அது மார்ச் மாதத்தின் ஒரு மதியப்பொழுது. ஆராபானி கிராமத்தின் பெரியவர்கள் ஒரு சிறு வெள்ளை தேவாலயத்துக்குள் கூடியிருக்கின்றனர். தார்மிக அழுத்தம் அவர்களை ஒன்றிணைத்திருக்கவில்லை.
குழுவினர் வட்டமாக தரையில் உட்காந்திருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் தீவிர ரத்த அழுத்த பிரச்சினை கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே அவர்கள் மாதமொருமுறை சந்தித்து ரத்த அழுத்தத்தை பரிசோதித்து விட்டு, மருந்துகள் வாங்க காத்திருக்கும் வரை பல விஷயங்கள் குறித்து பேசியிருப்பார்கள்.
“சந்திப்புகளில் என் கவலைகளை பகிர வாய்ப்பிருப்பதால் இங்கு வருவதை விரும்புகிறேன்,” என்கிறார் ரூபி பகேல். ரூபி பாய் என அவர் குறிக்கப்படுகிறார். 53 வயதாகும் அவர் கடந்த ஐந்து வருடங்களாக இங்கு வருகிறார். பைகா பழங்குடியான அவர், நலிவுற்ற விவசாயி ஆவார். விறகு, இலுப்பைப் பூ போன்ற காட்டுற்பத்தியை (NTFP) கொண்டு வருமானத்தை ஈடு கட்டிக் கொள்கிறார். பைகா, எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடி குழுக்களாக (PVTG) வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். ஆராபானி கிராமத்தில் பைகா சமூகத்தினர்தான் பெருமளவில் வாழ்கின்றனர்.
பிலாஸ்பூர் மாவட்டத்தின் கோடா ஒன்றியத்தில் இருக்கும் கிராமம், சட்டீஸ்கரின் அச்சனாக்மர் -அமர்கந்தக் பன்மயப்பகுதிக்கு அருகே அமைந்திருக்கிறது. “விளக்குமாறு தயாரிக்து விற்பதற்காக, மூங்கில் சேகரிக்க காட்டுக்குள் நான் சென்றதுண்டு. தூரமாக நடக்க முடியாமல் ஆனதால், வீட்டில் இருக்கிறேன்,” என்கிறார் ஃபுல்சோரி லக்டா, உயர் ரத்த அழுத்தம் கொடுக்கும் சோர்வு வாழ்க்கையை எப்படி பாதித்திருக்கிறது என விளக்கி. அறுபது வயதுகளில் இருக்கும் அவர், தற்போது வீட்டில்தான் இருக்கிறார். ஆடுகளை பராமரித்து, பகலில் மாட்டுச் சாணம் சேகரிக்கிறார். பெரும்பாலான பைகாக்கள் காட்டைத்தான் வாழ்வாதாரத்துக்கு நம்பியிருக்கிறார்கள்.
சட்டீஸ்கரில் 14 சதவிகித கிராமப்புற மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக 2019-2021ம் ஆண்டின் குடும்ப சுகாதார கணக்கெடுப்பு - 5 சொல்கிறது. “இதயச்சுருக்க ரத்த அழுத்தம் 140 mmHg அளவையும் இதயம் விரிவாகும்போது ரத்த அழுத்தம் 90 mmHg அளவையும் கடந்தால், அது உயர் ரத்த அழுத்தம் எனப்படுகிறது,” என்கிறது கணக்கெடுப்பு.
தொற்றல்லான நோய்கள் அதிகமாவதை தவிர்க்க ரத்த அழுத்தம் முன்பே கண்டறியப்பட வேண்டும் என்கிறது தேசிய சுகாதார நோக்க மையம். ஆதரவு குழுக்களை கொண்டு ரத்த அழுத்தத்தை சரிசெய்ய வாழ்நிலை மாற்றங்கள் அறிவுறுத்தப்படுகின்றன. “இந்த சந்திப்புகளில் நான் யோகா போன்ற நல்ல பழக்கங்களை கற்றுக் கொள்கிறேன். என் உடலுக்கு அது வலிமை கொடுக்கிறது,” என்கிறார் ஃபல்சோரி.
31 வயது சூரஜ் பைகா கொடுத்த தகவலை குறித்து அவர் சொல்கிறார். கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக அப்பகுதியில் இயங்கி வரும் தன்னார்வ மருத்துவ தொண்டு நிறுவனமான ஜன் ஸ்வஸ்தியா சாகோக்கின் (JSS) பணியாளராக சூரஜ் பைகா இருக்கிறார். அதிக ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஆகிய்வற்றின் தாக்கங்களை குறித்து குழுவுக்கு விவரிக்கும் சூரஜ், மூளையின் ஸ்வீட்ச்களுடன் ஒப்பிட்டு, “ரத்த அழுத்தம் நம் மூளையை பலவீனமாக்கும் ஸ்விட்ச்களை அழுத்த நாம் விரும்பவில்லை எனில், சரியாக மருந்துகளை நாம் எடுக்க வேண்டும். உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்,” என்கிறார்.
