வெளிர்சிவப்பு நிறம் பூசப்பட்டிருக்கிறது. KFC என்ற பெயர் இடம்பெற்றிருக்கிறது.
இங்கு வழங்கப்படும் ருசியான உணவுக்கு காரணம், K எழுத்து தாங்கி நிற்கும் கெண்டக்கியின் கர்னல் சேண்டர்ஸ் அல்ல. ஒரு தள உணவகத்தை நடத்திக் கொண்டிருக்கும் குலமொராக்காரரான 32 வயது பிமன் தாஸ்.
நதுன் குலமொரா சப்போரி என அழைக்கப்படும் இக்கிராமம் அசாமின் மஜுலியிலுள்ள ஆற்றுத்தீவு ஆகும். குலமொராவில் விவசாயிகளாகவும் விவசாயத் தொழிலாளர்களாகவும்இருக்கும் 480 பேர் (கணக்கெடுப்பு 2011) மட்டுமின்றி, தீவுக்கு வருபவர்கள் கூட கேஎஃப்சி உணவைத் தேடி வருகின்றனர். எல்லா பயண ஏடுகளிலும் நல்லவிதத்தில் அந்த உணவகம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
“ஒரு வண்டியில் வைத்து கேஃப்சியை நான் 2017ம் ஆண்டில் தொடங்கினேன்,” என்கிறார் 2022ம் ஆண்டின் மே மாதத்தில் ஒரு சுட்டெரிக்கும் மதியவேளையில் உணவகத்தை திறந்து கொண்டிருக்கும் பிமன். சுவர்களின் உள்ளும் புறமும் வெளிர் சிவப்பு நிறம் பூசப்பட்டிருக்கிறது. ஆடுகளும் வாத்துகளும் கால்நடைகளும் வெளியே வெயிலில் சுற்றிக் கொண்டிருக்கின்றன
வறுத்து கலக்கப்பட்ட நூடுல்ஸ் மற்றும் பிற உணவுகளை தள்ளுவண்டியில் வைத்து விற்கத் தொடங்கினார் பிமன். இரண்டு வருடங்கள் கழித்து 2019ம் ஆண்டில் 10 பேர் கொண்ட உணவகம் திறந்தார். உருளைக் கிழங்கு வறுவல்கள், பர்கர்கள், பிட்சாக்கள், பாஸ்தாக்கள், மில்க்ஷேக்குகள் போன்றவற்றை உணவகத்தில் அளித்தார்.
குலமொரோவின் உள்ளூர்வாசிகளிடம் மட்டுமின்றி உலகளவிலிருந்து தீவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மத்தியிலும் கேஃப்சி பிரபலம். கூகுள் பரிந்துரைகளில் 4.3 நட்சத்திர ரேட்டிங்குக்கு அவர்கள்தான் காரணம். கேஃப்சியின் ருசியும் தரமும் பரவலாக பாராட்டுகளை பெற்றிருக்கின்றன.
கிருஷ்ணா ஃப்ரைட் சிக்கன் என ஏன் பெயர் சூட்டப்பட்டது? பிமன் தன் செல்பேசியை எடுத்து அவர், அவரது மனைவி தெபஜனி தாஸ் மற்றும் 7-8 வயது கொண்ட ஒரு சிறுவன் ஆகியோரிருக்கும் புகைப்படத்தை காட்டுகிறார். “என் மகன் கிருஷ்ணாவின் பெயரைத்தான் உணவகத்துக்கு சூட்டியிருக்கிறேன்,” என்கிறார் பெருமையுடன் அந்தத் தந்தை புன்னகைத்தபடி. பள்ளி முடிந்ததும் அவரது மகன் தினமும் கேஃப்சிக்கு வந்து ஒரு ஓரமாக அமர்ந்து பெற்றோர் வாடிக்கையாளர்களை கவனித்துக் கொண்டிருக்க, தன் வீட்டுப்பாடங்களை செய்வார் என்கிறார் பிமன்.
