“என் அம்மா பாடியதில் இரண்டு - மூன்று வார்த்தைகள் நினைவில் இருக்கிறது,” என்கிறார் ஹவுசாபாய் டிகே. அது 1995ம் ஆண்டு. அவர் ஹேமா ரைர்கர் மற்றும் கய் பொய்டெவின் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். 1980களின் பிற்பகுதியில் க்ரைண்ட்மில் பாடல்கள் பணியை துவக்கிய அவர்கள், சமூக அறிவியலாளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் இருந்தனர். புனேவை சேர்ந்த அவர்கள் முல்ஷி தாலுகாவின் பம்பார்டே கிராமத்துக்கு குழுவாக வந்து, க்ரைண்ட்மில் பாடல்களுக்காக பெண் பாடகர்களுடன் பேசினார்கள்.
மேலும் ஹவுசாபாய், “வயல் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும்போது மாவு இருக்காது. அரைகல்லில் அரிசி போட்டு பாடியபடியே அரைப்பேன். அது இல்லாமல் எங்களின் நாள் முழுமையடையாது. என் நினைவுக்கு வரும் வார்த்தைகளை கொண்டு பாடல்கள் உருப்பெரும். நான் இறக்கும் வரை இப்பாடல்கள் நிற்காது. அதுவரை நான் அவற்றை நினைவில் கொண்டிருப்பேன்,” என்கிறார். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், குயவர்கள் மற்றும் தோட்டக்காரர்களை கொண்ட கிராம சமூகத்தின் பெண்களின் குரலை அவரது வார்த்தைகள் எதிரொலிக்கிறது. அன்றாடம் நெடுநேரம் வேலை பார்க்கும் அவர்கள், சூரியன் உதிக்கும் முன்பே தூங்கியெழுந்து வீட்டு வேலைகளை செய்து வயல் வேலைக்கு செல்கின்றனர்.
பெரும்பாலும் நாளின் முதல் வேலையாக இருப்பது அரைகல்லில் மாவரைப்பதுதான். பாடிக் கொண்டே அவர்கள் அரைத்தார்கள். சமையலறை அல்லது வராண்டாவின் மூலைதான் அவர்களுக்கு வசதி. அவர்களின் போராட்டங்களையும் சந்தோஷத்தையும் வெற்றிகளையும் பாடல்களின் வழியாக பகிர்ந்து கொள்வதற்கான தனிப்பகுதி அது.
அப்படி அவர்கள் செய்யும்போது உலகை பற்றியும் கிராம வாழ்க்கை பற்றியும் உறவுகள், மதம், ஆன்மிக யாத்திரை பற்றியும், சாதி, ஆணாதிக்க ஒடுக்குமுறை மற்றும் பாபாசாகெப் அம்பேத்கர் பற்றியும் இன்னும் பல விஷயங்கள் குறித்தும் அவர்கள் கொண்டிருக்கும் பார்வையையும் பகிர்வார்கள். இந்த காணொளியில், புனேவின் முல்ஷி தாலுகாவிலுள்ள கதாக்வாடி கிராமத்தை சேர்ந்த தாராபாய் உபே அதைப் பற்றி பேசுகிறார்.
பாரியின் இந்த ஆவணப்படம், க்ரைண்ட்மில் பாடல்கள் தொகுப்பு உருவாக்கத்துக்காக பாடல்களை பதிவு செய்த இசை வல்லு நரும் தொழில்நுட்ப வல்லுநருமான பெர்னார்ட் பெல்லையும் மராத்தி மொழியில் பாடல்களை பெயர்த்த ஆய்வறிஞர் ஜிதேந்திரா மெய்டும் மராத்தியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த ஆஷா ஒகாலேவையும் நேர்காணல் செய்திருக்கிறது.
க்ரைண்ட்மில் பாடல்கள் பாரிக்கு 2016ம் ஆண்டில் கிடைத்தது. மார்ச் 6, 2017 முதல் நாங்கள் பாடல்களை பிரசுரிக்கத் தொடங்கினோம். வாசிக்க: திருகை திரிப்பு பாடல்கள்: தேசிய பொக்கிசத்தை பதிவு செய்தல்
ஏழு வருடங்கள் கடந்து விட்டது. தொடர்ந்து பாரி கிராமங்களுக்கு சென்று பெண்களை சந்தித்து அவர்களின் பாடல்களையும் கதைகளையும் பிரசுரிக்கிறது. எங்களின் தொகுப்பை பார்க்க: The Grindmill Songs Project: all stories so far
இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பெண் பாடகர்களின் எண்ணிக்கை குறைவுதான். க்ரைண்ட்மில் பாடல் தொகுப்பின் 1,10,000 பாடல்களுக்கு, கர்நாடகாவின் 11 கிராமங்களையும் மகாராஷ்டிராவின் 1,107 கிராமங்களையும் சார்ந்த 3,302 கலைஞர்கள் பங்களிப்பு செய்திருக்கின்றனர்.
