நம்முடைய People’s Archive of Rural India குடும்பத்தின் பயணத்தில் ஜூன் 7 ஒரு பொன்னாள். அன்று நெகிழவைக்கும், மறக்க முடியாத நிகழ்வு ஒன்று நம்முடைய முன்னெடுப்பில் நடந்தது. ‘தீரத்தளபதியும், சுழற்றி அடித்த சூறாவளிப் படையும்’ என்கிற கட்டுரை நினைவில் இருக்கலாம். ஜூன் 7 நிகழ்வில் நம்முடைய விடுதலை வீரர் ‘கேப்டன் அண்ணா’, இன்ன பிற கொண்டாடப்பட வேண்டிய வீரர்களுக்கு விழா எடுத்தோம்.

ஆண்டுகள் கூடிக்கொண்டே போகிறது. இந்திய விடுதலைப் போரில் நேரடியாகப் பங்குகொண்ட வீரர்கள் இறந்து கொண்டே இருக்கிறார்கள்.  துயரமும் கூடிக்கொண்டே போகிறது. நம்முடைய வருங்காலத் தலைமுறை மழலைகள் இந்த மகத்தான விடுதலை வீரர்களைப் பார்க்க முடியாது. இவர்களின் குரல்களைக் கேட்கும் பாக்கியமும் அவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. இந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கும் பெரும்பான்மையான வாசகர்களுக்கும் அந்த அனுபவம் எப்போதுமே கிட்டியதில்லை.

சத்தாராவில் 1943-46 காலத்தில் நடத்தப்பட்ட பிராதி சர்க்கார் எனப்படும் மாற்று, தலைமறைவு அரசாங்கத்தை நடத்திய விடுதலை வீரர்களை ஒன்று சேர்க்க முடிவு செய்தோம். இப்போது உயிருடன் இருக்கும் அந்தப் பிராதி சர்க்காரின் ‘சூறாவளி படை’ (துஃபான் சேனை) வீரர்கள், சத்தாரா, சங்லி மாவட்டத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட தியாகிகள் ஆகியோரை ஜூன் 7 அன்று கவுரவித்தோம். அதே நாளில் தான் சூறாவளிப்படை சத்தாராவில் உள்ள ஷேனொலி கிராமத்தில் தீரச்செயல் ஒன்றை புரிந்தது. ஆங்கிலேய அதிகாரிகளுக்கான சம்பள பணத்தைச் சுமந்து சென்று கொண்டிருந்த தொடர்வண்டி தாக்கப்பட்டது. அந்தத் தொடர்வண்டியில் இருந்த பணத்தை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுத்தார்கள். அதோடு நில்லாமல், ஆங்கிலேயருக்கு மாற்றான பிராதி சர்க்காரை உருவாக்கி, நடத்தினார்கள்.

ஓய்வு பெற்ற வெளியுறவுத் துறை அதிகாரி, மேற்கு வங்க மேனாள் ஆளுநர், மகாத்மா காந்தியின் பேரன் என்று பல்வேறு முகங்களைக் கொண்ட கோபாலகிருஷ்ண காந்தியை இந்த விழாவில் பங்கேற்று உரையாற்ற அழைத்தோம். புதுத் தில்லியில் இருந்து ஆர்வத்தோடு அவர் வந்து சேர்ந்தார். அந்த விழாவில் அவர் கண்டவை கண்களை நிறைத்து, உணர்வுகளைப் பெருக்கெடுக்க வைத்துவிட்டது.

