பசுமையான மலைகள், சிறு அருவிகள், சுத்தமான காற்று கொண்ட சூழலில் ஓர் இளைஞர் தன் எருமைகள் மேய்வதை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
“ஏதேனும் கணக்கெடுப்பு எடுக்கிறீர்களா?” என அவரை நான் அணுகியபோது கேட்டார்.
”இல்லை,” என சொல்லிவிட்டு, “இங்கிருக்கும் சத்து குறைபாடு சார்ந்த நிகழ்வுகள் பற்றிய செய்திகள் சேகரிக்க வந்திருக்கிறேன்,” என்றேன்.
மகாராஷ்டிராவின் பல்கர் மாவட்டத்திலுள்ள மொகாடா தாலுகாவில் நாங்கள் இருக்கிறோம். 5221 குழந்தைகள் இங்கு குறைந்த எடையில் இருக்கின்றன. அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் குறைந்த எடை இருப்பதில் மாநிலத்திலேயே இது இரண்டாம் இடம் எனக் குறிப்பிடுகிறது இந்த அறிக்கை .
தலைநகர் மும்பையிலிருந்து நாங்கள் வெறும் 157 கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறோம். ஆனால் இங்கிருக்கும் பசுமையான நிலப்பரப்பு , மும்பையிலிருந்து வெகுதூரத்திலிருப்பதை போன்ற தோற்றமளிக்கிறது.
ரோகிதாஸ் கா தாகூர் சமூகத்தை சேர்ந்தவர். மகாராஷ்டிராவில் பட்டியல் பழங்குடி சமூகம் அது. பல்கர் மாவட்டத்தின் 38 சதவிகித மக்கள் பழங்குடியினர்தான். எருமை மேய்க்கும் இளைஞர் தன் வயதை சரியாக சொல்ல முடியவில்லை. 20களின் பிற்பகுதியில் அவர் இருக்கலாம். ஒரு குடை தோளில் தொங்கியது. கழுத்தைச் சுற்றி ஒரு துண்டு. கையில் ஒரு மரக்குச்சு. புற்களை மேய்ந்து கொணிட்ருந்த இரு விலங்குகளைத் தாண்டி அவர் பார்க்கிறார். “மழை பெய்யும் நாட்களில்தான் இவை வயிறு நிறைய சாப்பிட முடியும்,” என்கிறார் அவர். “கோடை காலங்களில் அதிமாக அவை உணவு தேடி அலைய வேண்டும்.”
“என் வீடு அங்கு தம்தெபடாவில் இருக்கிறது,” என எதிரே இருக்கும் குனிறிலுள்ள ஒரு குக்கிராமத்தை சுட்டிக் காட்டுகிறார் ரோகிதாஸ். மரங்கள் அடர்ந்த அப்பகுதியில் 20-25 வீடுகள் இருக்கின்றன. வீடுகளை அடைவதற்கு, வக் ஆறிலிருந்து வரும் ஓர் ஓடை மீதுள்ள சிறு பாலத்தின் வழி அந்த மக்கள் செல்ல வேண்டும். “இந்த (ஓடை) நீரைத்தான் நாங்கள் குடிக்கிறோம். வீட்டில் பயன்படுத்துகிறோம். விலங்குகளும் இதையே குடிக்கின்றன,” என்கிறார் அவர்.
கோடை மாதங்களில் வக் ஆறு வறளத் துவங்கும். குடிநீர் கிடைக்க மக்கள் போராடுவார்கள் என்கிறார் அவர்.
“இம்மாதம் (ஜூலை) பாலம் நீருக்கடியில் இருந்தது. எங்கள் பக்கம் யாரும் வர முடியவில்லை. நாங்களும் மறுபக்கத்துக்கு போக முடியவில்லை,” என அவர் நினைவுகூருகிறார்.
தம்தெபடாவின் வாழ்க்கை இச்சமயங்களில் கடினமாக இருக்குமென்பது உறுதி. “சாலை இல்லை, அரசாங்க பேருந்து இல்லை. ஷேர் ஜீப் வாகனங்களும் குறைவுதான். மருத்துவ நெருக்கடி நேர்ந்தால் மிகவும் கஷ்டம்,” என்னும் அவர் மொகதா அரசு மருத்துவமனை எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகக் கூறுகிறார்.
அச்சமயங்களில் கர்ப்பிணிகளையும் பிற நோயாளிகளையும் இங்குள்ள மக்கள் மூங்கில் தடிகளில் கட்டப்பட்ட போர்வையில் தூக்கிச் செல்வார்கள். அவர்களின் துயரங்களை கூட்டும் விதமாக அங்கிருக்கும் செல்பேசிக்கான நெட்வொர்க் இருக்கிறது. அவசர ஊர்தி அழைக்கக் கூட செல்பேசியில் தொடர்பு கொள்ள சிக்னல் இருக்காது.
ரோகிதாஸ் பள்ளிக்கு சென்றதில்லை. அவரின் மூன்று அண்ணன்களும் கூட சென்றதில்லை. கா தாகூர் சமூகத்தை சேர்ந்த ஆண்களில் 71.9 சதவிகித கல்வியறிவு இருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் ரோகிதாஸ், “குக்கிராமத்தில் இருக்கும் சில சிறுவர்கள் 10ம் வகுப்பு முடித்திருக்கின்றனர். அவர்களும் நான் செய்யும் வேலையைதான் செய்கிறார்கள். என்ன பிரயோஜனம் இருக்கிறது சொல்லுங்கள்,” எனக் கேட்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு ரோகிதாஸ் திருமணம் செய்திருக்கிறார். அவரது மனைவியான போஜி, அவரது பெற்றோர், மூன்று உடன்பிறந்தவர்கள், அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வீட்டிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இரண்டு ஏக்கர் காட்டு நிலத்தில் குறுவை நெல் சாகுபடி செய்கின்றனர். “எங்களின் பெயரில் நிலம் இல்லை,” என்கிறார் அவர்.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே நடக்கும் அறுவடைக்கு பின் மொத்த குடும்பமும் செங்கல் சூளையில் வேலை செய்ய இடம்பெயரும். நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தானே மாவட்டத்தின் பிவாந்தி தாலுகாவுக்கு செல்லும். “செங்கல் சூளையில் சம்பாதிப்பதை சாகுபடிக்கு செலவிடுவோம்,” என்கிறார் அவர். அவரது குடும்பத்தின் அனுபவம்தான் பல்கரிலிருக்கும் பல பழங்குடி குடும்பங்களின் அனுபவமாகவும் இருக்கிறது. குறுவை பயிர் அறுவடை மற்றும் இடப்பெயர்ச்சிக்கு இடையில்தான் அவர்கள் வாழ்க்கை வருடந்தோறும் நகர்கிறது.
ஜுலை 21, 2022 அன்று திரவுபதி முர்மு இந்தியாவின் முதல் பழங்குடியின ஜனாதிபதியாகி வரலாற்றில் இடம்பிடித்தார். ஒடிசாவின் சாந்தளி பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் முர்மு. உயர் அதிகாரத்தில் இருக்கும் இரண்டாவது பெண்ணும் அவர்தான்.
”நம் நாட்டின் ஜனாதிபதி பழங்குடியினத்தவர் என்பது தெரியுமா?” எனக் கேட்டு அவர் பதிலுக்கு காத்திருந்தேன்.
“யாருக்கு தெரியும்? அதனால் என்ன பிரயோஜனம்?” எனக் கேட்கும் ரோகிதாஸ், “நான் மாடுதானே மேய்த்துக் கொண்டிருக்கிறேன்,” என்கிறார்.
தமிழில் : ராஜசங்கீதன்