விக்ரம் அந்த இரவு வீடு திரும்பாத போது, தாய் பிரியா கவலைப்படவில்லை. காமாத்திப்புராவுக்கு பக்கத்து தெருவில் இருக்கும் ஒரு வீட்டில்தான் மகன் வேலை பார்த்தான். வழக்கமாக அதிகாலை 2 மணிக்கு வந்துவிடுவான். சில நேரங்களில் அங்கேயே தூங்கிவிட்டு அடுத்த நாள் காலை வருவான்.

அவனை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றார். பலனில்லை. அடுத்த நாள் ஆகஸ்ட் 8ம் தேதி மாலையும் மகன் திரும்பாத போதுதான் பிரியா பதட்டமடைந்தார். மத்திய மும்பையில் இருக்கும் நாக்பதா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அடுத்த நாள் காலை, காவல்துறை சிசிடிவி காட்சிகளை பரிசோதித்தது. “மத்திய மும்பையில் ஒரு மாலுக்கு அருகே அவன் சென்றிருக்கிறான்,” என்கிறார் பிரியா.

அவரின் பதட்டம் அதிகரித்தது. “யாராவது அவனை கடத்தியிருப்பார்களா? அவனுக்கு இந்த புது நோய் (கோவிட்) வந்துவிட்டதா?” என அவர் யோசித்தார். “இந்த பகுதியில் யாருக்கென்ன நடந்தாலும் யாரும் கவலைப்பட மாட்டார்கள்,” என்கிறார் அவர்.

ஆனால் முன்பே திட்டமிட்டிருந்த பயணத்தில் விக்ரம் இருந்தான். அவனே சொந்தமாக திட்டமிட்டிருந்த பயணம். பாலியல் தொழில் செய்யும் அவனது 30 வயது தாய் ஊரடங்கு காலத்தில் வேலை பார்க்க முடியவில்லை. அதனால் ஏற்பட்ட பணமுடை, அதிகரித்த கடன் எல்லாவற்றையும் அவன் பார்த்தான். அவனுடைய ஒன்பது வயது தங்கை ரிதி மதன்புராவிலிருந்து விடுதியிலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டாள். தொண்டு நிறுவனங்கள் கொடுத்த உணவுகளை வைத்து குடும்பம் வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருந்தது. (இந்த கட்டுரையில் இருக்கும் பெயர்கள் யாவும் மாற்றப்பட்டவை.)

ஊரடங்கினால் விக்ரம் சென்று கொண்டிருந்த பள்ளிக்கூடமும் அடைக்கப்பட்டுவிட்டது. ஆகவே 15 வயது விக்ரம் கிடைத்த வேலைகளை செய்யத் தொடங்கினான்.

நாளொன்றுக்கு 60லிருந்து 80 ரூபாய் வரை சமையல் எண்ணெய் வாங்க குடும்பத்துக்கு தேவைப்படுகிறது. காமதிப்புராவில் இருக்கும் சிறிய அறைக்கு வாடகை கட்ட திணறுகிறார்கள். மருந்துகள் வாங்கவும் கடன்களை அடைக்கவும் அவர்களுக்கு பணம் தேவை. மேலும் மேலும் வாடிக்கையாளர்களிடமும் உள்ளூர்வாசிகளிடமும் பிரியா  கடன்கள் வாங்கினார். சில வருடங்களில் ஒருவரிடம் வாங்கிய கடன் மட்டும் வட்டியுடன் 62000 வரை வளர்ந்து நின்றது. அரைகுறையாகத்தான் அவரால் கடன்களை அடைக்க முடிந்தது. ஆறு மாதங்களுக்கு கட்ட வேண்டிய வாடகையும் (வீட்டுக்கும் பாலியல் தொழில் விடுதி உரிமையாளருக்கும்) உரிமையாளரிடம் வாங்கிய 7000 ரூபாய் கடனும் சேர்ந்த தொகை.

PHOTO • Aakanksha

ஆகஸ்ட் 7ம் தேதி விக்ரமும் பிரியாவும் சண்டை போட்டனர். வேலை முடித்த பிறகு விக்ரம் வீட்டு உரிமையாளர் அறைகளில் தூங்குவது பிரியாவுக்கு பிடிக்கவில்லை

பாலியல் தொழில் செய்யும் நாட்களை சார்ந்து அவர் வருமானம் ஈட்டுகிறார். ஊரடங்குக்கு முன் வரை 500லிருந்து 1000 ரூபாய் வரை ஒரு நாளுக்கு சம்பாதித்தார். “தொடர்ந்து சீராக வருமானம் கிடைத்ததில்லை. ரிதி ஹாஸ்டல் விடுதியிலிருந்து வந்தாலோ எனக்கு உடல்நலம் குன்றினாலோ நான் விடுப்பு எடுத்துவிடுவேன்,” என்கிறார் பிரியா. மேலும் தொடர் வயிற்று வலி மற்றும் அடிவயிற்று நோய் ஆகியவற்றால் அவரால் தொடர்ந்து வேலை செய்ய முடிவதில்லை.