மதிய உணவு நேரம். மொறுமொறுப்பான சிக்கன் பர்கரையும் உருளைக்கிழங்கு வறுவலையும் சாப்பிட பரிந்துரைக்கிறார். அவை எப்படி செய்யப்படுகின்றன என்றும் அவர் நமக்குக் காட்டுகிறார். “மஜுலியிலேயே சுத்தமான சமைலயறைகளில் ஒன்றை நான் கொண்டிருப்பதாக சொல்வார்கள்,” என்கிறார் அவர். மூன்று கவுண்ட்டர்கள் இருக்கும் உணவகத்தில் ஒரு குளிர்சாதனப்பெட்டியும் மின் அடுப்புகளும் வறுப்பானும் இருக்கின்றன. வெட்டப்பட்ட காய்கறிகள் அழகாக அடுக்கப்பட்டிருக்கின்றன. சமையல் அலமாறிகளில் சாறு மற்றும் குழம்பு புட்டிகள் இருக்கின்றன.
ஊற வைத்த கோழிக்கறியை குளிர்சாதனப்பெட்டியில் இருந்து பிமன் எடுக்கிறார். மாவை அதில் தடவி, நன்றாக வறுக்கிறார். எண்ணெயில் அது வறுபட்டுக் கொண்டிருக்கும்போது அவர் ரொட்டிகளை சுடத் தொடங்குகிறார். சமைத்தபடி அவர் பேசுகிறார்: “காலையிலேயே என் அம்மா வேலைக்கு கிளம்பி விடுவார். நான் சாப்பாடு சமைத்துக் கொள்ள வேண்டும்,” என அவர் 10 வயதில் எப்படி சமைக்கத் தொடங்கினார் என்பதை விளக்குகிறார். அவரின் தாயான இலா தாஸ் மஜுலியில் விவசாயத் தொழிலாளராக இருந்தவர். தந்தை திகல தாஸ் மீன் விற்றார்.
“அவர் சமைக்கும்போது நான் கவனித்தேன். பருப்பு, கோழிக்கறி மற்றும் மீன் போன்றவற்றை எப்படி சமைப்பது என கற்றுக் கொண்டேன்,” என்கிறார் பிமன். “என் அண்டைவீட்டாரும் நண்பர்களும் வீட்டுக்கு வந்து சாப்பிடுவார்கள். அந்தளவுக்கு அவர்களுக்கு என் சமையல் பிடிக்கும். அதில் உத்வேகமடைந்து நான் இன்னும் அதிகமாக சமைக்கத் தொடங்கினேன்.”
18 வயதில் வாழ்வாதாரம் தேடி பிமன் வீட்டை விட்டு கிளம்பினார். கையில் வெறும் 1,500 ரூபாய் வைத்துக் கொண்டு நண்பருடன் அவர் மும்பைக்கு சென்றார். ஒரு குடியிருப்பின் காவலாளி வேலையை ஓர் உறவினர் அவருக்கு வாங்கிக் கொடுத்தார். ஆனால் அவர் அதில் தொடரவில்லை. “வேலையிலிருந்து நான் ஓடி வந்துவிட்டேன். மிகவும் மோசமாக உணர்ந்ததால் வேலை வாங்கிக் கொடுத்த உறவினருக்கு கடிதம் எழுதினேன். ‘என்னை கேவலமாக நினைக்க வேண்டாம். எனக்கு அந்த வேலை பிடிக்காததால் கிளம்பி விட்டேன். எனக்கு அந்த வேலையில் திருப்தி இல்லை’ என எழுதி அனுப்பினேன்.”
அதற்குப் பிறகு மும்பையின் பல ரெஸ்டாரண்டுகளில் அவர் சிறு சிறு வேலைகள் பார்த்தார். அங்குதான் பஞ்சாபி, குஜராத்தி, இந்தோசீனா போன்ற உணவு வகைகளை சமைக்க அவர் கற்றுக் கொண்டார். தொடக்கத்தில் பிரதானமாக இருக்கவில்லை. “தொடக்கத்தில் நான் தட்டுகளை துடைத்து, மேஜைகளை தயார் செய்யும் வேலைதான் செய்தேன்,” என்கிறார் அவர். 2010ம் ஆண்டில் பிமன் ஹைதரபாத்தில் எடிகோ என்கிற ஃபுட்கோர்ட்டில் வேலை கிடைத்தது. அடுத்தடுத்த பொறுப்புகளுக்கு உயர்ந்து அங்கு அவர் மேலாளர் ஆனார்.
