முதன்முறை தியா கிட்டத்தட்ட தப்பி விட்டார்.
பேருந்தில் அமர்ந்திருந்த அவர், பேருந்து நிரம்ப பதைபதைப்புடன் காத்திருந்தார். சூரத்திலிருந்து ஜாலோத் செல்வதற்கான பயணச் சீட்டு எடுத்திருந்தார். அங்கிருந்து குஜராத்தை கடந்து ராஜஸ்தானில் அவரது வீடு இருக்கும் குஷால்கருக்கு செல்ல ஒரு மணி நேரமாகும் என அவருக்கு தெரிந்திருந்தது.
அவர் ஜன்னலில் வெளியே பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் ரவி திடீரென பின்னாலிருந்து வந்தான். சுதாரிப்பதற்கு முன், கையைப் பிடித்து அவரை பேருந்திலிருந்து இழுத்து வெளியே போட்டான்.
சுற்றியிருந்த மக்கள், தங்களின் குழந்தைகளை பார்த்துக் கொண்டும் மூட்டை முடிச்சுகளை ஏற்றிக் கொண்டும் தங்களின் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். கோபத்தில் இருந்த அந்த இளைஞன் மீதும் பதட்டத்தில் இருந்த அந்த பதின்வயது பெண் மீதும் எவரின் கவனமும் செல்லவில்லை. “கத்துவதற்கு பயமாக இருந்தது,” என்கிறார் தியா. கடந்த காலத்தில் ரவியின் கோபம் கொடுத்த அனுபவத்தில், அமைதியாக இருப்பதுதான் சரியென அவருக்கு பட்டது.
ஆறு மாதங்களாக வீடாகவும் சிறையாகவும் இருந்த கட்டுமான தளத்தில் அந்த இரவில், தியாவால் தூங்க முடியவில்லை. அவரின் உடல் வலித்தது. ரவி அடித்ததால் அவரின் தோல் பல இடங்களில் விரிசல் கொண்டு காயங்கள் பெற்றிருந்தது. “முஷ்டிகளை பயன்படுத்தினான். என்னை உதைத்தான்,” என நினைவுகூருகிறார். “அவன் அவளை அடிக்கும்போது யாராலும் தடுக்க முடியவில்லை.” தலையிட்ட ஆண்கள், தியாவின் மீது தப்பான எண்ணம் கொண்டவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டார்கள். தாக்குதலை பார்த்த பெண்கள் தூரத்திலேயே இருந்தனர். யாரேனும் தடுக்க முயன்றால், ரவி சொல்வான், “இவள் என் மனைவி. நீ ஏன் தலையிடுகிறாய்?” என.
“ஒவ்வொரு முறை நான் தாக்கப்படும்போதும், காயத்துக்கு கட்டு போட மருத்துவமனைக்கு செல்வேன். 500 ரூபாய் செலவாகும். ரவியின் சகோதரன் சில நேரங்களில் பணம் கொடுப்பான். சமயங்களில் மருத்துவமனைக்கு துணை வந்து, “உன் பெற்றோர் வீட்டுக்கு போ,” என்பான்,” என்கிறார் தியா. ஆனால் அதை எப்படி அவரால் செய்ய முடியுமென இருவருக்குமே தெரியாது.
தியாவும் ரவியும் ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 2023ம் ஆண்டின் பன்முகத்தன்மை வறுமை அறிக்கை யின்படி வறுமையில் உழலும் மக்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் மாநிலத்திலேயே அந்த மாவட்டம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. சிறு நிலங்கள், நீர்ப்பாசனமின்மை, வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை எல்லாமும் சேர்ந்து குஷால்கரை அழுத்தம் நிறைந்த தாலுகாவாக பில் பழங்குடிகளுக்கு மாற்றியிருக்கிறது. அந்த மாவட்டத்தின் மக்கள்தொகையில் 90 சதவிகிதம் பேர் பில் பழங்குடிகள்தாம்.
