“இந்தப்போராட்டங்கள் விவசாயிகளுடையது மட்டுமல்ல, விவசாய கூலித்தொழிலாளர்களுக்குமானது“ என்று ரேஷம் மற்றும் பீயன்ட் கவுர் இருவரும் கூறுகிறார்கள். “இந்த புதிய வேளாண் திருத்தச்சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், அது விவசாயிகளை மட்டும் பாதிக்காது, அவர்களை சார்ந்துள்ள விவசாயக்கூலித் தொழிலாளர்களையும் அதிகமாக பாதிக்கும்“ என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள்.
எனவே ஜனவரி 7ம் தேதி மதியம் இவ்விரு சகோதரிகளும் பஞ்சாபின் மக்ட்சர் மாவட்டத்தில் இருந்து பயணித்து வந்து தேசிய தலைநகரின் எல்லையில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் இரவில் மேற்கு டெல்லியின் திக்ரி பகுதியை அடைந்தன. அது வேளாண் திருத்தச்சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கும் ஒரு பகுதி ஆகும். இந்தப்பயணத்திற்கான ஏற்பாடுகளை பஞ்சாப் கேட் மசூர் யூனியன் அமைப்பு செய்திருந்தது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பத்திண்டா, பாரித்கோட், ஜலந்தர், மோகா, மக்ட்சர், பட்டியாலா மற்றும் சங்ரூர் மாவட்டங்களில் இருந்து வந்திருந்தனர். ரேஷமும், பியன்டும் மக்ட்சர் மாவட்டத்தில் உள்ள தங்கள் கிராமமான சான்னுவிலிருந்து இங்கு வந்த பேருந்துகள் ஒன்றில் ஏறியிருந்தனர்.
திக்ரி மற்றும் டெல்லி மற்றும் அதனைச்சுற்றியுள்ள மற்ற போராட்டக்களங்களிலும் நவம்பர் மாதம் 26ம் தேதி முதல், போராட்ட பிராசாரத்தில் நிறைய விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மற்றவர்கள் சில நாட்கள் மட்டும் சேர்ந்துகொள்கின்றனர். பின்னர் வீடுகளுக்கு திரும்பி, ஊரில் உள்ள மற்றவர்களுக்கு போராட்டம் குறித்து தெரிவிக்கின்றனர். “எங்கள் ஊரில் உள்ள பலருக்கு இந்த சட்டங்கள் எவ்வாறு விவசாய கூலித்தொழிலாளர்களை பாதிக்கும் என்பது தெரியாது“ என்று கூறுகிறார் 24 வயதான ரேஷம். “உண்மையில் எங்கள் கிராமத்தில் உள்ள செய்தி தொலைக்காட்சிகள், இந்த வேளாண் சட்டம் விவசாயிகளுக்கும், விவசாயத்தொழிலாளர்களுக்கும் நன்மை கொடுப்பதாகவே கூறுகின்றன. இந்தச்சட்டம் நடைமுறைக்கு வரும்போது விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம் வழங்கப்படும் மற்றும் சிறப்பான வசதிகள் வழங்கப்படும் என்று அவர்கள் கூறுகிறார்கள்“ என்று அவர் மேலும் தெரித்தார்.
விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள். 2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.ரேஷம் (இடது) மற்றும் பீயன்ட்: இந்த சட்டங்களின் மூலம் விவசாயிகளின் நிலங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டால், அவர்கள் வேலை தேடிக்கொண்டு, தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க முடியுமா?
இந்த மூன்று வேளாண் சட்டங்களும், விவசாயிகள் மற்றும் விவசாயத்தில் பெரும் சக்தியாக பெருவணிக நிறுவனங்கள் மாறுவதற்கு வழிவகுத்து தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் என்று விவசாயிகள் பார்க்கிறார்கள். இந்த சட்டம் மேலும், விவசாயிகளுக்கு ஆதரவான குறைந்தளவு ஆதார விலை, வேளாண் விலைபொருள் சந்தை குழு மற்றும் மாநில கொள்முதல் உள்ளிட்ட அம்சங்களை பலவீனமாக்குகிறது.
