முறையாக வேலைகள் முடிக்கப்படாத மண் பாதைகள் பல கீலோ மீட்டர்கள் நீண்டு செல்கின்றன. இதில் பயணம் செய்து சவுராவில் உள்ள மருத்துவமனைக்கு செல்வது பெரும் போராட்டமாக உள்ளது. முபீனா மற்றம் அர்ஷித் ஹீசேன் அக்கூன், இருவரும் அவர்கள் மகனின் மருந்துவ பரிசோதனைகளுக்காக மாதத்தில் ஒருமுறையாவது மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். ரக்கீர்த் மறுகுடியமர்வு காலனியில் சாக்கடை வழிந்தோடும் பாதைகளிலும், பனி உருகியோடும் இடங்களிலும் தங்கள் 9 வயது மகனை தூக்கி சுமந்துகொண்டு செல்ல வேண்டும்.
2 முதல் 3 கிலோ மீட்டர் தொலைவு நடந்த பின்னர்தான் அவர்களுக்கு ஆட்டோ கிடைக்கும். 10 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு ஸ்ரீநகரில் உள்ள சவுரா ஷேர் ஐ காஷ்மீர் மருத்துவ அறிவியல் மையம் வந்து சேர்வதற்கு அவர்களுக்கு ரூ.500 செலவாகும். சில நேரங்களில் அவர்கள் முழு தொலைவும் நடந்த வரவேண்டியிருக்கும். கடந்தாண்டு ஊரடங்கின்போது மருத்துவமனைக்கு அவர்கள் இவ்வாறு நடந்துதான் வந்தார்கள். “அதற்கு ஒரு நாள் ஆகிவிடும்“ என்று முபீனா கூறுகிறார்.
முபீனா மற்றும் அர்ஷித்தின் உலகம் மாறி 9 ஆண்டுகள் ஆனது. 2012ம் ஆண்டு அவருக்கு காய்ச்சலும், மஞ்சள் காமாலையும் ஏற்பட்டபோது, மூபின் பிறந்து சில நாட்களே ஆகியிருந்தது. அவருக்கு ரத்தத்தில் அதிகளவு பில்ருபீன் இருந்தது. அதனால், அவரை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் மாநில அரசின் ஜிபி பான்ட் மருத்துவமனையில் இரண்டு மாதங்கள் தங்கி சிகிச்சையெடுத்துக்கொண்டார். இறுதியில், அவர்களின் குழந்தை இயல்பான குழந்தை இல்லை என்று அவர்கள் கூறிவிட்டார்கள்.
“அவரது நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், நாங்கள் அவரை தனியார் மருத்துவரிடம் காண்பித்தோம். அவர் எங்களிடம் குழந்தையின் மூளை முற்றிலும் சிதைந்துவிட்டது. அவரால் இனி உட்காரவும், நடக்கவும் முடியாது என்று கூறிவிட்டனர்“ என்று முபீனா கூறுகிறார். அவருக்கு 30 வயதாகிறது.
கடைசியில் மோஷினுக்கு மூளை முடக்குவாதம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது முதல், அவரது தாய் முபீனா, தனது மகனுடனே பெரும்பாலான நேரத்தை கழிக்கிறார். அவரை பராமரிப்பது ஒன்றே அவரின் வேலையாகிவிட்டது. “நான் தான் அவர் சிறுநீர் கழித்துவிட்டால் சுத்தம் செய்ய வேண்டும். அவரது படுக்கையை சுத்தம் செய்ய வேண்டும். அவரது ஆடைகளை துவைக்க வேண்டும். அவரை அமர வைக்க வேண்டும். அவர் நாள் முழுவதும் எனது மடியிலேயே இருப்பார்“ என்று அவர் கூறுகிறார்.
2019 வரை அவர்கள், ரக்கீர்த் மறு குடியமர்த்தும் காலனிக்கு இடம்பெயரும் முன்னர் அவர்களது போராட்டம் சிறிது குறைவாகவே இருந்தது. இங்கு வெடிப்பு விழுந்த சுவர்கள், முழுதாக வேலை முடிக்கப்படாத மேற்கூரைகள் என்று அவர்களின் துன்பம் மேலும் அதிகரித்தது.
