சிவப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறக் கொடிகளை உயர்த்திப் பிடித்தபடி மேடையைக் கடந்து அவர்கள் நடந்தார்கள். பெண் விவசாயிகளின் குழு ஒன்று தலைகளில் பச்சை துப்பட்டாக்கள் அணிந்து அணிவகுத்து வந்தனர். சில ஆண்கள் அரைவெள்ளை மற்றும் பழுப்பு சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை தலைப்பாகைகளை அணிந்து ட்ராக்டர்கள் ஓட்டினர். கொடிகளுடனான வெவ்வேறுக் குழுக்கள் நாள் முழுவதும் மேடையைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். ஒவ்வொரு நிறமும் ஒரு காவியக் கவிதையின் வரிகளைப் போல் மிதந்து சென்றது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியின் எல்லையை அடைந்து ஒரு வருடம் கழிந்துவிட்டது. ஓராண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகளும் ஆதரவாளர்களும் சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் போராட்டக் களங்களில் நிரம்பினர்.

வெற்றி மற்றும் கண்ணீர், நினைவுகள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றின் நாளாக அது இருந்தது. இந்தப் போரில் வெற்றிக் கிடைத்துவிட்டது என்றாலும் இறுதி வெற்றிக்கு இன்னும் தூரம் இருக்கிறது என்கிறார் 33 வயது குர்ஜீத் சிங். மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என நவம்பர் 19ம் தேதி பிரதமரால் அறிவிக்கப்பட்டபோது அவர் சிங்குவில் இருந்தார். பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் மாவட்டத்தின் அரையன்வாலா கிராமத்தில் சிங்குக்கு 25 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது.

“இந்த வெற்றிக்கு மக்களே உரிமை கொண்டவர்கள். ஒரு பிடிவாதமான நிர்வாகியை நாம் தோற்கடித்திருக்கிறோம். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்,” என்கிறார் 45 வயது குர்ஜீத் சிங் ஆசாத். அவரும் அறிவிப்பு நாளில் சிங்குவில்தான் இருந்தார். ஆசாதின் கிராமமான பாட்டியானில் அவருக்கு இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் அவரது மாமாக்கள் கோதுமை மற்றும் நெல்லை விளைவிக்கின்றனர். “இந்தப் போர் நவம்பர் 26-ல் துவங்கவில்லை. அந்த நாளில் அப்போர் தில்லியை வந்தடைந்தது,” என்கிறார் அவர். “மசோதாக்கள் சட்டங்களாக்கப்படுவதற்கு பல காலத்துக்கு முன்பிருந்தே விவசாயிகள் போராடத் துவங்கி விட்டனர். மூன்று வேளாண் சட்டங்களும் செப்டம்பர் 2020-ல் நிறைவேற்றப்பட்ட பிறகு, அனைவரும் தில்லிக்கு வரச் சொல்லி அழைப்பு விடுக்கப்பட்டது. நாங்கள் அழைப்பை ஏற்று வந்தோம்.”

கடந்த வருடத்தில் நடந்தப் பேரணியை அவர் நினைவுகூர்ந்தார். “தில்லியை நோக்கி நாங்கள் நகரத் தொடங்கியதும் அரசு நீர் பீய்ச்சத் தொடங்கியது. குழிகளை தோண்டினார்கள். வேலிகள் கட்டி முட்கம்பிகள் போட்டுத் தடுக்க நாங்கள் ஒன்றும் போர் தொடுப்பதற்காக வரவில்லை.” (கடந்த வருடத்தில் 62 வயது ஜோக்ராஜ் சிங் , காவலர்களுக்கும் அவரைப் போன்ற விவசாயிகள்தான் உணவு போடுவதாகவும் காவலர்களும் அவர்களுக்கு சொந்தப் பிள்ளைகள் போன்றவர்கள்தான் என்றும் காவலர்களின் லத்திகளுக்கு உணவு தேவைப்பட்டால் தங்களின் முதுகுகளை கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் கூறினார்.)

PHOTO • Amir Malik

துன்பகரமான வருடத்தில் இருந்த அதே அமைதியைத்தான் நவம்பர் 26 கொண்டாட்டத்திலும் விவசாயிகள் கொண்டிருந்தனர். அவர்கள் ஆடினார்கள், பாடினார்கள், லட்டுக்கள் கொடுத்தார்கள்

கடந்த வாரத்தில் ரஜிந்தர் கவுரும் சிங்குவில் இருந்தார். பாடியாலா மாவட்டத்தின் தவுன் கலான் கிராமத்தைச் சேர்ந்தவர். 26 முறை போராட்டக் களங்களுக்கு வந்திருக்கிறார். “போராட்டம் தொடங்கியதிலிருந்து சுங்கச் சாவடியில் எந்த விவசாயியும் கட்டணம் கட்டாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன்,” என்கிறார் 48 வயது ரஜிந்தர். அவரது குடும்பத்துக்கு ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. “முதலில் அவர் (பிரதமர்) சட்டங்களைத் திணித்தார். பிறகு அவர் திரும்பப் பெற்றார். இவற்றுக்கிடையில் எங்களுக்குதான் பெருநஷ்டம். அவர் அச்சட்டங்களை முதலில் கொண்டு வந்திருக்கவே கூடாது. கொண்டு வந்த பிறகு, முன் கூட்டியே அவற்றைத் திரும்பப் பெற்றிருக்க வேண்டும்.”