துஃபான் சேனை எனப்பட்ட சூறாவளிப் படை பிராதி சர்க்காரின் போர்ப்பிரிவாகும். அது இந்திய விடுதலைப் போரின் வியக்க வைக்கும் அத்தியாயம். வெள்ளையனே வெளியேறு இயக்க காலத்தில் ஆயுதமேந்திய குழுவாக உருவெடுத்த புரட்சியாளர்கள், பின்னர்ச் சத்தாராவில் (சத்தாரா தற்போதைய சங்லி மாவட்டத்தையும் உள்ளடக்கிய மிகப்பெரிய மாவட்டம்) மாற்று அரசாங்கத்தை அறிவித்தார்கள்


காணொளி: ஷேனொலியில் பிரிட்டிஷ் இந்திய ரயில்வே தங்கள் தொடர்வண்டியை தாக்கிய துஃபான் சேனையின் சாகசத்தை நினைவுகூரும் வகையில் ஒரு சிறிய ‘நினைவுசின்னத்தை’ எழுப்பினார்கள். அங்கே கோபால் காந்தியும், பிறரும் நிற்கிறார்கள்


அந்த மகத்தான வரலாற்றுத் தருணம் நிகழ்ந்த ஷேனொலி தொடர்வண்டி தடத்தில் வெகு சில வீரர்களை மட்டும் கவுரவிக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். உச்சிவெயில் கொளுத்தும் மதியம் மூன்று மணிக்கு 25௦ மக்கள் திரண்டிருந்தார்கள். பூங்காவில் அளவில்லாத ஆனந்தத்தோடு ஓடி விளையாடும் குழந்தைகள் போல 80, 90 வயதான விடுதலை போராட்ட வீரர்கள் முண்டியடித்தார்கள். விடுதலைப் போரின் பல்வேறு நதிகள் சங்கமிக்கும் கூடலாக இந்நிகழ்வு திகழ்ந்தது. ஆயுதமேந்திய போராடிய புரட்சியாளர்கள் முதுமையைச் சுமந்தபடி, அன்போடு கோபால் காந்தியை ஆரத்தழுவி கொண்டார்கள். “மகாத்மா காந்தி வாழ்க!’ என்று உணர்ச்சிப் பெருக்கோடு முழக்கமிட்டார்கள். குறிப்பாக 95 வயதாகி விட்ட கேப்டன் பாவு (அண்ணா) உடல்நலமில்லாமல் இருந்தாலும், பெருமிதம் ததும்பி வழிந்த விழிகளில் நீர் நிறையப் பங்குகொண்டார். துள்ளல் மிகுந்த மழலை போலத் தொடர்வண்டி தடத்தில் 94 வயதாகும் மாதவராவ் மானே ஓடிக்கொண்டிருந்தார். எங்கே தவறி விழுந்துவிடுவாரோ என்கிற அச்சத்தில் அவர் பின்னால் நான் ஓடினேன். என்றாலும், அவரின் துள்ளலும், முகம் நிறைந்த சிரிப்பும் சற்றுகூடக் குறையவில்லை. ,

எழுபத்தி நான்கு வருடங்களுக்கு முன்னால் எந்த இடத்தில் போராளிகள் தொடர்வண்டியை திருப்பத்தில் தடுத்து நிறுத்தி, ஏறினார்களோ அங்கே நின்றோம். அங்கே ஒரு சிறிய நினைவுச்சின்னம் பிரிட்டிஷ் இந்திய ரயில்வேவால் நிறுவப்பட்டுள்ளது. அது துக்கச்சின்னமாக நிறுவப்பட்டது எனச் சொல்லவேண்டியதில்லை. அதற்கு அருகில், அந்த மகத்தான நிகழ்வின் உண்மையான போராளிகளை நினைவுகூரும் நினைவு சின்னத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்


Haunsai bai and Nana Patil felicitation

கோபால் காந்தி பிராதி சர்க்காரின் நாயகர் நானா பாட்டீல் மகள் ஹவுன்சதாய் பாட்டீலை கவுரவிக்கிறார் (இடது) மாதவ்ராவ் மானேவுக்கு மரியாதை செய்கிறார்


