”எங்களின் தந்தைக்கு இறுதி மரியாதை கொடுக்க முடியாதே என கவலைப்பட்டோம்.”
பஞ்சநாதன் சுப்ரமண்யம் இறந்து இரண்டு மாதங்களாகியும் அவரது மகன் எஸ்.ரமேஷ் இன்னும் துக்கத்திலிருந்து மீளவில்லை. “கோவிட்19 அறிகுறிகள் தென்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றபோது, திரும்ப அவரை உயிரற்ற சடலமாக கொண்டு வருவோம் என கற்பனை செய்து கூட பார்க்கவில்லை.”
இந்திய ராணுவத்தில் எழுத்தராக பணியாற்றி ஓய்வு பெற்ற 68 வயது சுப்ரமண்யத்துக்கு பெரிய ஆரோக்கிய குறைபாடு எதுவும் வந்ததில்லை. ராணுவத்தில் இருந்ததை பெருமையாக கருதிய அவர், “உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டார். தினசரி நடைபயிற்சியை நிறுத்தியதில்லை. உணவில் கவனமாக இருப்பார்,” என்கிறார் கும்பகோணத்தை சேர்ந்த 40 வயது ரமேஷ். “மருத்துவமனையில் சேர்க்கும்போது கூட குணமாகி விடுவார் என்றுதான் நாங்கள் நினைத்தோம்.”
சுப்ரமண்யம் மரணமுற்ற ஆகஸ்ட் 14ம் தேதி, ரமேஷ்ஷும் அவரும் குடும்பத்தாரும் நிலைகுலைந்து போயிருந்தனர். அந்த நிலைகுலைவு இறப்பினால் மட்டும் அவர்களுக்கு ஏற்படவில்லை. கோவிட்19 பாதித்து இறந்தவர்களின் இறுதிச்சடங்குகள் பற்றி இருந்த கற்பிதங்களும் மாநிலமெங்கும் அதற்கு இருந்த எதிர்ப்புணர்வும் அடுத்து என்ன செய்வது என தெரியாத குழப்பத்தில் அவர்களை நிறுத்தியிருந்தது. “உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் பெரிய அளவில் உதவி கிடைக்கவில்லை,” என்கிறார் ரமேஷ். “கொரோனாவால் நேர்ந்த மரணம் என்பதால் அவர்களுக்கு இருந்த தயக்கத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.”
அப்போதுதான் முற்றிலும் எதிர்பார்க்காத திசையிலிருந்து உதவிக்கரம் நீண்டது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. சுப்ரமண்யம் மரணமடைந்த கொஞ்ச நேரத்திலேயே ஆறு தமுமுக தன்னார்வலர்கள் வந்தனர். மருத்துவமனையிலிருந்து உடலை பெறுவதில் தொடங்கி, சொந்த ஊர் கும்பகோணத்தில் முறையான இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்யும் வரை (சில இந்து சமூகங்கள் எரியூட்டுவதற்கு பதிலாக புதைப்பதுண்டு) குடும்பத்துக்கு உதவினார்கள்.
குடும்பத்தை பொறுத்தவரை அது மிகப் பெரும் அதிர்ஷ்டம். தமுமுகவுக்கோ புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு முழுக்க அவர்கள் மேற்கொண்ட 1100 இறுதிச்சடங்குகளில் சுப்ரமண்யத்தின் இறுதிச்சடங்கும் ஒன்று. இன்ன சாதி, மதமென பாராமல் எல்லா மரணங்களுக்கும் அவரவரின் மத நம்பிக்கைக்குரிய சடங்குகள் மற்றும் குடும்பத்தின் விருப்பங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்19 மரணங்களில், உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கும் முறைகளை பின்பற்றி எட்டடி ஆழத்தில் உடல்களை தமுமுகவினர் புதைக்கின்றனர்.
