குல்ஷார் அஹமது பாட், தால் ஏரியின் படித்துறை எண் 15தில், ஒரு மர பெஞ்சில் அமைதியாக அமர்ந்து இருக்கிறார். ஸ்ரீநகரில் உள்ள மற்ற ஷிகரா படகோட்டிகளைப் போலவே ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் சுற்றுலாப் பயணிகளுக்கு உடனடியாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறுமாறு வெளியிட்ட ஒரு ஆணையில் இருந்து, அவர் எந்த வாடிக்கையாளரையும் சந்திக்கவில்லை. "அது எங்களது எதிர்காலத்தை நிச்சயமற்றதாக ஆக்கிவிட்டது. நான் இங்கு வந்த கடந்த 18 ஆண்டுகளில் இதைப் போன்ற மொத்த முன்பதிவுகளும் (ரத்து செய்யப்படுவதை) நான் கண்டதில்லை", என்று 32 வயதாகும் குல்ஷார் கூறுகிறார்.
அக்டோபர் மாதம், 10 ஆம் தேதி அரசாங்கம் அந்த ஆணையை நீக்கிய பின்னர் ஒரு சில வாடிக்கையாளர்கள் ஷிகரா சவாரிகளுக்கு வந்தனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் பயண முகவர்களால் கொண்டு வரப்பட்டனர், அவர்கள் எங்களிடம் கடுமையாக பேரம் பேசினர். ஒரு வாடிக்கையாளர் எங்களிடம் நேரடியாக வந்தால், தால் ஏரியின் நீரில் ஒரு மணி நேரம் சவாரி செய்வதற்கு நாங்கள் 600 ரூபாய் வசூலிக்கிறோம் (அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட விலை), அதே சவாரிக்கு ஒரு முகவர் எங்களுக்கு 250 ரூபாய் தான் கொடுப்பார். இதைப் போன்ற இக்கட்டான காலங்களில், எங்களால் அதை மறுக்கக் கூட முடியாது, என்று 42 வயதாகும் மெஹராஜ் - உத் - தின் - பஃதூ கூறுகிறார், அவர் நவம்பர் மாத நடுப்பகுதியான பிறகும் வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கிறார், குளிர்காலத்தில் தனது குடும்பத்தை எப்படியும் பார்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர்.
ஷிகராக்கள் பெரும்பாலும் படகின் உரிமையாளர்களாலோ அல்லது ஒரு பருவத்திற்கு 30,000 ரூபாய்க்கு படகினை வாடகைக்கு எடுத்த படகோட்டிகளாலோ செலுத்தப்படுகிறது. ஒரு படகோட்டி ஆறு மாத கால சுற்றுலா பருவத்தில் 2 லட்சம் ரூபாய் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பார் என்று எதிர்பார்க்கலாம். அதில் வாடகை மற்றும் இதர செலவுகள் போக, அவரிடம் எஞ்சி இருப்பது சுமார் 180,000 ரூபாய் மட்டுமே. இந்த வருமானத்தையே அவர்கள் ஆண்டின் 12 மாதங்களுக்கும் பரவலாக வைத்து செலவு செய்யப் பயன்படுத்த வேண்டும் - மேலும் அது ஒரு மாதத்திற்கு 15,000 ரூபாய் என்ற அளவில் வந்து நிற்கும். சுற்றுலா பருவம் அல்லாத காலத்தில் ஷிகராவாலாக்களுக்கு வேறு வேலை எதுவும் கிடையாது அல்லது அவர்கள் கிடைக்கின்ற ஏதோ ஒரு வேலையைச் செய்வார் மேலும் அவர்களில் சிலர் ஏரியில் மீன்களைப் பிடித்து விற்கவோ அல்லது அவர்களது குடும்பத்திற்கோ வைத்துக் கொள்வர்.
பள்ளத்தாக்கில் சுற்றுலா பருவம் மே முதல் அக்டோபர் மாதம் வரை இருக்கும். நவம்பர் முதல் வாரம் முதல் இந்த ஆண்டு காஷ்மீரில் ஆரம்பகாலப் பனிப்பொழிவுக்குப் பின்னர் ஷிகராக்களைத் தேடி வாடிக்கையாளர்கள் வரும் வாய்ப்புகள் இன்னும் அரிதாகிவிடும். சுற்றுலா பயணிகள் குறைவாக வந்த கடந்த ஆண்டில் (2018), காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8.5 லட்சமாக இருந்தது - இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் ஒட்டு மொத்த எண்ணிக்கை. அந்த எண்ணிக்கை இந்த ஆண்டு மிகவும் கடுமையாக குறைந்து இருக்கிறது அதன் சரியான எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் தால் ஏரி உட்பட காஷ்மீரின் பல்வேறு நீர் நிலைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 4,800 ஷிகராக்கள் அனைத்தும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக அனைத்து ஜம்மு மற்றும் காஷ்மீர் ஷிகரா டாக்சி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் அனைத்து ஜம்மு மற்றும் -காஷ்மீர் ஷிகரா தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான 60 வயதாகும் வாலி முகமது பாட் கூறுகிறார். தால் ஏரி, நைஜீன் ஏரி மானஸ்பால் ஏரி மற்றும் ஜீலம் நதி ஆகியவற்றில் இயங்கும் 960 படகுகளின் உரிமையாளர்களும் மற்றும் காஷ்மீர் படகு இல்ல உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அப்துல் ரஷீத் கல்லூவும் அவரைப் போலவே கூறுகிறார்.
"தால் ஏரியில் உள்ள (37 படித்துறைகள் அல்லது சிறிய படகு நிறுத்தங்களில் இருக்கின்ற) ஷிகராவாலாக்களுக்கு மட்டுமே ஏற்பட்டுள்ள இழப்பின் மதிப்பு 8 கோடி ரூபாய்", என்று மதிப்பிடுகிறார் பாட். சிலர் ஷிகராக்களை வாங்குவதற்காக பல்வேறு ஆதாரங்களில் இருந்தும் கடன்களைப் பெற்றிருக்கின்றனர் - ஒரு புதிய ஷிகராவின் மதிப்பு 1.5 லட்சம் ரூபாய், மேலும் அவர்களால் இப்போது கடன் தவணைகளைத் திருப்பி செலுத்த முடியாமல் இருக்கின்றனர், என்று அவர் கூறுகிறார். சிலர், கடன்காரர்களின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதற்காக தங்களது ஷிகராக்களை விற்றுவிட்டனர் என்று மேலும் பாட் கூறுகிறார். ஷிகராக்களை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தும் குடும்பங்களுக்கு இதுவரை அரசாங்கம் எந்த இழப்பீட்டுத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்று கூறுகிறார் அவர்.
தமிழில்: சோனியா போஸ்