அவர்கள் தால் ஏரியின் மிர் பெரியில் வசித்தார்கள். அங்கு முபீனாவுக்கு வேலை மற்றும் வருமானம் இருந்தது. “நான் மாதத்தில் 10 முதல் 15 நாட்கள் தால் ஏரியில் புல் வெட்டும் வேலை செய்வேன்“ என்று அவர் கூறுகிறார். அதிலிருந்து பாய் தயாரித்து அதை உள்ளூர் சந்தையில் ஒன்று ரூ.50க்கு விற்பார். குளத்திலிருந்து தாமரை பறிப்பார். அதில் 4 மணி நேர வேலைக்கு ரூ.300 சம்பாதிப்பார். இந்த வேலையும் அவருக்கு மாதத்தில் 15 முதல் 20 நாட்கள் இருக்கும். அர்ஷித் வேளாண் கூலித்தொழிலாராக மாதத்தில் 20 முதல் 25 நாட்கள் வேலைக்கு செல்வார். வேலை கிடைக்கும் காலத்தில் அதில் அவருக்கு நாளொன்றுக்கு ரூ.1,000 கிடைக்கும். மற்ற நாட்களில் மண்டியில் காய்கறிககள் விற்று நாளொன்றுக்கு ரூ.500 வரை சம்பாதிப்பார்.
குடும்பத்திற்கு நல்ல வருமானம் இருந்தது. அதனால் அவர்களின் அன்றாட தேவைகளை சமாளிக்க முடிந்தது. மிர்பெரியில் இருந்து மோஷினுக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டிய மருத்துவமனைகளும், மருந்துவர்களையும் சந்திக்க செல்வது எளிதாக இருந்தது.
“ஆனால், மோசின் பிறந்த பின்னர் நான் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டேன்“ என்று முபீனா கூறுகிறார். “நான் நாள் முழுவதும் என் குழந்தையை பராமரிப்பதிலேயே செலவிடுகிறேன். வீட்டில் மற்ற எந்த வேலையோ அவருக்கு உதவியோ செய்வதில்லை. எனவே என்னை அங்கு வைத்திருப்பதில் என்ன நன்மை என்று பின்னர் எனது மாமியார் கேட்டார்.
எனவே அவர் எங்களை வீட்டை விட்டு வெளியேற வற்புறுத்தினார். அருகிலேயே நாங்கள் சிறிய குடிசை அமைத்துக்கொண்டோம். அதுவும் 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்துவிட்டது. பின்னர் அவர்கள் உறவினர்களுடன் சென்றுவிட்டார்கள். பின்னர் அங்கிருந்தும் சென்றுவிட்டனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் தற்காலிக குடிசையில் வசித்தார்கள்.
ஒவ்வொரு முறையும் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை என்ற மோஷினுக்கான பரிசோதனைகள், மருந்து என அனைத்தும் அருகிலேயே இருந்தது.
2017ம் ஆண்டு, ஜம்மு காஷ்மீரின் ஏரிகள் மற்றும் தண்ணீர் வழித்தடங்கள் ஆணையம், மறுவாழ்வு இயக்கம் ஒன்றை தால் ஏரி பகுதிகளில் துவக்கியது. அதன் அலுவலர்கள் அர்ஷித்தின் தந்தை மற்றும் ஏரியின் தீவுகளின் விவசாயியான குலாம் ரசூல் அக்கூனை (70) தொடர்புகொண்டார்கள். ரக்கீர்த் புதிய மறுகுடியமர்த்தத்தில் 2 ஆயிரம் சதுரஅடியில் வீடுகட்டுவதற்காக அவர்கள் கொடுத்த ரூ.1 லட்சத்தைப்பெற்றுக்கொண்டார். அந்த காலனி தால் ஏரியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் பீமினா பகுதியில் இருந்தது.
“எனது தந்தை அவர் செல்வதாகவும், நான் அவருடன் செல்லலாம் அல்லது நான் தங்கியிருந்த இடத்திலேயே இருக்கலாம் என்று கூறினார். அந்த நேரத்தில், 2014ம் ஆண்டு எங்களின் இன்னொரு மகன் அலி பிறந்துவிட்டான். நான் அவருடன் செல்ல ஒற்றுக்கொண்டேன். அவர் வீட்டின் பின்புறம் சிறிய இடம் கொடுத்தார் (ரக்கீர்த்தில்) அங்கு நாங்கள் எங்கள் நால்வருக்கும் சிறிய குடிசை அமைத்துக்கொண்டோம்“ என்று அர்ஷித் கூறினார்.
முறையான போக்குவரத்து வசதிகளோ அல்லது சாலை வசதிகளோ இல்லாத இந்த தொலைதூர பகுதிக்கு குடியேறிய 1,000 குடும்பங்களுடன் அக்கூன்களும் 2019ம் ஆண்டு வந்தனர். பள்ளி, மருத்துவமனை மற்றும் வேலைக்கு செல்வதற்கான எந்த வசதியும் இங்கு இல்லை. தண்ணீரும், மின்சாரமும் மட்டும் உள்ளது. “முதலில் நாங்கள் 4,600 குடியிருப்புகளை உருவாக்கினோம். இதுவரை 2,280 குடும்பத்தினருக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது“ என்று ஆணையத்தின் துணைத்தலைவர் துபாயில் மேட்டோ கூறுகிறார்.