பிராதி சர்க்கார் அரசின் தலைமையகமாகத் திகழ்ந்த குந்தால் நகரத்தை நோக்கி பயணித்தோம். அது ஷேனொலியில் இருந்து இருபது நிமிட பயணத்தில் உள்ளது. உள்ளூர் மக்கள், விடுதலை வீரர்களின் வாரிசுகள் இந்த நிகழ்வை நடத்தினார்கள். இதில் நாக்நாத் நாயக்வாடியை சேர்ந்த ஜி.டி.பாபு லத்தின் குடும்பம் , பிராதி சர்க்காரின் தலைவராக இருந்த நானா பாட்டீலின் குடும்பம் ஆகியோர் முக்கியப் பங்காற்றினார்கள். 1943 போரில் பங்குகொண்டு நான்கு வீரர்களில் ஒரே ஒருவர் மட்டுமே உயிரோடு இருக்கிறார். கேப்டன் பாவு, 95 மட்டுமே அந்த முதுபெரும் மனிதர். நானா பாட்டீல் எனும் பெருமைமிகுந்த விடுதலை வீரரின் மகளான ஹவுன்சதாய் பாட்டீல் உற்சாகம் ததும்ப, தெளிவாகப் பேசினார். அவரும் புரட்சிகரமான போராளி ஆவார். கேப்டன் பாவு விழாவுக்கு இரு நாட்களுக்கு முன்னால் போராடிக்கொண்டிருக்கும் மகாராஷ்டிரா விவசாயிகளுக்காக வீதியில் இறங்கி போராடினார். இந்த விடுதலைப் போராட்ட வீரர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள், விவசாயக் கூலிகள் என்பதை நினைவுகூரவேண்டும். அவர்களின் வாரிசுகளில் சிலர் இன்னமும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஜூன் 7 நிகழ்வை மகாராஷ்டிரா அரசு வேறு வகையாகக் கொண்டாடியது. 1943-ன் ஆங்கிலேய அரசு போல நடந்து கொண்டது. காவல்துறையை அனுப்பி விவசாயிகளின் போராட்டத்தை அடக்கியது. இதனால் விடுதலை வீரர்களுக்கான நிகழ்வுகளுக்கான ஆயத்தப் பணிகள் தடைபட்டன. பல்வேறு விவசாயிகள், விவசாயச் செயல்பாட்டாளர்கள் ‘தற்காப்புக் கைதுகள்’ என்று சிறைக்கு அனுப்பபட்டார்கள். குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்யாமல், சட்டத்துக்குப் புறம்பாக அவர்கள் சிறைப்படுத்தப்பட்டு இருந்தார்கள். கிஷான் சபையின் பிரமுகரான உமேஷ் தேஷ்முக் ஷேனொலி, குந்தால் நிகழ்வுகளுக்கான ஆயத்தப்பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார். ஆனால், அவரே விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. அதிகாலை ஐந்தரை மணிக்கு எட்டு தோழர்களோடு கைது செய்யப்பட்டு அவர் தஸ்கான் காவல்நிலையத்தில் அடைக்கப்பட்டார். உமேஷ் வயதான விடுதலைப் போராட்ட வீரர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை விழாவுக்கு அழைத்தார். இந்த

