உணவு இலவசமாகக் கிடைக்காது.
அசாமின் பிரம்மபுத்திராவுக்கு நடுவே அமைந்துள்ள மஜுலி ஆற்றுத்தீவின் படகுத்துறையான கமலாபரியின் உணவகங்களை மேயும் அதிர்ஷ்டக்கார பசுவாக இருந்தால் உங்களுக்கு ஒருவேளை கிடைக்கலாம்.
முக்தா ஹசாரிகாவுக்கு இது நன்றாகத் தெரியும். நம்முடன் பேசிக் கொண்டிருக்கையில் கடைக்கு வெளியே கலகலத்து குதிக்கும் சத்தம் கேட்டதும் சட்டென அவர் பேச்சை நிறுத்துகிறார். ஒரு பசு தனக்கான உணவை கடையில் தேடிக் கொண்டிருந்தது.
அவர் பசுவை விரட்டிவிட்டு, திரும்பி சிரித்தபடி, “என்னுடைய உணவகத்தை ஒரு நிமிடம் கூட நான் விட்டு வர முடியாது. பக்கத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் பசுக்கள் புகுந்து நாசமாக்கிவிடும்,” என்கிறார்.
10 பேர் அமரக் கூடிய உணவகத்தில் முக்தாவுக்கு மூன்று வேலை. சமையற்காரர், உணவளிப்பவர் மற்றும் உரிமையாளர் ஆகிய மூன்றுமாக அவரே இருக்கிறார். அவரின் பெயர் சரியாகத்தான் கடைக்கு சூட்டப்பட்டிருக்கிறது - ஹோட்டல் ஹசாரிகா.
ஆறு வருடங்களாக நடக்கும் ஹோட்டல் ஹசாரிகா மட்டும்தான் 27 வயது முக்தாவுக்கு சொல்லிக் கொள்ளவென இருக்கும் ஒரே விஷயம். பொழுதுபோக்கு உலகத்தை பொறுத்தவரை அவர் நடிகராகவும் பாடகராகவும் நடனமாடுபவராகவும் இருக்கிறார். போலவே மஜுலி மக்கள் விசேஷங்களின்போது நன்றாக தோன்றுவதை உறுதிச்செய்வதற்கான ஒப்பனைக் கலைஞராகவும் அவர் இருக்கிறார்.
அதைப் பற்றி நாம் சற்று நேரத்தில் பார்க்கவிருக்கிறோம். அதற்கு முன் சாப்பிட வந்திருப்போருக்கு உணவளிக்க வேண்டும்.
பிரஷர் குக்கர் சத்தம் எழுப்புகிறது. மூடியை திறந்து விட்டு, கலக்குகிறார் முக்தா. வெள்ளைச் சுண்டல் பருப்புக் குழம்பின் வாசனை காற்றில் மிதக்கிறது. பருப்பைக் கிண்டிக்கொண்டு வேக வேகமாக ரொட்டிகளையும் செய்கிறார் அவர். படகுத்துறைக்கு வருவோருக்காக 150க்கும் மேற்பட்ட ரொட்டிகளை அவர் செய்கிறார்.
சில நிமிடங்களில் இரண்டு தட்டுகள் எங்கள் முன் வைக்கப்பட்டன. ரொட்டிகளும் ஆம்லெட்டும் பருப்பும் வெங்காயத் துண்டும் புதினா மற்றும் தேங்காய் சட்னிகளும் இருந்தன. இந்த ருசியான உணவு இருவருக்கு 90 ரூபாய் ஆகிறது.
சற்று வலியுறுத்திக் கேட்டபிறகு, கூச்சம் நிறைந்த முக்தா ஒப்புக் கொள்கிறார். “நாளை மாலை ஆறு மணிக்கு வாருங்கள். எப்படி செய்வதென நான் காட்டுகிறேன்.”
*****
மஜுலியின் கொராஹொலா கிராமத்திலுள்ள முக்தாவின் வீட்டை அடைந்தபோது பலர் அங்கு இருந்தனர். அண்டை வீட்டுவாசியும் உற்ற நண்பருமான 19 வயது ருமி தாஸை ஒப்பனைக் கலைஞர் எப்படி மாற்றப்போகிறார் என்பதைக் காண உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார் காண ஆவலுடன் கூடியிருந்தனர். மஜுலியில் இருக்கும் இரண்டு அல்லது மூன்று ஒப்பனைக் கலைஞர்களில் முக்தாவும் ஒருவர்.
