இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 13 உயிர்கள் பறிபோயின. இது தோராயமான எண்ணிக்கை தான். 15 ஆகக் கூட இருக்கலாம். கால்நடைகள் கணக்கில் இல்லை. அத்தனையும் யவத்மால் மாவட்டத்தின் வெறும் 50 சதுர கி.மீ தூரத்துக்குள் நடந்தேறியது. ஏற்கெனவே யவத்மால் விவசாயிகளின் தற்கொலைக்காகவும், விவசாயிகளின் கண்ணீர்க் கதைகளுக்காகவும் அறியப்பட்டது. கடந்த வாரம் வரை, விதர்பாவின் ராலேகன் தாசிலுக்கு உட்பட்ட பகுதிகளில் வலம்வந்த ஒரு பெண் புலியும் அதன் இரண்டு குட்டிகளும் கிராமவாசிகளுக்கும், வன அலுவலர்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்தது. அந்தப் புலியின் அச்சுறுத்தலால் 50-க்கு மேற்பட்ட கிராமவாசிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். விவசாயக் கூலிகள் வேலைக்குச் செல்ல அஞ்சினர். அப்படிச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டபோது குழுக்களாக இணைந்து அச்சத்துடன் சென்றுவந்தனர்.
அந்தப் புலியைப் பிடித்துவிடுங்கள் என்பதே அங்கு ஒலித்த ஒரே குரலாக இருந்தது.
பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துவந்த கோபமும் அவர்கள் கொடுத்த அழுத்தமும் வனத்துறை ஊழியர்களைகடும் அழுத்தத்திற்கு ஆளாக்கியிருந்தது. எப்படியாவது ஆவ்னி என்ற அந்த பெண் புலியைப் பிடித்துவிட வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்தனர். ஆவ்னி என்றால் புவி என்று அர்த்தம்.
ஆவ்னியைப் பிடிப்பது அத்தனை சுலபமானதாக இல்லை. அது சிக்கலான சவாலான ஆப்பரேஷனாகவே இருந்தது. வனக் காவலர்கள், ட்ராக்கர்கள், துப்பாக்கிச்சுடு வீரர்கள், மகாராஷ்டிரா மாநில வனத்துறையின் உயர் அதிகாரிகள், மத்திய இந்தியாவில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான நிபுணர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் இந்த ஆபரேஷனில் தங்களை இணைத்துக் கொண்டிருந்தனர். அவர்களின் கடும் பிரயத்தனத்திற்குப் பின்னர் நவம்பர் 2-ல் T1 கொல்லப்பட்டது. (மேலதிக விவரங்களுக்கு T1 -ன் எல்லை: கொலைகளின் கதைகள் மற்றும் அவர் வீடு திரும்பும்போதெல்லாம் அந்தப் புலிக்கு நன்றி சொல்வேன் கட்டுரைகளை வாசிக்கவும்)
2016 இடைப்பட்ட காலத்திலிருந்து ஆவ்னி நிறைய பேரைக் கொன்றிருந்தது. கடந்த இரண்டாண்டுகளில் அது யாரையெல்லாம் கொன்றிருந்தது?
*****
முதல் பலி: சோனாபாய் கோசாலே, 70. பார்தி என்ற நாடோடி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். போராத்தி கிராமவாசி. ஜூன் 1 2016-ல் அவர் இறந்தார்.
சோனாபாய் தான் T1-ன் முதல் பலி. 2016 ஜூன் 1 காலையில் சோனாபாய் அவரது நிலத்திற்குச் சென்றார். அவர் தனது ஆடுகளுக்கு இலைதழைகளை வெட்டிக் கொண்டுவரச் சென்றிருந்தார். வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக சோனாபாய் அவரின் கணவர் வாமன்ராவிடம் நான் சீக்கிரம் திரும்பிவிடுகிறேன் என்று சொல்லிச் சென்றுள்ளார். இதை சோனாபாயின் மூத்த மகன் சுபாஷ் தெரிவித்தார்.
சோனாபாயின் அன்றாடப் பணியே காட்டுக்குச் சென்று கால்நடைகளுக்கு புல்,தழைகள் சேகரிப்பதே. சோனாபாயின் அன்றாடப் பணியாக இது இருந்த நிலையில் அன்றைய தினம் மட்டும் சோனாபாய் திரும்பவில்லை.
