கண்பதி பால் யாதவ் அஸ்தமனத்தை நோக்கி கடந்த வாரத்தில் சைக்கிள் ஓட்டிச் சென்று மறைந்துவிட்டார். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். தலைமறைவு புரட்சியாளர்களுக்கு செய்தி சொல்லும் தூதுவராக இருந்தவர். தன்னுடைய நூற்றாண்டு காலத்தை நிறைவு செய்து 101ம் வயதில் நோயுற்று மறைந்தார். அவரின் இறுதிக்காலத்தில் கூட 5-லிருந்து 20 கிலோமீட்டர் வரை தினசரி சைக்கிள் ஓட்டியவர். தற்போது வானையும் கடந்து சென்றுவிட்டார்.

2018ம் ஆண்டில் நாங்கள் சந்தித்தபோது அவருக்கு வயது 97. எங்களை தேடி 30 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டி வந்திருந்தார். ‘எங்கள்’ என குறிப்பிடும் பாரி குழுவாகிய நாங்கள் தாமதமாக சென்றிருந்தபோதும் அவரை சந்தித்து அவரின் அற்புதமான வாழ்க்கையை பதிவு செய்துவிட வேண்டுமென்கிற ஆவலில் இருந்தோம். அது மே மாதத்தின் நடுவே ஒரு நாள். அவர் பல மணி நேரங்களாக சாலையில் எங்களுக்காக அலைந்திருந்தார். அவரின் சைக்கிள் ஓர் அருங்காட்சியகப் பொருளை போல் தோற்றமளித்தது. ஆனால் அதைப் பற்றி அவருக்கு பிரச்சினை இல்லை. அந்த மனிதர் மறைந்துவிட்டார். ஆனால் அவரின் கதை இன்னும் இருக்கிறது: கணபதி யாதவின் அற்புதமான வாழ்க்கைப் பயணம் .

கண்பதி பால் யாதவ் 1920ம் ஆண்டு பிறந்தவர். விடுதலைப் போராட்டத்தில் இயங்கி, பிரிட்டிஷ் அதிகாரத்திலிருந்து விடுதலை என 1943-ல் அறிவித்த சதாராவின் நிழலுலக அரசின்  டூஃபன் சேனா (சூறாவளி படை) என்னும் ஆயுதப்படையில் பதவி வகித்தவர். பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். 1943ம் ஆண்டில் ஜி.டி.பாபு லாத் மற்றும் கேப்டன் பாவ் ஆகியோர் சத்தார் மாவட்டத்தின் ஷேனோலியில் நடத்திய பெரும் ரயில் கொள்ளையிலும் கண்ப தாதா ஒருவராக பங்கெடுத்திருக்கிறார்.

அவர் சொல்கையில், “எங்களின் தலைவர்களுக்கு உணவு கொண்டு சென்று (காட்டில் மறைந்திருந்தவர்கள்) கொடுக்கும் வேலையை தான் பெரும்பாலும் செய்தேன். இரவு நேரத்தில் செல்வேன். தலைவருடன் 10-20 பேர் இருப்பார்கள்,” என்றார். கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அவரோடு சேர்த்து 20 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும்.தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு தேவையான உணவை யாதவ் சைக்கிளில் கொண்டு சென்று கொடுத்தார். புரட்சிகர குழுக்களுக்கு இடையேயான முக்கியமான தகவல் பரிமாற்றத்துக்கும் அவர் உதவினார்.

The day we met him in 2018 – he was then 97 – he had cycled close to 30 kilometres in search of the PARI team
PHOTO • P. Sainath
The day we met him in 2018 – he was then 97 – he had cycled close to 30 kilometres in search of the PARI team
PHOTO • P. Sainath

2018ல் நாங்கள் சந்தித்தபோது அவருக்கு வயது 97. பாரி குழுவை தேடி கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர்கள் சைக்கிளிலேயே அலைந்தார்