ஒரு பையில் இருந்து ஒப்பனைப் பொருட்களை எடுத்துத் தொடங்குகிறார் முக்தா. “இந்தப் பொருட்கள் எல்லாவற்றையும் ஜோர்ஹட்டிலிருந்து (படகில் 1.5 மணி நேர தூரம்) வாங்கினேன்,” என்கிறார் அவர் முகப்பூச்சு பாட்டில்கள், ப்ரஷ்கள், க்ரீம்கள், இமை வண்ணங்கள் போன்றவற்றை படுக்கையில் வைத்தபடி.
இன்று வெறும் ஒப்பனை மட்டும் நாம் பார்க்கப் போவதில்லை, மொத்தமாக அலங்காரத்தையும் பார்க்கவிருக்கிறோம். ருமியை உடை மாற்றி வரச் சொல்கிறார் முக்தா. சில நிமிடங்களில் அந்த இளம்பெண் பாரம்பரிய அசாமியப் புடவையில் வருகிறார். அமர்கிறார். வளைந்த குழல் பல்பை போட்டுவிட்டு முக்தா தன் மாயாஜாலத்தைத் தொடங்குகிறார்.
ப்ரைமரை (ஒப்பனை போடத் தொடங்குவதற்கு முன் சருமத்தை மிருதுவாக்குவதற்காக பூசப்படும் க்ரீம்) ருமியின் முகத்தில் பூசிக் கொண்டே அவர், “எனக்கு 9 வயதாக இருக்கும்போது பவோனா (மதச் செய்திகள் கொண்ட பாரம்பரிய பொழுதுபோக்கு வடிவம்) பார்க்கத் தொடங்கினேன். நடிகர்கள் போட்டிருந்த ஒப்பனை எனக்குப் பிடிக்கத் தொடங்கியது,” என்கிறார்.
ஒப்பனை உலகின் மீதான ஈர்ப்பு அப்படிதான் அவருக்குத் தொடங்கியது. மஜுலியின் திருவிழாவின்போதும் நாடகத்தின்போதும் அவர் ஒப்பனை போட்டு விடுவார்.
தொற்றுக்காலத்துக்கு முன்பு, தன் திறமையை தொழில்ரீதியான சில உதவிகளோடு மெருகேற்றிக் கொண்டார். “அசாமிய தொலைக்காட்சி தொடர்களிலும் படங்களிலும் குவகாத்தியில் பணிபுரியும் ஒப்பனைக் கலைஞர் பூஜா தத்தாவை நான் கம்லாபாடி படகுத்துறையில் சந்தித்தேன். நீங்கள் பேசத் தொடங்கியது போல அவரும் என்னிடம் உரையாடத் தொடங்கினார்,” என்னும் அவர், தனது ஆர்வத்தைப் பார்த்து அவர் உதவ முன் வந்ததாகக் கூறுகிறார்.
ருமியின் முகத்தில் அடிப்படைப் பூச்சை மெலிதாக பூசியபடி அவர் தொடர்ந்து பேசினார். “ஒப்பனையில் நான் ஆர்வமாக இருப்பதை பூஜா தெரிந்து கொண்டார். கோரமூர் கல்லூரியில் ஒப்பனை குறித்து அவர் நடத்தும் வகுப்புக்கு வந்து கற்றுக் கொள்ளும்படி கூறினார்,” என்கிறார் அவர். “10 நாட்கள் கொண்ட வகுப்பு அது. ஆனால் நான் மூன்று நாட்கள் மட்டுமே சென்றேன். உணவகத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்ததால் அதற்கு மேல் என்னால் செல்ல முடியவில்லை. ஆனால் அவரிடமிருந்து முடி மற்றும் ஒப்பனை குறித்து நிறைய கற்றுக் கொண்டேன்.”
ஒப்பனையின் மிகக் கடினமான பகுதியான கண்களுக்கு பூச்சு போட தற்போது தொடங்குகிறார் முக்தா.
வெளிர்மஞ்சள் நிறப் பூச்சை கண்ணுக்குக் கீழ் போட்டுக் கொண்டே, பவோனா போன்ற விழாக்களில் ஆடவும் நடிக்கவும் பாடவும் அவர் செய்வாரெனக் கூறுகிறார். அவற்றில் ஒன்றை ருமிக்கு ஒப்பனை போட்டுக் கொண்டே அவர் செய்யத் தொடங்குகிறார். பாடல் பாடத் துவங்குகிறார். காதலருக்காக காத்திருப்பவரை பற்றிய ரதி ரதி என்கிற அசாமியப் பாடலை அற்புதமாக பாடுகிறார். ஒரு யூட்யூப் சேனலும் ஆயிரக்கணக்கான ஆன்லைன் ரசிகர்களும் இல்லையே என நாங்கள் எண்ணினோம்.