ரேஷம் மற்றும் பீயன்ட் இருவரும், பவுரியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அது ஒரு தலித் சமூகமாகும். சானு கிராமத்தில் 58 சதவீதமான 6,529 பேர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குடும்பம் விவசாய கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களின் தாய் பரம்ஜீத் கவுர் (45), விவசாய நிலங்களில் தொடர்ந்து வேலை செய்து வருகிறார். அவரது தந்தை பல்வீர் சிங்(50) தற்போது அவர்களது கிராமத்திலேயே பட்டறை வைத்துள்ளார். கையால் தள்ளப்படும் வண்டிகளும் (டிராலி), இரும்பு கதவுகளும் செய்கிறார். அவர்களின் சகோதரர் ஹர்தீப் (20), 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். திருமணமானவர். தன் தந்தைக்கு பட்டறையில் உதவியாக உள்ளார்.
எம்ஏ வரலாறு படித்துள்ள ரேஷம், ஊரடங்குக்கு முன்னர் வரை தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அதன் மூலம் மாதத்திற்கு ரூ.3 ஆயிரம் ஊதியமாக பெற்றார். அப்போது முதல் அவர் டியூசன் வைத்து மாதம் ரூ.2 ஆயிரம் சம்பாதிக்கிறார். பியன்ட் (22), இவர் பிஏ பட்டதாரி. கிளர்க் வேலைக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளார். சகோதரிகள் இருவரும் வீட்டில் தையல் வேலையும் செய்கின்றனர். அவர்கள் ரூ.300க்கு சுடிதார் தைத்துக்கொடுக்கின்றனர். சில நேரங்களில் அவர்களின் கல்லூரி கட்டணங்களைக்கூட அவர்கள் தைத்து ஈட்டும் ஊதியம் மூலம் செலுத்தியுள்ளனர்.
“நாங்கள் விவசாயக்கூலித் தொழிலாளர்கள் குடும்பத்தில் பிறந்தவர்கள்“ என்று ரேஷம் கூறுகிறார். “விவசாய தொழிலாளர் குடும்பத்தில் வளர்ந்த ஒவ்வொரு குழந்தைக்கும் வயல் வேலைகள் செய்வது எப்படி என்று நன்றாக தெரியும். நானும் எனது பெற்றோர்களுக்கு பின்னர், விடுமுறை நாட்களில் வயலில் வேலை செய்துள்ளேன். நாளொன்றுக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை கூலியாக பெற்றுள்ளேன்“ என்று மற்ற விவசாய தொழிலாளர்களின் குழந்தைகளை குறிப்பிட்டு கூறுகிறார். “பள்ளி விடுமுறை நாட்களில், மற்ற குழந்தைகளைப்போல, நாங்கள் வீட்டில் இருக்க மாட்டோம். வெளியில் செல்ல மாட்டோம் அல்லது பள்ளி இல்லாதபோது, பொழுதுபோக்கு பயணங்கள் செய்ய மாட்டோம். விவசாய நிலங்களில் கூலி வேலைக்கு செல்வோம்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
“இந்த புதிய சட்டங்கள் விவசாய கூலித்தொழிலாளர்களின் குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் செய்யும். இதனால், விவசாயத் தொழிலாளியின் குழந்தையும் விவசாயத்தொழிலாளியாக ஆவதற்கு மட்டுமே முடியும். விவசாயிகளின் நிலங்கள் இந்த சட்டங்கள் மூலம் எடுத்துக்கொள்ளப்படும்போது, எங்கள் பெற்றோர் வேறு வேலைக்குச் சென்று குழந்தைகளை படிக்க வைக்க முடியுமா? ஏழைகளை ஒன்றுமில்லாதவர்களாக்க இந்த அரசு முயற்சிக்கிறது. அவர்களை வேலையில்லாமல், உணவில்லாமல், கல்வியில்லாமல் விட நினைக்கிறது“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
திக்ரியில் இருந்து ஜனவரி 9ம் தேதி மதியவேளையில் சகோதரிகள் இருவரும், மற்ற உறுப்பினர்களுடன் ஹரியானா-டெல்லி எல்லையில் உள்ள சிங்கு போராட்ட களத்திற்கு சென்றனர். அவர்களின் பேருந்துகள் 3 கிலோ மீட்டர் தூரத்திலே நிறுத்தப்பட்டன. அவர்கள் மேடைக்கு அங்கிருந்து நடந்து சென்றனர். அப்போது அவர்களின் கோரிக்கை பதாகைகள் மற்றும் கொடியை ஏந்திச்சென்றனர். ரேஷம் ஏந்திச் சென்ற பதாகையில், ‘செல்வங்களை மக்களுக்காக திறந்து வையுங்கள், ரத்தம் உறிஞ்சும் பெரு நிறுவனங்களுக்காக திறக்காதீர்கள்‘ என்று எழுதியிருந்தது.