ஊரடங்கு தொடங்கிய சில நாட்களில் காமாத்திப்புரா தெருமுனையில் விக்ரம் நிற்கத் தொடங்கினான். ஏதேனும் ஒப்பந்தக்காரர் வந்து கட்டுமான வேலைக்கு அழைத்துச் செல்வார் என காத்திருந்தான். சமயங்களில் அவன் தரையில் ஓடுகள் பதிக்கும் வேலை செய்தான். மூங்கில் சாரம் கட்டும் வேலைகள் செய்தான். லாரிகளில் லோடு இறக்கி ஏற்றும் வேலையும் பார்த்தான். வழக்கமாக 200 ரூபாய் வரை நாட்கூலி ஈட்டினான். அதிகபட்சமாக இரவுபகலாக வேலை பார்த்து 900 ரூபாய் கூலி பெற்றிருக்கிறான். இத்தகைய வேலைகள் ஓரிரு நாட்கள் மட்டுமே நீடித்தன.

பக்கத்து பகுதி தெருக்களில் குடைகளும் முகக்கவசங்களும் விற்க முயற்சித்தான். அருகே இருக்கும் நல் பஜாருக்கு நடந்து சென்று, ஈட்டிய வருமானம் கொண்டு, மொத்த வியாபாரத்தில் பொருட்களை வாங்கினான். ஒருவேளை பணம் குறைவாக இருந்தால் கடன்கொடுப்பவரிடமோ அம்மாவிடமோ கேட்பான். ஒருமுறை ஒரு கடைக்காரர் கமிஷன் அடிப்படையில் காது பொறிகளை (இசை கேட்க பயன்படும் கருவி) விற்றுத் தர கேட்டார். “ஆனால் என்னால் லாபம் ஈட்டமுடியவில்லை,” என்கிறார் விக்ரம்.

டாக்சி ஓட்டுநர்களுக்கும் தெருக்களில் அமர்ந்திருப்பவர்களுக்கும் டீ விற்க முயன்றான். “எதுவும் உதவாதபோது என் நண்பன் இந்த யோசனை கொடுத்தான். அவன் போட்டுக் கொடுக்கும் டீயை ஒரு ஃப்ளாஸ்க்கில் எடுத்துக் கொண்டு விற்க செல்வேன்.” ஒரு கோப்பை ஐந்து ரூபாய். அதில் 2 ரூபாய் அவனுக்கு லாபம் கிடைத்தது. ஒருநாளில் 60லிருந்து 100 ரூபாய் வரை லாபம் ஈட்டமுடிந்தது.

ஒரு மதுபானக்கடையிலிருந்து பியர் குடுவைகளையும் குட்கா புகையிலையும் கமாத்திப்புராவில் வசிப்பவர்களுக்கும் வருபவர்களுக்கும் விற்றான். ஊரடங்கு காலத்தில் இவற்றுக்கு அதிக தேவை இருந்தது. நல்ல அளவுக்கு லாபம் கிடைத்தது. ஆனால் போட்டி கடுமையாக இருந்தது. பல சிறுவர்களும் விற்க முயன்றதால் வருமானம் அவ்வப்போதுதான் கிட்டியது. விக்ரம் செய்யும் வேலையை அம்மா கண்டுபிடித்துவிடுவாரோ என்கிற பயமும் இருந்தது.

இறுதியில் விபச்சார விடுதி உரிமையாளருக்கு விக்ரம் வேலை பார்க்கத் தொடங்கினான். இடத்தை சுத்தப்படுத்துவது தொடங்கி அங்கு வாழும் பெண்களுக்கு எடுபிடி வேலைகள் வரை பல வேலைகள் செய்தான். இரண்டு நாட்களுக்கு 300 ரூபாய் சம்பாதித்தான். இந்த வேலையும் அவ்வப்போதுதான் வருமானம் ஈட்டிக் கொடுத்தது.

PHOTO • Courtesy: Vikram

ஊரடங்கு தொடங்கியதிலிருந்து டீ விற்பது, குடைகள் மற்றும் முகக்கவசங்கள் விற்பது, கட்டுமான தளங்களிலும் உணவகங்களிலும் வேலை செய்வது என பல வேலைகளை செய்தான் விக்ரம்

இவை அனைத்தையும் செய்ததால் ஊரடங்கு காலத்தில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்குள்ளான குழந்தை தொழிலாளர்கள் கூட்டத்தில் ஒருவரானார் விக்ரம். Covid-19 and Child Labour: A rime of crisis, a time to act  என்கிற ILO மற்றும் UNICEF அமைப்புகள் 2020ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை, கொரோனா காலத்தில் பெற்றோர் வேலை இழந்த அதிர்ச்சியில் குழந்தைகள் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உருவான நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் சேர்த்திருக்கிறது. ‘வேலை பார்ப்பதற்கான சட்டப்பூர்வ வயதுக்கும் கீழே இருக்கும் குழந்தைகள் முறைசாரா மற்றும் வீட்டு வேலைகளை செய்கின்றனர். பாதகமான வேலைச்சூழலையும் கடுமையான உழைப்புச் சுரண்டலையும்  அங்கு அவர்கள் சந்திக்கின்றனர்,’ என்கிறது அறிக்கை.

