அசாமிய விழாவான ரொங்காலி பிகுவுக்கு முந்தைய நாட்களில், தறியின் சட்டகங்கள் ஆடும் சத்தம் இந்த பகுதி முழுக்க கேட்கும்.
பெல்லாபாரா பகுதியின் அமைதியான தெருவில், பாட்னே தெயூரி தன் கைத்தறியில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். பஜ்ராஜர் கிராமத்திலுள்ள வீட்டில் எண்டி கமுசாஸ் நெய்து கொண்டிருக்கிறார். ஏப்ரல் மாதத்தில் வரும் அசாமிய புது வருடத்துக்கும் அறுவடை விழாவுக்கும் அவர்கள் தயாராக வேண்டியிருந்தது.
இவை வெறும் கமுசாக்கள் அல்ல. 58 வயதாகும் அவர், நுட்பமான பூ வடிவங்களை நெய்வதில் பெயர் பெற்றவர். “30 கமுசாக்களை பிகுவுக்கு முன் நெய்து முடிப்பதற்கான ஆர்டர் வந்திருக்கிறது. ஏனெனில் விருந்தாளிகளுக்கு மக்கள் அதைத்தான் பரிசளிப்பார்கள்,” என்கிறார் அவர். ஒன்றரை மீட்டருக்கு தைக்கப்படும் துணியான கமுசாக்கள், அசாமிய பண்பாட்டில் முக்கியத்துவம் வாய்ந்தவை. உள்ளூர் விழாக்களில் அவை அதிகம் பயன்படும். சிவப்பு நூல்கள் விழாக்கோலம் அளிக்கும்.
”துணியில் பூக்களை நெய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். எப்போது ஒரு பூவை பார்த்தாலும், அதை துணிகளில் என்னால் நெய்துவிட முடியும். ஒருமுறை பார்த்தால் எனக்கு போதும்,” என்கிறார் தியூரி பெருமையாக புன்னகைத்து. தியூரி சமூகம் அசாமில் பட்டியல் பழங்குடிகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
அசாமின் மஜ்பத் பகுதியிலுள்ள இந்த கிராமத்தின் நெசவாளர்கள், நாட்டிலேயே அதிகமான எண்ணிக்கையில் 12.69 லட்சம் நெசவாள குடும்பங்களை 12 லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்களுடன் கொண்டிருக்கும் மாநிலத்தில் அடக்கம். எரி, முகா, மல்பெரி மற்றும் டஸ்ஸார் என நான்கு வகை பட்டுகள் உள்ளிட்ட பல கைத்தறி பொருட்களை அதிகமாக தயாரிக்கும் மாநிலங்களில் அசாமும் ஒன்று.
எண்டி என உள்ளூர் போடோ மொழியில் சொல்லப்படும் எரி யை (பருத்தி மற்றும் பட்டு) தியூரி பயன்படுத்துகிறார். “என் தாயிடமிருந்து நெசவை என் இளம் வயதில் கற்றுக் கொண்டேன். தறியை சொந்தமாக கையாள கற்றுக் கொண்ட பின், நான் நெய்யத் தொடங்கினேன். அப்போதிருந்து இந்த வேலையை செய்து வருகிறேன்,” என்கிறார் திறமை வாய்ந்த அந்த நெசவாளர். அவர் கமுசாசையும் ஃபுலாம் கமுசாசையும் (இரு பக்கங்களில் பூ நெய்யப்பட்ட அசாமிய துண்டுகள்), மெகெலா-சதோர் என்றழைக்கப்படும் பெண்களுக்கான அசாமிய உடையும் எண்டி சதோரையும் (நீள சால்வை) அவர் நெய்வார்.
விற்பனைக்கு உதவவென 1996-ல் அவர் ஒரு சுய உதவிக் குழுவை (SHG) உருவாக்கினார். “பெல்லாபார் குத்ரோசஞ்சோய் (சிறு சேமிப்பு) சுய உதவிக் குழுவை நான் உருவாக்கிய பிறகு, நான் நெய்பவற்றை விற்கத் தொடங்கினேன்,” என்கிறார் அவர் பெருமையாக.
நூல் வாங்குவதுதான் தியூரி போன்ற நெசவாளர்களுக்கு வருமானத்தை மேம்படுத்துவதில் தடையாக இருக்கிறது. நூல் வாங்குவதற்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது. எனவே அவர் கமிஷன் அடிப்படையில் பணிபுரிகிறார். கடைக்காரர்கள் அல்லது வணிகர்களிடமிருந்து நூலை பெற்று அவர்கள் கேட்கும் வகை துணிகளை நெய்து கொடுப்பார். ”கமுசாக்கள் செய்ய குறைந்தபட்சம் மூன்று கிலோ நூல் தேவைப்படும். ஒரு கிலோ எண்டி விலை ரூ.700. என்னால் 2,100 ரூபாய் செலவழிக்க முடியாது,” என்கிறார் அவர்.