அவருடைய சைக்கிளை மட்டும் நான் எப்போதும் மறக்கவே மாட்டேன். இன்றும் முட்டை விற்பவர்களாலும் சலவை செய்பவர்களாலும் கிராமங்களிலும் நகரங்களிலும் இருக்கும் வீடுகளுக்கு சென்று சேவைகள் வழங்க பயன்படும் அந்த பழைய சைக்கிளை பார்த்துக் கொண்டிருந்தேன். உரையாடலின்போது ஒரே ஒரு முறை மட்டும்தான் அவர் கோபப்பட்டார். இந்த  வண்டியின் வயது கால் நூற்றாண்டு மட்டும்தான் என்றார். கிட்டத்தட்ட 55 வருடங்களாக பயன்படுத்திய அவரின் பழைய சைக்கிளை யாரோ திருடிவிட்டார்கள்.  அநேகமாக திருடியவர் ஒரு பழம்பொருள் சேகரிப்பாளராக இருக்கலாம்.

எங்களின் நண்பரான பத்திரிகையாளர் சம்பத் மோர் மூலமாகத்தான் நாங்கள் கண்பதி யாதவுக்கு அறிமுகமானோம். மகாராஷ்டிராவின் சங்க்லி மாவட்டத்திலுள்ள ஷிர்காவோன் கிராமத்தில் வசிக்கும் அவரின் தாத்தாவின் வீட்டில்தான் கண்பதி யாதவை நாங்கள் சந்தித்தோம். பிறகு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அவரின் சொந்த ஊரான ரமாப்பூருக்கு சென்றோம். பல மணி நேரங்களாக உரையாடினோம். 97 வயதில் அவர் சைக்கிள் ஓட்டுவது ஏன் எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்பது அவருக்கு புரியவில்லை. ஆனாலும் பாரியில் பயிற்சிப்பணியில் இருந்த சங்கேத் ஜெயின் மற்றும் காணொளி தொகுப்பாளர் சிஞ்சிட்டா மாஜி ஆகியோர் படமாக்குவதற்காக இன்னொரு அரை மணி நேரம் அவர் சைக்கிள் ஓட்டினார். சங்கெத் சாலையில் படுத்து படப்பதிவு செய்தார். அழுக்கு நிறைந்த சாலை. அதில்தான் அவர் தினமும் சைக்கிள் ஓட்டினார். சிஞ்சிட்டா ஒரு ஸ்கூட்டரின் பின்னிருக்கையில் திரும்ப் உட்கார்ந்து அவர் சைக்கிள் ஓட்டி வருவதை படமெடுத்தார்.

பாரியின் பாரத் பாட்டிலும் நமிதா வைக்கரும் அந்த நேர்காணலில் மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தனர். அதன் ஒவ்வொரு நொடியும் என் மனதில் அழியாமலிருக்கிறது.

அடுத்த இரு வருடங்களில் அவரை எப்போது சம்பத்  சந்தித்தபோதும், நானும் பாரி குழுவும்தான் அவரை பிரபலமாக்கியதாக சொல்லி இருக்கிறார். “நான் பெரிய ஆள் ஒன்றுமில்லை. விடுதலைப் போராட்டத்தில் செய்தி கொண்டு செல்பவனாக இருந்தேன். அவ்வளவுதான். ஆனால் அவர்கள்தான் என்னுடைய பங்கை மிக முக்கியமாக பாவித்து மிகுந்த மரியாதையுடன் நடத்தினார்கள்,” என ஒவ்வொரு முறையும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் மிகவும் நெகிழ்ந்து போயிருந்தார். ஏனெனில் அக்கட்டுரை கொடுத்த அங்கீகாரம் அவரின் சொந்த ஊரிலும் பகுதியிலும் மிக முக்கியமாக இருந்தது.

When it was time to part, Dada (Ganpati Bal Yadav) knew only from the body language that this man is now going. Dada was overcome with emotion
PHOTO • P. Sainath
When it was time to part, Dada (Ganpati Bal Yadav) knew only from the body language that this man is now going. Dada was overcome with emotion
PHOTO • Sanket Jain

கிளம்பும் நேரம் வந்ததும் உடல்மொழியை வைத்துதான் நாங்கள் கிளம்புவதையே அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் உணர்ச்சிவயப்பட்டார்.