கடந்த பத்தாண்டுகளில் தன்னார்வத்தில் உருவான ஒப்பனைக் கலைஞர்கள் பலரை யூட்யூப், இன்ஸ்டாக்ராம், டிக்டாக் போன்ற தளங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆயிரக்கணக்கான பேரை இத்தளங்கள் பிரபலமடைய வைத்திருக்கிறது. பார்வையாளர்களும் நிறத்தை சரி செய்வது போன்ற பல ஒப்பனை உத்திகளை கற்றுக் கொண்டனர். இத்தகைய காணொளிகள் பலவற்றில் கலைஞர்கள் பாடி, படக்காட்சிகளை நடித்துக் காட்டியபடி ஒப்பனை செய்யும் பாணியும் உண்டு.
“அவர் சிறந்த நடிகர். அவர் நடிப்பதை பார்க்க எங்களுக்குப் பிடிக்கும்,” என்கிறார் முக்தாவின் நெருக்கமான நண்பரான 19 வயது பனாமலி தாஸ். ருமியின் உருமாற்றத்தைக் காண அவரும் அறையில் இருக்கிறார். “இயற்கையாகவே திறமை பெற்றவர் அவர். ஒத்திகை அதிகம் பார்க்கக் கூட மாட்டார். இயல்பாகவே அது அவருக்கு வந்துவிடும்.”
திரைச்சீலைக்கு பின்னிருந்து 50 வயதுகளின் நடுவே இருக்கும் ஒரு முதியப் பெண் நம்மைப் பார்த்து புன்னகைக்கிறார். அவரை தாய் என முக்தா அறிமுகப்படுத்துகிறார். “என் அம்மா பிரேமா ஹசாரிகாவும் என் அப்பா பாய் ஹசாரிகாவும் எனக்கு பெரும் ஆதரவைக் கொடுப்பவர்கள். நான் செய்யும் எதையும் அவர்கள் தடுத்ததில்லை. எப்போதுமே ஊக்கம் தந்திருக்கிறார்கள்.”
அவருக்கு இந்த வேலை தொடர்ந்து கிடைக்குமா என்றும் இந்த வருமானம் உதவுகிறதா என்றும் கேட்டோம். “திருமணத்துக்கான அலங்காரம் 10,000 ரூபாய். நிலையான வேலைகள் கொண்டோரிடமிருந்து 10,000 ரூபாய் பெறுவேன். வருடத்துக்கு ஒரு முறை அத்தகைய வாடிக்கையாளர் கிடைப்பார்,” என்கிறார் அவர். “அதிகப் பணம் கொடுக்க முடியாதவர்களிடம் எவ்வளவு கொடுக்க முடியுமோ அதைக் கொடுக்குமாறு சொல்வேன்.” எளிய ஒப்பனைக்கு முக்தா 2000 ரூபாய் கட்டணம் பெறுகிறார். “பூஜைகள், திருமணங்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கு இத்தகைய ஒப்பனை போடுவார்கள்.”
சில போலி இமைகள் வைத்து, முடியைச் சுற்றி ஒரு கொண்டை போட்டு முகத்தில் சில சுருள்கள் போட்டு ருமியின் ‘ஒப்பனை’யை முடிக்கிறார் முக்தா. ஒப்பனை முடியும்போது ருமி தெய்வீகத்தன்மையில் இருந்தார். “அற்புதமாக இருக்கிறது. பல முறை நான் ஒப்பனை செய்திருக்கிறேன்,” என்கிறார் ருமி கூச்சத்துடன்.
நாங்கள் கிளம்புகையில் முக்தாவின் தந்தையான 56 வயது பாய் ஹசாரிகா பெரிய அறையில் பூனைக்கு அருகே அமர்ந்திருப்பதை பார்த்தோம். ருமியின் தோற்றம் மற்றும் முக்தாவின் திறமை பற்றி அவர் என்ன நினைக்கிறார் எனக் கேட்டபோது, “என் மகனைப் பற்றியும் அவன் செய்யும் எல்லாவற்றையும் பற்றியும் எனக்கு பெருமைதான்,” என்கிறார்.
*****
கமலாபாரி படகுத்துறையிலுள்ள உணவகத்தில் சில நாட்களுக்கு பிறகு ஓர் உணவு வேளையின்போது தன் வழக்கமான நாளை, பரிச்சயமானதால் ஏற்பட்ட இனிமையான குரலுடன் நமக்கு விவரிக்கிறார் முக்தா.
