மோகன்லால் லோஹர், தன் நினைவுக்குத் தெரிந்த வரையில், சுத்தியலால் அடிக்கும் ஓசை, இசையாக அவரை ஈர்த்ததாகக் கூறுகிறார். தாளம் தப்பாமல் அடிக்கும் அந்த ஓசையுடன் தன்னை ஈடுபடுத்தப்போவது, தன் வாழ்நாள் கனவாக மாறும் என்பதை அவர் சிறுவயது முதலே அறிந்திருந்தார்.
மோகன்லால், ராஜஸ்தானின் பார்மேர் மாவட்ட நந்த் கிராமத்தில், உள்ள லோஹர்களின் (கொல்லர்கள்) வீட்டில் பிறந்தவர். அவர் தனது எட்டு வயதில், தனது தந்தை, மறைந்த பவ்ரராம் லோஹருக்கு, சுத்தியல் மற்றும் பிற கருவிகளைக் எடுத்து கொடுத்து உதவி செய்து, இந்த கைவினையைத் துவங்கினார். "நான் பள்ளிக்குச் சென்றதே இல்லை. இந்தக் கருவிகளுடன் மட்டுமே விளையாடுவேன்," என்று அவர் கூறுகிறார்.
ராஜஸ்தானில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகப் பட்டியலிடப்பட்டுள்ள, கடுலியா லோஹர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பம், மார்வாரி மற்றும் ஹிந்தி மொழி பேசுகிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்பு 1980 களின் முற்பகுதியில் அதிக வேலை தேடி ஜெய்சல்மேருக்கு வந்தபோது, மோகன்லால் ஒரு வாலிபராக இருந்தார். அப்போதிருந்து, அவர் அலுமினியம், வெள்ளி, எஃகு மற்றும் பித்தளை போன்ற பல்வேறு பொருட்களிலிருந்து மோர்ச்சாங்குகளை செய்துள்ளார்.
"ஒரு லோஹா [இரும்பு] துண்டைத் தொட்டு உணரும்போதே, அது நன்றாக இருக்குமா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியும்," என்று மோகன்லால் கூறுகிறார். அவர் 20,000 மணி நேரத்திற்கும் மேலாக செஞ்சூடான இரும்பை வளைத்து, மோர்ச்சாங்கை வடிவமைக்கிறார். இந்த தாள வாத்திய இசைக்கருவியை, ஜெய்சால்மரின் பாலைவனங்கள் முழுவதும் கேட்க முடிகிறது.
"ஒரு மோர்ச்சாங்கை உருவாக்குவது கடினம்," என்று கூறும், 65 வயதான அவர், இதுவரை எத்தனை மோர்ச்சாங்குகளை உருவாக்கியுள்ளார் என்பது நினைவில் இல்லை என்கிறார்: "கின்தி சே பாஹர் ஹேன் வோ [அதற்கு கணக்கே இல்லை]."
ஒரு மோர்ச்சாங் (மோர்ஸிங் என்றும் அறியப்படுகிறது) தோராயமாக 10 அங்குல நீளம் கொண்டது. இரண்டு இணையான ஃபோர்க்குகளுடன் ஒரு மெட்டல் லாட வடிவ வளை உள்ளது. அவற்றுக்கிடையே ஒரு உலோக நாக்கு உள்ளது. ஒரு முனையில் நிலையானதாக இருக்கும் இதனை, ட்ரிக்கர் என்று அழைக்கின்றனர். இசைக்கலைஞர் அதைத் தங்கள் முன் பற்களால் கடித்தவாறு அதன் வழியாக சுவாசிக்கிறார். ஒரு கையால், இசைக்கலைஞர் மோர்ச்சாங்கின் டங்கை (நாக்கு) அசைத்து, இசையை உருவாக்குகிறார். இன்னொரு கை, இரும்பு ரிம்மை பிடிக்க உதவுகிறது.