இவற்றுக்கிடையே அவர் காதலில் விழுந்து தெபஜானியை மணம் முடித்தார். கேஃப்சியின் பங்குதாரராக தெபஜானி தற்போது இருக்கிறார். அவரின் ஒன்று விட்ட தங்கைகள் ஷிவானியும் தெபஜானி என பெயர் கொண்ட தங்கையும் உணவகத்தில் உதவுகின்றனர்.
ஹைதராபாத்துக்கு பிறகு பிமான், மஜுலிக்கு செல்ல முடிவெடுத்தார். தொடக்கத்தில் அசாமின் சிவசாகர் மாவட்டத்திலுள்ள டெமொவ் ஒன்றியத்திலுள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்தார். ஆனால் எல்லா நேரமும் ஓர் உணவகம் சொந்தமாக தொடங்கும் கனவு அவருக்கு இருந்தது. அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். தனிக் கட்டடத்தில் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கும் ஓர் உணவகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். “சமையலறையை நான் (உணவகத்துக்கு பின்னால்) கட்டினேன். அமரும் இடத்தை 2,500 ரூபாய் மாத வாடகைக்கு விட்டேன்,” என்கிறார் பிமன்.
120 ரூபாய் கொடுத்து ஓர் அற்புதமான பர்கர் மற்றும் உருளைக்கிழங்கு வறுவல்களை விழுங்கிக் கொண்டே அவரின் வாழ்க்கைக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். வாடிக்கையாளர்களுக்கு பிடித்த பிற உணவுகளில் பிட்சா முக்கியமானது என்கிறார் அவர். பிட்சாவின் விலை ரூ.270. புத்துணர்ச்சி தரும் எலுமிச்சை சாறு, மில்க் ஷேக் மற்றும் வெஜிடபிள் ரோல்கள் ஆகியவற்றை பரிந்துரைகள் குறிப்பிடுகின்றன.
பிமனும் அவரது குடும்பமும் குலமொராவிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள சென்சோவாவில் வசிக்கின்றனர். தினமும் உணவகத்துக்கு ஸ்விஃப்ட் டிசைர் காரில் வருகிறார். “என் வேலையை காலை 9 மணிக்கு தொடங்கி விடுவேன். காய்கறிகள் மற்றும் கோழிக்கறியை வெட்டி தயார் செய்வேன்,” என்கிறார் பிமன்.
நல்ல நாளில் அவர் 10,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார். அக்டோபர் - டிசம்பர் வரையிலான சுற்றுலா காலத்தில் இத்தகைய வருமானம் கிடைக்கும். பிற நாட்களில் 5,000 ரூபாய் வரை ஈட்டுவதாக சொல்கிறார் அவர்.
வழக்கமான வாடிக்கையாளரான நிகிதா சேட்டர்ஜி உள்ளே வந்து ஆர்டர் சொல்கிறார். சமூக செயற்பாட்டாளரான அவர் மும்பையிலிருந்து மஜூலிக்கு இடம்பெயர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. “கேஎஃப்சி என்னுடைய மீட்சி,” என்கிறார் அவர். “கிருஷ்ணா ஃப்ரைட் சிக்கன் பற்றி முதலில் நான் கேள்விபட்டபோது, மக்கள் மஜுலியில் அது தரம் வாய்ந்த உணவகம் என்றார்கள். ஆனால் உணவை சாப்பிட்டு பார்த்தபோது, எந்த ஊரைக் காட்டிலும் தரம் நிறைந்த உணவு அது என்பதை உணர்ந்தேன்.”
பிமனை பார்த்துவிட்டு அவர், “எனக்கு சில புகார்களும் இருக்கின்றன. ஏன் உணவகத்தை இரண்டு நாட்கள் மூடுகிறீர்கள்?” எனக் கேட்கிறார். அசாமில் பிரபலமாக கொண்டாடப்படும் பிகு விழாவுக்கு தீவு முழுக்க கடைகள் மூடப்படும் இரண்டு நாட்களை அவர் குறிப்பிடுகிறார்.
“கடந்த இரண்டு நாட்களில் நீங்கள் எதாவது சாப்பிட்டீர்களா?” என பிமன் கிண்டலாக கேட்கிறார்.
நீங்கள் நதுன் குலமொரா சபோரிக்கு செல்ல நேர்ந்தால் கேஎஃப்சியை தவற விடாதீர்கள். ருசி மிக்க உணவு கிடைக்கும்.
தமிழில் : ராஜசங்கீதன்