பியன்ட் தனது மூத்த சகோதரியைவிட அதிகளவிலான கூட்டங்களில் கலந்துகொண்டுள்ளார். அவர் பஞ்சாப் கேட் மஸ்தூர் யூனியனுடன் 7 ஆண்டுகளாக தொடர்பில் இருக்கிறார். ரேஷம் 3 ஆண்டுகளுக்கு முன்னர்தான் சேர்ந்தார். இது பியன்ட்டின் அத்தை மற்றும் மாமாவால்தான் சாத்தியமானது என்கிறார். அவர்கள் சன்னுவிற்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குந்தே ஹலால் கிராமத்தில் உள்ளார்கள். அவர்கள் பெண் குழந்தை வேண்டும் என்பதற்காக சிறு வயதிலே பியன்ட்டை தத்தெடுத்துக்கொண்டார்கள். அவர்கள் இந்த யூனியனின் உறுப்பினர்களாவார்கள். “எனவேதான் நான் சிறு வயதிலேயே இதில் இணைந்துவிட்டேன்“ என்று அவர் கூறுகிறார். (மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தனது வீட்டுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்காக வந்துவிட்டார்)
வாழ்வாதாரம், தலித்துக்களுக்கான நில உரிமைகள் மற்றும் சாதி பாகுபாடு போன்ற பிரச்னைகளுக்காக 5 ஆயிரம் உறுப்பினர்களைக்கொண்ட பஞ்சாப் கேட் மசூர் யூனியன் பணியாற்றுகிறது. “பெரும்பாலானோர் இந்தப்போராட்டத்தை விவசாயிகள், அவர்களின் நிலம் மற்றும் குறைந்தளவு ஆதார விலைக்கான போராட்டமாக பார்க்கிறார்கள். ஆனால், இது விவசாய தொழிலாளர்களுக்குமான போராட்டாகும். அவர்களின் உணவு பாதுகாப்பு மற்றும் பொது வினியோகத் திட்டம் ஆகியவற்றை பற்றியது“ என்று யூனியனின் பொதுச்செயலாளர் சிங் சேவேவாலா கூறுகிறார்.
“விவசாய தொழிலாளர்களுக்கான யூனியன் எங்கள் கிராமத்தில் இல்லை. விவசாயிகளுக்கு மட்டுமே உள்ளது. அதனால்தான், விவசாய தொழிலாளர்களுக்கு இந்த சட்டத்தின் மூலம் அவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை“ என்று பீயன்ட் கூறுகிறார். “ஆனால் எங்களுக்கு தெரியும். நாங்கள் டெல்லிக்கு வந்துள்ளோம். இதனால், இந்த போராட்டம் எதற்காக நடக்கிறது, இந்த சட்டம் ஏன் விவசாயிகள் மட்டுமின்றி அனைவரையும் பாதிக்கிறது? என்று நாங்கள் அவர்களுக்கு தெளிவாக விளக்க முடியும்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
சகோதரிகள் இருவரும் ஜனவரி 10ம் தேதி வீட்டுக்கு கிளம்பினர். இந்த போராட்ட களத்தில் இரண்டு நாட்கள் இருந்த பின்னர், எங்கள் கிராமத்தினருக்கு எடுத்துக்கூறுவதற்கு நிறைய உள்ளது“ என்று பியன்ட் கூறுகிறார். “விவசாயிகளின் நிலத்தை வெளிநபர்கள் விவசாயம் செய்ய எடுத்துக்கொண்டால், தொழிலாளர்கள் எங்கு செல்வார்கள்? மண்டி வாரியமும் அகற்றப்பட்டு, அரசு நடத்தும் நிறுவனங்களும் தோற்றுவிட்டால், ஏழைகள் எங்கு சென்று ரேஷன் பொருட்களை வாங்குவார்கள்?“ என்று பஞ்சாப் மாநில விவசாயிகள் சந்தை வாரியத்தை சுட்டிக்காட்டி அவர் கேட்கிறார். “ஏழைகளை சாகட்டும் என விட்டுவிடுவார்கள். அரசு நம்மை முட்டாள்கள் என்று நினைக்கிறது. ஆனால், நாம் முட்டாள்கள் இல்லை. எங்களுக்கு தெரியும் நீதிக்காக எவ்வாறு போராட வேண்டும் என்பதும், நாங்கள் நாள்தோறும் கற்றுக்கொண்டே இருக்கிறோம்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
தமிழில்: பிரியதர்சினி. R.