அனுபாராம் சுதார் ஒருபோதும் இசைக்கருவியை வாசித்ததில்லை என்றாலும் எந்த மரக்கட்டை சரியான ஒலியைக் கொடுக்கும் என்பதை நன்கு அறிந்தவர். "என்னிடம் ஒரு மரத் துண்டைக் கொடுத்தால், அதில் ஒரு நல்ல இசைக்கருவியை உருவாக்க முடியுமா என்று என்னால் உங்களுக்குச் சொல்ல முடியும்," என்கிறார் இந்த எட்டாவது தலைமுறை கர்தால் வடிவமைப்பாளர்.

ராஜஸ்தானின் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் பக்தி பாடல்களுக்கு பயன்படுத்தப்படும் தாள வாத்தியமான கர்தால், நான்கு மரத்துண்டுகளால் உருவானது. ஒவ்வொரு கையும் இரண்டு துண்டுகளை பிடித்திருக்கும் - கட்டைவிரலால் ஒரு துண்டும், மீதமுள்ள நான்கு விரல்களால் மற்றொரு துண்டும் பிடிக்கப்படுகிறது. ஒன்றாகக் அடிக்கப்படும்போது, ​​அவை ஒரு வகை ஒலியை உருவாக்குகின்றன. மற்றும் என, கருவியில் இரண்டு எழுத்தொலிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. " கலாக்கர் பன்வதே ஹே [இசைக்கலைஞர்கள் கர்தால்களை செய்யப் பணியிடுகிறார்கள்]," என்கிறார் அந்த 57 வயது கைவினைஞர்.

சிம்பல்களில்  மணிகள் பதிக்கப்படுவது போல, ராஜஸ்தானி கர்தால்களில், பொதுவாக மஞ்சீரா அல்லது கரதாலாஸில் ஏதும் பதிக்கப்படுவது இல்லை.

ஒரு தலைசிறந்த கைவினைஞரால், இரண்டு மணி நேரத்தில் நான்கு ஜோடி கருவிகளை உருவாக்க முடியும். "முன்னதாக, எனக்கு ஒரு நாள் முழுவதும் [எட்டு மணிநேரம்] தேவைப்படும்," என்று அவர் கைவினைப்பொருளில் தனது ஆரம்ப ஆண்டுகளை நினைவு கூர்கிறார். சுதார்கள் சமூகத்தைச் சார்ந்த அனுபாராம் குடும்பத்தினர், கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாக கர்தால்களை உருவாக்கி வருகின்றனர்: "பச்பன் சே யேஹி காம் ஹை ஹமாரா [குழந்தை பருவத்திலிருந்து, இது தான் எங்கள் வேலை]."

அவர் மறைந்த தனது தந்தை உஸ்லாராம், ஒரு கனிவான ஆசிரியர் என்றும், மிகவும் பொறுமையாக தனக்கு கற்பித்தவர் என்றும் நினைவு கூர்கிறார். "நான் நிறைய தவறுகள் செய்வேன், லெகின் வோ கபி நஹி சில்லதே தி, பியார் சே சமஜ்தே தி [ஆனால அவர் ஒருபோதும் என்னைத் திட்டியதில்லை. எப்போதும் அன்பாக கற்றுக் கொடுத்தார்]." சுதார் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே கர்தால்களை உருவாக்குகின்றனர்.

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

இடது: அனுபாராம் சுதார் கூறுகையில், கர்தாலை கைமுறையாக தயாரிப்பதில் சரியான மரத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். வலது: அனுபாராம் பட்டறையில் உள்ள பாரம்பரிய உபகரணங்கள். இடமிருந்து வலமாக - பெச்காஸ் (இரண்டு), நையா (நான்கு), ஒரு சோர்ஸி, பிந்தா (இரண்டு), மேலும் இரண்டு பெச்காஸ், ஒரு கோப்பு மற்றும் ஒரு மர்ஃபா

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

அனுபாராம் ஜெய்சால்மரின் பிரபலமான இசைக்கருவிகளான கமைச்சா மற்றும் சாரங்கி (இடது) ஆகியவற்றையும் கைகளால் உருவாக்குகிறார். அவர் பூக்கள் (வலது) வடிவம் செதுக்கி கதவுகளையும் செய்கிறார். அந்த கதவை உருவாக்க அவருக்கு கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகும்