தினக்கூலி வேலை செய்வதற்கோ அல்லது தேடுவதற்கோ அர்ஷித் ரக்கீர்த்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொழிலாளர் நக்காவிற்கு செல்ல வேண்டும். “நிறைய பேர் காலை 7 மணிக்கு வருவார்கள். மதியம் வரை வேலை ஏதாவது கிடைக்கிறதா என்று காத்திருப்பார்கள். எனக்கு வழக்கமாக கட்டுமானப்பணி நடைபெறும் இடங்களில் கற்களை அகற்றும் வேலை கிடைக்கும். ஆனால், இந்த வேலை மாதத்தில் 12 முதல் 15 நாட்கள் மட்டுமே கிடைக்கும். அதற்கு கூலியாக தினமும் ரூ.500 கிடைக்கும்“ என்று அவர் கூறுகிறார். அவருக்கு தால் ஏரி அருகில் இருந்தபோது கிடைத்த வருமானத்தைவிட இதை மிகமிகக் குறைவாகும்.
“வேலை இல்லாதபோது நாங்கள் எங்கள் சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்து செலவு செய்துகொள்வோம். எங்களிடம் பணம் இல்லாதபோது, நாங்கள் மோஷினை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல முடியாது“ என்று அர்ஷித் கூறுகிறார்.
ரக்கீர்த்தில் ஒரே ஒரு துணை சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது. சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் குறித்த பரிசோதனை, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை போன்றவை மட்டுமே செய்யப்படுவதாக ஸ்ரீநகர் பட்டமாலு பகுதியின் மண்டல மருத்துவ அலுவலர் டாக்டர் சமீனா ஜேன் கூறுகிறார். அங்குதான் அந்த மறுகுடியமர்த்தப்பட்ட காலனியும் உள்ளது.
ஒரு சுகாதார நிலையமும், ஒரு மருத்துவமனையும் ரக்கீர்த்தில் கட்டப்பட்டுள்ளது. “கட்டிட பணிகள் முடிந்துவிட்டது, விரைவில் அது இயங்க துவங்கும்“ என்று துபாயில் மேட்டோ கூறுகிறார். தற்போது அங்குள்ள துணை சுகாதார நிலையத்தில் ஒரு சிறிய சிகிச்சையகம் மட்டுமே செயல்படுகிறது. ஒரு நாளில் சில மணி நேரங்கள் இங்கு மருத்துவர் வருகிறார். 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பந்த்தா சவுக்கில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத்தான் அவசரசிகிச்சைக்கு இங்குள்ளவர்கள் இதுவரை சென்று வருகிறார்கள் அல்லது அக்கூன் குடும்பத்தினரைப்போல் சவுராவில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லவேண்டும்.
முபீனாவின் உடல் நலனும் இந்த காலனிக்கு வந்தது முதல் பாதிப்படையத் துவங்கிவிட்டது. அவருக்கு அடிக்கடி படபடப்பு ஏற்படுகிறது. “எனது குழந்தை ஆரோக்கியமின்றி உள்ளது. அதனாலும் நான் அதிக பிரச்னைகளை சந்திக்கின்றேன்“ என்று அவர் கூறுகிறார். “அவரது கை, கால், மூளை என எதுவும் இயங்காது. அவரை காலை முதல் மாலை வரை நான் மடியில் வைத்து காக்க வேண்டும். இதனால் எனக்கு உடல் வலி ஏற்படுகிறது. அவனை நினைத்து கவலைப்பட்டும், அவனை பராமரிப்பதாலும் எனக்கு உடல் நிலை பாதிக்கப்படுகிறது. நான் மருத்துவமனைக்குச் சென்றால், மருத்துவர்கள் என்னை பரிசோதிக்கொள்ளவும், சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் கூறுவார்கள். எனக்கு 10 ரூபாய் கூட வருமானம் இல்லாதபோது என்னால் எப்படி என் சிகிச்சைக்கு செலவழிக்க முடியும்“ என்று அவர் கேட்கிறார்.
அவர் மகனுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் மாத்திரைகளுக்கு ரூ.700 செலவாகிறது. அவையும் 10 நாட்களில் தீர்ந்துவிடும். அவரை மாதமொரு முறையேனும், காய்ச்சல், வயிற்றுப்புண் மற்றும் தோலில் ஏற்படும் கட்டிகளுக்காக அழைத்துச் செல்ல வேண்டும். ஜம்மு காஷ்மீரின் கட்டிட மற்றும் மற்ற கட்டுமானப்பணிகள் நல ஆணையத்தின் தொழிலாளர்கள் அட்டைக்கு சிகிச்சை இலவசம். அதன் மூலம் அர்ஷித்தை சார்ந்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். அதற்கும் அர்ஷித் ஆண்டுக்கு ஒரு தொகையை செலுத்த வேண்டும். அதை புதுப்பிக்க 90 நாட்கள் பணி செய்த சான்றிதழும் சமர்பிக்க வேண்டும். அர்ஷித்தால் இவை அனைத்தையும் வழக்கமாக செய்துகொண்டிருக்க முடியவில்லை.