பிரதமர் 12 மாதங்களாக சட்டங்களை திரும்பப் பெறாமலிருந்தச் சூழலில், அரசின் அலட்சியத்தையும் குளிர்காலக் காற்றையும் விவசாயிகள் தைரியமாக எதிர்கொண்டனர். சுட்டெரிக்கும் சூரியனையும் கூடாரங்களை அடித்துச் சென்ற மழைகளையும் புயல்களையும் தைரியமாக அவர்கள் எதிர்கொண்டனர். நீர் மற்றும் மின்சார வசதிகள் நிறுத்தப்படும் என அவர்கள் மிரட்டப்பட்டனர். கழிவறைகளுக்கான பற்றாக்குறையையும் தொற்றுநோயின் ஆபத்துகளையும் அவர்கள் பொறுத்துக் கொண்டனர்.

”நாங்கள் களைப்படைந்தால் போய் விடுவோம் என அரசு நினைத்தது. ஆனால் நாங்கள் போகவில்லை,” என்கிறார் ஆசாத். உறுதியுடன் விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்த போதும் பிரதான ஊடகங்கள் பலவை அவர்களை இருட்டடிப்பு செய்தன. விவசாயிகளுக்கான சமூக தளக் கணக்குகளை ஆசாத் பார்த்துக் கொண்டார். விவசாயிகளுக்கு கல்வி அறிவு இல்லை என்றும் காலிஸ்தானிகள் என்றும் பலவிதமாக ஊடகங்கள் கட்டமைத்த கட்டுக்கதைகளை எதிர்கொள்ள அது பயன்பட்டது என்கிறார். “நாங்கள் படிக்காதவர்கள் என்றார்கள். எங்களால் சுயமாய் சிந்தித்து புரிந்து கொள்ள முடியாது எனத் தாக்கினார்கள். அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, மறுப்புகளை நான் எழுதினேன்,” என்கிறார் அவர்.

“இந்த இயக்கம் எங்களுக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது,” என்கிறார் குர்ஜீத் சிங். “எத்தனைக் கடினமாக இருந்தாலும் உண்மைக்கான போரை வெல்ல முடியும் எனக் கற்றுக் கொடுத்தது. நாட்டின் அரசியல்வாதிகளுக்கும் அது ஒரு விஷயத்தை முக்கியமாகக் கற்றுக் கொடுத்திருக்கிறது. நாட்டு மக்கள் மீது இத்தகையச் சட்டத்தை திணிப்பதற்கு முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டுமெனப் புரிய வைத்திருக்கிறது.”

“நாங்கள் வெற்றியடையவே வந்தோம். வெற்றி எங்களுக்குக் கிடைக்கும்போதுதான் நாங்கள் கிளம்புவோம்,” என்கிறார் சுக்தேவ் சிங். ஃபதேகர் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் மஜ்ரா கிராமத்தைச் சேர்ந்தவர். 15 வருடத்துக்கு முன் நேர்ந்த ஒரு விபத்தில் இடது காலை இழந்தவர்.47 வயதான அவர் சொல்கையில்,”திரும்பப் பெறும் அறிவிப்பு வந்த பிறகும் கூட, எங்களைக் கிளப்புவதில்தான் குறியாக இருக்கிறார்கள். நாடாளுன்றத்தில் முறையாக சட்டங்கள் திரும்பப் பெற வேண்டும். மின்சாரத் திருத்த மசோதாவும் திரும்பப் பெற வேண்டும். அது வரை நாங்கள் போக மாட்டோம்.”

துன்பகரமான வருடத்தில் இருந்த அதே அமைதியைத்தான் நவம்பர் 26 கொண்டாட்டத்திலும் விவசாயிகள் கொண்டிருந்தனர். அவர்கள் ஆடினார்கள், பாடினார்கள், இனிப்புகளையும் பழங்களையும் கொடுத்தார்கள். சமையல் மற்றும் பிறச் சேவைகளும் தொடந்தன.