மகாராஷ்டிர அரசு ஜூன் 7 விழாவை வேறு விதமாகக் கொண்டாடியது. அதன் கொண்டாட்டம் 1943-ன் ஆங்கிலேய அரசின் அணுகுமுறையை ஒத்திருந்தது. இவை விடுதலை போராட்ட வீரர்களைக் கவுரவிக்கும் நிகழ்வுக்கான ஆயத்தங்களைக் குலைத்தது. எண்ணற்ற விவசாயிகள், விவசாயப் போராளிகள் ‘தற்காப்பு கைது’ என்கிற பெயரில் கைது செய்யப்பட்டு, சிறைக்குள் தள்ளப்பட்டார்கள். வழக்கே பதிவு செய்யாமல் சட்டத்துக்குப் புறம்பாகச் சிறை வைக்கப்பட்டார்கள். ஷேனொலி, குந்தால் ஆகிய இடங்களில் நடைபெற்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான விழாக்களின் ஆயத்தப்பணிகளில் முக்கியப் பங்காற்றியவர் உமேஷ் தேஷ்முக். அவர் கிஷான் சபையின் முக்கியப் பொறுப்பாளர். அவரே விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது தான் சோகமானது. அதிகாலை ஐந்தரை மணிக்கு அவரின் எட்டு தோழர்களோடு கைது செய்யப்பட்டு, தாஸ்கான் சிறையில் அடைக்கப்பட்டார். உமேஷ் தான் ஒவ்வொரு விடுதலைப் போராட்ட வீரரின் வீட்டுக்கும் சென்று அவர்களை விழாவுக்கு வரவேற்றார். அவர்களின் சந்திப்புக்கான ஆயத்தங்கள், அணி திரட்டல் ஆகியவற்றை அவரே மேற்கொண்டார். எனினும், இரண்டு கூட்டங்களும் நடந்தன. ஒரே ஒரு இருக்கை கூடக் காலியாக இல்லை. இந்த விழா நடந்த குந்தாலில் பலர் நின்று கொண்டு மேடையில் இருந்த இருபது விடுதளைப்போரட்ட வீரர்களைப் பெருமிதத்தோடு கண்டுகொண்டு இருந்தார்கள். கோபால் காந்தி கவனமாகக் கவனித்துக் கொண்டிருந்த கூட்டத்திடம் பேசினார். அவர் விடுதலை போர், மகாத்மா காந்தி எப்படி அதை முன்னெடுத்தார், தான் எப்படி விடுதலைப்போராட்ட வீரர்களை மதிக்கிறார் என்பது குறித்து எல்லாம் பேசினார். நம் தற்காலச் சூழலையும், எப்படி நம்முடைய மனப்போக்கு மாறியிருக்கிறது என்பது குறித்தும் பேசினார்.


காணொளி:முதுபெரும் விடுதலைப் போராளிகள் குந்தால் மக்களின் மரியாதையைப் பெற பெருமிதத்தோடு எழுகிறார்கள்


அவர் பேசி முடித்ததும், ஒட்டு மொத்த கூட்டமும் எழுந்து நின்று கரவொலி எழுப்பியது. தங்களின் விடுதலைக்காகத் தன்னிகரில்லா போர் புரிந்த வீரர்களுக்கான அந்த மரியாதை வெகுநேரம் நீண்டது. ஒருவர் நினைத்து பார்ப்பதை விட நெடுநேரம் கூட்டத்தினர் நின்றபடி கரவொலி எழுப்பினார்கள். பலரின் கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தன. நானும் மற்றவர்களோடு நின்றபடி தங்களுடைய 9௦ வயதில் இருக்கும் இந்த அற்புதமான ஆண்கள், பெண்களுக்கு கைதட்டி, கண் கலங்கினேன். அவர்கள் உணர்ச்சி பெருக்கில் மூழ்கியிருந்தார்கள். தங்களுடைய நகரம் ஒரு வழியாகத் தங்களைக் கவுரவிக்கும் பெருமைமிகுந்த, மகிழ்ச்சிகரமான பொன்மாலைப் பொழுதில் திளைத்துக் கொண்டிருந்தார்கள். இது அவர்களுடைய இறுதிக்காலத்தின் மகத்தான தருணம். அது அவர்களுக்கான இறுதி உற்சாகம்.


Freedom fighter program

கூட்டத்தினர் எழுந்து நின்று போராளிகளுக்குக் கரவொலி எழுப்புகிறார்கள். வலது: தீரமிகுந்த தளபதி பாவு, (95) குந்தால் விழாவில் பங்கேற்கிறார்


புகைப்படங்கள்: நமீதா வைகர், சம்யுக்தா சாஸ்திரி, சிஞ்சிதா மாஜி

P. Sainath

পি. সাইনাথ পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক। বিগত কয়েক দশক ধরে তিনি গ্রামীণ ভারতবর্ষের অবস্থা নিয়ে সাংবাদিকতা করেছেন। তাঁর লেখা বিখ্যাত দুটি বই ‘এভরিবডি লাভস্ আ গুড ড্রাউট’ এবং 'দ্য লাস্ট হিরোজ: ফুট সোলজার্স অফ ইন্ডিয়ান ফ্রিডম'।

Other stories by পি. সাইনাথ
Translator : P. K. Saravanan

P. K. Saravanan is an agricultural and irrigation engineering graduate interested in translating writings into Tamil

Other stories by P. K. Saravanan