"வழக்கமாக மதியம் வீடு திரும்பும் சோனாபாய் அன்று திரும்பவில்லை" என்று அவர் எங்களிடம் கூறினார். அன்று நடந்ததை அப்படியே நினைவு கூர்ந்த சுபாஷ். "நான் ஒரு சிறுவனை எனது அம்மாவைப் பார்த்துவருமாறு அனுப்பினேன். அவன் சென்றுவிட்டு, அங்கே அவரில்லை, ஒரு தண்ணீர் குடுவை மட்டுமே கிடந்தது" என்றான். உடனே நானும் இன்னும் சிலரும் தேடிச் சென்றோம்.
சோனாபாய் குடும்பத்தினர் அந்த ஐந்து ஏக்கர் நிலத்தில் பருத்தி, துவரை, ஜோவார் எனப் பயிரிட்டிருந்தனர். அந்த காய்ந்த நிலத்தில் அவர்கள் கால்தடத்தைப் பார்த்தனர். ஏதோ ஒன்று இழுக்கப்பட்டதற்கான தடமும் இருந்தது. அந்தப் பாதையிலேயே சென்றபோது வனத்தை ஒட்டிய பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சிதைந்த நிலையில் சோனாபாயின் உடல் இருந்தது. நாங்கள் அதிர்ந்துபோனோம் என சுபாஷ் அந்த கோர சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
T1 என்ற புலியை உள்ளூர்வாசிகள் ஆவ்னி என்றுதான் அழைத்தார்கள். மார்ச் 2016-ல் ஆவ்னி இப்பகுதிக்கு வந்திருக்கிறது. ஆவ்னியை சிலர் பார்த்துள்ளனர். ஆனால், சோனாபாய் கொல்லப்பட்ட பின்னர் அந்த வனப்பகுதியில் ஆவ்னி பெரிதாகத் தென்படவில்லை. யவத்மால் மாவட்டத்திலிருந்து மேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திப்பேஸ்வர் வனவிலங்குகள் சரணாலயத்திலிருந்து ராலேகான் வழியாகவே ஆவ்னி தங்கலின் ஊருக்குள் நுழைந்திருக்க வேண்டும் என அவர்கள் நம்புகின்றனர். இன்னும் சிலர் ஆவ்னி 2014-ல் இப்பகுதிக்குள் நுழைந்து அதை தனது எல்லையாக நிர்ணயித்திருக்க வேண்டும். 2017 டிசம்பரில் அது ஆண் ஒன்று பெண் ஒன்று என இரண்டு குட்டிகளை ஈன்றது எனத் தெரிவித்தனர்.
சோனாபாயின் குடும்பத்தினருக்கும் மகாராஷ்டிரா வனத்துறை ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியது.
அதன் பின்னர், ராலேகான் பகுதியில் நான் பேசிய அனைவருமே ஆவ்னி புலி அதன் இரையை எப்படி கழுத்தில் கவ்விக் கொண்டு சென்று ரத்தத்தை உறிஞ்சியது என்று விவரித்தனர்.
*****
இரண்டாம் பலி: கஜனன் பவார். வயது 40. சாராத்தி கிராமத்தைச் சேர்ந்தவர். குன்பி என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்தவர். ஆகஸ்ட் 25, 2017-ல் அவர் புலியால் தாக்கப்பட்டு இறந்தார்.
நாங்கள் அந்த கிராமத்திற்குச் சென்றபோது இந்துகலாபாய் பவார் தனியாக இருந்தார். 2017 ஆகஸ்ட் 25-ல் இந்துகலாபாயின் இளைய மகன் கஜனன் பவார் T1-ஆல் கொல்லப்பட்டார். அப்போது அவர் லோனி - போராத்தி கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ள சாராத்தி கிராமத்தின் புதர் காடுகளுக்கு ஒட்டிய பகுதியில் உள்ள அவரது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். மதிய வேளையில், அந்தப் புலி பின்புறமாக இருந்துவந்து அவரைத் தாக்கியது. கிராமவாசிகள் கஜனனின் உடலை வனப்பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் கண்டுபிடித்தனர்.
இந்தத் துயரத்தைப் பற்றி பேசிய இந்துகலாபாய், "எனது கணவர் 4 மாதங்களுக்கு முன்னதாக இறந்துவிட்டார். அவருக்கு கஜனனின் இரண்டு சகோதரிகளை நினைத்துதான் கவலை" என்றார். இந்துவின் மருமகள் மங்களா தனது கணவரின் இறப்புக்குப் பின்னார் தனது சொந்த ஊரான வார்தா மாவட்டத்துக்குச் சென்றுவிட்டார்.