ஊரடங்கு நேரத்தில் பிரியாவும் வேலை தேடினார். ஆகஸ்ட் மாதத்தில் வீட்டு வேலை செய்யும் வாய்ப்பு கமாத்திப்புராவிலேயே கிடைத்தது. ஒருநாளைக்கு 50 ரூபாய் வருமானம் கிடைத்தது. ஆனால் அந்த வேலையும் ஒரு மாதத்துக்குதான் நீடித்தது.

பிறகுதான் ஆகஸ்ட் 7ம் தேதி பிரியாவுடனான விக்ரமின் சண்டை நேர்ந்தது. வேலை முடிந்த பிறகு விபச்சார விடுதி உரிமையாளரின் அறையில் விக்ரம் உறங்குவது பிரியாவுக்கு பிடிக்கவில்லை. மிக சமீபத்திலேயே ஒரு குழந்தைக்கு நேர்ந்த பாலியல் அச்சுறுத்தலால் பெரும் கோபத்தில் ஏற்கனவே பிரியா இருந்தார். ரித்தியை கூட சீக்கிரமாக ஹாஸ்டலுக்கு அனுப்பி விட விரும்பியிருந்தார் (பார்க்கவும் ‘‘ Everyone knows what happens here to girls’ ).

அன்று பிற்பகல், கிளம்பிவிடுவது என்கிற முடிவுக்கு விக்ரம் வந்தான். சில நாட்களாகவே அவன் திட்டமிட்டுக் கொண்டுதான் இருந்தான். அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்ப வேண்டும் என நினைத்தான். அந்த நாளில், “எனக்கு கோபம் வந்தது. சென்றுவிட தீர்மானித்தேன்.” என்கிறான். அகமதாபாத்தில் பல வேலைகள் கிடைக்கும் என ஒரு நண்பன் சொல்லி கேட்டிருந்தான்.

ஆகவே அவனுடைய ஜியோ செல்ஃபோன் மற்றும் ஒரு 100 ரூபாயோடு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி இரவு 7 மணிக்கு கிளம்பிவிட்டான். குஜராத்தை நோக்கிய பயணம்.

கையிலிருந்த பணத்தின் பாதிக்கு ஐந்து பாக்கெட் குட்கா தனக்கென வாங்கினான். ஒரு தம்ளர் பழச்சாறும் கொஞ்சம் உணவும் ஹஜி அலி அருகே வாங்கினான். அங்கிருந்து பிறகு நடக்கத் தொடங்கினான். வேறு வாகனங்களில் லிஃப்ட் கேட்டு பார்த்தான். கிடைக்கவில்லை. கையிலிருந்த கொஞ்ச நஞ்ச பணத்தில் ஒரு பேருந்தில் ஏறி குறைந்தளவு தூரத்தை கடந்தான். ஆகஸ்ட் 8ம் தேதி அதிகாலை 2 மணிக்கு சோர்வடைந்த 15 வயது சிறுவன் விரார் அருகே இருந்த உணவகத்துக்கு சென்று இரவை கழித்தான். கிட்டத்தட்ட 78 கிலோமிட்டர்கள் பயணித்திருந்தான்.

ஊரை விட்டு ஓடி வந்தானா என உணவக உரிமையாளர் கேட்டார். தான் ஒரு அநாதை என பொய் சொன்னான் விக்ரம். அகமதாபாத்தில் வேலை தேடிச் செல்வதாகவும் கூறினான். “கடை உரிமையாளர் வீட்டுக்கு திரும்பிப் போக சொல்லி அறிவுரை வழங்கினார். யாரும் எனக்கு வேலை கொடுக்க மாட்டார்கள் என அவர் கூறினார். கொரோனா நேரத்தில் அகமதாபாத்துக்கு செல்வது கடினம் என்றும் சொன்னார்.” அவர் விக்ரமுக்கு கொஞ்சம் டீயும் அவலும் கொடுத்து ஒரு 70 ரூபாய்யும் கொடுத்திருக்கிறார். “வீட்டுக்கு திரும்ப நான் விரும்பினேன். ஆனாலும் கொஞ்சம் சம்பாத்தியத்தோடு செல்ல வேண்டுமென விரும்பினேன்,” என்கிறான் விக்ரம்.