ஹோட்டல் ஹசாரிகா நடத்துவதற்கான வேலை படகுத்துறைக்கு அவர் வருவதற்கு முன்னமே தொடங்கிவிடும். மஜூலியிலிருந்து பிரம்மபுத்திராவில் சென்று வரும் ஆயிரக்கணக்கான பயணிகளை அன்றாடம் காணும் பகுதி அது. அன்றாடம் அதிகாலை 5.30 மணிக்கு இரண்டு லிட்டர் குடிநீர், பருப்பு, கோதுமை மாவு, சர்க்கரை, பால் மற்றும் முட்டைகள் ஆகியவற்றை பைக்கில் எடுத்துக் கொண்டு, படகுத்துறையிலிருந்து 10 நிமிட தூரத்தில் இருக்கும் அவரது கிராமமான கொராஹொலாவிலிருந்து கிளம்புவார். ஏழு வருடங்களாக இதுதான் அவருக்கு வழக்கம். அதிகாலையில் தொடங்கி மாலை 4.30 மணி வரை அவரது வேலை தொடரும்.
ஹோட்டல் ஹசாரிகாவின் உணவில் பயன்படுத்தப்படும் பொருட்களில் பெரும்பான்மை குடும்பத்துக்கு சொந்தமான மூன்று பிகா (கிட்டத்தட்ட ஒரு ஏக்கர்) நிலத்தில் விளைவிக்கப்படுகிறது. “அரிசி, தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டு, கடுகு, பூசணி, முட்டைக்கோஸ், மிளகாய்கள் ஆகியவற்றை நாங்கள் விளைவிக்கிறோம்,” என்கிறார் முக்தா. “பால் தேநீர் விரும்புபவர்கள் இங்கு வருவார்கள்,” என்கிறார் அவர் பெருமையுடன். நிலத்தில் இருக்கும் 10 மாடுகளிடமிருந்து பால் கிடைக்கிறது.
38 வயது ரோகித் புக்கான் படகுத்துறையில் டிக்கெட் விற்கிறார். விவசாயியும் முக்தா கடையின் வாடிக்கையாளருமான அவர் ஹோட்டல் ஹசாரிகாவுக்கு சான்று தருகிறார்: “இது நல்ல கடை. சுத்தமாக இருக்கும்.”
“‘முக்தா, நீ நன்றாக சமைக்கிறாய்' என மக்கள் சொல்வார்கள். அந்த வகையில் எனக்கு கடையை நடத்துவது சந்தோஷத்தைத் தருகிறது,” என்கிறார் ஹோட்டல் ஹசாரிகாவின் பெருமைமிகு உரிமையாளர்.
ஆனால் தனக்கான வாழ்க்கையாக முக்தா கற்பனை செய்தது இதை அல்ல. “மஜுலி கல்லூரியில் சமூகவியல் பட்டப்படிப்பை நான் முடித்தபோது, அரசாங்க வேலை பெற விரும்பினேன். ஆனால் எனக்குக் கிடைக்கவில்லை. எனவே அதற்கு பதிலாக ஹோட்டல் ஹசாரிகாவைத் தொடங்கினேன்,” என்கிறார் அவர் நமக்கு தேநீர் தயாரித்தபடி. “தொடக்கத்தில் என் நண்பர்கள் கடைக்கு வந்தபோது நான் வெட்கப்பட்டேன். அவர்கள் அரசாங்க வேலைகளில் இருந்தனர். இங்கு நானோ வெறும் சமையற்காரனாக இருந்தேன்,” என்கிறார் அவர். “ஒப்பனை செய்யும் போது நான் கூச்சப்படுவதில்லை. சமையல் செய்யும்போதுதான் கூச்சப்படுகிறேன். ஒப்பனையின்போது அல்ல.”
குவகாத்தி போன்ற பெரிய நகரத்தில் இத்தகைய திறமையைக் கொண்டு வாய்ப்புகள் தேடுவதில் ஏன் கவனம் செலுத்தவில்லை? “என்னால் முடியாது. இங்கு மஜுலியில் எனக்கு பொறுப்புகள் இருக்கின்றன,” என்கிறார் அவர். சற்று தாமதித்து, “ஏன் நான் செல்ல வேண்டும்? இங்கிருந்து மஜுலி பெண்களை அழகாக்கவே விரும்புகிறேன்,” என்கிறார்.
அரசாங்க வேலை அவருக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் இன்று அவர் சந்தோஷமாக இருக்கிறார். “உலகம் முழுக்க பயணித்து பார்க்க ஆசை இருக்கிறது. ஆனால் மஜுலியை விட்டு செல்ல மாட்டேன். இது மிகவும் அழகான இடம்.”
தமிழில் : ராஜசங்கீதன்