மற்றவர்களை போல, குஜராத்தின் கட்டுமான தளங்களில் பணிபுரியச் செல்லும் மற்றுமோர் புலம்பெயர் தம்பதியாகத்தான் தியாவும் ரவியும் தெரிவார்கள். ஆனால் திவ்யாவின் புலப்பெயர்வு கடத்தலால் நிகழ்கிறது.
16 வயதில், பக்கத்து சஜ்ஜன்கர் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது முதன்முறையாக சந்தையில் ரவியை சந்தித்தார் தியா. அவன் பார்க்க விரும்புவதாக சொல்லி கிராமத்தின் முதிய பெண் ஒருவர், அவனது தொலைபேசி எண்ணை துண்டு சீட்டில் எழுதிக் கொடுத்து, சந்திக்க சொன்னார்.
தியா அவனை தொடர்பு கொள்ளவில்லை. அடுத்த வாரம் அவன் சந்தைக்கு வந்தபோது, கொஞ்ச நேரம் அவர் பேசினார். “பைக்கில் பகிதோரா வரை ஒரு ரவுண்ட் சென்று வருவோமெனக் கூறினான். பள்ளி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக பிற்பகல் 2 மணிக்கு வெளியே வரச் சொன்னான்,” என நினைவுகூருகிறார். அடுத்த நாள் அவர் பள்ளிக்கு வெளியே ஒரு நண்பருடன் காத்திருந்தார்.
“பகிதோராவுக்கு நாங்கள் செல்லவில்லை. பேருந்து நிலையத்துக்கு சென்றோம். அகமதாபாத்துக்கு செல்லும் பேருந்தில் என்னை ஏற வைத்தான்,” என்கிறார் அவர், 500 கிலோமீட்டர் தூரத்தில் அடுத்த மாநிலத்திலிருந்து.
பதட்டமான தியா, சமாளித்து பெற்றோருக்கு தொலைபேசியில் அழைத்தார். “அகமதாபாத்திலிருந்து அழைத்து செல்ல என் மாமா வந்தார். ஆனால் ஊரிலிருந்து நண்பர்களின் வழியாக ரவிக்கு அந்த செய்தி வந்துவிட்டது. எனவே அவன் என்னை சூரத்துக்கு அழைத்து சென்றான்.”
அதற்கு பிறகு அவர் யாரிடமேனும் பேசி விடுவாரோ என அவன் அச்சம் கொண்டான். வன்முறை தொடங்கியது. தொலைபேசி அழைப்புக்காக செல்பேசி கேட்டால் அதிக வன்முறை நேரும். குடும்பத்துடன் பேச வேண்டுமென விரும்பி, அழுது, செல்பேசிக்காக அவனிடன் கெஞ்சிய ஒரு நாளை நினைவுகூருகிறார் தியா. “கட்டுமான தளத்தின் முதல் தளத்திலிருந்து என்னை கீழே தள்ளிவிட்டான். அதிர்ஷ்டவசமாக, நான் ஒரு குவியல் மீது விழுந்து சிராய்ப்புகளுடன் பிழைத்தேன்,” என சொல்லும் அவர், இன்னும் காயம் இருக்கும் முதுகை காட்டுகிறார்.
*****
தியா கடத்தப்பட்டது தெரிந்ததும் தினக்கூலிப் பணியாளரும் அவரது தாயுமான 35 வயது கமலா அவரை மீட்க முயற்சி செய்தார். பன்ஸ்வாரா மாவட்ட குக்கிராமத்தில் குடும்பத்துக்கு சொந்தமான ஓரறை வீட்டில், கட்டுப்படுத்த முடியாமல் அழுததை அவர் நினைவுகூறுகிறார். “அவள் என் மகள். அவள் மீண்டும் வர வேண்டுமென என் மனம் விரும்பாதா?” ரவி தியாவை அழைத்து சென்ற சில நாட்களில் கமலா அவன் மீது புகார் பதிவு செய்தார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக பதிவு செய்யப்படுவதில் மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் இருக்கிறது. ஆனால் இந்த குற்றங்களை பற்றிய குற்ற அறிக்கை தயாரிப்பது 55% அளவுக்குதான் இருப்பதாக தேசிய குற்ற ஆவணங்கள் நிறுவனம் (NCRB) பிரசுரித்த இந்தியாவில் குற்றங்கள் 2020 அறிக்கை குறிப்பிடுகிறது. மூன்று கடத்தல் சம்பவங்களில் இரண்டு காவல்துறை வழக்காக மாறுவதில்லை. தியாவின் புகாரும் மாறவில்லை.