PHOTO • Aakanksha

‘என்னுடைய பல நண்பர்கள் (காமத்திப்புரா) பள்ளியை விட்டுவிட்டு வேலை பார்க்கத் தொடங்கினர்,’ என்கிறான் விக்ரம். ‘சம்பாதித்தால் பணம் சேமித்து வியாபாரம் தொடங்கலாம் என அவர்கள் நினைத்தனர்’

அவன் சிறிது தூரம் நடந்து ஒரு பெட்ரோல் நிலையத்துக்கு அருகே நிற்கும் ட்ரக்குகளை கண்டான். அவர்களிடம் லிஃப்ட் கேட்டான். இலவசமாக கூட்டிச் செல்ல யாரும் தயாராக இல்லை. “சில குடும்பங்கள் அமர்ந்திருந்த பேருந்துகள் இருந்தன. ஆனால் நான் மும்பையிலிருந்து (கோவிட் பாதிப்பு அதிகமாக இருந்த இடம்) வருவது தெரிந்ததும் யாரும் என்னை அனுமதிக்கவில்லை”. எல்லாரிடமும் மன்றாடிக் கேட்டான் விக்ரம். இறுதியில் ஒரு டெம்போ ஓட்டுநர் ஒப்புக் கொண்டார். “அவர் தனியாக இருந்தார். எனக்கு நோய் இருக்கிறதா என கேட்டார். இல்லையென சொன்னதும் என்னை ஏற்றிக் கொண்டார்.” வேலை கிடைப்பதில் இருக்கும் சிரமத்தை அவனுக்கு ஓட்டுநரும் சொன்னார். “அவர் வாபியின் வழியாக செல்வதால், என்னை அங்கே இறக்கிவிட ஒப்புக் கொண்டார்.”

மத்திய மும்பையிலிருந்து 185 கிலோமீட்டர் தொலைவில் இருந்த குஜராத்தின் வாபியை ஆகஸ்ட் 9ம் தேதி அதிகாலை 7 மணிக்கு அடைந்தான். அங்கிருந்து அகமதாபாத்துக்கு செல்வதே விக்ரமின் திட்டமாக இருந்தது. அன்று பிற்பகல் யாரோ ஒருவரின் தொலைபேசியிலிருந்து தாயை தொடர்பு கொண்டான். அவனுடைய செல்பேசியின் மின் சேமிப்பு காலியாகிவிட்டது. அழைப்பு கொள்வதற்கான பணமும் அவன் செல்பேசியில் இருக்கவில்லை. அவனுக்கேதும் பிரச்சினை இல்லை என்றும் வாபியில் இருப்பதாகவும் பிரியாவிடம் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

இவற்றுக்கிடையில் மும்பையின் நாக்பதா காவல்நிலையத்துக்கு அடிக்கடி சென்று கொண்டிருந்தார் பிரியா. “அஜாக்கிரதையாக இருந்ததாக காவலர்கள் என்னை திட்டினர். என் வேலையை பற்றி பேசினார்கள். விக்ரம் அவனாகவே சென்றதாக சொல்லி மீண்டும் அவனே திரும்பி விடுவான் என்றும் சொன்னார்கள்,” என அவர் நினைவுகூருகிறார்.

விக்ரமின் அழைப்பை தொடர்ந்து அவனை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றார் பிரியா. செல்பேசியின் உரிமையாளர் அழைப்பை பொருட்படுத்தவில்லை. “விக்ரமுடன் அவர் இல்லையென்றும் அவன் எங்கிருக்கிறான் என தெரியாது என்றும் சொன்னார். நெடுஞ்சாலையிலிருந்து ஒரு டீக்கடையில் அவர் விக்ரமை பார்த்து அழைப்புக்காக செல்பேசியை கொடுத்திருக்கிறார்.”

ஆகஸ்ட் 9ம் தேதி இரவை வாபியில் கழித்தான் விக்ரம். “என்னை விட மூத்த சிறுவன் ஒருவன் ஒரு சிறு உணவகத்தில் காவல் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் நான் அகமதாபாத் செல்ல விரும்புவதாகவும் தூங்குவதற்கு இடம் வேண்டுமென்றும் கூறினேன். இங்கேயே தங்கி வேலை பார் என சொல்லி உரிமையாளரிடம் பேசுவதாகவும் அவன் சொன்னான்.”

'I too ran away [from home] and now I am in this mud,' says Vikram's mother Priya, a sex worker. 'I want him to study'
PHOTO • Aakanksha

‘”நானும் ஓடிப் போனவள்தான். இப்போது இந்த சேற்றில் கிடக்கிறேன்’ என்கிறார் பாலியல் தொழிலாளியான பிரியா

முதல் அழைப்புக்கு பிறகு நான்கு நாட்கள் கடந்தது. ஆகஸ்ட் 13ம் தேதி அதிகாலை 3 மணிக்கு மீண்டும் தாயை தொடர்பு கொண்டான் விக்ரம். வாபியின் ஓர் உணவகத்தில் வேலை கிடைத்துவிட்டதாகவும் பாத்திரங்கள் கழுவுதல் மற்றும் உணவு கொடுக்கும் வேலை செய்வதாகவும் சொல்லி இருக்கிறான். காலையில் நக்பதா காவல் நிலையத்தில் தகவல் சொல்லியிருக்கிறார் பிரியா. அவரையே சென்று விக்ரமை அழைத்துக் கொள்ளுமாறு சொல்லியிருக்கின்றனர் காவலர்கள்.

