பழங்குடி மக்களுக்கென சொந்தமாக துன்பங்கள் இருக்கின்றன. ஆனால் அவை எப்படி அச்சமூகத்தின் பண்பாட்டுக்குள் நுழைந்தது என்பதை முக்கியமாக பார்க்க வேண்டும். உதாரணமாக, நவீன கல்வி ஒரு புதிய பாணியை உருவாக்கியது. எங்களின் பல பிரச்சினைகள் புதிய படித்த வர்க்கத்தின் வழியாக வருகின்றன. எங்கள் கிராமத்தை சேர்ந்த ஓர் ஆசிரியர் தற்போது கட்டும் வீட்டை கிராமத்து மண்ணில் கட்டவில்லை. அவர் ராஜ்பீப்ளாவில் ஒரு மனை வாங்குகிறார். இளைய தலைமுறை வளர்ச்சி பற்றி கற்பனை கருத்துகள் கொண்டிருக்கின்றது. சொந்தமான நிலத்திலிருந்து வேரோடு பிடுங்கப்பட்டு, அந்நிய மண்னில் நடப்படும் அவர்களின் வாழ்க்கை பாரம்பரியத்தை விட்டகன்றதாக இருக்கிறது. அவர்களால் சிவப்பரிசியை ஜீரணிக்க முடியவில்லை. நகர வேலை கொடுக்கும் அந்தஸ்தை அவர்கள் ருசிக்க விரும்புகின்றனர். இத்தகைய சேவகத்தன்மை எங்களின் பண்பாடாக எப்போதும் இருந்ததில்லை. அவர்கள் இப்போது படித்திருந்தாலும் வேலை பெற்றிருந்தாலும் நகரங்களில் வாழ இடங்கள் கிடைப்பதில்லை. அங்கு மக்கள் அவர்களை ஒதுக்கி வைக்கின்றனர். எனவே முரண்பாடுகளை தவிர்க்க அவர்கள் தங்களின் அடையாளத்தை மறைக்கத் தொடங்குகின்றனர். பழங்குடி அடையாளத்தின் மையமாக தற்போது முரண்கள் எழுந்து நிற்கின்றன.
நாகரிகமற்ற இலுப்பை
நாட்டின் சில மேட்டுக்குடி மக்கள்
நாகரிகமற்றதாக இலுப்பையை
அறிவித்து விட்டதால்
தங்களை நாகரிமற்றவர்களென
எங்கள் மக்களும் உணரத் தொடங்கி விட்டனர்.
அப்போதிலிருந்து என் தாய்
இலுப்பை பூக்களை தொட அஞ்சுகிறார்.
இலுப்பை பெயரையே தந்தை வெறுக்கிறார்.
இலுப்பைக்கு பதிலாக
ஒரு சிறு துளசிச் செடியை முற்றத்தில் வைத்து
என் சகோதரன் நாகரிமாக உணர்ந்து கொள்கிறான்.
நாட்டின் சில மேட்டுக்குடி மக்கள்
நாகரிகமற்றதாக இலுப்பையை
அறிவித்து விட்டதால்
தங்களை நாகரிமற்றவர்களென
எங்கள் மக்களும் உணரத் தொடங்கி விட்டனர்.
ஆன்மரீதியாக வாழ்ந்த என் மக்கள்
தற்போது ஆற்றை புனிதமாகக் கருதவும்
மலைகளை வணங்கவும்
முன்னோர்களை பின்பற்றவும்
பூமியை தாய் என அழைக்கவும்
கூசுகின்றனர்.
சொந்த அடையாளங்களை மறைத்து
நாகரிகமற்ற தன்மைகளிலிருந்து விடுதலை பெற
சிலர் கிறித்துவத்துக்கு செல்கின்றனர்
சிலர் இந்துவாகின்றனர்
சிலர் சமணராகின்றனர் சிலர் இஸ்லாமியராகின்றனர்.
நாட்டின் சில மேட்டுக்குடி மக்கள்
நாகரிகமற்றதாக இலுப்பையை
அறிவித்து விட்டதால்
தங்களை நாகரிமற்றவர்களென
எங்கள் மக்களும் உணரத் தொடங்கி விட்டனர்.
சந்தைகளை வெறுத்த என் மக்கள்
இப்போது சந்தைகளை வீடுகளுக்கு கொண்டு வருகின்றனர்.
நாகரிகத்தை பாதிக்கும் எதையும்
அவர்கள் விட்டுவைப்பதில்லை.
தனிமனிதவாதம்தான் நாகரிகத்தின்
மிகப் பெரியக் கண்டுபிடிப்பு.
ஒவ்வொருவரும் ‘நான்’ எனப் பேசக் கற்றுக் கொள்கின்றனர்.
அவர்கள் ‘சுயம்’ என்பதை
சமூகமாக புரிந்து கொள்ளாமல்
தன்னலம் என புரிந்து கொள்கின்றனர்.
நாட்டின் சில மேட்டுக்குடி மக்கள்
நாகரிகமற்றதாக இலுப்பையை
அறிவித்து விட்டதால்
தங்களை நாகரிமற்றவர்களென
எங்கள் மக்களும் உணரத் தொடங்கி விட்டனர்.
கதைகளை சொந்தமாகப் பாடி
காவியங்களை சொந்த மொழியில் எழுதிய என் மக்கள்
தம் மொழியை மறந்து கொண்டிருக்கின்றனர்.
பதிலாக ஆங்கிலத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கின்றனர்.
அவர்களின் குழந்தைகள் செடிகளையும் மரங்களையும்
ஆறுகளையும் இந்த நிலத்தின் மலைகளையும் கனவு காணுவதில்லை.
அமெரிக்காவையும் லண்டனையும் கனவு காணுகின்றனர்.
நாட்டின் சில மேட்டுக்குடி மக்கள்
நாகரிகமற்றதாக இலுப்பையை அறிவித்து விட்டதால்
தங்களை நாகரிமற்றவர்களென
எங்கள் மக்களும் உணரத் தொடங்கி விட்டனர்.
தமிழில் : ராஜசங்கீதன்