பார்மர் மாவட்டத்தின் ஹர்சானி கிராமத்தில் இருந்து குடிபெயர்ந்துள்ள அனுபாராம் , "கிராமத்தில் போதுமான தச்சு வேலை கிடைக்கவில்லை" என்பதால் வேலை தேடி ஜெய்சால்மருக்கு 1981-ல் வந்தவர். தலைசிறந்த மரவேலை செய்பவருக்கு ஹார்மோனியம், கமைச்சா, சாரங்கி மற்றும் வீணை போன்ற மற்ற இசைக்கருவிகளையும் செய்யத் தெரியும். ஆனால், "அதற்கான ஆர்டர்கள் வருவது மிகவும் அரிது," என்று அவர் கூறுகிறார். முறையே ரூ.8,000 மற்றும் ரூ.4,000க்கு விற்கப்படும் கமைச்சா மற்றும் சாரங்கியை கையால் தயாரிக்க அவருக்கு ஒரு வாரத்திற்கும் மேலாகிறது.

இசைக்கருவிகளைத் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், ஜெய்சால்மரின் கட்டிடக்கலையில் ஒரு தனிச்சிறப்பான வடிவமைப்பான, நுணுக்கமாக கதவுகளில் செதுக்கப்படும் மலர் வடிவங்களை உருவாக்குவதிலும் இவர் தேர்ச்சி பெற்றுள்ளார். நாற்காலிகள், அலமாரிகள் மற்றும் டிரஸ்ஸிங் யூனிட்கள் போன்ற மரப்பொருட்களையும் உருவாக்குகிறார்.

ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மற்றும் ஜோத்பூர் மாவட்டங்களில் உள்ள கர்தால்கள், ஷீஷாம் (டல்பெர்கியா சிஸ்ஸூ) அல்லது சஃபேதா (யூகலிப்டஸ்) மரத்தால் செய்யப்படுகின்றன. கர்தால்களை தயாரிப்பதற்கான முதல் மற்றும் மிக முக்கியமான படி, சரியான வகையான மரத்தைத் தேர்ந்தெடுப்பதாகும். "தேக் கே லேனா பட்தா ஹே [கவனமாகப் பார்த்து தான்  மரத்தை வாங்க வேண்டும்]," என்று அவர் கூறுகிறார். "கர்தால் போன்ற கருவியை தயாரிப்பதற்கு சரியான மரத்தை எப்படி அடையாளம் காண்பது என்பது கூட இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரியாது."

அனுபாராம் ஜெய்சல்மரில் இருந்து மரத்தை வாங்குகிறார். ஷீஷாம் மற்றும் சஃபேதா மரங்களைக் கொண்டு கர்தால்களை உருவாக்குகிறார். ஆனால் இப்போது சரியான வகை மரத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகிவிட்டது என்று அவர் கூறுகிறார்.

நான்கு கர்தால்கள் கொண்ட ஒரு செட்டை உருவாக்க, அவர் 2.5 அடி நீளமுள்ள மரத்துண்டைப் பயன்படுத்துகிறார். அதன் விலை சுமார் ரூ.150 ஆகும். பின்னர் அவர் அந்த வடிவத்திற்கான பரிமாணங்களைக் அதில் குறிக்கிறார்: 7.25 அங்குல நீளம், 2.25 அங்குல அகலம் மற்றும் 6 மில்லிமீட்டர் ஆழம். பின்னர் அதனை ஒரு ரம்பத்தை பயன்படுத்தி வெட்டுகிறார்.

" புராடா உட்தா ஹே அவுர் நாக், ஆன்க் மே சலா ஜாதா ஹே [பறக்கும் மரத்தூள் அடிக்கடி என் கண்களுக்குள்ளும் காதுகளுக்குள்ளும் சென்று விடுகிறது]," என்று அவர் கூறுகிறார். இதனால் அவருக்கு அதிகமாக இருமல் வருவதாகவும் கூறுகிறார். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்ய வேண்டுமென்பதால், மாஸ்க் அணிவதும் கடினம். அது மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். கோடையில் 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை இருக்கும் என்பதால் "ஜெய்சால்மரின் வெயிலுக்கு, இது இன்னும் மோசமாகிறது," என்று அவர் கூறுகிறார்.

