மூன்று வயது சிறுவன் விஹான் கொட்வடே, தற்போது வரை தன்னை புலி தாக்கியது குறித்துக் கனவு கண்டு, அவனது தாய் சுலோச்சனாவை இறுகக்கட்டிக் கொள்கிறான்.
கடந்த மே 2018 ஆம் ஆண்டு, சிறுவன் விஹான் கொட்வடே தெண்டு இலை சேகரிப்பதற்காகச் சென்ற, அவனது தந்தை பீர் சிங்(25 வயதுடையவர்) கொட்வடே உடன் இரு சக்கர வாகனத்தில் சென்றான். கோடைக்காலங்களில் மத்திய இந்தியப்பகுதிகளில் உள்ள காடுகளைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் தெண்டு இலை சேகரிப்பது தான் வாழ்வாதாரம் ஈட்டும் முதன்மைத் தொழில். தெண்டு இலைகள் காயவைக்கப்பட்டு,பின்னர் பீடி தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நாக்பூர் மாவட்டம் ராம்தேக் தாலுக்கா பிந்த்காபார் கிராமத்தில் உள்ள, விஹானின் வீட்டிலிருந்து அவனது தந்தை பீர்சிங், காடுகள் சூழ்ந்த சாலையில் சில கிலோமீட்டர் தூரம் வாகனத்தை ஒட்டிச் சென்றுக் கொண்டிருந்த போது, அங்கு சூழ்ந்திருந்த புதரிலிருந்து தாவிய முழுமையான வளர்ச்சியடைந்த புலியொன்று அவர்கள் வாகனத்தின் மீது பாய்ந்து அதன் கால்களால் தாக்கத்தொடங்கியுள்ளது.
இந்தப் பகுதியானது பென்ச் புலிக் காப்பகத்திற்கு மிகஅருகில் உள்ள பகுதியாகும். இந்நிலையில்,புலியின் தாக்குதலால் கடுமையானக் காயங்களுக்கு உள்ளான தந்தையும் மகனும், நாக்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒரு வாரகாலம் சிகிச்சைப் பெற்றுள்ளனர். மேலும், புலியின் தாக்குதலால் காயமுற்ற சிறுவன் விஹானின் தலையில் எட்டு தையலும் போடப்பட்டுள்ளது.
புலியின் இந்தத் தாக்குதலானது விதர்பாவில் நடந்தேறியுள்ள பலசம்பவங்களில் ஒன்றாகும். இது இந்தப் பகுதியில் வனவிலங்குகளுக்கான வாழ்விடம் சுருங்கி வருவதன் காரணமாக உயர்ந்து வருகின்ற, மனிதன்-புலி இடையிலானப் பிரச்சனை மற்றும் அதனால் அதிகரிக்கும் தாக்குதல் சம்பவங்கள் ஆகியவற்றின் அறிகுறியாகும். ‘காண்க:புலிகள் எங்கு போகும்?’
தமிழில்: பிரதீப் இளங்கோவன்