வைரஸ் உருவாக்கியிருக்கும் அச்சமும் ஊரடங்கினால் ஏற்பட்டிருக்கும் இடப்பெயர்வும் இடுகாடுகளில் பல நேரம் ஊழியர்கள் இல்லாத சூழலை உருவாக்கியுள்ளது. அவசர ஊர்திகள் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. பறிகொடுத்த குடும்பங்களும் ஏற்கனவே பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பார்கள். நிறைய பாரபட்சத்துக்கும் துன்புறுத்துதலுக்கும் ஆளாகியிருப்பார்கள். ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டிலேயே முதல் மருத்துவராக 55 வயது நரம்பியல் மருத்துவர் டாக்டர் சைமன் ஹெர்க்குலிஸ்ஸுக்கு நேர்ந்த கதியை அவ்வளவு சுலபத்தில் யாராலும் மறந்திருக்க முடியாது.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் திரண்டிருந்த மக்களால் அவரின் குடும்பம் இடுகாட்டுக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டார்கள். பிறகு அவரின் உடல் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அண்ணாநகரில் இருந்த வேலங்காடு மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஒரு கும்பல் அவசர ஊர்தியையும், அதன் ஓட்டுனர் மற்றும் தூய்மை பணியாளரையும் கட்டைகளாலும் கற்களாலும் தாக்கினர். அடுத்த நாள் காலை, யாருக்கும் தெரியாமல் டாக்டர் சைமனின் நண்பரான டாக்டர் பிரதீப்பும் மேலும் இருவரும் சேர்ந்து குடும்பத்தினர் எவருமின்றி தங்களுக்கு ஏதும் நேர்ந்திடுமோ என்கிற பயத்துடன் சைமனின் உடலை புதைக்க நேர்ந்தது.
இப்படி ஒரு கொடுமையான சூழலில் தமுமுகவின் உதவி என்பது அந்த 1100 குடும்பங்களுக்கு மிகப் பெரும் விஷயம்.
”சென்னையிலிருந்த உறவினர் ஒருவர் தமுமுக தொடர்பு எண்ணை கொடுத்து அவர்களை நாங்கள் தொடர்பு கொண்டபோது பெரும் அவநம்பிக்கையில் இருந்தோம்,” என்கிறார் ரமேஷ்
“நாங்கள் அவசர ஊர்திதான் கேட்டோம். ஆனால் அவர்கள் எல்லா விஷயங்களையும் பார்த்துக் கொண்டனர். எங்கள் அப்பாவின் இறுதிச் சடங்கில் களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாதென நினைத்தோம். அவர் சுயமரியாதை நிறைந்தவர். தமுமுக சரியான மரியாதையுடன் நல்லபடியாக செய்து கொடுத்தது.”
கோவிட் பாதிப்பில்லாத 100 இறுதிச் சடங்குகளையும் சேர்த்து மொத்தமாக அவர்கள் செய்திருக்கும் 1100 இறுதிச்சடங்குகளில் ஒன்றில் கூட எந்தவொரு தவறும் நிகழ்ந்துவிட்டது என சொல்லிவிட முடியாது.
”தமுமுகவின் தன்னார்வலர்களுடன் ஆறு வருடங்களாக தொடர்பில் இருப்பவன் என்கிற முறையில் எனக்கு இவை எதுவும் ஆச்சரியமான விஷயங்கள் இல்லை,” என்கிறார் புற்றுநோய் மருத்துவராகவும் ஸ்ரீபாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பேராசிரியராகவும் இருக்கும் டாக்டர் என்.அரவிந்த பாபு. அவர்களின் தன்னார்வலர்கள் ரத்ததானம் செய்திருப்பதாகவும் பல புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் நிதியை திரட்டிக் கொடுத்திருப்பதாகவும் அவர் சொல்கிறார். ஆதம்பாக்கத்தில் வசிக்கும் டாக்டர் பாபு தமுமுகவின் இத்தகைய சேவைகளை ஊரடங்கு உச்சம் பெற்ற ஏப்ரல் மாதகாலத்தில் “வயதான ஒரு பெண்மணி, அநேகமாக பட்டினியில் இறந்து ஆதரவற்று கிடந்த” போது கண்டறிந்திருக்கிறார்.
“நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவருக்கு முறையான அடக்கம் நடந்திருக்க வேண்டும் என நினைத்தேன்,” என நினைவுகூருகிறார் டாக்டர் பாபு. தமுமுக தன்னார்வர்லர்கள் வந்தனர். உடற்கூராய்வுக்கு உடலை அனுப்பினர். பிறகு இறுதிச்சடங்கு நடத்தினர். இறப்புச் சான்றிதழ் பெறும் வரை அவர்கள் எல்லா வேலைகளையும் செய்தனர். இது ரொம்ப முக்கியம் “ஏனெனில் அது கொரொனா மரணம் இல்லை என்பதை உறுதிபடுத்தினார்கள். உள்ளூர் காவல்நிலையத்திலிருந்து சான்றிதழ் பெறுவதற்கு உதவினர். அது மிகத் தேவையான நல்ல நடவடிக்கை.”
