“குப்பை போடுபவர்கள் நீங்களாக இருந்து கொண்டு, எங்களை எப்படி குப்பைக்காரர்கள் என குறிப்பிடுகிறீர்கள்? உண்மையில் நாங்கள்தான் நகரத்தை சுத்தப்படுத்துகிறோம். நாட்டின் குடிமக்கள்தானே குப்பைக்காரர்கள்?” எனச் சுட்டிக் காட்டுகிறார் புனேவில் குப்பை சேகரிக்கும் சுமன் மொரே.
ககத் கச் பாத்ரா கஷ்டகாரி பஞ்சாயத் 1993-ல் ஒருங்கிணைந்த 800 குப்பை சேகரிப்பவர்களில் சுமனும் ஒருவர். இப்போது பெண்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கிறது. அவர்களின் வேலைகளை முறைப்படுத்துவதற்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டுமென புனே நகராட்சியில் (PMC) கோரியிருந்தனர். 1996ம் ஆண்டில் கிடைக்கப் பெற்றனர்.
வீடுகளிலிருந்து குப்பைகள் சேகரிக்கும் பெண்கள் இப்போது PMC-ல் பணிபுரிகின்றனர். மகாராஷ்டிராவில் பட்டியல் சாதிகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் மகர் மற்றும் மதாங் சமூகங்களை சேர்ந்தவர்கள் அவர்கள். “குப்பைகளை மக்கும் குப்பைகளாகவும் மக்கா குப்பைகளாகவும் பிரித்து, மக்கும் குப்பைகளை குப்பை வண்டிக்கு கொடுத்து விடுவோம்,” என்கிறார் சுமன். “மக்கா குப்பையிலிருந்தும் தேவைப்படுபவற்றை எடுத்துக் கொண்டு மிச்சத்தை குப்பை வண்டிக்குக் கொடுத்து விடுவோம்.”
வேலைகளை தனியார் நிறுவனங்களுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் PMC வழங்கிவிடுமென பெண்கள் அஞ்சுகின்றனர். அவர்கள் போராடவும் தயாராக இருக்கின்றனர். “எங்களின் வேலைகளை யாரும் பறிக்க விட மாட்டோம்,” என்கிறார் ஆஷா காம்ப்ளே.
‘மதிப்பு’ என்ற இப்படம் புனேவின் பெண் குப்பை சேகரிப்பாளர்களின் வரலாறை அவர்களின் குரல்களைக் கொண்டே பதிவு செய்திருக்கிறது.
தமிழில்: ராஜசங்கீதன்.