அன்று மாலை, பிரியாவும் ரித்தியும் மத்திய மும்பையிலிருந்து வாபிக்கு ரயிலேறினர். அதற்காக மட்டும் விடுதி உரிமையாளரிடமும் உள்ளூர்க்காரர் ஒருவரிடமும் மொத்தமாக 2000 ரூபாய் கடன் வாங்கினார் பிரியா. ரயில் டிக்கெட் ஒரு நபருக்கு 400 ரூபாய்.

மகனை திரும்பக் கொண்டு வந்து விட வேண்டுமென்ற முடிவில் இருந்தார் பிரியா. அவரைப் போன்ற இலக்கற்ற வாழ்க்கை அவனுக்கு இருக்கக் கூடாது என விரும்பினார். ”நானும் ஓடிப் போனவள்தான். இப்போது இந்த சேற்றில் கிடக்கிறேன். அவன் படிக்க நான் விரும்புகிறேன்,” என்கிறார் பிரியா. விக்ரமின் வயதில் அவரும் மகாராஷ்ட்ரா வீட்டிலிருந்து ஓடி வந்தவர்தான்.

ஆலையில் வேலை பார்த்த ஒரு குடிகார தந்தையிடம் இருந்து ஓடி வந்தவர் அவர். அவரை பற்றி தந்தை கவலைப்பட்டதில்லை. அவருக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே தாய் இறந்துவிட்டார். உறவினர்கள் அவரை அடித்திருக்கின்றனர். 12 வயதாகும்போது திருமணம் முடித்து வைக்க முயன்றிருக்கின்றனர். ஓர் ஆண் உறவினரால் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறார். “மும்பை சென்றால் வேலை கிடைக்குமென சொன்னார்கள்,” என்கிறார் அவர்.

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இறங்கிய பிறகு மதன்புராவில் வீட்டுவேலை அவருக்கு கிடைத்தது. வீட்டிலேயே தங்கிக் கொண்டார். மாதத்துக்கு 400 ரூபாய் வருமானம். கொஞ்ச காலத்துக்கு பிறகு காய்கறிக் கடையில் வேலை பார்த்த ஒருவருடன் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து சில மாதங்களுக்கு வாழ்ந்திருக்கிறார். பிறகு அந்த ஆண் காணாமல் போயிருக்கிறார். தெருக்களில் வாழ ஆரம்பித்தார். கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்திருக்கிறார். “பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருந்தேன்.” விக்ரம் 2005ம் ஆண்டில் பிறந்த பிறகும் நடைபாதையில்தான் அவர் வாழ்ந்திருக்கிறார். “ஓரிரவு ஒரு திருநங்கையை சந்தித்தேன். அவர் எனக்கு உணவு கொடுத்தார். சாப்பாட்டுக்கு தவிக்கும் ஓர் குழந்தை இருப்பதை விளக்கி நானும் தொழிலில் சேர வேண்டும் என்றார்.” பெரும் தயக்கத்துக்கு பிறகு பிரியா சம்மதித்திருக்கிறார்.

சமயங்களில் பாலியல் தொழிலுக்காக காமத்திப்புரா பெண்கள் சிலருடன் சேர்ந்து கர்நாடகாவுக்கு சென்றிருக்கிறார். அத்தகைய பயணம் ஒன்றில் அவரை ஒரு மனிதருக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். “அவர் என்னை திருமணம் செய்து கொள்வார் என்றும் எனக்கும் என் மகனுக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்றும் சொன்னார்கள்.” தனிப்பட்ட முறையில் திருமணம் செய்து கொண்டார்கள். 6-7 மாதங்களுக்கு அவருடன் வாழ்ந்திருக்கிறார் பிரியா. ஆனால் அவரின் குடும்பம் பிரியாவை வெளியேற சொல்லியிருக்கிறது. “அச்சமயத்தில் ரித்தி பிறக்கவிருந்தாள்,” என்னும் பிரியா அந்த மனிதர் பொய்யான பெயரை பயன்படுத்துகிறார் என்பதையும் ஏற்கனவே திருமணம் செய்திருக்கிறார் என்பதையும் கண்டுபிடித்திருக்கிறார். அப்பெண்கள் பிரியாவை அந்த மனிதருக்கு விற்றிருக்கிறார்கள்.

2011ல் ரித்தி பிறந்தபிறகு விக்ரமை ஓர் உறவினர் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார் பிரியா. “வளர்கையிலேயே இங்கு நடப்பவை எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தான்…”. ஒழுங்கில்லாததற்கு அவர்கள் அடித்ததால் அங்கிருந்தும் ஓடியிருக்கிறான் விக்ரம். “அப்போதும் காணாமல் போனதற்கு புகார் கொடுத்தோம். இரண்டு நாட்கள் கழித்து திரும்பிவிட்டான்.” ரயிலேறி தாதர் ரயில் நிலையத்தை அடைந்திருக்கிறான். அப்படியே ரயில் பெட்டிகளில் தங்கியிருக்கிறார். பிச்சைக்காரன் என அவனை நினைத்து மக்கள் கொடுத்தவற்றை உண்டிருக்கிறான்.

