என் அம்மா அடிக்கடி சொல்லுற ஒரே விஷயம், நான் மட்டும் மீன் சட்டிய தூக்கல நாம இவ்வளவு தூரம் வந்து இருக்க முடியாது குமாருனு என்கிட்ட அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. நான் பிறந்த ஒரு வருசத்துக்கு பிறகு அம்மா மீன் விக்க ஸ்டார்ட் பண்ணத அவங்க சொன்னாங்க அப்ப இருந்து இப்ப வர மீன்கள் என் வாழ்க்கைல இருக்கு.
மீன் வாசம் எங்க வீடு முழுக்க எப்போதும் நிறைஞ்சி இருக்கும். கருவாடும் ஒரு மூலைல சாக்குல கட்டி தொங்க போட்டு இருப்பாங்க. புதுமழை வரும்போது பணபொரில கெண்டை பொடி மீன் கிடைக்கும் அத சுண்ட வச்சு அம்மா கொடூப்பாங்க அவ்வளவு ருசியா இருக்கும். சளி உடனே இறங்கும் அதோட கம்மா கெளுத்தியும் கொரவ மீனும் செல்லபி மீனும் கொளம்பு வச்சா வீடூ முழுக்க மணக்கும்.
தாத்தாவோட சேர்ந்து நிறைய குளத்துக்கு இறபெட்டி கொண்டு போய் தண்ணீர் இறைச்சு மீன் பிடிக்க போவேன். அப்பறம் ஓடைக் கரைக்கும் போய் தூண்டில் போட போவோம்.
அம்மாவும் ஓடைக்கு போகாம இருக்க குற்றசனு ஒரு பேய் கதைலம் சொல்லுவாங்க. இருந்தாலும் அத மீறி மீன் பிடிக்க ஓடுவோம் எங்க ஊரு பசங்களும் நானும் போவோம்.
கம்மா கலுங்குல தண்ணி ஓடிட்டு இருக்கும் எப்பவும். தண்ணியிலேதான் கிடையா கிடப்போம். ஆனா அதுலாம் நான் 10வது தாண்டும் போது எதுவுமே இல்லாம போயிருச்சு.
எங்க ஊருல சின்ன கம்மா பெரிய கம்மா, மருதங்குளம் கம்மானு மூணு கம்மா இருந்துச்சு. ஆத்துல தண்ணி வரும் போது மட்டும் கம்மா நிறைஞ்சு கிடக்கும். இதுல சின்ன கம்மா பெரிய கம்மா எப்பவும் ஏலம் விடுவாங்க. இந்த இரண்டு கம்மாகளிலும் தை மாசம் வரும் போது அறுவடையும் ஆரம்பிக்கும். அதோடு மீன் பிடிக்கிறதும் ஆரம்பிக்கும்.
கம்மா மீன்கள் வாங்க நிறைய ஊருக்கு அப்பா கூட சைக்கிள்ல பெட்டி கட்டி நான் போவேன். 20,30 கிலோ மீட்டர் தூரம் வர கம்மா மீன்கள் வாங்க போவோம்.
மதுரை மாவட்டத்தில் உள்ள நிறைய கம்மாக்களில் மீன் பிடி திருவிழாக்கள் நடத்தப்படும். அப்போது கம்மாவை ஒட்டி உள்ள நிறைய ஊர்களில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்த மீன் பிடிக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. நல்ல மழை பெய்ய வேண்டும் என்பதற்காகவும், நல்ல விளைச்சல் வேண்டும் என்பதற்காகவும், மக்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்பதற்காகவும் மக்கள் முழக்கமிட்டு கண்மாய் நீரில் மீன் பிடிக்கச் போவாங்க. மீன் பிடித்தால் நல்ல மழை பெய்யுமுனும், மீன்பிடித் திருவிழா நடத்தாவிட்டால் வறட்சி ஏற்படுமுனும் மக்கள் நம்புனாங்க.
கம்மா மீன் சீசன் ஆரம்பிக்கும் போது நல்ல லாபம் கிடைக்கும்னு அம்மா சொல்லுவாங்க. மீன் எடையும் அதிகமா வச்சு போடூவாங்க. உயிர் மீன் எல்லாரும் விருப்பபட்டு வாங்குவாங்க. கம்மா மீன் சீசன் இல்லாத நேரத்துல மீன் மார்க்கெட் போவாங்க அங்க எடையும் குறையும் அதோட மீன்கள் பெருசாவும் இருக்காது. நிறைய மீனவர்கள் வண்டி கட்டியெல்லாம் மீன் வாங்க போவாங்க.
எங்க ஊருல இருக்க நிறைய பெண்களுக்கு மீன் தொழில்தான் வாழ்க்கையா கொடுத்ததுனு சொல்ல முடியும். எங்க ஊருல கணவனை இழந்த பெண்களை சுயமா வாழ வச்சது இந்த மீன்கள்தான்.