“அவர்கள் புகாரை விலக்கிக் கொண்டார்கள்,” என நினைவுகூறுகிறார் குஷால்கரின் காவல்துறை துணை கண்காணிப்பரான ரூபா சிங். பஞ்சாதியா எனப்படும் ஊரின் முக்கிய பிரமுகர்கள் குழு, பிரச்சினையை கையாண்டதாக சொல்கிறார் கமலா. காவல்துறை தலையீடு இன்றி, தியாவின் பெற்றோரான கமலாவும் அவரின் கணவர் கிஷனும் ‘மணமகள் விலை’ பெற்று பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும்படி வலியுறுத்தினார்கள். ‘மணமகள் விலை’ என்பது மனைவிக்கு கணவன் வீட்டிலிருந்து கொடுக்கப்படும் தொகை. பில் பழங்குடியினரின் வழக்கம் இது. (ஒருவேளை ஆண்கள் மணத்தை முறித்துக் கொண்டால், மறுமணம் செய்ய இந்த பணத்தை திரும்பக் கேட்பார்கள்.)
1-2 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு, கடத்தல் வழக்கை கைவிடும்படி கேட்கப்பட்டதாக குடும்பம் சொல்கிறது. ‘திருமணம்’ என்பதாக இருவரின் உறவும் இப்படியாக சமூக ஏற்பை பெற்றது. தியாவின் குறைந்த வயதோ அவரது சம்மதமோ பொருட்படுத்தப்படவில்லை. ராஜஸ்தானை பொறுத்தவரை 20-24 வயதுகளில் இருக்கும் பெண்களில் கால்வாசி பேர், 18 வயதை எட்டும் முன்பே மணம் முடித்துக் கொள்வதாக சமீபத்திய NFHS-5 அறிக்கை குறிப்பிடுகிறது.
டீனா கராசியா, குஷால்கரில் சமூகப் பணியாளராக இருக்கிறார். பில் பழங்குடியான அவர், தியாவின் சம்பவங்களை போன்ற சம்பவங்களை ஓடிப் போன மணமகளாக கணக்கில் எடுத்துக் கொள்ள மறுக்கிறார். “எங்களிடம் வரும் பல பிரச்சினைகளை பொறுத்தவரை, அந்த பெண்கள் தங்களின் விருப்பத்தோடு செல்வதாக என் மனதுக்கு படவில்லை. ஏதோ ஆதாயம் அல்லது காதல் அல்லது காதலுறவில் சந்தோஷம் போன்ற விஷயம் எதையும் கூட எதிர்பார்த்தோ அவர்கள் சென்றதாக தெரியவில்லை,” என்கிறார் பன்ஸ்வாரா மாவட்டத்திலிருக்கும் ஆஜீவிகாவின் வாழ்வாதார அமைப்பின் தலைவரான அவர். பத்தாண்டுகளுக்கும் மேலாக புலம்பெயர் பெண்களுக்காக அவர் இயங்கி வருகிறார்.
“அவர்கள் செல்வதை கடத்தலுக்கான சதியாகவும் உத்தியாகவும்தான் நான் பார்க்கிறேன். பெண்களை இத்தகைய உறவுகளுக்குள் கொண்டு வரும் ஆட்கள் இங்கேயே இருக்கிறார்கள்,” என்னும் டீனா, ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தினால் பணம் கைமாற்றப்படுகிறது என்கிறார். “ஒரு 14-15 வயது பெண்ணுக்கு காதலுறவை பற்றியும் வாழ்க்கை பற்றியும் என்ன புரிதல் இருக்கும்?”