அப்போதுதான் முறையான இறுதிச்சடங்குகளை கேட்பாரின்றி அநாதரவான உடல்களுக்கு எட்டு வருடங்களாக தமுமுக செய்து வரும் விஷயம் டாக்டர் பாபுவுக்கு தெரிய வந்தது. “பெரும் ஆச்சரியமாக இருந்தது. எந்த பின்புலமும் தெரியாத ஒரு மனிதனுக்கு கூட தகுந்த மரியாதை மரணத்துக்குப் பின் கொடுக்கப்பட வேண்டுமென்பதில் அவர்கள் அக்கறை காட்டுகிறார்கள்.”
ஆரம்பத்திலேயே நாங்கள் கோவிட்19 பாதிப்பில் உயிரிழந்தவர்களை புதைக்கத் தொடங்கிவிட்டோம்,” என்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமுமுகவின் மாநிலத்தலைவருமான எம்.எச்.ஜவஹிருல்லா. “பெரிய திட்டமிடல் ஏதும் இல்லாமல்தான் செய்து கொண்டிருந்தோம். டாக்டர் சைமனின் மரணமும் அவரின் குடும்பத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் எங்களை யோசிக்க வைத்தது. கோவிட் மரணங்களை அச்சத்தாலும் வெறுப்புணர்வாலும் இச்சமூகம் எதிர்கொள்வதால், நாம் எதாவது செய்ய வேண்டுமென நினைத்தோம்.”
இறுதிச்சடங்குகளை அவர்களே நடத்த முடிவெடுத்தனர். “இறந்தவரின் மதத்துக்கான சடங்குகளுடன் இறுதிச்சடங்குகள் நடத்தினோம். இறுதியில் அவர்களை தகுந்த மரியாதையுடன் அனுப்பி வைக்க வேண்டுமென விரும்பினோம். அவர்களின் நம்பிக்கை மதிக்கப்படாமல் அது எப்படி சாத்தியப்படும்?” என கேட்கிறார் ஜவஹிருல்லா.
தமுமுக தன்னார்வலர்கள் எல்லாரும் 22-லிருந்து 40 வயதுக்குள் இருக்கும் சாமானிய மனிதர்களே. அவர்கள் விளம்பரம் தேடுவதில்லை. கோவிட்19 பாதித்த நோயாளிகளை கையாளும் சுகாதார ஊழியர்களை பொதுப்புத்தி எதிர்கொள்ளும் விதமும் அதற்கொரு காரணம். மாநிலம் முழுக்க 1000 தன்னார்வலர்கள் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் நடைபாதை வியாபாரிகளும் சிறு கடை வியாபாரிகளும்தான் என்கிறார் தமுமுகவின் மருத்துவ அணிக்கு தலைவராக இருக்கும் சென்னையை சேர்ந்த கலீல் ரஹ்மான்.
”பெரும்பாலானோரின் வாழ்க்கை கைக்கும் வாய்க்குமாகத்தான் இருக்கிறது”, என்கிறார் ரஹ்மான். ”வெகுச்சிலர் மட்டும்தான் ஓரளவுக்கு வசதியான பின்புலத்திலிருந்து வருகிறார்கள்.”
அவர்களின் பணிக்கான மரியாதை பல நிலைகளிலிருந்தும் கிடைக்கிறது. “மத்திய அமைச்சர் ஒருவரின் இறுதிச்சடங்கு காணொளி பார்த்தீர்களா?” எனக் கேட்கிறார் கோபிச்செட்டிப்பாளையத்தை சேர்ந்த ஜி.வி.அதியமான். “அவர் எதிர்க்கட்சியாக (திமுகவுக்கு) இருந்தாலும், அவரின் உடலை குழிக்குள் வீசியெறிந்த விதமும் பிறகு ஒருவர் உள்ளே இறங்கி அதை திருப்பிப் போட்ட விதமும் என்னை வருத்தத்துக்குள்ளாக்கியது.” 1960களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவரும் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரும் அதியமானின் 86 வயது தந்தையுமான ஜி.பி.வெங்கிட்டும் செப்டம்பர் 23ம் தேதி கொரோனாவினால் இறந்துவிட்டார்.