சாராத்தி கிராமத்தில் இந்த சம்பவத்துக்குப் பின்னர் கிராமவாசிகள் இணைந்து முறைவைத்து இரவு ரோந்தை கடைபிடித்தனர். சில இளைஞர்கள் தினக்கூலி அடிப்படையில் வனத்துறையின் ஆபரேஷனில் இணைந்தனர்.மராத்தி நாளிதழான தேஷோநதிக்கு பகுதிநேர செய்தியாளராக வேலை பார்த்துவந்த ரவீந்திர தாக்ரே, இந்த சம்பவத்துக்குப் பின்னர் பருத்தி பறிக்க யாரும் வரவில்லை என்ரார்.
இந்துகலாபாயின் மூத்த மகன் விஷ்ணு தான் அவர்களின் 15 ஏக்கர் நிலத்தை உழுது கொண்டிருக்கிறார். அங்கு அவர் பருத்தி, சோயா சில பருவத்தில் கோதுமை கூட பயிரிடுகிறார்.
கஜனன் சற்றும் எதிர்பாராத விதமாக புலி அவனைப் பின்னால் இருந்து தாக்கிவிட்டது. இதை என் மகன் எதிர்பார்த்திருக்க மாட்டான் என்று சொல்லும்போதே இந்துவின் கண்களின் கோபமும் பதற்றமும் தெரிந்தது. "எங்கிருந்தோ வந்த புலி என் மகனைக் கொன்றுவிட்டது. வனத்துறையினர் அதனைக் கொன்றால் மட்டுமே நாங்கள் இனி இந்த கிராமத்தில் இயல்பாக வாழ இயலும்" என்றார்.
*****
சம்பவம் 3: ராமாஜி ஷெண்ட்ரே. வயது 68. லோனி கிராமத்தின் கோண்ட் கோவாரி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். 2018-ஜனவரி 27-ல் இறந்தார்.
கலாபாய்க்கு இன்னமும் கூட கடந்த ஜனவரி மாதத்தின் அந்த கோர மாலைப் பொழுதை மறக்க இயலவில்லை. அவரின் கணவர் ராமாஜி, 70 அப்போதுதான் விளக்கு வைத்திருந்தார். அவர்களின் அந்த இரண்டு ஏக்கர் நிலத்தில் ராபி பருவத்துக்கு கோதுமை விளைந்து நின்றது. அதை காட்டுப்பன்றிகளிடமிருந்தும் நீல்காய்களிடமிருந்தும் காப்பாற்ற காவலுக்கு இருந்தனர். கலாபாய் ஒரு பகுதியில் பருத்தி பறித்துக் கொண்டிருந்தார். திடீரென கலாபாய்க்கு ஏதோ அலறல் கேட்டது. திரும்பிப்பார்த்தால் அவரின் கணவர் மீது ஒரு புலி பாய்ந்து கொண்டிருந்தது. ஏதோ புதர் மறைவில் இருந்து பாய்ந்த T1, ராமாஜியின் கழுத்தைக் கவ்வியது. நொடிப்பொழுதில் ராமாஜி இறந்துவிட்டார்.
ராமாஜி தான் எப்போதும் நிலத்துக்கு பாதுகாப்பாக இருப்பார். அவரின் இரண்டு மகன்களும் வேறு ஒருவரின் நிலத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்தனர். கலாபாய் கூறும்போது, "எங்களுக்கு திருமணமான நாளில் இருந்து இருவரும் ஒன்றாகத்தான் நிலத்துக்குச் செல்வோம். அதுதான் எங்களின் வாழ்வாதாரம்" என்றார். ஆனால் இப்போதெல்லாம் கலாபாய் நிலத்திற்குச் செல்வதில்லை.
தனது குடிசையின் முன்னால் கலாபாய் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த தனது கணவரின் புகைப்படத்தைப் பார்த்தவாறே இருந்தார். அவருக்கு பேச வார்த்தைகள் கிடைக்கவில்லை. அழுகையும் இடையிடையே விசும்பலுமாக அவர் பேச்சு இருந்தது. "என் கணவர் இப்படித்தான் தனது முடிவு இருக்கும் என்று நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். நான் அந்த சம்பவத்தைப் பார்த்து ஒரு குன்றின் மீது ஏறி நடுங்கிக் கொண்டே உதவிக்குரல் எழுப்பினேன்" என்றார்.
கலாபாயின் கண் முன்னரே ராமாஜியின் உடலை புலி இழுத்துச் சென்றுள்ளது. கலாபாய் தன் உயிரைக் காப்பாறிக் கொள்ள உயரமான இடத்தின் மீது ஏறி நின்றுள்ளார்.