ஜனவரி காலை ஒன்றில் குஷால்கரின் டீனா அலுவலகத்தில் இருந்தோம். மூன்று குடும்பங்கள் தம் மகள்களுடன் வந்திருந்தது. அவர்களின் கதைகளும் தியாவின் கதைகளை போலத்தான் இருந்தது.
16 வயதில் சீமா மணம் முடித்து, குஜராத்துக்கு கணவருடன் புலம்பெயர்ந்தார். “யாரிடம் நான் பேசினாலும் அவருக்கு பிடிக்காது. ஒருமுறை அவர் கடுமையாக அடித்ததில், இன்னும் அந்தப் பக்கத்து காது எனக்கு கேட்பதில்லை,” என்கிறார் அவர்.
“கடுமையாக அடிப்பார். பயங்கரமாக வலிக்கும். எழக் கூட முடியாது. பிறகு அவர் என்னை காம்சோர் (வேலையை தட்டிக் கழிப்பவள்) எனத் திட்டுவார். ஆகவே காயங்களோடே நான் வேலை பார்த்தேன்,” என்கிறார். அவரின் ஊதியம் நேரடியாக கணவருக்கு சென்றுவிடும். “அவர் மாவு கூட வாங்க மாட்டார். மொத்த பணத்தையும் குடியிலேயே அழித்து விடுவார்.”
ஒருவழியாக தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சொல்லி, அவரை விட்டு விலகினார். அப்போதிருந்து அவர் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். “நான் கர்ப்பமாக இருக்கிறேன். அவர் எங்களின் மணவாழ்க்கையை முறிக்கவும் இல்லை. வாழ பணமும் கொடுக்கவில்லை,” என்கிறார் அவர். எனவே, அநாதரவாக விட்டுப் போனதற்காக முதல் தகவல் அறிக்கையை அவரின் குடும்பத்தினர் பதிவு செய்தனர். குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை காப்பதற்கான சட்டப்பிரிவு 1 (d)-ன்படி ஜீவனாம்சம் கொடுக்கப்பட வேண்டும். குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 125 பிரிவும் அதோடு சேர்ந்திருக்கிறது.
ராணிக்கும் வயது 19தான். மூன்று வயது குழந்தைக்கு தாயான அவர், இரண்டாம் குழந்தையை கருவிலேந்தியிருந்தார். அவரையும் அவரது கணவர் கைவிட்டுவிட்டார். அதற்கு முன், வார்த்தைகளாலும் உடல்ரீதியாகவும் சித்ரவதையை அனுபவித்தார் அவர். “ஒவ்வொரு நாளும் குடித்து விட்டு வந்து கேவலமான பெண், விபச்சாரி என்பதற்கான வசவு வார்த்தைகளை சொல்லி சண்டை போடத் தொடங்குவார்,” என்கிறார் அவர்.
அவரும் காவல்துறையில் புகார் செய்திருந்தார். ஆனால் பஞ்சாதியா தலையிட்டு, கணவர் இனி நன்றாக நடந்து கொள்வாரென 50 ரூபாய் முத்திரைத்தாளில் உத்தரவாதம் எழுதி வாங்கிக் கொடுத்ததும், புகார் திரும்பப் பெறப்பட்டது. ஒரு மாதம் கழித்து மீண்டும் துன்புறுத்தல் தொடங்கியது. பஞ்சாதியா கண்டுகொள்ளவில்லை. “நான் காவல்துறைக்கு சென்றேன். ஆனால் முந்தைய புகாரை நான் திரும்பப் பெற்றுவிட்டதால், சாட்சிகள் இல்லாமல் போய்விட்டது,” என்கிறார் ராணி. பள்ளிக்கே சென்றிராத அவர், சட்டத்தின் இயங்குமுறையை கற்றுக் கொண்டிருக்கிறார். பில் பெண்களின் படிப்பறிவு, பட்டியல் பழங்குடியினரின் புள்ளிவிவரம், 2013-ன் படி வெறும் 31 சதவிகிதம் தான்.