“மோஷினால் நடக்க முடியாது, பள்ளி செல்லவோ, விளையாடவோ அல்லது மற்ற குழந்தைகள் செய்வதோ போலவோ வேறு செயல்கள் எதுவும் செய்ய முடியாது“ என்று ஜி.பி.பான்ட் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் முடாசிர் ராத்தேர் கூறுகிறார். மருத்துவர்களால் இப்போது, தொற்று ஏற்படாமல் இருக்க, வலிப்பு வருவதை தடுக்க மற்றும் மற்ற உடல் உபாதைகளிலிருந்து காப்பதற்கு மருந்துகள் மட்டுமே வழங்க முடியும். உடலை கொஞ்சம் இயக்குவதற்கு இயன்முறை சிகிச்சை ஆகியவையும் அவருக்கு வழங்கப்படுகிறது. “மூளை முடக்குவாதம் என்பது குணப்படுத்த முடியாத நரம்பியல் கோளாறு“ என்று மருத்துவர் அசியா உன்ஜீம் கூறுகிறார். ஸ்ரீநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவர். “குழந்தை பிறந்தவுடன் ஏற்படும் மஞ்சள் காமாலை நோய்க்கு முறையாக சிகிச்சையளிக்காவிட்டால், இந்த நிலை ஏற்படும். அது மூளை சேதம், மனநலக்குறைபாடு, கை-கால் இயக்கமுடியாமை ஆகியவற்றை ஏற்படுத்தும்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
வேலை கிடக்க திண்டாட்டம், மருத்துவர்களிடம் குழந்தையை அழைத்துச்செல்ல வேண்டும் என முபீனாவும், அர்ஷித்தும் அவர்களின் பெரும்பாலான நேரம் மற்றும் பணத்தை மோஷின் மற்றும் அவர்களின் இளைய மகளை பார்த்துக்கொள்வதற்கே செலவழித்துவிட்டனர். “அம்மா எப்போதும் அண்ணாவை மடியிலேயே வைத்திருக்கிறார். என்னை இப்படி தூக்கிக்கொண்டதில்லை“ என்று 7 வயதான அலி குற்றஞ்சாட்டுகிறார். அவரால் அவர் அண்ணனுடன் சேர்ந்து விளையாட முடிவதில்லை. ஏனெனில் “அவர் பேச மாட்டார், விளையாட மாட்டார். நான் சிறியவன் என்பதால் என்னால் அவருக்கு உதவவும் முடியாது“ என்று அவர் கூறுகிறார்.
அலி பள்ளி செல்லவில்லை. “என் தந்தையிடம் பணம் இல்லை, என்னால் எப்படி பள்ளி செல்ல முடியும்?“ என்று அவர் கேட்கிறார். ரக்கீர்த்தில் பள்ளியும் இல்லை. ஏரி மற்றும் தண்ணீர் வழி வளர்ச்சி ஆணையம் கட்டித்தருகிறோம் என்று கூறிய ஒன்றும் முடிவடையாமல் உள்ளது. அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் பீமினா அரசுப்பள்ளி உள்ளது. அது பெரிய குழந்தைகளுக்கான பள்ளியாகும்.
“எங்களால் இந்த இடத்தில் நீண்ட நாட்கள் வாழ முடியாது என்பது ரக்கீர்துக்கு குடிபெயர்ந்த 6 மாதங்களிலே தெரிந்துவிட்டது. இங்குள்ள சூழல் உண்மையிலேயே மிகவும் மோசமாக உள்ளது. மோஷினை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதற்கு போக்குவரத்து வசதி கூட இல்லை. எங்களிடம் அதற்கு பணமும் இல்லை. நாங்கள் பெரிய பிரச்னைகளை சந்தித்துக்கொண்டிருக்கிறோம்“ என்று முபீனா கூறுகிறார்.
“இங்கு வேலை ஒன்றும் இல்லை, நான் வேலையை எதிர்பார்ப்பதா அல்லது கடன் வாங்கி குடும்பத்தை காப்பாற்றுவதா? எங்களுக்கு வேறு வழிகள் இல்லை“ என்று அர்ஷித் கூறுகிறார்.
தமிழில் : பிரியதர்சினி . R.