அவர்களின் பாடல்களை எழுத்தாக்கும் பெரும் பணி ஜிதேந்திர மெயிட் மற்றும் இன்னும் சிலருக்கு விழுந்தது. ராஜானி கலாத்கர், பாடல்களை மராத்தியில் எழுதும் பணியை செய்தார். ஹேமா ரைர்கார் சில பாடல்களை மொழிபெயர்த்திருக்கிறார். ஆஷா ஒகாலே, மொழிபெயர்ப்புகளில் மெயிடுடன் இணைந்து பணியாற்றுகிறார். இன்னும் 3,000 பாடல்கள் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கின்றன.
இப்பணி குறித்த அறிமுகத்துக்கான குறும்படம் இது. 1990களில் இசை வல்லுநரும் தொழில்நுட்ப வல்லுநருமான பெர்னார்ட் பெல் மற்றும் அவருடன் பணியாற்றிய ஆய்வாளர் - செயற்பாட்டாளர் குழுவால் பதிவு செய்யப்பட்ட காணொளி காட்சிகளை இது கொண்டிருக்கிறது.
1995 முதல் 2003 வரை பெல், 4,500 பாடல்களை கேசட்டுகளில் பதிவு செய்தார். ஆனால் இப்பெரும்பணிக்கான அடித்தளம் அதற்கும் முன்பே தொடங்கி விட்டது. 1980களில் ஜீ பாபா மற்றும் ஹேமாதாய் புனே மாவட்டத்தின் சில கிராமங்களுக்கு சென்றபோது தொடங்கியது. அடிப்படை தேவைகளான குடிநீர் போன்றவற்றை பெறவும் வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களிலும் பெண்களை ஆதரித்து இயங்குவதற்காக அவர்கள் அங்கு சென்றனர். அப்போதுதான் அப்பெண்கள் தங்களின் எண்ணங்களையும் வாழ்க்கைக் கதைகளையும் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினர். அப்பாடல்கள்தான், கிராமப்புற பெண்களின் சந்தோஷங்களுக்கும் போராட்டங்களுக்குமான ஆவணம்.
க்ரைண்ட்மில் பாடல்கள் பணியின் இசையும் கவிதையும் பெரியளவில் சென்றடைந்திருக்கிறது. 2021ம் ஆண்டில், தென்கொரியாவின் க்வாங்ஜு பியன்னாலே நிகழ்வின் ஒரு பகுதியாக அது இடம்பெற்றது. 2022ம் ஆண்டில் பெர்லினினின் க்ரோபியஸ் பாவ் அருங்காட்சியக கண்காட்சியிலும் லண்டன் பார்பிகேனில் 2023ம் ஆண்டும் இடம்பெற்றது. இந்தியன் எக்ஸ்பிரஸ், ஸ்க்ரோல் மற்றும் இந்து பிஸினஸ் லைன் போன்ற பல இணைய இதழ்களும் ஊடகங்களும் இப்பணி குறித்து பல கட்டுரைகளை வெளியிட்டிருக்கின்றன.
நாசிக்கிலுள்ள ஓர் ஆய்வு மாணவர், பாபாசாகெப் அம்பேத்கர் பற்றிய க்ரைண்ட்மில் பாடல்களை தன் ஆய்வுக்காக பயன்படுத்துகிறார். அமெரிக்க பல்கலைக்கழக அறிவியலாளர் ஒருவர், பாடல் தொகுப்பில் இலந்தை, கருவேலம், செங்கருங்காலி போன்ற இயற்கை விஷயங்கள் இடம்பெற்ற சில வரிகளை பயன்படுத்துகிறார். பல மாணவர்களும் அறிஞர்களும் பாரியின் தொகுப்பை ஆராய்ந்திருக்கின்றனர்.
மக்கள் பலரை ஒருங்கிணைத்து, ஆய்வறிஞர்களின் கல்விக்கு அறிவொளி ஏற்றி, பொதுமக்களையும் இலக்கியம் மற்றும் இசை ஆர்வலர்களையும் ஈர்த்திருக்கும் இந்த பெரும்பணியை காணுங்கள்.
இந்த ஆவணப்படம், பெர்னார்ட் டெல்லின் 'Unfettered Voices' காணொளி காட்சிகளையும் 2017ம் ஆண்டிலிருந்து இன்று வரை பாரியில் பிரசுரிக்கப்பட்ட க்ரைண்ட்மில் கட்டுரைகளின் காட்சி மற்றும் புகைப்படங்களையும் கொண்டிருக்கிறது
தமிழில் : ராஜசங்கீதன்