ஆஜீவிகா மைய அலுவலகத்தில், குழு உறுப்பினர்கள் சட்டம் மற்றும் பிற உதவிகளை தியா, சீமா மற்றும் ராணி போன்ற பெண்களுக்கு வழங்குகின்றனர். “ ஷ்ராமிக் மஹிலாவோன் கா சுரஷித் ப்ரவாஸ் (பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பான புலப்பெயர்வு)’ என்ற பெயரில் பெண்களுக்கான உதவி எண்கள், மருத்துவமனைகள், தொழிலாளர் அட்டைகள் போன்றவை குறித்த தரவுகள் கொண்ட புத்தகம் கூட பிரசுரித்திருக்கின்றனர். ஆனால் பாலியல் வன்முறைகளிலிருந்து மீண்டவர்களுக்கு காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் எண்ணற்ற முறை செல்லும் கடினமான பாதை நீளுகிறது. ஆனால் முடிவு மட்டும் புலப்படுவதில்லை. இளம் குழந்தைகளை கவனிக்க வேண்டிய பொறுப்பும் இருப்பதால், பலரால் பணிக்கு புலம்பெயரவும் முடிவதில்லை.
இந்த பிரச்சினையை பாலினப் பிரச்சினையாகவும் இளம்பெண்களை கடத்தும் பிரச்சினையாகவும் டீனா பார்க்கிறார். “பெண்களை அனுப்ப கட்டாயப்படுத்தும் நிகழ்வுகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு அவர்கள் கைமாற்றப்படுவார்கள். கடத்தல் முறைகள் இப்படித்தான் செய்வார்களென புரிந்தது. சரியாக இதை பார்த்தால், பெண்கள் கடத்தல்தான் என்பது புரியும்,” என்னும் அவர், “இது அதிகமாகிக் கொண்டு வருகிறது,” என்கிறார்.
*****
கடத்தலுக்கு பிறகு அகமதாபாத்திலும் சூரத்திலும், தியா வேலைக்கு அனுப்பப்பட்டார். ரவியுடன் இருந்து அவர் தினக்கூலி வேலை செய்தார். ஒப்பந்ததாரர்களால் 350-400 ரூபாய் தினக்கூலிக்கு வேலைக்கு அனுப்பப்பட்டார். அவர்கள் நடைபாதையில் தார்ப்பாய்க்கு அடியில் வாழ்ந்தனர். பிறகு, ரவிக்கு காயம் கிடைத்தது. காயம் என்றால் மாத ஊதியம் பெற்று கட்டுமான தளத்தில் வசிப்பது என அர்த்தம்.
“(ஆனால்) என் சம்பாத்தியத்தை நான் பார்த்தது கூட இல்லை. அவன்தான் வைத்திருப்பான்,” என்கிறார் தியா. ஒரு நாள் முழுக்க கடினமான உடலுழைப்பை செலுத்தி விட்டு வந்து அவரே சமைப்பார். கழுவுவார். எல்லா வீட்டு வேலைகளும் செய்வார். சில நேரங்களில் பிற பெண் தொழிலாளர்கள் உரையாட வருவார்கள். ஆனால் ரவி, கழுகு போல் அவரை பார்த்துக் கொண்டிருந்தான்.
“நான் கிளம்புவதற்காக ஒருவர் மூலமாக மூன்று முறை என் தந்தை எனக்கு பணம் அனுப்பினார். ஆனால் நான் வெளியே நகர்ந்தாலே, யாரேனும் பார்த்து ரவியிடம் சொல்லி விடுவார்கள். அவன் என்னை போக விட மாட்டான். அச்சமயத்தில் நான் பேருந்தில் ஏறியதும், யாரோ ஒருவர் சொல்லிவிட்டார்கள். அப்படித்தான் அவன் அங்கு வந்து என்னை கண்டுபிடித்தான்,” என்கிறார் தியா.