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

அனுபாராம் கர்தாலின் பரிமாணங்களை (இடது) குறிக்கிறார்: 7.25 அங்குல நீளம் மற்றும் 2.25 அங்குல அகலம். பின்னர், ஒரு ரம்பத்தை பயன்படுத்தி, அவர் மரத்தை (வலது) நான்கு பகுதிகளாக வெட்டுகிறார்

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

ராண்டாவைப் பயன்படுத்தி, அவர் மரத்தின் மேற்பரப்பை மிருதுவாக்குகிறார் (இடதுபுறம்), பின்னர் கர்தால்களின் மூலைகளை (வலது) ஒரு இணை ரம்பத்தைப் பயன்படுத்தி வட்ட வடிவமைக்கிறார்

மரத்தை அறுத்த பிறகு, மேற்பரப்பை மிருதுவாக்க ராண்டா (ஹேண்ட் ப்ளேன்) பயன்படுத்துகிறார். "இது மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டும். ஒரு சிறிய தவறு நடந்தாலும், மற்றொரு மரத்துண்டை எடுத்து மறுபடி வேலையைத் துவங்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார். கர்தால்கள் ஒலியை உருவாக்க தொடர்ந்து அடிக்கப்பட வேண்டும். எனவே அதன் மேற்பரப்பு செம்மையாக இல்லாவிடில் அது இசையின் தொனியையும் ஒலியையும் மாற்றிவிடும்.

பலமுறை, ரம்பத்தால் அவரது விரல்களை காயப்படுவதையும், சுத்தியலால் அவருக்கு வலி  ஏற்படுவதையும் பார்க்க முடிகிறது. ஆனால் அவரது வேலையில் இது சகஜம் என்கிறார். மேலும் அவரது தந்தை உஸ்லாராமுக்கும் வேலை செய்யும்போது இப்படித்தான் அடிக்கடி காயம் படும் என்று நினைவு கூர்கிறார்.

மர மேற்பரப்பை மிருதுவாக்க அவருக்கு சுமார் ஒரு மணி நேரம் ஆகிறது. பின்னர் அவர் நான்கு மூலைகளையும் ஒரு கோப்பிங் ரம்பத்தை பயன்படுத்தி, முனைகளை வட்ட வடிவமாக்குகிறார். பின்னர் அதனை கவனமாக பரிசோதித்து அனுபாராம், விளிம்புகள் கண்ணாடி போல மிருதுவாக மாறும் வரை தேய்க்கிறார்.

கர்தால்களை வாங்கிய பிறகு, இசைக்கலைஞர்கள் ஒலியை மேம்படுத்த உப்புத்தாள்களை பயன்படுத்துகிறார்கள். அதன் மீது கடுகு எண்ணெயைப் பயன்படுத்தும் போது, கருவி பழுப்பு நிறத்தைப் பெறுகிறது.

"ஷீஷாம் கர்தால்கள், சிறந்த இசையையும் ஒலியையும் தருபவை" என்பதால், அவர் நான்கு சஃபேதா கார்டல்களின் ஒரு செட்டை ரூ.350க்கும், ஷீஷம்மை ரூ.450க்கும் விற்பனை செய்கிறார்.

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

இடது: கர்தாலின் தேவை அதிகரித்துள்ள போதிலும், அவற்றை வடிவமைக்கும் கைவினைஞர்களின் எண்ணிக்கை ஜெய்சால்மரில் குறைந்து வருகிறது என்கிறார் அனுபாராம். வலது: ஷீஷாம் மரத்தால் செய்யப்பட்ட கார்டல்கள் சிறந்த ஒலியை உருவாக்குகின்றன

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

இடது: கதவுகளை உருவாக்க, அனுபாராம் மின் கருவிகள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார். வலது: அனுபாராம், கதவை அலங்கரிக்கப் பயன்படும் ஒரு மரத் தொகுதியை வெட்டுகிறார்