இந்த கருவி குறைந்தது 1,500 ஆண்டுகள் பழமையானது. மேலும் "கால்நடைகளை மேய்க்கும் போது, மேய்ப்பர்கள் மோர்ச்சாங்கை வாசிப்பார்கள்," என்று மோகன்லால் கூறுகிறார். மேய்ப்பர்கள், பயணிக்கும் தூரம் முழுவதும், இசையும், இந்தக் கருவியும் கூட பயணித்து, ராஜஸ்தான் முழுவதும் புகழ் அடைந்தது. குறிப்பாக ஜெய்சால்மர் மற்றும் ஜோத்பூர் மாவட்டங்களில் பிரபலமடைந்தது.
அறுபதைக் கடந்துள்ள, மோகன்லாலுக்கு ஒரு மோர்ச்சாங் செய்ய சுமார் எட்டு மணி நேரம் ஆகிறது. இதற்கு முன்பு அவர் ஒரு நாளைக்கு இரண்டை எளிதாக செய்தார். "நான் ஒரு நாளைக்கு ஒரு மோர்ச்சாங்கை மட்டுமே செய்கிறேன். ஏனென்றால் எனக்கு தரத்தில் சமரசம் செய்யப் பிடிக்காது," என்று அவர் மேலும் கூறுகிறார். "எனது மோர்ச்சாங்குகள் இப்போது உலகப் புகழ்பெற்றவை." சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான, மினியேச்சர் மோர்ச்சாங் லாக்கெட்டுகளை வடிவமைப்பதிலும் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.
சரியான வகை லோஹாவை (இரும்பு) அடையாளம் காண்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் "எல்லா இரும்பாலும், நல்ல மோர்ச்சாங்கை உருவாக்க முடியாது," என்று அவர் கூறுகிறார். மிகச்சிறந்த இரும்பைத் தேர்ந்தெடுக்கும் திறமையை அடைய அவருக்கு பத்து வருடங்களுக்கு மேலானது. அவர் ஜெய்சல்மரில் இருந்து இரும்பு வாங்குகிறார் - அங்கு ஒரு கிலோவின் விலை ரூ. 100; ஒரு மோர்ச்சாங்கின் எடை 150 கிராமுக்கு மேல் இருப்பதில்லை. மேலும் இசைக்கலைஞர்கள் இலகுரக வகையையே விரும்புகிறார்கள்.
மோகன்லாலின் குடும்பம் மார்வாரியில் தமன் எனப்படும், ஒரு பாரம்பரிய கொல்லர் வார்ப்பை பயன்படுத்துகிறது. "ஜெய்சால்மர் நகரம் முழுவதிலும் தேடினாலும், இதுபோன்ற வார்ப்புகளை நீங்கள் காண முடியாது," என்று அவர் கூறுகிறார். "இது குறைந்தது 100 ஆண்டுகள் பழமையானது. சிறப்பாக வேலை செய்கிறது."
காற்றை பம்ப் செய்ய, ஆட்டின் தோலால் செய்யப்பட்ட இரண்டு உறைகளைப் பயன்படுத்துகிறார். காற்று செல்லும் மரத்துண்டு, ரோஹிடா மரத்தால் ஆனது (டெகோமெல்லா உண்டுலடா). சீராக இரும்பை உருக்க குறைந்தபட்சம் மூன்று மணிநேரம் காற்றை தொடர்ந்து பம்ப் செய்ய வேண்டும். இது ஒரு கடினமான பணி. உடல் ரீதியாக, காற்றை பம்ப் செய்வது தோள்பட்டை மற்றும் முதுகில் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது; போதுமான காற்றோட்ட வசதி இல்லையெனில், மூச்சுத் திணறல் மற்றும் அதிகப்படியான வியர்வை ஏற்படுகிறது.
மோகன்லாலின் மனைவி கிகிதேவி, காற்றடிக்க உதவுவார். ஆனால் முதுமையின் காரணமாக நிறுத்திவிட்டார். "மோர்ச்சாங் செய்யும் செயல்முறையில் பெண்கள் செய்யும் ஒரே பணி இதுதான். மற்ற அனைத்தும் பாரம்பரியமாக ஆண்களால் செய்யப்படுகின்றன,” என்கிறார் 60 வயதான கிகிதேவி. அவர்களின் ஆறாவது தலைமுறை லோஹர்களான , அவர்களது மகன்களான ரன்மல் மற்றும் ஹரிசங்கர் ஆகியோரும் மோர்ச்சாங்குகள் செய்கிறார்கள்.