அவரின் சம்பளமும் கைப்பற்றப்பட்டு, உள்ளூர் மொழியைப் பேசவும் முடியாமல், இந்தி ஓரளவு புரிந்து கொள்ள மட்டும் முடிந்த தியாவுக்கு, அரசு உதவி உள்ளிட்ட எந்த உதவியையும் ஆதரவையும் குஜராத்தில் தேடவும் அடையவும் சாத்தியமில்லை. ரவியின் கொடுமையிலிருந்து தப்பிக்கவும் வாய்ப்பில்லை.
பேருந்திலிருந்து தியாவை ரவி இழுத்து வெளியே போட்டு நான்கு மாதங்களுக்கு பிறகு, அவர் கருவுற்றார். அவரின் விருப்பத்தில் நேர்ந்தது அல்ல அது.
அடிகள் குறைந்தாலும் முற்றிலுமாக நின்றுவிட வில்லை.
எட்டாவது மாதம், அவரை ரவி பெற்றோர் வீட்டில் சென்று விட்டு வந்தான். பிரசவத்துக்காக அவர் ஜாலோத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது மகனும் மருத்துவமனையில்தான் இருந்தார். ICU-வில் 12 நாட்களாக இருந்ததால் அவரால் பாலூட்ட முடியவில்லை. பால் சுரப்பு நின்றுவிட்டது.
அச்சமயத்தில் அவரது குடும்பத்தில் ரவியின் வன்முறை முகம் தெரிந்திருக்கவில்லை. கொஞ்ச நாட்களில், பெற்றோர் தியா திரும்ப ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தனர். இளம்தாய்கள் தங்களின் கைக்குழந்தைகளை தங்களுடன் அழைத்துச் செல்வார்கள். “பெண்ணுக்கான ஆதரவு அவள் மணம் முடித்துக் கொண்ட ஆண்தான்,” என விளக்குகிறார் கமலா. “அவர்கள் ஒன்றாக வாழ்வார்கள், ஒன்றாக பணிபுரிவார்கள்.” பெற்றோருடன் தங்கினால், குடும்பத்தின் பொருளாதாரம் விரயமாகும்.
இவற்றுக்கிடையில், துன்புறுத்துதல் தொலைபேசியில் தொடங்கியது. குழந்தைக்கான சிகிச்சைக்கு பணம் கொடுக்க ரவி மறுத்தான். அச்சமயத்தில் பெற்றோர் வீட்டில் இருந்த தியா, சற்று தைரியம் கொண்டு விட்டார். தன்னுடைய சுதந்திரத்தை வெளிக்காட்டும் வகையில் சில நேரங்களில், “சரி.. என் தந்தையிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்,” என சொல்வார். “அவர்கள் கடுமையாக வாக்குவாதம் செய்வார்கள்,” என கமலா நினைவுகூருகிறார்.
ஒருமுறை அப்படி பேசும்போது இன்னொரு பெண்ணுடன் சென்று விடுவேனன அவன் சொல்லியிருக்கிறான். அதற்கு இவர், “முடிந்தால், போய்க் கொள்,” என பதில் கூறியிருக்கிறார். பிறகு அழைப்பை துண்டித்திருக்கிறார்.
பக்கத்து தாலுகாவிலுள்ள வீட்டில் வசித்து வந்த ரவி, சில மணி நேரங்கள் கழித்து, பெண்ணின் பெற்றோர் வீட்டில் ஐந்து பேருடன் மூன்று பைக்குகளில் வந்து இறங்கினான். இனி சரியாக நடந்து கொள்வதாகவும் சூரத்துக்கு செல்லலாமென்றும் சொல்லி தன்னுடன் வரும்படி அவரை அவன் வற்புறுத்தினான்.
“அவன் வீட்டுக்கு என்னை அழைத்து சென்றான். என் குழந்தையை ஒரு கட்டிலில் படுக்க வைத்தனர். என் வீட்டுக்கான் என்னை அறைந்தான். முடியைப் பிடித்து இழுத்து அறைக்குள் சென்று கதவை அடைத்தான். அவனது சகோதரர்களும் உள்ளே வந்தனர். என் கழுத்தை அவன் அழுத்த, மற்றவர்கள் என் கைகளை பிடித்து கீழே அமர்த்தி வைக்க, இன்னொரு கையால் என் தலையை அவன் மழித்தான்,” என அவர் நினைவுகூருகிறார்.