அந்த சம்பவம் நடந்தபோது அங்கு பாபாராவ் வாத்தோடே (56) என்ற கிராமவாசியும் இருந்தார். அவரும் ராமாஜியை T12 புலி கழுத்தைக் கவ்வி இழுத்துச் செல்வதைப் பார்த்துள்ளார். கத்திக்கொண்டே ஒரு கொம்பை எடுத்து புலி மீது வீசி எறிந்துள்ளார். ஆனால், அந்தப் புலி அவரை ஒருசில நொடி உற்றுநோக்கிவிட்டு உடலை இழுத்துச் சென்றுள்ளது. இருந்தாலும் வத்தோடே புலியைத் துரத்தியுள்ளார். அப்போது எதேச்சையாக அவ்வழியில் ஒரு வாகனம் வர புலி அந்த உடலை விட்டுவிட்டு வனத்துக்குள் மறைந்துள்ளது.
ராமாஜியின் மகன் நாராயணன் பார்வைத்திறன் அற்றவர். அவருக்கு வனத்துறை சார்பில் மேய்ச்சல் விலங்குகளுக்கு பாதுகாப்பாக செல்லும் பணி வழங்கப்பட்டுள்ளது. ராமாஜியின் மூத்த மகன் சாகர் பள்ளியில் இடையில் நின்றவர். தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்துவந்த அவருக்கும் காவலர் வேலை கிடைத்துள்ளது. நாங்கள் அக்டோபர் 12-ம் தேதி கலாபாயின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அப்போதுதான் அவர் இதனைச் சொன்னார்.
*****
சம்பவம் 4: குலாப்ராவ் மொக்காசே. வயது 65. வேத்ஷி கிராமத்தின் கோண்ட் ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவர். இவார் 2018 ஆகச்ட் 5-ல் இறந்தார்.
அவரின் மூத்த சகோதரர் நத்துஜி, வனத்திற்குள் பிரவேசிக்க வேண்டாம் என எச்சரித்துக் கொண்டே இருந்துள்ளார். ஆனால் குலாப்ராவ் அதை சட்டை செய்யவில்லை. ஆகஸ்ட் 5 காலை நேரம் அது.
எங்களின் மாடுகள் விநோதமாக கத்தியபோது ஏதோ தவறு நடக்கிறது என நான் உணர்ந்துவிட்டேன் என் கிறார் நத்துஜி. அன்றைய தினம் நடந்தவற்றை நத்துஜி உள்ளூர் வட்டார வழக்கான வார்ஹாடி மொழியில் விவரித்தார்.
சில நிமிடங்களில் ஒரு புலி உறுமியாவாறே தனது சகோதரர் மீது பாய்வதை நத்துஜி பார்த்துள்ளார். அந்தப் புலியின் உருவத்தின் முன்னால் குலாப்ராவ் ஏதும் செய்ய இயலாதவராக இருந்தார். நத்துஜி செய்வதறியாது கையறு நிலையில் நின்றுள்ளார். புலியை சபித்துக் கொண்டு கற்களை வீசி எறிந்துள்ளார். ஆனால், அந்தப் புலி வனப்புதருக்குள் மறைந்துவிட்டது. ஆனால், அவரின் சகோதரர் உடலை மட்டும் விட்டுச் சென்றது. இந்த வேளையில் நத்துஜி கிராமத்துக்குள் உதவி கோரி ஓடியுள்ளார். உடனே கிராமவாசிகள் திரண்டு சம்பவ இடத்துக்கு வந்ததோடு குலாப்ராவின் உடலை மீட்க உதவியுள்ளனர். அந்த உடல் சிதைந்த நிலையிலேயே இருந்துள்ளது.
நத்துஜி இன்றளவும் அந்த கோரத் தாக்குதலின் அச்சத்திலிருந்து விலகவில்லை. ராலேகானின் உள்பகுதியில் வேத்ஷி கிராமம் உள்ளது. நத்துஜியும் குலாப்ராவும் அங்கு அன்றாடம் 100 கால்நடைகலையாவது மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று திரும்புவது வழக்கமாக இருந்துள்ளது.
ஆகஸ்ட் 2018-ல், T1 புலி மூன்று பேரைக் கொன்றிருந்தது. குலாப் ராவ் தான் முதல் பலி. மற்றொரு பலி விஹிர்காவோனில் நடந்தது. ஆகஸ்ட் 11-ல் அச்சம்பவம் நடந்தது. மூன்றாவது பலி பிம்பலஷெண்டா கிராமத்தில் ஆகஸ்ட் 28-ல் நடந்தது.