நூலை வாங்கி வைக்க முடியாதென்பதால், வேலையை மெதுவாக்கிக் கொள்வதாகவும் மதோபி சகாரியா சொல்கிறார். தியூரியின் பக்கத்து வீட்டுக்காரரான அவர், தான் செய்யும் கமுசாக்களுக்கான நூலை வாங்க பிறரை சார்ந்திருக்கிறார். “என் கணவர் அன்றாடக் கூலியாக வேலை பார்க்கிறார். சில நேரங்களில் அவருக்கு வேலை கிடைக்கும். சில நேரம் கிடைக்காது. அத்தகைய சூழல்களில், என்னால் நூல் வாங்க முடியாது,” என்கிறார் அவர் பாரியிடம்.
அசாமில் 12.69 லட்சம் கைத்தறி குடும்பங்கள் இருக்கின்றன. கையால் நெய்யப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் நாட்டில் முன்னணி வகிக்கும் மாநிலங்களில் அசாமும் ஒன்று
மதோபி மற்றும் தியூரியின் சூழல்கள் புதியவை அல்ல. மாநிலத்தின் உள்ளூர் நெசவாளர்கள் அனைவரும் இந்த பிரச்சினையை எதிர்கொள்வதாக திப்ருகர் பல்கலைக்கழகத்தின் 2020ம் ஆண்டு அறிக்கை குறிப்பிடுகிறது. அந்த பல்கலைக்கழகம் வட்டியில்லா கடன்களையும் கடன் வசதிகளையும் வழங்குகிறது. பெண் நெசவாளர்களுக்கென வலிமையுடன் இயங்கும் அமைப்பு ஒன்று இல்லாததால், அரசு திட்டங்கள், காப்பீடு, கடன் மற்றும் சந்தை தொடர்புகளை அவர்கள் பெற முடியாமல் இருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.
“மூன்று நாட்களில் நான் ஒரு முழு சதார்,” செய்து முடித்து விடுவேன் என்கிறார் தியூரி. நடுத்தர அளவிலான கமுசா செய்ய ஒரு முழு நாள் நெசவு செய்ய வேண்டும். தியூரி நெய்யும் ஒவ்வொரு துணிக்கும் ஊதியமாக ரூ.400 கொடுக்கப்படுகிறது. அசாமிய மெகேலா சதோரின் சந்தை விலை ரூ.5000 தொடங்கி சில லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது. ஆனால் தியூரி போன்ற கைவினைஞர்கள் மாதத்துக்கு ரூ.6000-லிருந்து ரூ.8000 வரை தான் பெறுகிறார்கள்.
நெசவிலிருந்து அவருக்குக் கிடைக்கும் வருமானத்தை கொண்டு 66 வயது கணவர் நபின் தியூரி, இரு மகள்களான 34 வயது ரஜோனி மற்றும் 26 வயது ரூமி மற்றும் காலஞ்சென்ற மூத்த மகனின் குடும்பம் என ஏழு பேர் கொண்ட குடும்பத்தை பராமரிக்க முடிவதில்லை. எனவே அவர் உள்ளூர் ஆரம்பப் பள்ளியில் ஒரு சமையலராகவும் பணிபுரிகிறார்.
அசாமில், கிட்டத்தட்ட எல்லா நெசவாளர்களும் (11.79 லட்சம்) பெண்களாக இருப்பதாக நான்காவது அனைத்து இந்திய கைத்தறி கணக்கெடுப்பு (2019-2020) சொல்கிறது. அவர்கள் நெசவு செய்து குடும்பத்தை ஓட்டினாலும் தியூரி போன்ற சிலர் பிற வேலைகளையும் பார்க்கிறார்கள்.
ஒருநாளில் பல வேலைகள் முடிக்க வேண்டிய நிலையில் தியூரியின் நாள் அதிகாலை 4 மணிக்கு தொடங்கும். தறிக்கு முன் ஒரு பெஞ்சில் அமர்கிறார். தறியின் கால்கள் கற்களில் சமநிலைக்காக நிறுத்தி வைக்கப்படுகின்றன. “காலை 7.30 மணி முதல் 8 மணி வரை வேலை செய்தபிறகு, நான் பள்ளிக்கு (சமைக்க) செல்வேன். மீண்டும் பிற்பகல் 2-3 மணிக்கு திரும்புகையில், நான் ஓய்வெடுப்பேன். மாலை 4 மணிக்கு, மீண்டும் தொடங்கி இரவு 10-11 மணி வரை தொடருவேன்,” என்கிறார் அவர்.