PHOTO • Amir Malik

வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளில் போராட்டக் களத்தில் இருந்தால்தான் நிம்மதியாக மரணமடைய முடியுமென 87 வயது முக்தார் சிங் அவரின் மகனிடம் தன்னைப் போராட்டக் களத்துக்கு அழைத்துச் செல்லக் கேட்டிருக்கிறார். இங்கு அவர் பேரன் மற்றும் கர்னாலைச் சேர்ந்த கவிதை விவசாயியான தேவி சிங் ஆகியோருடன் இருக்கிறார்

நவம்பர் 26ம் தேதி சிங்கு மற்றும் திக்ரி எல்லைகள், பல துறைகள் மற்றும் தொழில்கள் சார்ந்த மக்களால் நிரம்பி வழிந்தது. விவசாயிகளுக்கு அவர்கள் வாழ்த்துச் சொல்ல வந்திருந்தனர். பலர் அழவும் செய்தார்கள்.

பல விவசாயத் தலைவர்கள் மேடையில் இருந்தனர். முன்னால் இருந்த பெண் மற்றும் ஆண் விவசாயிகள் ஒவ்வொரு கோஷத்தையும் பெருமையுடனும் உணர்வெழுச்சியுடனும் போட்டனர். மேடையில் பேசிய ஒவ்வொருவரும் கடந்த வருடப் போராட்டத்தில் உயிரிழந்த 700 விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

“ஓராண்டு நிறைவுக்காக இங்கு வந்திருக்கும் விவசாயிகள் வெற்றியைக்  கொண்டாடுவதற்காக மட்டும் வரவில்லை. உயிர் கொடுத்தத் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தவும் வந்திருக்கின்றனர்,” என்கிறார் ஆசாத். “நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோமா கவலையில் இருக்கிறோமா என எங்களுக்கே தெரியவில்லை,” என்கிறார் குர்ஜீத். “இந்த நோக்கத்துக்காக உயிரிழந்த சக போராட்டக்காரர்களை நினைத்து எங்கள் கண்களில் இன்னும் ஈரம் இருக்கிறது. அவர்களுக்கு நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம்.”

வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளில் போராட்டக் களத்தில் இருக்கவென 87 வயது முக்தார் சிங் அமிர்தசரசின் சென்ஸ்ரா கிராமத்திலிருந்து சிங்குவுக்கு வந்திருக்கிறார். அங்கு அவருக்கு ஒன்பது ஏக்கர் நிலம் இருக்கிறது. அவரால் பேசவோ நடக்கவோ முடியவில்லை. முதுகு வளைந்து, பற்றுக்கோலின் உதவியுடன் சிறு அடிகள் வைத்து மேடையை நோக்கிச் செல்கிறார். சட்டங்கள் திரும்பப் பெறப்படுமென அறிவிக்கப்பட்டதும் அவரின் மகனான 36 வயது சுக்தேவ் சிங்கிடம் தன்னைப் போராட்டக் களத்துக்கு அழைத்துச் செல்லக் கேட்டிருக்கிறார். தன்னுடைய மொத்தக் காலத்தையும் விவசாயிகளுக்காக (சங்க உறுப்பினராக) பணிபுரிந்தே கழித்ததால், போராட்டக் களத்தைக் கண்டால்தான் நிம்மதியாக உயிரை விட முடியுமெனச் சொல்லியிருக்கிறார்.

ஒரு வருட கால காத்திருப்பின்போது, சட்டங்கள் திரும்பப் பெறப்படுமா எனச் சந்தேகமே இருந்ததாகச் சொல்கிறார் ஹர்சோவல் கிராமத்தைச் சேர்ந்த 58 வயது விவசாயியான குல்வந்த் சிங். “ எனக்குள் நானே போராடி, நம்பிக்கை ஏற்படுத்திக் கொள்வேன்.”

சட்ட உரிமையான குறைந்தபட்ச ஆதார விலை, லகிம்புர் கெரியில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கான நியாயம் முதலியக் கோரிக்கைகளை பற்றியும் விவசாயிகள் பேசினர். இவற்றுக்காகவும் இன்னும் பல பிரச்சினைகளுக்காகவும் போராட்டம் தொடரும் என்கிறார்கள். கவிஞர் இக்பாலின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன:

“விவசாயிக்கு உணவாகாத விளைச்சல் கொண்ட நிலத்தைக் கண்டுபிடி
ஒவ்வொரு கோதுமையையும் பாதுகாக்க உலையில் கொண்டு சேர்ப்பி!”