Vikram found it hard to make friends at school: 'They treat me badly and on purpose bring up the topic [of my mother’s profession]'
PHOTO • Aakanksha

பள்ளியில் நண்பர்கள் பெறுவது விக்ரமுக்கு கடினமாக இருக்கிறது.  ‘அவர்கள் என்னை கீழ்த்தரமாக நடத்துவார்கள். வேண்டுமென்றே என் தாய் பற்றிய பேச்சை கொண்டு வருவார்கள்’

8 அல்லது 9 வயது ஆனபோது வீடற்றவன் என நினைத்து மத்திய மும்பையில் இருக்கும் சீர்திருத்த பள்ளியில் ஒரு வாரம் அவனை அடைத்திருக்கிறார்கள். அதற்கு பிறகு தொண்டு நிறுவனம் நடத்தும் ஹாஸ்டலுடன் கூடிய ஒரு பள்ளியில் சேர்த்து விட்டிருக்கிறார் பிரியா. ஆறாம் வகுப்பு வரை அங்கு படித்திருக்கிறான்.

“விக்ரம் எப்போதுமே பிரச்சினையில் இருந்திருக்கிறான். அவனோடு நான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்கிறார் பிரியா. ஹாஸ்டலிலேயே அவன் இருக்க வேண்டும் என விரும்பியிருக்கிறார். அங்கு இருக்கும்போது மனவியல் நிபுணரிடமும் அழைத்து சென்றிருக்கிறார். ஆனால் ஹாஸ்டலில் அவனை பார்த்துக் கொண்டவரை தாக்கிவிட்டு தப்பி ஓடியிருக்கிறான். பிறகு அவன் காமத்திப்புராவுக்கு வந்திருக்கிறான்.

பள்ளிக்கூடத்தில் தொந்தரவு கொடுத்ததாலும் பிற மாணவர்களுடன் சண்டை போட்டதாலும் அவ்வப்போது விக்ரம் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறான். “மாணவர்களும் பிறரும் என் தொழிலை சொல்லி கிண்டலடிப்பது அவனுக்கு பிடிப்பதில்லை. சீக்கிரமாக கோபமடைந்துவிடுவான்,” என்கிறார் பிரியா. எப்போதும் அவன் குடும்பத்தை பற்றி எவரிடமும் சொல்வதில்லை. நண்பர்களை அவன் பெறுவது கடினம். “அவர்கள் என்னை கீழ்த்தரமாக நடத்துவார்கள். வேண்டுமென்றே என் தாய் பற்றிய பேச்சை கொண்டு வருவார்கள்,” என்கிறான் விக்ரம்.

ஆனாலும் விக்ரம் நன்றாக படிக்கக் கூடியவன். தேர்ச்சி விகிதம் 90 சதவிகிதத்தில் இருக்கும். ஆனால் அவனுடைய 7ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மாதத்தில் வெறும் மூன்று நாட்கள் என்கிற அளவிலேயே அவனுடைய வருகை இருந்ததாக காட்டுகிறது. சுலபமாக தன்னால் படித்துவிட முடியும் என்னும் விக்ரம் தான் படிக்க விரும்புவதாகவும் சொல்கிறான். 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 8ம் வகுப்புக்கான மதிப்பெண் பட்டியல் அவனுக்கு கொடுக்கப்பட்டது. 7 பாடங்களில் ‘ஏ’ கிரேடும் இரண்டு பாடங்களில் ‘பி’ கிரேடும் பெற்றிருந்தான்.

“காமத்திப்புராவில் இருக்கும் என் நண்பர்களில் பலர் பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்திவிட்டு வேலை பார்க்கத் தொடங்கிவிட்டனர். சிலருக்கு படிப்பதில் ஆர்வம் இல்லை. சம்பாதிக்கலாம் என நினைக்கின்றனர். சம்பாதிக்கும் பணத்தை சேமித்து ஒரு வியாபாரம் தொடங்க நினைக்கின்றனர்,” என்கிறான் விக்ரம் (கொல்கத்தாவின் சிவப்பு விளக்கு பகுதிகளில் வாழும் குழந்தைகளை பற்றிய கணக்கெடுப்பு ஒன்று, படிப்பை பாதியிலே நிறுத்தும் விகிதம் 40% அளவுக்கு இருப்பதாக குறிப்பிடுகிறது)

பேசிக் கொண்டிருக்கும்போதே ஒரு குட்கா பாக்கெட்டை பிரிக்கிறான் விக்ரம். “அம்மாவிடம் சொல்லிவிடாதீர்கள்,” என்கிறான் அவன். முன்பெல்லாம் புகைபழக்கம் இருந்திருக்கிறது. அவ்வப்போது மதுவும் அருந்தியிருக்கிறான். கசப்பாக இருந்ததால் நிறுத்திவிட்டான். “குட்கா பழக்கத்தை மட்டும் விட முடியவில்லை. ருசி பார்க்கத்தான் சாப்பிட்டேன். எப்படி பழக்கமானது என தெரியவில்லை,” என்கிறான் அவன். சமயங்களில் அவன் குட்கா மெல்லுவதை பிரியா கண்டுபிடித்து அடித்திருக்கிறார்.