மனோகர்மாமா என அன்புடன் அழைக்கப்படும் 87 வயது மனோகர் உரான் கடந்த 10 வருடங்களாக ஆதரவு குழு சந்திப்புகளுக்கு வந்து கொண்டிருக்கிறார். “என் ரத்த அழுத்தம் தற்போது கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால் என் கோபத்தை கட்டுப்படுத்த எனக்கு நேரம் பிடித்தது,” என்னும் அவர், “பதற்றம் கொள்ளாமல் இருக்கக் கற்றுக் கொண்டேன்,” என்கிறார்.
உயர் ரத்த அழுத்தத்துக்கு மட்டுமின்றி JSS பிற தீவிர நோய்களுக்கும் ஆதரவு குழுக்களை ஒருங்கிணைக்கிறது. 50 கிராமங்களில் இயங்கும் இத்தகைய 84 ஆதரவு குழுக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொள்கின்றனர். இளைஞர்களும் வருவதுண்டு. ஆனால் முதியோர்தான் அதிகமாக வருகிறார்கள்.
“முதியவர்கள் பெரிய பயன்பாடு இல்லாததால் கைவிடப்படுகின்றனர். மனநலமும் உடல் நலமும் பாதிப்படைகிறது. தனிமையில் உழலுகின்றனர். பல இடங்களில் அவர்களுக்கு மரியாதை கூட தரப்படுவதில்லை,” என்கிறார் JSS அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளரான மினால் மடாங்கர்.
இந்த வயதில் இருப்பவர்கள்தான் அதிகமாக மருத்துவ ஆதரவு வேண்டுகின்றனர். உணவுக்கான அறிவுரையையும் பெற விரும்புகின்றனர். “என் ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான விஷயங்களை கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அரசியை விட தானியங்கள் உண்ணுவது நல்லது என தெரிந்து கொண்டேன். என்னுடைய மருந்துகளையும் இங்கு பெற்றுக் கொள்கிறேன்,” என்கிறார் ரூபா பாகேல்.
சந்திப்பு முடிந்ததும் பராமரிப்பாளர்களுக்கு வரகு அரிசி பாயாசம் கொடுக்கப்படுகிறது. தானிய ருசி அவர்களுக்கு மாற்றத்தை கொடுத்து மீண்டும் அவர்களை அடுத்த மாதமும் கொண்டு வருமென JSS பணியாளர்கள் நம்புகின்றனர். JSS இயங்கும் பிலாஸ்பூர் மற்றும் முங்கேலி மாவட்டங்களின் பகுதிகளில் உள்ளவர்கள் அதிகமாக நீரிழிவு நோய் கொண்டிருக்கின்றனர். அவர்களின் உணவில் அவ்வமைப்பு மாற்றத்தை கொண்டு வருகிறது. நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து கொண்ட வெள்ளை அரிசியும் உணவு முறையில் சேர்க்கப்படுகிறது.
“விவசாயத்திலும் உணவு பழக்கத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இங்குள்ள மக்கள் பல வகை தானியங்களை விளைவித்து உண்ணும் பழக்கம் கொண்டிருந்தனர். அவை சத்தானவையும் ஆரோக்கியத்துக்கு உதவுபவையும் ஆகும். ஆனால் அது மாறி இப்போது அவர்கள் அரிசியை உண்ணுவதாக சொல்கிறார் மினால். பெரும்பாலான பங்கேற்பாளர்கள் அரிசியும் கோதுமையும் சாப்பிடுவதாக சொல்கின்றனர்.
விவசாய முறையில் மாற்றம் நேர்ந்திருக்கிறது. முன்பெல்லாம் பருப்பு, தானியம், எண்ணெய் விதை போன்றவற்றை விளைவித்தார்கள். புரதச் சத்தும் போதுமான வைட்டமினும் கிடைத்தது. இப்போது அவை கிடையாது. கடுகு, கடலை, ஆளிவிதை போன்ற விதைகளிலும் சத்துகள் இருக்கின்றன. அவற்றை அவர்கள் உட்கொள்கின்றனர்.
சந்திப்பு முடிந்து ரத்த அழுத்தம் பரிசோதனையும் முடிந்த பிறகு கொண்டாட்டம் தொடங்குகிறது. உடற்பயிற்சி, யோகா போன்றவை சத்தம் மற்றும் சிரிப்புகளுடன் தொடர்கின்றன.
“இயந்திரத்துக்கு நாம் எண்ணெய் விட்டால், அது நன்றாக இயங்கும். அது போல நம் தசைகளுக்கும் எண்ணெய் விட வேண்டும். மோட்டார் பைக்கை போல நம் எஞ்சின்களுக்கும் எண்ணெய் ஊற்ற வேண்டும்,” என சூரஜ் குழுவினருடன் பேச அவர்களும் வெடித்து சிரிக்கின்றனர். பிறகு வீடுகளுக்கு கிளம்புகின்றனர்.
தமிழில் : ராஜசங்கீதன்