அனுபாராம், ஒவ்வொரு மாதமும் 5-10 ஜோடி கர்தால்களுக்கான ஆர்டரைப் பெறுகிறார். ஆரம்பத்தில், இரண்டு மற்றும் நான்கு ஆர்டர்கள் மட்டுமே வந்தது. ராஜஸ்தானுக்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதால் இந்த கருவிக்கான தேவை அதிகரித்துள்ள போதிலும் நிலையில், அதை உருவாக்கும் கைவினைஞர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு, 15-க்கும் மேற்பட்ட தச்சர்கள் இந்தக் கருவியை உருவாக்கினர். ஆனால் தற்போது ஜெய்சால்மரில் எஞ்சியிருக்கும் ஒரு சில கர்தால் வடிவமைப்பாளர்களில் அனுபாராமும் ஒருவர். இளைய தச்சர்கள், அதிக வருமானம் கிடைப்பதால், மரப்பொருட்கள் வடிவமைக்க நகரங்களுக்குச் செல்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகளுக்கு கர்தால்களை விற்கும் சில கைவினைஞர்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் ஆன்லைன் செஷன்களையும் நடத்துகிறார்கள். வெவ்வேறு மொழிகளையும் சமாளிக்கின்றனர்.

"இந்த கலை மிகவும் பழமையானது. ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் இதனை கற்க  விரும்பவில்லை," என்று அவர் மேலும் கூறுகிறார். கடந்த 30 ஆண்டுகளில், ஏறக்குறைய ஏழு பேருக்கு இந்தக் கருவிகளை உருவாக்கக் கற்றுக் கொடுத்ததாக அனுபாராம் கூறுகிறார்: "அவர்கள் எங்கிருந்தாலும், கர்தால்களை உருவாக்குவார்கள் என்று நம்புகிறேன்," என்கிறார்.

அவரது மகன்களான 28 வயது பிரகாஷ மற்றும் 24 வயது கைலாஷ் ஆகியோர் கர்தால்கள் செய்ய கற்றுக்கொள்ளவே இல்லை. அவர்கள் வெவ்வேறு மாநிலங்களில் தச்சர்களாக வேலை செய்கிறார்கள். வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மரப்பொருட்கள் செய்கின்றனர். 20 வயதுகளில் உள்ள மகள் சந்தோஷ், திருமணமாகி இல்லத்தரசியாக இருக்கிறார். அவரது மகன்கள் வருங்காலத்தில்  கைவினைக்கு திரும்புவார்களா என்று கேட்டபோது, ​“கோய் பரோசா நஹி ஹே [நம்பிக்கை இல்லை] என்று ​அவர் கூறுகிறார்.

எங்கள் உரையாடலைக் கேட்ட வாடிக்கையாளர் ஒருவர் அவரிடம், “ஆப் க்யூன் படே ஷெஹர் நஹி கயே, ஜியாதா பைசே கமானே [அதிக பணம் சம்பாதிக்க நீங்கள் ஏன் பெரிய நகரங்களுக்கு இடம்பெயரவில்லை]” என்று கேட்க, அதற்கு அனுபாராம், " ஹம் இஸ்மே குஷ் ஹே [இது தான் எனக்கு சந்தோஷம்]" என்று பதிலளிக்கிறார்.

இந்தக் கதை, சங்கேத் ஜெயினின் கிராமப்புற கைவினைஞர்கள் பற்றிய தொடரின் ஒரு பகுதியாகும். மேலும் இது மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளை உதவியில் எழுதப்பட்டிருக்கிறது.

தமிழில் : அஹமத் ஷ்யாம்

Sanket Jain

মহারাষ্ট্রের কোলাপুর নিবাসী সংকেত জৈন পেশায় সাংবাদিক; ২০১৯ সালে তিনি পারি ফেলোশিপ পান। ২০২২ সালে তিনি পারি’র সিনিয়র ফেলো নির্বাচিত হয়েছেন।

Other stories by Sanket Jain
Editor : Sanviti Iyer

সম্বিতি আইয়ার পিপল্‌স আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার কনটেন্ট কোঅর্ডিনেটর। স্কুলপড়ুয়াদের সঙ্গে কাজ করে তাদের ভারতের গ্রামসমাজ সম্পর্কে তথ্য নথিবদ্ধ করতে তথা নানা বিষয়ে খবর আহরণ করার প্রশিক্ষণেও সহায়কের ভূমিকা পালন করেন তিনি।

Other stories by Sanviti Iyer
Translator : Ahamed Shyam

Ahamed Shyam is an independent content writer, scriptwriter and lyricist based in Chennai.

Other stories by Ahamed Shyam