”இங்கு இருக்கும் குழந்தைகள் எல்லா கெட்ட பழக்கங்களையும் சுலபமாக கற்றுக் கொள்வார்கள். அதனால்தான் இவர்கள் ஹாஸ்டலில் இருக்க வேண்டுமென விரும்புகிறேன். ரித்தி கூட இங்குள்ள பெண்களை போல் பாவனைகள் செய்கிறாள்,” என்கிறார் பிரியா. “அடிப்பதும் சண்டை போடுவதும்தான் இங்கு தினசரி நீங்கள் பார்ப்பீர்கள்.”

The teenager's immediate world: the streets of the city, and the narrow passageway in the brothel building where he sleeps. In future, Vikram (left, with a friend) hopes to help sex workers who want to leave Kamathipura
PHOTO • Aakanksha
The teenager's immediate world: the streets of the city, and the narrow passageway in the brothel building where he sleeps. In future, Vikram (left, with a friend) hopes to help sex workers who want to leave Kamathipura
PHOTO • Aakanksha

தெருக்களும் விபச்சார விடுதியின் குறுகிய சந்துகளும்தான் பதின்வயதினனின் உடனடி உலகம். எதிர்காலத்தில் (இடதில் ஒரு நண்பனுடன்) காமாத்திப்புராவிலிருந்து வெளியேற விரும்பும் பாலியல் தொழிலாளர்களுக்கு உதவும் திட்டத்தில் இருக்கிறான் விக்ரம்

ஊரடங்குக்கு முன் வரை பிற்பகல் 1 மணியிலிருந்து இரவு 6 மணி வரை விக்ரம் பள்ளிக்கூடத்தில் இருப்பான். பிறகு 7 மணிக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தும் இரவு பாடசாலையில் இருப்பான். பிறகு வீடு திரும்புவான் அல்லது அவன் அம்மா வாடிக்கையாளரை சந்திக்கும் அறைக்கு அருகே இருக்கும் சந்திலேயே படுத்துறங்கி விடுவான். சில நேரங்களில் இரவுவிடுதியில் தங்கிவிடுவான்.

ஊரடங்குக்கு பிறகு தங்கையும் வீட்டுக்கு வந்தபிறகு, அறையில் இன்னும் நெருக்கடி அதிகமாகிவிட்டது. ‘ரயில்பெட்டி போலாகிவிட்டதாக’ குறிப்பிடுகிறான். அதனால் இரவு நேரங்களில் தெருக்களை சுற்றியிருக்கிறான். வேலை கிடைக்கும் இடங்களில் தங்கியிருக்கிறான். குடும்பம் தங்கியிருக்கும் அறை பத்துக்கு பத்தடி அளவுதான்.மூன்றாக பிரிக்கப்பட்டிருக்கும். தனியாக வாழும் பாலியல் தொழிலாளியோ அல்லது குடும்பத்துடன் இருக்கும் தொழிலாளியோ தங்கியிருப்பர். அந்த அறைகளில்தான் வழக்கமாக தொ்ழில் நடக்கும்.

பிரியா மற்றும் தங்கை ஆகியோருடன் ஆகஸ்ட்14ம் தேதி ரயிலில் வாபியிலிருந்து திரும்பி வந்த பிறகு, அடுத்த நாளே அருகே உள்ள பகுதிகளில் விக்ரம் வேலை தேடினான்.காய்கறிகள் விற்க முயற்சித்தான். கட்டுமான தளங்களில் வேலை பார்த்தான். மூட்டைகள் தூக்கினான்.

விக்ரமின் பள்ளிக்கூடத்திலிருந்து தகவல் வர பிரியா காத்திருந்தார். இணையவழிக் கல்வி எப்போது தொடங்கியதென்றும் தெரியவில்லை. அவனிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை. இருந்தாலும் இப்போது அவன் நேரம் வேலையிலேயே போகிறது. மேலும் இணையத்துக்கு பணம் தேவை. நீண்ட நாட்கள் வராததால் பள்ளிக்கூடமும் அவனின் பெயரை பதிவேட்டிலிருந்து நீக்கிவிட்டதாக சொல்கிறார் பிரியா.

விக்ரம் தொடர்ந்து வேலை பார்த்தால் படிக்காமலே போய்விடுவானோ என்கிற பயத்தில் ஹாஸ்டல் இருக்கும் பள்ளியில் அவனை சேர்க்க குழந்தைகள் நல வாரியத்தின் உதவியை நாடினார் பிரியா. விண்ணப்பம் போட்டிருக்கிறார். வாய்ப்பு கிடைத்தாலும் ஒரு வருடப்படிப்பு விக்ரமுக்கு போய்விடும். “பள்ளி திறந்ததும் அவன் படிக்க நான் விரும்புகிறேன். வேலைக்கு போக அல்ல. அவன் ஊதாரியாக ஆகிவிடக் கூடாது,” என்கிறார் பிரியா.