வலி மிகுந்த அனுபவமாக அந்த நினைவு தியாவுக்கு நிலைத்திருக்கிறது. “ஒரு தூணில் [மரக் கம்பம்] நான் சாய்த்து அழுத்திப் பிடிக்கப்பட்டிருந்தேன். முடிந்தளவுக்கு கத்தினேன். ஆனால் ஒருவரும் வரவில்லை.” பிறகு மற்றவர்கள் அறையை விட்டு வெளியேறி கதவை அடைத்தனர். “என் ஆடைகளை அவன் உருவி, வல்லுறவு கொண்டான். அவன் சென்றதும் வேறு மூன்று பேர் வந்தனர். வரிசையாக என்னை வன்புணர்ந்தனர். அவ்வளவுதான் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஏனெனில் நான் மூர்ச்சையாகி விட்டேன்.”
அறைக்கு வெளியே கைக்குழந்தை மகன் அழத் துவங்கியிருக்கிறான். “வீட்டுக்காரன் செல்பேசியில் என் தாயை அழைத்து, ‘அவள் வர மாட்டேன் என்கிறாள். நாங்கள் வந்து குழந்தையை கொடுத்து விடுகிறோம்,’ என சொல்வது கேட்டது. அதற்கு என் தாய் மறுப்பு தெரிவித்து, அவரே வருவதாக சொன்னார்.”
வீட்டுக்கு சென்றதும் குழந்தையை எடுத்துக் கொள்ளும்படி ரவி சொன்னதாக கமலா நினைவுகூருகிறார். “நான் ‘முடியாது’ என்றேன். என் மகளை பார்க்க வேண்டும் என்றேன்.” தகனத்துக்காக தலை மழிக்கப்பட்டதை போன்ற தோற்றத்தில் நடுக்கத்துடன் தியா வந்தார். “என் கணவரை, ஊர்த் தலைவரை, கிராம அலுவலரை அழைத்தேன். அவர்கள் காவலர்களை அழைத்தார்கள்,” என நினைவுகூருகிறார் கமலா.
காவலர்கள் வந்ததும், சம்பந்தப்பட்டவர்கள் தப்பிவிட்டனர். தியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். “பற்கடி தடங்கள் இருந்தன,” என அவர் நினைவுகூருகிறார். “வல்லுறவு பரிசோதனை நடத்தப்படவில்லை. என் காயங்கள் புகைப்படம் எடுக்கப்படவுமில்லை.”
குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு (9g)-ன்படி உடல்ரீதியான வன்முறை இருந்தால், உடல் பரிசோதனைக்கு காவல்துறை உத்தரவிட வேண்டும். அவரின் குடும்பத்தினர் காவல்துறையிடம் எல்லா விஷயங்களையும் சொல்லியும் கூட, இக்கட்டுரையாளர் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் கேட்டபோது, தியா தன் வாக்குமூலத்தை மாற்றி, வல்லுறவு பற்றி குறிப்பிடாமல் விட்டுவிட்டதாக சொன்னார். ஏதோ சொல்லிக் கொடுத்து செய்தது போல் இருந்தது.
தியாவின் குடும்பம் இதை முற்றாக நிராகரிக்கிறது. “அவர்கள் பாதி எழுதி, பாதியை விட்டுவிட்டார்கள்,” என்கிறார் தியா. “2-3 நாட்கள் கழித்து நீதிமன்றத்தில் நான் வாக்குமூலத்தை வாசித்து பார்த்தேன். நான்கு பேர் என்னை வன்புணர்ந்த தகவலை அவர்கள் எழுதாமல் விட்டிருந்தனர். அவர்களின் பெயர்களை நான் சொல்லியும், அவர்கள் அவற்றை எழுதவில்லை.”
