அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. எனது வீட்டிற்கு வெளியே கருப்பு நிறக் குடையைப் பிடித்தபடி சின்னா பீடி புகைத்து கொண்டிருந்தார். குடையிலிருந்து மழை அருவியைப் போல தரையில் கொட்டியது. அவரது முகம் தெளிவாகத் தெரியவில்லை.
“வாங்க சின்னா, ஏன் மழையில் நிற்கிறீர்கள்?”
அவர் வேகமாக மூன்று இழு இழுத்துவிட்டு பீடியை கீழே போட்டார். எனது வீட்டு முற்றத்தில் அமர்ந்து கொண்டு குடையை மடக்கினார். அவரது கண்கள் சிவந்திருந்தன. புகைப்பதால் ஏற்பட்டிருக்கலாம். இருமியபடி என் கண்களைப் பார்த்து கேட்டார், “மக்களை வீட்டிற்கு திரும்பிச் செல்ல அவர்கள் அனுமதிக்கிறார்களா?“
“இல்லை சின்னா, திரும்பிச் செல்ல மாவட்ட ஆட்சியரிடம் நாம் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.”
“அப்படியா?” என்று இருமியபடி கேட்டார்.
“ஆமாம், ஏற்கனவே ஒருமுறை ரயில் மோதி 16 புலம் பெயர் தொழிலாளர்கள் இறந்துவிட்டனர்.”
நான் எதுவும் பேசாதபோதும் ஏதோ சொன்னதுபோல, சின்னா என் கண்களை உற்று நோக்கினார்.
கீழே குனிந்தபடி அவர் சொன்னார், “வேலை தேடி 65 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு என் தந்தையுடன் என் பாட்டி வந்த கதை நினைவிற்கு வருகிறது.”
“அவள் கிராமத்தைவிட்டு வெளியே செல்லவே அச்சப்படுவாள், ஆனால் அனைத்தையும் கடந்து வந்தாள். அவள் எங்களிடம் மகிழ்ச்சியான கதைகள், நகைப்பான சம்பவங்களை மட்டுமே கூறுவாள். அவள் எவ்வளவு சிரமங்களை சந்தித்திருப்பாள் என்பதை இப்போதுதான் உணர முடிகிறது. அவள் எப்போதும் என் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கவே விரும்புவாள்.”
மழை இன்னும் தீவிரமடைந்தது. வெள்ளம் பெருக்கெடுத்த சாலைகளில் ஆம்புலன்ஸ் சீறி பாய்ந்தது. “அனைத்து தொழிலாளர்களும் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும்” என்றார் சின்னா.
அணிவகுக்கும் உயிர்கள்
கற்கள் நிறைந்த ரயில் தடங்களில்
நடக்கின்றன,
பசித்த உயிர்கள்.
தண்டவாளங்களில்
ஒருவர் பின் ஒருவராக.
அவர்களின் பாதை தொலைவானது,
இருந்தும் நடக்கின்றனர்,
ஒவ்வொரு அடியும்,
அவர்களின் வீட்டை நெருங்கச் செய்கின்றன.
தேய்ந்து போன ஆண்கள்,
சுருங்கிப் போன பெண்கள்,
அனைவரும் ரயில் பெட்டிகளைப் போல,
தண்டவாளங்களில்
உறுதியோடு நடக்கின்றனர்.
புடவைகளில் சுருட்டிய சில ரொட்டி துண்டுகள்,
தண்ணீர் புட்டிகளுடன்,
வலுவான கால்களை கொண்டு
நடக்கின்றன
துணிவின் ஆன்மாக்கள்.
சூரியன் மறைகிறது,
நட்சத்திரமற்ற இரவை எழுப்புகிறது.
உயிர்கள்,
சோர்வுற்று, சரிந்துள்ளன,
கண்களை மூடுகின்றன,
பிசுபிசுப்பான தண்டவாளங்களில்.
அப்போது ரயில் வருகிறது
ஏறுகின்றன,
அவற்றின் இரும்பு சக்கரங்கள்,
தண்டவாளத்திலும், சதைகளிலும்.
ஆளரவமற்ற ரயில் தடங்களில்
கிடக்கின்றன
உயிரற்ற ஆன்மாக்கள் வரிசையாக,
ஒன்றின் பின் ஒன்றாக,
வீட்டிற்கு மிக அருகில்.
ஒலி: சுதன்வா தேஷ்பாண்டே ஜனா நாட்டியா மஞ்சில் இயக்குநர், நடிகராக உள்ளார். லெஃப்ட்வோர்ட் புக்ஸ் ஆசிரியராகவும் இருக்கிறார்.
ஓவியம்: லபானி ஜாங்கி. மேற்கு வங்கத்தில் நதியா மாவட்டத்தில் ஒரு சிறு நகரத்தை சேர்ந்தவர் லபானி ஜாங்கி. கொல்கத்தாவில் உள்ள சமூக அறிவியல் கல்விக்கான மையத்தில் வங்காள உழைப்பாளர் புலம் பெயர்தலைப் பற்றி முனைவர் ஆய்வு செய்து வருகிறார். அவர் சுயமாகக் கற்றுக்கொண்ட ஓவியரும் கூட. பயணங்களில் விருப்பமுடையவர்.
தமிழில்: சவிதா