Vikram has agreed to restart school, but wants to continue working and helping to support his mother
PHOTO • Aakanksha
Vikram has agreed to restart school, but wants to continue working and helping to support his mother
PHOTO • Aakanksha

பள்ளிக்கு செல்ல விக்ரம் சம்மதித்துவிட்டான். ஆனாலும் வேலை பார்க்க விரும்புகிறான். வலதுபக்கத்தில் அவனுடைய பள்ளி பை. அதை இப்போது வேலைக்கு பயன்படுத்துகிறான்

ததாரில் இருக்கும் ஹாஸ்டல் பள்ளியில் ரித்திக்கு அனுமதி கிடைத்துவிட்டது. நவம்பரிலேயே அவள் அங்கு சென்றுவிட்டாள். அவள் போனபிறகு பாலியல் தொழிலை மீண்டும் தொடங்கிவிட்டார் பிரியா. அவருடைய வயிற்றுவலி அனுமதிக்கும்போது வேலை பார்க்கிறார்.

விக்ரம் சமையல்காரனாக விரும்புகிறான். சமைப்பது அவனுக்கு பிடிக்கிறது. “யாரிடமும் சொல்லவில்லை. ‘நீ என்ன பெண்ணா, எனக் கேட்பார்கள்,” என்கிறான் அவன். அவனுக்கு ஒரு பெரிய திட்டம் இருக்கிறது. காமத்திப்புராவிலிருந்து வெளியேற விரும்பும் பாலியல் தொழிலாளிகளுக்கு உதவ விரும்புகிறான். “நான் நிறைய சம்பாதிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு உணவளிக்க முடியும். அவர்கள் விரும்பும் வேலைகளையும் தேடித் தர முடியும்,” என்கிறான் அவன். “இங்கிருக்கும் பெண்களுக்கு பலர் உதவுவதாக சொல்கிறார்கள். ஆனாலும் பாருங்கள் நிறைய அக்காக்கள் இங்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கட்டாயப்படுத்தியும் பல கெட்ட விஷயங்கள் (பாலியல் வன்கொடுமைகள்) நடத்தியும் அவர்களை இங்கு அனுப்பிவிடுகிறார்கள். யார் இஷ்டப்பட்டு இங்கு வருவார்கள்? அவர்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது?”.

அக்டோபர் மாதத்தில் வாபியில் இருக்கும் உணவகத்துக்கு மீண்டும் சென்றான் விக்ரம். பிற்பகலிலிருந்து நடு இரவு வரை இரண்டு வாரங்களுக்கு வேலை பார்த்தான். பாத்திரங்கள் கழுவுவது, தரையை, டேபிள்களை சுத்தப்படுத்துவது போன்ற வேலைகள். இருவேளை சாப்பாடும் மாலையில் ஒரு டீயும் கிடைத்தது. ஒன்பதாம் நாள் சக தொழிலாளரிடன் சண்டை ஏற்பட்டது. இருவரும் தாக்கிக் கொண்டனர். ஒப்புக்கொண்ட இருவாரக் கூலியான 3000 ரூபாய்க்கு பதிலாக அவனுக்கு 2000 ரூபாய்தான் கிடைத்தது. அக்டோபர் மாத இறுதியில் வீடு திரும்பினான்.

உள்ளூர் உணவகங்களிலிருந்து மத்திய மும்பையின் சுற்றுப்பகுதியில் சாப்பாடு பொட்டலங்கள் விநியோகிக்கும் வேலையை கடன் வாங்கிய சைக்கிளின் உதவியோடு தற்போது செய்கிறான்  காமாத்திப்புராவில் இருக்கும் ஒரு போட்டோ ஸ்டுடியோவிலும் வேலை பார்க்கிறான். அவனுடைய வருமானம் குறைவாகத்தான் இருக்கிறது.

ஹாஸ்டலில் இருந்து வரும் தகவலுக்காக பிரியா காத்திருக்கிறார். அவருடைய கொந்தளிப்பு நிறைந்த மகன் அங்கிருந்தும் ஓடிவிடக் கூடாது என விரும்புகிறார். மீண்டும் பள்ளிக்கு செல்ல விக்ரம் ஒப்புக் கொண்டான். ஆனாலும் வேலையும் பார்க்க விரும்புகிறான். அவனுடைய தாய்க்கு ஆதரவாக இருக்க வேண்டுமனவும் விரும்புகிறான்.

தமிழில்: ராஜசங்கீதன்

Aakanksha

আকাঙ্ক্ষা পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার একজন সাংবাদিক এবং ফটোগ্রাফার। পারি'র এডুকেশন বিভাগে কনটেন্ট সম্পাদক রূপে তিনি গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের তাদের চারপাশের নানান বিষয় নথিভুক্ত করতে প্রশিক্ষণ দেন।

Other stories by Aakanksha
Translator : Rajasangeethan

রাজাসংগীতন চেন্নাইবাসী লেখক। এক প্রখ্যাত তামিল খবরের চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করেন।

Other stories by Rajasangeethan