என்னை ஒரு நல்ல புகைப்பட கலைஞனா மாத்துனதும் இந்த மீன்கள்தான். 2013ல் கேமரா வாங்குனதும் அத தூக்கிட்டே கம்மாக்கு மீன் வாங்க போவேன். மீன் வாங்குறது மறந்து கம்மால மீன் புடிக்குறத போட்டோ எடுத்துட்டு இருப்பேன். அம்மா எனக்கு போன் பண்ணி திட்டுவாங்க மீன் வாங்க ஆள் காத்து கிடக்குனு. அதுக்கு அப்புறம்தான் மீன் வாங்கிட்டு கடைக்கு ஓடுவேன்.
கம்மா சார்ந்து மனிதர்கள் மட்டுமில்லாமல் நிறைய பறவைகளும் அது சார்ந்த கால்நடை மேய்ப்புகளும் இருக்கும். அந்த நேரத்துல நான் ஒரு டெலி லென்ஸ் வாங்கி பறவைங்களையும் அந்த விலங்குகளையும் போட்டோ எடுக்கவும் பழக தொடங்கினேன். கம்மால பறவைகள் பார்ப்பதும் போட்டோ அத போட்டோ எடுப்பதும் எனக்கு ரொம்ப கொண்டாட்டமானதா இருந்தது.
இப்போ மழையும் இல்லை, கம்மாக்கள்ல தண்ணியும் இல்ல. மீன்களும் இல்ல.
*****
அப்ப இருந்த கம்மாயில வலை இழுக்குற பிச்சை அண்ணா, மொக்க அண்ணா, கார்த்திக், மருது, செந்தில், கலை இவங்களை நிறைய போட்டோ எடுத்துட்டே இருப்பேன். அவங்களோட நானும் வலை இழுக்கவும், கட்டு வல போட்டு மீன் பிடிக்கவும் செய்யும்போதுதான் நிறைய விஷயம் கத்துக்கிட்டேன். இவங்க எல்லாருமே மதுரை கிழக்கு பிளாக்குல யானைமலை ஒத்தக்கடை பக்கத்துல புதுப்பட்டி என்ற கிராமத்துல இருக்காங்க. சுமார் 600 பேர் இங்க இருக்காங்க. அவங்கள்ல 500 பேர் மீன்பிடித் தொழிலைதான் நம்பியிருக்காங்க.
நெல்லை, ராஜபாளையம், தென்காசி, காரைக்குடி, தேவகோட்டை போல பல ஊர்கள்ல உள்ள கம்மாக்கள்ல மீன் பிடிக்க 60 வயதான சி.பிச்சை போயிருக்காரு. தனது 10 வயதில் அவரோட அப்பாகிட்ட இருந்துதான் அவரு மீன் பிடிக்க கத்துகிட்டாரு. பல இடங்களுக்கு போயி மீன் பிடிச்சிருக்காங்க. பல நேரங்கள்ல பல நாள் தங்கியிருந்து கூட மீன் பிடிச்சிருக்காங்க.
"வருஷத்துல ஆறு மாசம் மீன் பிடிக்கிறோம். ஆறு மாதங்களில பிடிக்குற மீன்களை வித்து, மீதமுள்ள மீன்களை கருவாடு ஆக்கிடுவோம். இதனால எங்களுக்கு வருஷம் முழுக்க காசு வரும்”னு பிச்சை என்கிட்ட சொன்னாரு.
மண்ணுல புதஞ்சு மழையில வளர்ற முட்டைகளில இருந்துதான் நாட்டு மீன்கள் பிறக்கிறதா இவர் சொல்றாரு. நாட்டு மீன்களான கெளுத்தி, கொரவா, வாரா, பாம்புபிடி கெண்டப்புடி, வெள்ளிச்சி எல்லாம் முன்ன போல இப்போ இல்ல. வயக்காட்டுல போடற பூச்சு மருந்து கம்மாக்களிலும் கலக்கிறதால அது மீன்கள கொன்னுடுது. இப்ப எல்லாம் மீன்கள் செயற்கையா வளக்கறாங்க. செயற்கையா அது உணவு தர்றாங்க. இது கம்மாக்களோட வளத்த நாசம் பண்ணிடுது”னு அவரு சொல்றாரு.
பிச்சைக்கு மீன்பிடித் தொழில் இல்லாத அப்பலாம், அவரு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கால்வாய்கள் கட்டுவது போல கூலி வேலைகளுக்கு போயிடுவாரு. இத இங்க நூறுநாள் வேலை திட்டம்னு சொல்லுவோம். அதுவும் இல்லைனா எந்த வேலை கிடைச்சாலும் போயிடுவாரு.
மீன் சீசன் முடிஞ்சிடுச்சுனா தினக்கூலியாதான் போகணும்னு சொல்றாரு 30 வயது மொக்க. அவரோட மனைவி ஒரு ஹோட்டல்ல சர்வரா வேலை பாக்குறாங்க. ரெண்டு குழந்தைக. மூணாவது, ரெண்டாவது கிளாஸ் படிக்கிறாங்க.
