இந்தக் குழு, கிராமப்புறப் பெண்கள் செய்யும் பெரிய அளவிலான பணிகளைச் சித்தரிக்கும் புலப்படும் பணியும் , புலப்படாத பெண்களும் என்ற புகைப்படக் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். அனைத்து புகைப்படங்களும் 1993 மற்றும் 2002 க்கு இடையில் 10 இந்திய மாநிலங்களில் P. சாய்நாத்தால் படமாக்கப்பட்டவை. PARI, பல ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உருவாக்கிய புகைப்படக் கண்காட்சியை இங்கு ஆக்கப்பூர்வமாக டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.
பசுக்கள் வீடு திரும்பும் வரை
பீகாரில் அடுப்பெரிப்பதற்காக சாணி உருட்டும் பெண்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு வியப்பூட்டும் பங்களிப்பைச் செய்கின்றனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது எப்படி பிரதிபலிக்கும் என ஒருவர் நினைக்கலாம். பசுஞ்சாணத்தை எரிவாயுவாகப் பயன்படுத்தி வரும் லட்சக்கணக்கான குடும்பங்கள் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தத் தொடங்கினால் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். பெட்ரோலியம், அவை சார்ந்த பிற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா அதிகளவில் அந்நிய செலாவணிக்கு செலவிட்டு வருகிறது. 1999-2000 வரையிலான காலத்தில் மொத்தம் ரூ.47,421 கோடி அல்லது 10.5 பில்லியின் அமெரிக்க டாலர் செலவிடப்பட்டுள்ளது.
உணவு, சமையல் எரிவாயு, மருந்துகள், மருத்துவம் சார்ந்த பொருட்கள், இரசாயனங்கள், இரும்பு, எஃகு ஆகியவற்றிற்கு செலவாகும் அந்நிய செலாவணியை விட இது மூன்று மடங்கு அதிகமாகும். நம் மொத்த இறக்குமதி செலவில் நான்கில் ஒரு பங்கு பெட்ரோலியம், அது சார்ந்த பொருட்களுக்கு செலவிடுகிறோம்.
1.4 பில்லியன் அமெரிக்க டாலர் உர இறக்குமதிக்கு நாம் செலவிடுகிறோம். அதாவது கிட்டதட்ட அந்நிய செலாவணியின் எட்டு மடங்கு. பயிர்களை வளர்ப்பதற்கு லட்சக்கணக்கானோர் சாணத்தை இயற்கை உரமாக பயன்படுத்துகின்றனர். இதனால் இவை பன்மடங்கு பணத்தை மிச்சப்படுத்துகிறது. பூச்சிகளை தடுப்பதோடு, பல வகைகளிலும் இந்த இயற்கை உரம் பயன்படுகிறது. பல வகைகளிலும் செலவுகளை குறைக்கிறது. நாட்டில் சாணத்தை சேகரிக்கும் பணிகளை பெண்களே செய்து வருவதால் இது பெண்களின் பணி. இதனால் இந்தியா ஆண்டுதோறும் லட்சங்களில் அல்லது கோடிக்கணக்கில் கூட சேமிக்கிறது எனலாம். பங்கு பரிமாற்றத்தில் சாணம் பதிவு செய்யப்படவில்லை. இவற்றை சேகரிக்கும் பெண்களின் வாழ்க்கை குறித்து அவர்கள் அதிக கவனம் செலுத்தாமல் இருக்கலாம். பொருளாதாரவியலாளர்கள் இக்காரணியை ஒருபோதும் புரிந்துகொள்ளப் போவதில்லை. இதுபோன்ற உழைப்பை அவர்கள் கண்டுகொள்வதில்லை அல்லது மதிப்பதில்லை.
பசுக்கள், எருமைகளுக்கு தேவையான தீவனங்களை பெண்களே சேகரிக்கின்றனர். சமையல் எரிவாயுவாக பயன்படுத்த சாணத்தை பரப்பி, உலர்ந்த பயிர் கழிவுகளை கலக்கின்றனர். அனைத்தையும் அவர்களின் சொந்த செலவில் செய்கின்றனர். சாணத்தை சேகரிப்பது கடினமான செயல் என்பதோடு பயன்படுத்துவம் கடினம்.
உலகின் முதன்மை பால் உற்பத்தி நாடாக இந்திய இடம்பெறுவதில் லட்சக்கணக்கான பெண்களின் பங்களிப்பு உள்ளது. இந்தியாவின் 10 கோடி பசுக்கள், எருமைகளிடம் பால் கறப்பதோடு அவர்களின் பணிகள் முடிந்துவிடுவதில்லை. ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரத்தைச் சேர்ந்த இப்பெண்ணுக்கு பசுவிடம் பால் கறப்பது என்பது ஒரு சிறிய பணிதான். பசுக்களுக்காக தீவனங்களை சேகரித்து, உண்ண வைத்து, குளிப்பாட்டி, தொழுவத்தை கழுவி சுத்தம் செய்து சாணத்தையும் அவர் அள்ள வேண்டும். அவரிடம் பசும்பாலை வாங்கிச் செல்லும் அவரது அண்டை வீட்டுப் பெண்மணி பால் கூட்டுறவு சங்கத்தில் விற்று பணம் வாங்கிக் கொடுக்கும் வேலையை செய்கிறார். பால் உற்பத்தி துறையில் 69 முதல் 93 சதவீத பெண்கள் பணியாற்றுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. பால் பொருட்களை பதனப்படுத்துவதையும் அவர்களே பெருளவில் செய்கின்றனர். அனைத்து கால்நடைகளின் உற்பத்தி, நிர்வாகத்திலும் பெண்களே முக்கியப் பங்காற்றுகின்றனர்.
அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்மணி வயல்வெளிகளில் இருந்து எருமைகளை அழைத்து வருகிறார். சிறிய நாய் ஒன்று கால்களை கடிப்பதற்கு தயாராவதைக் கண்ட அந்த கால்நடை சிறிது பதற்றமடைகிறது. இதைக் கண்ட அவர் நாயை விரட்டியபடி எருமையை பாதுகாப்பாக வீட்டிற்குத் திரும்பி அழைத்துச் செல்கிறார். இதையே அன்றாட பணியாக அவர் வாழ்நாள் முழுவதும் செய்து வருகிறார்.
கால்நடைகளின் பால் அல்லது இறைச்சியால் மட்டும் மனிதர்களுக்கு பணம் கிடைப்பதில்லை. லட்சக்கணக்கான ஏழை இந்தியர்களுக்கு இதுவே முதன்மையான காப்பீட்டுத் தொகை. தீவிர நெருக்கடி காலத்தில் அனைத்து வருவாயையும் இழக்கும் போது ஏழை மக்கள் மொத்தமாக அல்லது இரண்டு கால்நடைகளை விற்று வாழ்கின்றனர். எனவே பல ஏழை இந்தியர்களின் நலம் என்பது நாட்டின் கால்நடை இனங்களின் நலனுடன் தொடர்புடையது. ஆனால் கால்நடைகளின் நலன் என்பது பெண்களின் கைகளில் உள்ளது. கால்நடைகளை வளர்ப்பது, பராமரிப்பது போன்றவற்றை சில பெண்கள் செய்கின்றனர். இந்தியாவின் 70,000 கிராம அளவிலான பால் கூட்டுறவு சங்கங்களில் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். கூட்டுறவு சங்க உறுப்பினர்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் உள்ளனர். ஒட்டுமொத்த கூட்டுறவு சங்க வாரிய உறுப்பினர்களில் மூன்று சதவீதத்திற்கும் குறைவான பெண்களே உள்ளனர்.
தமிழில்: சவிதா