எட்டு வருடங்களாக மருத்துவ அணியில் இருக்கிறேன். மக்கள் நன்றி சொல்லும் போது வேறு எதுவும் பெரிதாக தெரிவதில்லை
மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு அவசர ஊர்தி கிடையாது என சொல்லப்பட்ட பிறகு அவரது குடும்பம் பிரச்சினைகளை எதிர்கொண்டது. “என் தந்தை கோயம்புத்தூர் மருத்துவமனையில் இருந்தார். அவரை நாங்கள் கோபிச்செட்டிபாளையத்துக்கு கொண்டு வர வேண்டும்,” என்கிறார் அதியமான். “அப்போதுதான் தமுமுக வந்து எல்லா விஷயங்களையும் குடும்பத்தினரை போல செய்து கொடுத்தனர்.”
ஒவ்வொரு இறுதிச்சடங்கும் விரிவான நடைமுறையை கொண்டிருக்கும். ஆனாலும் மருத்துவமனை தொடங்கி, இறுதிச்சடங்குக்கு என உறவினர்களுடன் ஒருங்கிணைந்து வேலை பார்ப்பது வரை, ஒரு இறுதிச்சடங்கை முடிக்க தன்னார்வலர்களுக்கு 3-4 மணி நேரங்கள்தான் பிடிக்கிறது. “எங்களின் நிர்வாகக் காரணங்களுக்காக நாங்கள் தமிழகத்தை 56 மாவட்டங்களாக (அதிகாரப்பூர்வமாக 38தான் இருக்கிறது) பிரித்திருக்கிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் செயலாளருடன் கூடிய மருத்துவ அணி ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 2-3 அணிகள் 6-8 தன்னார்வலர்களை கொண்டு இருக்கின்றன,” என்கிறார் கலீல் ரஹ்மான்.
”மனித குலத்துக்கே மிகப் பெரிய சேவை இது. அதை செய்வதில் தன்னார்வலர்கள் சரியான முறைகளை மிக கவனமாக கடைப்பிடிக்கிறார்கள்,” என்கிறார் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார். “உதாரணத்துக்கு கோவிட் மரணங்களுக்கு எட்டடி குழி வெட்டப்படுவதை உறுதி செய்வார்கள். பாதுகாப்பு உபகரண ஆடைகளை அணிந்திருப்பார்கள். எங்கள் மாவட்டத்தில் 100 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றில் 40 சதவிகித இறுதிச் சடங்குகளை தமுமுகவினர் கையாண்டனர்.” சரியான விகிதம் தெரியவில்லை என்றாலும் 1100 இறுதிச்சடங்குகள் என்பது இந்து, இஸ்லாம், கிறித்துவர் மற்றும் பிற நம்பிக்கைகள் பலவற்றை சேர்ந்தவர்களை உள்ளடக்கிய எண்ணிக்கை ஆகும்.
அவர்கள் செயல்படும் இடங்களில் இத்தகைய தன்னார்வ செயல்பாடுகள் வைரஸ் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகிறது. அச்சத்தையும் குறைக்கிறது.
“சடலங்களிலிருந்து தொற்று பரவும் என்கிற சிந்தனைதான் அச்சத்துக்கு காரணம். அப்படி தொற்று பரவுவதில்லை,” என்கிறார் கொல்கத்தாவை சேர்ந்த உயிரியலாளரும் ஆசிரியருமான டாக்டர் அனிர்பன் மித்ரா. “இறந்த உடல் புதிய வைரஸ்களை உருவாக்க முடியாது என்பது உயிரியல் உண்மை. குறிப்பாக மரணம் நிகழ்ந்து 4-5 மணி நேரங்கள் கழித்தெல்லாம் வாய்ப்பே இல்லை. சடலங்கள் சுவாசிப்பதில்லை என்பதால் காற்றில் வைரஸ் பரவும் சாத்தியங்களும் கிடையாது. ஒருவேளை உடலில் எச்சில், சளி, ரத்தம் போன்ற திரவங்கள் வெளியேறும் சாத்தியம் இருந்தால் மட்டுமே வைரஸ் பரவும் வாய்ப்பு இருக்கும். அதனால்தான் அதிக தாமதமின்றி உடலை எரிப்பதோ புதைப்பதோ செய்துவிட வேண்டும்.