அம்மா சின்ன வயசுலேயே இறந்துட்டதால மொக்கைய அவங்க பாட்டிதான் வளத்தாங்க. “எனக்கு படிக்க எல்லாம் புடிக்கல. சின்ன வயசுலேயே சின்ன சின்னதா வேல பார்க்க ஆரம்பிச்சிட்டேன். ஆனா என் புள்ளங்கள நல்லா படிக்க வக்கணும். அவங்க நல்ல வேலைக்கு போகணும்”னு சொல்றாரு.
*****
மல்காளை கையிலதான் வலை பின்றாரு. அவரு தாத்தா முப்பாட்டன்கிட்டயிருந்து அத கத்துகிட்டாரு. “எங்க ஊரில்தான், ஒத்தகடையிலதான் இன்னும் கைல வலை பின்னி மீன் பிடிக்க போயிட்டு இருக்கோம். தென்னை மரத்துலெயிருந்து நாறு எடுத்து வலை பின்னுவாங்க. காடு கரைலாம் போய் தேடி மஞ்சு நாறு எடுத்து வந்து வலை பின்னுவாங்க. மஞ்சு நாறு வலை எங்க ஊருல முக்கியமான வலை. அத வச்சுதான் நிறைய இடங்களுக்கு மீன் பிடிக்க போவாங்க”னு சொல்றாரு இந்த 32 வயது மீனவர்.
“எங்க ஊருல மீன் பிடிக்கிறதுதான் முக்கியமான வேலை. நிறைய மீனவர்கள் இருக்கோம். மீன்பிடி வேட்டையாளு யாராவது இறந்து போன அவர் பேர் நிலைச்சு நிக்குறதுக்கும் அவரோட பாரம்பரியத்த காக்குறதுக்கும் அவர கொண்டு போற பாடைல இருந்து ஒரு மூங்கில் கம்பு எடுத்து அத இளச்சு தப்பையா மாத்தி நூல் கண்ணி வச்சு வச்சு அடி போட்டு வல பின்னுவாங்க. அவங்க தொழில் முறை அழியாம இருக்க இந்த மாதிரி வலைய பின்னி வைப்பாங்க. இது இப்ப வரைக்கும் எங்ககிட்ட நடைமுறைல இருக்கு.”
எங்க ஊருல இருக்க எல்லாரும் கம்மால இருக்க தண்ணிய பார்த்தே கம்மால இருக்க மீன்கள் அளவ கண்டுபிடிப்பாங்க. தண்ணிய அள்ளிப் பார்த்து அது கலங்கலா, குருணையா அதிகமா இருக்க நிறைய மீன்கள் இருக்கும். தண்ணி தெளிச்சியா இருந்தா மீன்கள் ரொம்ப குறைவா இருக்கும்னுசொல்லுவாங்க.
நாங்க மீன் பிடிக்க மதுரை மாவட்டம் முழுவதும் போவோம். தொண்டி, காரைக்குடி, கன்னியாகுமரி, அப்படியே கடற்கரை வரைக்கும் போகும். தென்காசி சுரண்டை, கம்மாயில் இருக்க எல்லா ஏரியாக்கும் போவோம். ஒரு நாளைக்கு நாங்க 5 டன் அல்லது 10 டன் வரைக்கும் கூட மீன் பிடிப்போம். மீன்கள் அதிகமா பிடிச்சாலும் கம்மியா பிடிச்சாலும் எங்களுக்கு ஒரே சம்பளம்தான்.
முதல்ல மதுரை மாவட்டத்துல 200 கம்மா இருந்துச்சு. ஆனா இப்ப நிறைய ஊருங்கல்லாம் நகரமா மாறிகிட்டு இருக்கிறதால கம்மா அளவும் நாளுக்கு நாள் குறைஞ்சு கிட்ட இருக்கு. அதனால நாங்க வெளியூர்க்கும் மீன் பிடிக்க போற நிலைமையும் இருக்கு. கம்மா அழிந்து போறதுனால எங்களை மாதிரி பரம்பரியமா மீன் பீடிக்குற மக்களோட வாழ்வியல் நிறைய பாதிக்கப்படுது. அதோட அத நம்பி இருக்குற மீன் வியாபாரிகளும் அதிகமா பாதிக்கபடுறாங்க.
“எங்க குடும்பத்துல எங்க அப்பா. அவரோட கூட பிறந்தவங்க மூணு பேரு, என்னோட கூட பிறந்தவங்க மூணு பேரு. நாங்க எல்லாருமே மீன் பிடிக்கிற தொழில்தான் பண்றோம். எனக்கு கல்யாணம் ஆகி மூணு பெண் குழந்தைகள் ஒரு பையன் இருக்காங்க. எங்க ஊர்ல இருக்க பசங்க எல்லாரும் ஸ்கூலு காலேஜுக்கெல்லாம் போறாங்க, ஆனா எல்லாருக்கும் இந்த தொழில் மேல அதிக ஈடுபாடு இருக்கு. மீதி இருக்க நேரம் எல்லாமே இந்த மீன் பிடி தொழில்தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க.”