குலாப் ராவின் மகன் கிஷோர், வனத்துறையில் மாதம் ரூ.9000 சம்பளத்தில் பணியில் சேர்ந்தார். "இப்போதெல்லாம் எங்கள் கிராமத்தினர் தனியாக மேய்ச்சல் நிலத்துக்குச் செல்வதில்லை. ஆதேபோல் வனத்தின் அடர்ந்த உள்பகுதிகளுக்கும் செல்வதில்லை. அந்தப் புலி எங்கு வேண்டுமானாலும் மறைந்திருக்கலாம் அல்லவா" என்றார்.
*****
சம்பவம் 5: நாகோராவ் ஜூங்காரே. வயது 65. கோலம் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். பிம்பலஷெண்டா கிராமவாசி. இது ராலேகான் தாசிலுக்கு உட்பட்டது. இவர் 2018 ஆகஸ்ட் 28-ல் புலியால் தாக்கப்பட்டு இறந்தார்.
இவர்தான் T1-2ன் கடைசி பலி.
ஜூங்காரேவுக்கு ஐந்து ஏக்கர் நிலம் இருந்தது. அவர் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் வேலையையும் செய்துவந்தார். ஒவ்வொரு நாள் காலையிலும் அவர் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார். அவரின் மகன்கள் ஒன்று அவர்களுடைய நிலத்திலேயே வேலை செய்வார்கள். இல்லாவிட்டால் அடுத்தவர்களின் நிலத்தில் தினக்கூலியாக வேலை செய்வார்கள்.
ரேனுகாபாயை நாங்கள் அவருடைய மண் குடிசையில் சந்தித்தோம். அவர் அன்று நடந்ததை விவரித்தார். "ஆகஸ்ட் 28 மாலை நேரத்தில் என் வீட்டின் அருகே சில மாடுகள் வித்தியாசமாக ஓசை எழுப்பியவாறு நின்றன. என் கணவர் இல்லாமல் அவை மட்டும் வந்திருந்தன. அப்போதே எனக்குத் தெரிந்துவிட்டது ஏதோ தவறு நடந்துவிட்டது" என்றார்.
சம்பவம் பற்றிய தகவல் வந்தவுடனேயே கிராமத்தினர் காட்டுப்பகுதிக்கு விரைந்தனர். வழக்கமாக ஜூங்காரே எங்கு கால்நடைகளை மேய்ப்பாரோ அப்பகுதிக்கு சரியாகச் சென்றனர். இந்த முறையும் அங்கே புலி ஆளை அடித்து இழுத்துச் சென்றதற்கான தடம் இருந்தது. அங்கிருந்து 1 கி.மீ தூரத்தில் ஜூங்காரேவின் சடலம் கிடந்துள்ளது. "அன்றைய தினம் அவரின் உடலை நாங்கள் கண்டெடுக்க சற்று தாமதமாகியிருந்தாலும்கூட அதை நாங்கள் எப்போதுமே கைப்பற்றியிருக்க முடியாது" என்கிறார் ரேனுகாபாய்.
இந்த சம்பவத்துக்குப் பின்னர் அவரின் ,மூத்த மகன் க்ருஷ்ணா வனக்காவலராக கால்நடைகளுடன் செல்லும் பணியில் அமர்த்தப்பட்டார். இளைய மகன் விஷ்ணு மொஹடா கிராமத்தில் கூலி வேலை செய்து வருகிறார். அந்த இடம் யவத்மால் - பந்தர்க்வாடா மாநில நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ளது.
ஜூங்காரேவை புலி தாக்கிய பின்னர் கோலம் இன மக்கள் வெளியே வரவே அஞ்சி நடுங்கினர். ரேனுகாபாயின் கவலை இப்போது அவருடைய மகனின் பாதுகாப்பு மீது திரும்பியிருந்தது. "அவன் தனது குடும்பத்துக்காகவும் அவரின் இரண்டு மகள்களுக்காகவும் இந்த வேலையை ஏற்றுள்ளான். ஆனால், அந்தப் புலியைப் பிடிக்கும் வரை அவன் இந்த வேலைக்குச் செல்லக்கூடாது என்றே நான் நினைக்கிறேன்" என்றார் ரேனுகாபாய்.
யானையால் நிகழ்ந்த மரணம்.