”பாதிப்பு கொண்டவர் ஒருவேளை வீட்டிலேயே இறந்துவிட்டால், வைரஸ் வீட்டில் இருக்கும் வாய்ப்பு இருக்கலாம். மொத்த வீட்டையும் முற்றிலுமே பரிசோதனைக்குட்படுத்த வேண்டியிருக்கும்.” என்கிறார் டாக்டர் மித்ரா. “இறுதிச்சடங்கும் திறன் படைத்த அதிகாரிகளால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.”
அதிகாரிகளுக்கும் நிர்வாகத்துக்கும் அழுத்தம் ஏற்படுகையில் அவர்களை காப்பதிலும் தமுமுக முன்னால் வந்து நிற்கிறது.
இறுதிச்சடங்குகளுக்கு ஆகும் செலவு என்ன? “குழி தோண்ட ஜெசிபி இயந்திரத்துக்கான வாடகை, பின்பற்றப்படும் சடங்குகள் போன்ற விஷயங்களை பொறுத்து 1000 ரூபாயிலிருந்து 11000 ரூபாய் வரை செலவு ஆகும்,” என்கிறார் ரஹ்மான். “கோவிட் மரணங்கள் நேர்ந்து அத்தகைய செலவுகள் செய்ய முடியாத குடும்பங்களுக்கு எங்களின் உடலுழைப்பை கொடுத்து செய்து தருகிறோம். ஒரு குடும்பத்தால் பணமே கொடுக்க முடியவில்லை எனில், எங்களுக்குள்ளேயே நிதி திரட்டி செய்து தருகிறோம்.” பாதுகாப்பு உபகரணங்களை நிர்வாகத்தில் இருப்பவர்களோ வசதி நிறைந்தவர்களோ தருகிறார்கள்.
கோவிட் மரணங்களில் அதிக எச்சரிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை குழுவினர் தெரிந்திருக்கின்றனர். “குழுவில் இருக்கும் அனைவரும் பாதுகாப்பு உடைகள் அணிந்து இறுதிச்சடங்குகளை செய்கின்றனர். எந்தக் குழுவும் ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இறுதிச்சடங்குகளை செய்வதில்லை. இறுதிச்சடங்கு முடிந்தபிறகு, தன்னார்வலர்கள் தனித்திருக்கும் சிகிச்சையை சில நாட்களுக்கு எடுத்துக் கொண்ட பிறகு வீடு திரும்புவார்கள்.” நோய் எதிர்ப்பு சக்திக்கான உணவுகள் அவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. உடற்பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றனர். “கோவிட் பாசிட்டிவ் ஆகும் நபர்களுக்கு நிச்சயமாக இந்த வேலைகள் கொடுக்கப்படுவதில்லை,” என்கிறார் ஜவஹிருல்லா.
துயரத்தில் இருக்கும் குடும்பங்களை பற்றிய தகவல்களை உள்ளூர் சுகாதார ஆய்வாளர்களிடமிருந்தும் மருத்துவமனைகளிடமிருந்தும் குழுக்கள் பெறுகின்றன. அரக்கோணத்தில் இருக்கும் பனவரம் பஞ்சாயத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இந்த உதாரணத்தை சொல்கிறார்: “எங்கள் ஊரில் புஷ்பா என்கிற கிறிஸ்துவப் பெண் கோவிட் பாதித்து உயிரிழந்தார். அவரின் குடும்பத்தால் சூழலை கையாள முடியவில்லை. சுகாதார ஆய்வாளர் அப்போதுதான் தமுமுகவை பற்றி என்னிடம் சொன்னார். தன்னார்வலர்கள் ஒரு மணி நேரத்துக்குள் வந்தனர். மொத்த சூழலையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். துணிச்சலும் எச்சரிக்கை உணர்வும் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள்.”
மேலும், “தமிழகத்தில் எல்லா காவல் நிலையங்களிலும் எங்கள் தொடர்பு எண்கள் இருக்கிறது. கைவிடப்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் எங்களை அழைக்கலாம். நாங்கள் மிச்ச விஷயங்களை பார்த்துக் கொள்வோம்,” என்கிறார் ரஹ்மான்.