காற்றடிக்கத் தொடங்கியதும், மோகன்லால் செஞ்சூடான இரும்பை ஒரு சந்தாசியை (கொல்லர்களின் டோங்) பயன்படுத்தி எடுத்து, ஆரன் எனப்படும் உயரமான இரும்பு மேற்பரப்பின் மீது வைக்கிறார். அவர் தனது வலது கையில் சுத்தியலை பிடித்தவாறு, இரும்புத் துண்டை தனது இடது கையால் கவனமாகப் பிடிக்கிறார். மற்றொரு லோஹர், இரும்புத் துண்டைத் அடிக்க ஐந்து கிலோ சுத்தியலைப் பயன்படுத்துகிறார். அவருடன் இணைந்து மோகன்லாலும் அடிக்கிறார்.
ஒவ்வொரு லோஹரும் ஒருவர் பின் ஒருவராக சுத்தியலால் அடிக்கும் தாள ஓசை, "ஒரு தோலாக்கி உருவாக்கும் இசை போல் தெரிகிறது. இதுவே மோர்ச்சாங்குகள் செய்ய என்னை ஈர்த்தது," என்கிறார் மோகன்லால்.
இந்த ‘இசை’ சுமார் மூன்று மணி நேரம் நீடிப்பதால், அவரது கைகளை வீக்கம் கொள்கிறது. கைவினைஞர் மூன்று மணி நேரத்தில் 10,000 முறைக்கு மேல் சுத்தியலை அடிக்க உயர்த்த வேண்டும். மேலும் ஒரு சிறிய தவறு கூட விரல்களை காயப்படுத்தலாம். "என் நகங்கள் உடைந்த காலங்கள் எல்லாம் உண்டு. இந்த மாதிரி வேலைகளில் காயங்கள் ஏற்படுவது சகஜம்,” என்று வலியை மறைத்துச் சிரித்தார் மோகன்லால். காயங்களைக் கடந்து, தோலில் ஏற்படும் தீக்காயங்களும் பொதுவானவை. "பலர் சுத்தியலை அடிக்க, இயந்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆனால் இன்றும் நாங்கள் வெறும் கைகளாலேயே அடிக்கிறோம்," என்று மோகன்லாலின் மூத்த மகன் ரன்மல் குறிப்பிடுகிறார்.
சுத்தியலால் அடித்த பிறகுதான் கடினமான பணி ஆரம்பமாகிறது. மோர்ச்சாங்கை வடிவமைக்க சூடான இரும்பை கவனமாக வளைக்க வேண்டும். இந்த செயல்முறைக்கு இன்னும் இரண்டு மணி நேரம் எடுக்கும், அப்போது அவர் நுணுக்கமான வடிவமைப்புகளை செதுக்குகிறார். மேற்பரப்பை மென்மையாக்க ஃபைலிங் செய்ய இரண்டு மணி நேரம் தேவைப்படுகிறது, அதற்கு முன் கருவி, ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் இது குளிர்விக்க விடப்படுகிறது. "ஃபைலிங் செய்வது அற்புதமான விஷயம். ஏனெனில் அது மோர்ச்சாங்கை, ஒரு கண்ணாடி போல மென்மையாக்குகிறது" என்று ரன்மல் கூறுகிறார்.