நெசவு மட்டும் கிடையாது. நூலையும் தியூரி தயார் செய்ய வேண்டும். உடலுழைப்பு அதிகம் தேவைப்படும் வேலை. “நூலை முக்கி, கஞ்சியில் போட்டு பிறகு காய வைத்து எண்டியை வலுப்படுத்த வேண்டும். இரண்டு மூங்கில் கழிகளை இரு முனைகளில் வைத்து நூல்களை பரப்பிக் கட்டுவோம். நூல் தயாரான பிறகு அதை ரா வில் (உருளையில்) சுற்றுவோம். பிறகு உருளையை தறியின் ஓரத்துக்கு தள்ள வேண்டும். பிறகு உங்களின் கைகளையும் கால்களையும் இயக்கி நெய்ய வேண்டும்,” என விளக்குகிறார்.
ஆனால் தியூரி பயன்படுத்தும் தறிகள் பாரம்பரியமானவை. முப்பது வருடங்களுக்கு முன் வாங்கியதாக அவர் கூறுகிறார். அவற்றில் மரச்சட்டங்கங்கள் பாக்கு மரக் கழிகள் இரண்டின் மீது மாட்டப்படும். கால்மிதிகள் மூங்கிலால் செய்யப்பட்டவை. நுட்பமான வடிவங்களுக்கு பாரம்பரியத் தறிகளை பயன்படுத்தும் மூத்த நெசவாளர்கள் மெல்லிய மூங்கில் இழைகளை தேங்காய்ப் பனை இலையின் நரம்புகளுடன் பயன்படுத்துகிறார்கள். அவர்கலே நேரடியாக நூல்களை நீண்ட நூல்களிலிருந்து தேர்வு செய்து வடிவத்தை உருவாக்குகிறார்கள். நிறம் கொண்ட நூல்கள் துணிக்குள் வர, அவர்கள் நெம்புக்கட்டையை தள்ளும் ஒவ்வொருமுறையும் செங்குத்தான நூல்களுக்கு இடையே செரியை (மெல்லிய மூங்கில் இழை) நெய்கிறார்கள். நேரம் பிடிக்கும் வேலை இது.
அசாம் அரசின் கைத்தறி கொள்கை 2017-18ல் தறிகள் மேம்படுத்தப்பட வேண்டுமென்றும் நூல் எளிதாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென குறிப்பிட்டிருந்தாலும், அவற்றை செய்வதற்கான பணம் இல்லை என்கிறார் தியூரி. “கைத்தறித் துறையுடன் எனக்கு தொடர்பு இல்லை. இந்த தறிகள் பழமையானவை. கைத்தறித் துறையிலிருந்து எனக்கு எந்த பலனும் வரவில்லை.”
நெசவை வாழ்வாதாரமாக கொள்ள முடியாத உடால்குரி மாவட்ட ஹதிகர் கிராமத்தை சேர்ந்த தாரு பாருவா, தொழிலை விட்டுவிட்டார். “நெசவில் நான் முன்னோடி. மேகேலா சதோர் மற்றும் கமுசாக்கள் செய்ய மக்கள் என்னிடம் வருவார்கள். ஆனால் மின் தறிகளால் ஏற்பட்ட போட்டியாலும் இணையத்தில் மலிவான பொருட்கள் கிடைக்கும் சூழல் உருவானதாலும் நான் இப்போது நெய்வதில்லை,” என்கிறார் 51 வயது தாரு, கைவிடப்பட்ட எரி தோட்டம்.
“கைத்தறி துணிகள் மக்கள் இப்போது உடுத்துவதில்லை. பெரும்பாலும் மின் தறிகளால் தயாரிக்கப்படும் மலிவான உடைகளையே மக்கள் விரும்புகின்றனர். ஆனால் நான் வீட்டில் தயாரிக்கும் இயற்கை துணிகளையே அணிகிறேன். நான் உயிரோடு இருக்கும் வரை நெசவு செய்வேன்,” என்கிறார் மாக்கை தள்ளுவதற்கு துடுப்பை தள்ளி, அசாமிய துண்டுகளில் பூக்களின் வடிவத்தை நெய்தபடி.
இக்கட்டுரை மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளையின் உதவியில் எழுதப்பட்டது.
தமிழில்: ராஜசங்கீதன்