குடும்ப வன்முறையை சந்திக்கும் புலம்பெயர் பெண் தொழிலாளர்களுக்கு இரு வகையான பாதிப்பு- ஒப்பந்ததாரர்கள் அவர்களுக்கான வேலைகளை கணவர்கள் மூலமாக கையாளுவார்கள், உள்ளூர் மொழிகள் புரியாத பெண்கள் உதவி பெறுவதில் சிரமத்தை சந்திக்கிறார்கள்
ரவியும் மற்ற மூவரும் கைது செய்யப்பட்டனர். ரவியின் குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டனர். அனைவரும் பிணையில் வெளிவந்தனர். ரவியின் நண்பர்களும் குடும்பத்தினரும் தியாவை கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
2024ம் ஆண்டில், இக்கட்டுரையாளர் தியாவை சந்தித்தபோது, காவல்நிலையம் மற்றும் நீதிமன்றத்துக்கு பலமுறை செல்வதும் வலிப்பு நோய் கொண்ட 10 மாத குழந்தையை பார்த்துக் கொள்வதும்தான் தன் அன்றாட பணியாக இருக்கிறது என அவர் குறிப்பிட்டார்.
“ஒவ்வொரு முறை குஷால்காருக்கு செல்லவும் எங்கள் ஒவ்வொருவருக்கும் பேருந்துச் செலவு 40 ரூபாய் ஆகிறது,” என்கிறார் தியாவின் தந்தை கிஷன். சில நேரங்களில் அவசரமாக குடும்பத்தை அழைப்பார்கள். ஒரு தனியார் வேனை 2000 ரூபாய் கொடுத்து வாடகைக்கு அமர்த்தி 35 கிமீ பயணிப்பார்கள்.
செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் கிஷன் புலப்பெயர்வை நிறுத்திவிட்டார். “இந்த வழக்கு முடியாமல், நான் எப்படி புலம்பெயர்வது? ஆனால் நான் வேலை பார்க்காமல், குடும்பத்தை எப்படி நடத்துவது?” என அவர் கேட்கிறார். “இந்த வழக்கை கைவிட பஞ்சாதியா ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்க முன் வந்தது. ஏற்கும்படி என் ஊர்த்தலைவர் சொன்னார். நான் மறுத்துவிட்டேன். சட்டப்படி அவனுக்கு தண்டனை கிடைக்கட்டும்.”
வீட்டின் மண் தரையில் அமர்ந்திருக்கும் 19 வயது தியா, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களென நம்புகிறார். அவரின் முடி ஒரு அங்குலம் வளர்ந்துவிட்டது. “என்னிடம் விரும்பியதை அவர்கள் செய்து விட்டார்கள். அதில் பயப்பட என்ன இருக்கிறது? நான் போராடுவேன். இப்படி ஒன்றை செய்தால் என்ன நடக்குமென அவனுக்கு தெரிய வேண்டும். அப்போதுதான் மீண்டும் இதை யாருக்கும் அவன் செய்ய மாட்டான்.”
அவரின் குரல் உயர்ந்து, “அவன் தண்டிக்கப்பட வேண்டும்,” என சொல்கிறார்.
இந்தியாவில் பாலியல் மற்றும் பாலின ரீதியிலான வன்முறைக்கு (SGBV) ஆளாகி மீண்டவர் ஆதரவு பெற சமூகத்திலும் நிறுவனங்களிலும் அமைப்பிலும் எத்தகைய தடைகள் இருக்கின்றன என்பதை பற்றிய நாடு முழுவதிலுமான செய்தி சேகரிக்கும் பணியில் ஒரு பகுதிதான் இக்கட்டுரை. இது இந்தியாவின் எல்லை கடந்த மருத்துவர்கள் அமைப்பின் முன்னெடுப்பு ஆகும்
பாலியல் வன்முறையிலிருந்து மீண்டவர்களில் பெயர்களும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும் அவர்களின் பாதுகாப்பு கருதி மாற்றப்பட்டிருக்கிறது
தமிழில்: ராஜசங்கீதன்