அத்தகைய பணிவை இந்தியாவில் மிஞ்சியிருக்கும் விடுதலை போராட்ட வீரர்கள் அனைவரிடத்திலும் ஒரு முக்கிய பண்பாக நான் கண்டிருக்கிறேன். அவர்களும் அவர்களின் காலமும் அவர்களின் உலகமும் சிறப்பு வாய்ந்தவையாக அவர்கள் ஒரு மட்டத்தில் புரிந்திருக்கிறார்கள். இன்னொரு மட்டத்தில், அவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்ததோ அவற்றை மட்டுமே செய்ததாகவும் எந்த பிரதிபலனையும் எதிர்பார்த்து செய்யவில்லை என்றும் எளிமையாக சொல்கிறார்கள். கண்பா தாதாவை போல் பலரும் இந்திய அரசு 1972ம் ஆண்டிலிருந்து வழங்கி வரும் பென்சனை ஏற்க மறுத்து விட்டார்கள்.

எங்களுடைய பத்து முத்தான விடுதலைப் போராட்ட கதைகள் என்ற சிறப்பான பகுதியை வாசகர்கள் அடிக்கடி சென்று படிக்க கேட்டுக் கொள்கிறேன். இன்னும் ஐந்து வருடங்களில் அவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள். பிரிட்டிஷ்ஷின் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடி இந்திய விடுதலை பெற்றுக் கொடுத்தவர்களை சந்திக்கவோ அவர்களுடன் உரையாடவோ அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு இருக்காது.

இப்போது அவரும் சென்றுவிட்டார். இந்தியாவின் வேகமாக மறைந்து கொண்டிருக்கும் பொற்கால தலைமுறையில் இன்னொருவரும் கிளம்பிவிட்டார். தன்னுடைய கதையை சொல்ல விரும்பி எங்களை அவர் தேர்ந்தெடுத்ததில் பெருமை கொள்ளும் நாங்கள்  பாரியில் தற்போது துக்கம் அனுசரித்தாலும் அவருடைய வாழ்க்கையை கொண்டாடுகிறோம். 100வது வயது வரை விவசாயியாக இருந்தவர் அவர். அவருடைய ஓரறை வீட்டிலிருந்து கிளம்புகையில் அவரின் கைகளால் எனக்கு ஒன்றை கொடுக்க விரும்புவதாகக் கூறினார். ஒரு கோப்பை பால்! அச்சமயத்தில் நாங்கள் இருவருமே உணர்ச்சிவயப்பட்டோம்.

அந்த கணத்தை சம்பத் மோரை காட்டிலும் வேறு எவரும் சிறப்பாக விவரிக்கவில்லை: ”சாய்நாத் சார் ஆங்கிலத்தில் பேசினார். கண்பா தாதா மராத்தியில் பேசினார். கிளம்புவதற்கான நேரம் வந்ததும் ஆங்கிலம் தெரியாத தாதா, சாய்நாத்தின் உடல்மொழி கொண்டு அவர் கிளம்பப் போவதை புரிந்து கொண்டார். தாதா உணர்ச்சிவசப்பட்டார். அவர் எழுந்து சாரின் கைகளை தன் கைகளில் இறுக்கப் பிடித்துக் கொண்டார். தாதாவின் கண்கள் கண்ணீர் மல்கின. சாரும் தாதாவின் கைகளை நீண்ட நேரத்துகு பிடித்திருந்தார். இருவரும் மொழியின் தேவையின்றி பேசிக் கொண்டதை நாங்கள் அனைவரும் பார்த்தோம்.”

தமிழில் : ராஜசங்கீதன்

P. Sainath

পি. সাইনাথ পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক। বিগত কয়েক দশক ধরে তিনি গ্রামীণ ভারতবর্ষের অবস্থা নিয়ে সাংবাদিকতা করেছেন। তাঁর লেখা বিখ্যাত দুটি বই ‘এভরিবডি লাভস্ আ গুড ড্রাউট’ এবং 'দ্য লাস্ট হিরোজ: ফুট সোলজার্স অফ ইন্ডিয়ান ফ্রিডম'।

Other stories by পি. সাইনাথ
Translator : Rajasangeethan

রাজাসংগীতন চেন্নাইবাসী লেখক। এক প্রখ্যাত তামিল খবরের চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করেন।

Other stories by Rajasangeethan