ஒவ்வொரு மாதமும், மோகன்லாலின் குடும்பம் குறைந்தது 10 மோர்ச்சாங்களுக்கான ஆர்டர்களைப் பெறுகிறது. ஒரு துண்டு ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. குளிர்காலத்தில், சுற்றுலாப் பயணிகள் குவியும்போது, எண்ணிக்கை பெரும்பாலும் இரட்டிப்பாகும். "பல சுற்றுலா பயணிகள் மின்னஞ்சல் மூலமாகவும் ஆர்டர் செய்கிறார்கள்," என்று ரன்மல் பகிர்ந்து கொள்கிறார். பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இத்தாலி மற்றும் பல நாடுகளில் இருந்து ஆர்டர்கள் குவிகின்றன. மோகன்லாலும் அவரது மகன்களும் ராஜஸ்தான் முழுவதும் பல்வேறு கலாச்சார விழாக்களுக்குச் சென்று, விற்பனை செய்வதோடு, இடை நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர்.
'ஒருவர் ஒரு நாள் முழுவதும் வேலை செய்தாலும், இதனை வாங்க ஒருவரை கண்டுபிடிக்க முடிந்தால் அவர்களுக்கு 300 முதல் 400 ரூபாய் கிடைக்கும். இதுவும் நிலையானது அல்ல,' என்கிறார் மோகன்லால்
மோகன்லால், தனது மகன்கள் இக்கலையைத் தேர்ந்தெடுத்ததற்கு பெருமை கொண்டாலும், அதே வேளையில், ஜெய்சால்மரில் கையால் மோர்ச்சங் செய்யும் கைவினைஞர்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. "[நல்ல] தரமான இந்த மோர்ச்சாங்கிற்கு மக்கள் ஆயிரம் ரூபாய் கூட கொடுக்க விரும்பவில்லை," என்று அவர் கூறுகிறார். மோர்ச்சாங்குகளை உருவாக்குவதற்கு நிறைய பொறுமை மற்றும் கடின உழைப்பு தேவைப்படுகிறது, எனவே அது எல்லோருக்குமானது அல்ல. ஒருவர் ஒரு நாள் முழுவதும் வேலை செய்தாலும், இதனை வாங்க ஒருவரை கண்டுபிடிக்க முடிந்தால் அவர்களுக்கு 300 முதல் 400 ரூபாய் கிடைக்கும். இதுவும் நிலையானது அல்ல,.' என்கிறார் மோகன்லால்.
பல லோஹர்கள் புகை தங்கள் பார்வையை பாதிக்கிறது என்று புகார் கூறுகின்றனர். "வார்ப்பு, நிறைய புகையை உருவாக்குகிறது. இது அடிக்கடி கண்கள் மற்றும் மூக்கிற்குள் செல்கிறது. இதனால் இருமல் ஏற்படுகிறது," என்று ரன்மல் கூறுகிறார். "நாங்கள் எரியும் வெப்பநிலையில் வார்ப்பு அருகே உட்கார வேண்டும், இது மூச்சுத் திணறலை உருவாக்குகிறது." இதைக் கேட்ட மோகன்லால், “காயங்களில் கவனம் செலுத்தினால், கலையை எப்படிக் கற்றுக்கொள்வது?” என்று தன் மகனைக் கடிந்துகொள்கிறார்.
மோர்ச்சங்குகள் தவிர, மோகன்லால் அல்கோசா (இரட்டை புல்லாங்குழல் என்றும் அழைக்கப்படும் ஜோடி மரக்காற்று இசைக்கருவி), ஷெனாய், முர்ளி, சாரங்கி, ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் ஆகியவற்றை வடிவமைக்க கற்றுக்கொண்டார். "நான் இசைக்கருவிகளை வாசிப்பதை விரும்புகிறேன், அதனால் இந்த கருவிகளை உருவாக்க கற்றுக்கொண்டேன்." அவற்றில் பெரும்பாலானவற்றை உலோகப் பெட்டியில் கவனமாகப் பூட்டி வைத்துள்ளார். யே மேரா கஜானா ஹேன் [இது என் பொக்கிஷம்],” என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார்.
இந்தக் கதை சங்கேத் ஜெயினின், கிராமப்புற கைவினைஞர்கள் பற்றிய தொடரின், ஒரு பகுதியாகும். மேலும் இது மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளையால் ஆதரிக்கப்படுகிறது.
தமிழில் : அஹமத் ஷ்யாம்