PHOTO • Amir Malik

திக்ரி, சிங்கு மற்றும் காசிப்பூரில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெற்றியையும் நினைவுகளையும் ஒன்றுபோல் பகிர்ந்து கொண்ட நாள்


PHOTO • Amir Malik

திக்ரியில் உள்ள சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் மேடைக்கு அருகில் இந்த விவசாயியைப் போல பலர் வரலாற்று தருணத்தைப் பதிவு செய்தனர்


PHOTO • Amir Malik

மேடையில் பேசிய ஒவ்வொருவரும் கடந்த ஆண்டுப் போராட்டத்தில் உயிரிழந்த 700க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தினர் (இந்த புகைப்படம் திர்கியில் எடுக்கப்பட்டது)


PHOTO • Amir Malik

நவம்பர் 26 அன்று, சிங்கு மற்றும் திக்ரி எல்லையில் உள்ள மேடைகள் விவசாயிகளை வாழ்த்த வந்தப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்களால் நிரம்பி வழிந்தன. பலர் அழவும் செய்தனர்


PHOTO • Amir Malik

பல விவசாயத் தலைவர்கள் மேடையில் இருந்தனர். விவசாயிகள் நின்றும் அமர்ந்து கொண்டும் ஒவ்வொரு முழக்கத்திற்கும் ஆர்வத்துடனும் பெருமையுடனும் பதிலளித்தனர்


During the difficult year, said Kulwant Singh, sometimes he was uncertain if the laws would be repealed:' Then, I would again struggle to regain optimism and tell myself – chardi kalan [remain hopeful].
PHOTO • Amir Malik
Victory signs at the Singhu border
PHOTO • Amir Malik

கடினமான கடந்த ஆண்டில், சில சமயங்களில் சட்டங்கள் ரத்து செய்யப்படுமா என்று கூட சந்தேகம் கொண்டிருந்தார் குல்வந்த் சிங் (இடது).' பிறகு, நம்பிக்கையை மீட்டெடுக்க நான் மீண்டும் போராடுவேன்’ என்கிறார். வலது: சிங்கு எல்லையில் வெற்றி அறிகுறிகள்


PHOTO • Amir Malik

'நாங்கள் வெற்றி பெற வந்தோம், வெற்றி கிட்டினால் மட்டுமே செல்வோம்' என்று பல ஆண்டுகளுக்கு முன் இடது கால் துண்டிக்கப்பட்ட சுக்தேவ் சிங் கூறுகிறார்


PHOTO • Amir Malik

கொடிகள், மேடைப்பேச்சுகள் (இடது), கோஷங்கள் மற்றும் கைதட்டல்களுடன் பஞ்சு மிட்டாய்களும்


PHOTO • Amir Malik

ஓராண்டு நினைவைக் குறிக்கும் வகையில் விவசாயிகள் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்


Also at Singhu last week was Rajinder Kaur (fourth from left, in a photo taken in Patiala) – she had come to the protest sites 26 times.
PHOTO • Jaskaran Singh
Gurjeet Singh Azad (photo from last year) said: 'The government wanted to tire us and thought that we would go. We did not'
PHOTO • Altaf Qadri

இடது: கடந்த வாரம் சிங்குவில் ரஜிந்தர் கவுர் (இடமிருந்து நான்காவது, பாட்டியாலாவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில்). 26 முறை போராட்டக் களங்களுக்கு வந்திருக்கிறார். வலது: குர்ஜீத் சிங் ஆசாத் (கடந்த ஆண்டின் புகைப்படம்) சொல்கையில்: 'அரசாங்கம் எங்களை சோர்வடையச் செய்ய விரும்பியது. நாங்கள் செல்வோம் என்று நினைத்தது. நாங்கள் கிளம்பவில்லை'


An engineer from Delhi who came to witness the celebrations.
PHOTO • Amir Malik
Devi Singh, a farmer and poet from Baragaon in Karnal, Haryana
PHOTO • Amir Malik

இடதுபுறம்: கொண்டாட்டங்களைக் காண வந்த தில்லியைச் சேர்ந்த பொறியாளர். வலது: ஹரியானாவின் கர்னாலில் உள்ள பராகான் பகுதியைச் சேர்ந்த விவசாயி மற்றும் கவிஞரான தேவி சிங்


PHOTO • Amir Malik

'ஏகாதிபத்தியம் வீழட்டும்' என்ற சுவரெழுத்துக்கு முன் ஓய்வெடுக்கும் விவசாயிகள் குழு


PHOTO • Amir Malik

போராட்டம் நடந்த இடத்திலிருந்த வாழைப்பழத் தோல்களை எடுத்துச் செல்ல டிராக்டர் டிராலியில் ஏற்றும் பெண் தொழிலாளர்கள்


தமிழில் : ராஜசங்கீதன்

Amir Malik

আমির মালিক একজন স্বতন্ত্র সাংবাদিক ও ২০২২ সালের পারি ফেলো।

Other stories by Amir Malik
Translator : Rajasangeethan

রাজাসংগীতন চেন্নাইবাসী লেখক। এক প্রখ্যাত তামিল খবরের চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করেন।

Other stories by Rajasangeethan