அவர்களின் முயற்சிகள் எல்லாவற்றிலும் அதிக ஆபத்தும் செலவும் இருக்கிறது. காரைக்கால் மாவட்டத்தின் 25-27 கோவிட் மரண இறுதிச்சடங்கு குழுக்களில் மார்ச் மாதத்திலிருந்து உறுப்பினராக இருக்கும் 41 வயது அப்துல் ரஹிம், அவருடைய ஆறு வயது மகனின் அருகாமையை இழந்து தவிக்கிறார். “எட்டு வருடமாக இந்த மருத்துவக் குழுவில் நான் இருக்கிறேன். கோவிட் வந்த பிறகு எங்களுக்கு அழுத்தம் அதிகமாகியிருக்கிறது. ஆனால் மக்கள் அவர்களின் நன்றியை சொல்லும்போது அழுத்தமெல்லாம் பறந்து விடும். ஒவ்வொரு இறுதிச்சடங்குக்கும் பிறகு குறைந்தபட்சம் ஒரு வாரமேனும் என் குடும்பத்திடமிருந்து நான் விலகியிருக்க வேண்டும். அதில் அவர்கள் அதிருப்தி அடைகிறார்கள். அதற்காக அவர்களின் ஆரோக்கியத்துக்கு நான் ஆபத்து விளைவித்துவிடக் கூடாது.”
தமுமுக தன்னார்வலர்கள் ஏன் இதை செய்கிறார்கள்?
ஜவஹிருல்லா இதை ஃபர்து கிஃபாயா (அரபியில் ஒவ்வொரு தனி நபரின் கடமை என அர்த்தம்) எனக் குறிப்பிடுகிறார். “இஸ்லாமை பொறுத்தவரை இறுதிச்சடங்கு என்பது சமூகத்தின் கடமை. ஒரு தனிநபரோ ஒரு குழுவோ அதை செய்துவிட்டால், மொத்த சமூகமே அதன் கடமையை செய்துவிட்டதாக அர்த்தம். அதை செய்ய ஒருவரும் முன்வரவில்லை எனில், அனைவரும் பாவிகள் என அர்த்தம். சாதி மத பேதங்களின்றி இந்த வேலைகள் செய்வதை எங்களின் கடமை என நாங்கள் நம்புகிறோம்.”
1995ம் ஆண்டில் தமுமுக தொடங்கப்பட்டதிலிருந்து அதன் தன்னார்வலர்கள் பல மனிதநேய செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக சொல்கிறார். “ரத்ததானம் செய்வார்கள். அவசர ஊர்தி சேவையை தேவையிருக்கும் மக்களுக்கு இலவசமாக தருவார்கள். சுனாமி, சென்னை பெருவள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் அவர்கள் முழுமையாக செயல்பட்டார்கள்.”
மனிதநேய மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கும் ஜவஹிருல்லா, “இவற்றை நாங்கள் தமிழர்களாக செய்கிறோம். ஆபத்தில் இருக்கும்போது ஒருவருக்கொருவர் உதவ வேண்டுமென நாங்கள் நம்புகிறோம். தமிழகம் எங்களின் முன்னெடுப்புகள் பலவற்றை அங்கீகரித்திருக்கிறது,” என்றார். கனத்த மவுனத்துக்கு பிறகு, “சிறுபான்மையாக நீங்கள் இருக்கும்போது இவற்றை செய்ய வேண்டியது கூடுதல் கடமையாகவும் பொறுப்பாகவும் மாறி விடுகிறது. ஆனால் எங்களின் இலக்கு உதவி தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்வது மட்டும்தான்,” என்றார் அவர்.
பொது சுகாதாரம் மற்றும் சிவில் உரிமைகள் பற்றிய செய்திகளை தாகூர் குடும்ப அறக்கட்டளை வழங்கும் ஒரு சுதந்திரமான ஊடக ஊக்கத் தொகை மூலம் வழங்குகிறார் கவிதா முரளிதரன். இந்த செய்தியின், அதன் உள்ளடக்கத்தின் மீது தாகூர் குடும்ப அறக்கடளை எந்தவொரு கட்டுபாடும் விதிக்கவில்லை.
தமிழில்: ராஜசங்கீதன்.