2018 அக்டோபர் 3-ம் தேதியன்று கோண்ட் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த அர்ச்சனா குல்சாங்கே 30 யானையால் கொல்லப்பட்டார். அவர் சஹந்த் கிராமத்தைச் சேர்ந்தவர்.
அர்ச்சனா தனக்கு நிகழப்போகும் துயரம் தெரியாமல் அன்றைய தினம் வீட்டின் முன்னால் மாட்டுச் சாணத்தை சேகரித்துக் கொண்டிருந்தார். சாஹந்த் கிராமத்திலிருந்து சரியாக 35 கிலோமீட்டர் தொலைவில் வனத்துறையினர் அந்தப் புலியைப் பிடிக்க முகாம் அமைத்திருந்தனர். அங்குதான் அந்த யானையும் கட்டப்பட்டிருந்தது. புலியைப் பிடிக்கும் பணிக்கு அழைத்துவரப்பட்டிருந்த யானைக்கு திடீரென மதம் பிடித்தது. அந்த யானை தனது கால்சங்கிலியை விலக்கிக் கொண்டு ஓடிவருவதை அர்ச்சனா அறிந்திருக்கவில்லை. அர்ச்சனாவை பின்புறமாக யானை தாக்கியது. அவரை தூக்கி வீசியது. அந்த இடத்திலேயே அர்ச்சனா இறந்துபோனார். அங்கு என்ன நடக்கிறது என அக்கம்பக்கத்தினர் கணிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்திருந்தது.
"நான் வீட்டின் கொல்லைப்புறத்தில் பல் துலக்கிக் கொண்டிருந்தேன். நன்றாக பொழுது புலரவில்லை. அப்போது ஏதோ பெரிய சப்தம் கேட்டது. எங்கள் அண்டை வீட்டாரின் கொல்லைப்புறம் வழியாக யானை தெருவுக்குள் நுழைந்தது". இவ்வாறு அவர் சொல்லும் போது விவசாயக் கூலியான மோரேஷ்வரின் 5 வயது மகன் நச்சிகேட் தந்தையை இறுக்கமாகக் கட்டிக்கொண்டிருந்தார். அர்ச்சனாவை யானை துதிக்கையால் தூக்கி சுழற்றி வீசுவது கையறு நிலையில் கண்டேன்.
அந்த யானை அருகிலுள்ள போஹானா கிராமத்தினுள்ளும் புகுந்தது. அங்கு ஒருவரை அது காயப்படுத்தியது. அவர் மூன்று நாட்களுக்குப் பின்னால் சிகிச்சை பலனின்றி இறந்தார். பின்னர் நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்த அந்த யானையை வனத்துறையினர் மீட்டு சாந்தப்படுத்தினார்கள்.
மோரேஷ்வரின் தாயார் மண்டாபாய், தனது மருமகளின் மரணம் தங்களின் குடும்பத்திற்குப் பேரிழப்பு எனக் கூறுகிறார்.
கஜராஹ்- என்ற அந்த யானை சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்திலிருந்து கொண்டு வரப்பட்டிருந்தது. பலநாட்களாக சிக்காமல் திரிந்த T1 புலியைப் பிடிப்பதற்காகவே அந்த யானை உட்பட ஐந்து யானைகளை வனத்துறை வரவழைத்திருந்தது. இந்த சம்பவத்துக்குப் பின்னர் அந்த குறிப்பிட்ட யானையை வனத்துறையினர் திருப்பி அனுப்பினர். மத்தியப் பிரதேசத்திலிருந்து வந்த வேறு 4 யானைகள் பயன்படுத்தப்பட்டன. அந்த யானைகளும் பின்னர் திருப்பி அனுப்பப்பட்டன. கஜராஜ் யானைக்கு ஏன் மதம் பிடித்தது என்ற விசாரணை வளையத்தில் வனத்துறை இன்னும் இருக்கிறது.
*****
T1 புலி கொல்லப்பட்டுவிட்டது. இனி T1-இடம் இருந்து கிராமவாசிகளை, கால்நடைகளைக் காப்பாற்ற நியமிக்கப்பட்ட வனக்காவலர்களின் கதி என்னவாகும் என்று தெரியவில்லை. வனத்துறை அவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும். அல்லது அவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் வேலை வழங்கும் என எதிர்பார்க்கலாம். புலியின் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு ரூ.10 லட்சம். சிலருக்கு அது கிடைத்துவிட்டது. சிலர் அதை எதிர்நோக்கியுள்ளனர்.
தமிழில்: மதுமிதா