவசாயம் செய்கின்றனர். அப்பகுதியின் நடனம் மற்றும் இசையிலும் இது பிரதிபலிக்கிறது. அறுவடை முடிந்தபின், கிராமத்தில் மக்கள் ஒரு மூலையிலிருந்து மறுமூலைக்கு நடனமாடி களிக்கின்றனர்.
தமிழில்: ராஜசங்கீதன்