இந்தக் குழு, கிராமப்புறப் பெண்கள் செய்யும் பெரிய அளவிலான பணிகளைச் சித்தரிக்கும் புலப்படும் பணியும் , புலப்படாத பெண்களும் என்ற புகைப்படக் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். அனைத்து புகைப்படங்களும் 1993 மற்றும் 2002 க்கு இடையில் 10 இந்திய மாநிலங்களில் P. சாய்நாத்தால் படமாக்கப்பட்டவை. PARI, பல ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உருவாக்கிய புகைப்படக் கண்காட்சியை இங்கு ஆக்கப்பூர்வமாக டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.
சுத்தம் செய்தல்!
ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரத்தைச் சேர்ந்த இந்த மூதாட்டி தனது வீட்டையும், சுற்றுப்புறத்தை சுத்தமாக பெருக்கி வைக்கிறார். அதன் பெயர் வீட்டு வேலை - “பெண்களின் வேலை.” வீடோ, பொது இடமோ ‘சுத்தம் செய்தல்‘ எனும் அசுத்தமான பணிகளை பெண்களே செய்கின்றனர். இதில் அவர்கள் வருவாயைக் காட்டிலும் கோபத்தையே ஈட்டுகின்றனர். ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் இதில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு தலித். தனியார் வீடுகளில் உள்ள உலர் கழிவறைகளை சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளராக இருக்கிறார். ராஜஸ்தானின் சிகாரில் உள்ள 25 வீடுகளில் இப்பணியை அன்றாடம் அவர் செய்கிறார்.
இதற்கான ஊதியமாக அவருக்கு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ரொட்டி வழங்கப்படுகிறது. மாதத்திற்கு ஒருமுறை அவர்கள் மனது வைத்தால் கொஞ்சம் பணம் தருவார்கள். ஒரு வீட்டிற்கு ரூ.10 கூட கிடைக்கலாம். அதிகாரப்பூர்வமாக அவரை ‘சூத்திரர்’ என அழைக்கின்றனர், ஆனால் அவர் தன்னை ‘தோட்டி' என்று சொல்கிறார். இதுபோன்ற குழுவினர் தங்களை 'பால்மிகிஸ்' என்று அழைத்துக் கொள்கின்றனர்.
மனிதக் கழிவுகளை அவர் பெரிய சட்டியில் வைத்து தலையில் சுமந்து செல்கிறார். பண்பட்ட சமூகம் இதனை ‘மலம்‘ என்கிறது. மிக நிர்கதியான, சுரண்டப்படும் குடிமக்களில் ஒருவராக அவரும் இருக்கிறார். ராஜஸ்தானின் சிகாரில் மட்டும் இதுபோன்று நூற்றுக்கணக்கானோர் உள்ளனர்.
இந்தியாவில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் பணியை எத்தனைப் பேர் செய்கின்றனர்? உண்மையில் நமக்குத் தெரியாது. 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தனிப்பட்ட தொழிலாகக் கூட அவர்கள் பட்டியலிடப்படவில்லை. மலம் அள்ளும் பணியாளர்களே இல்லை என சில மாநில அரசுகள் மறுக்கின்றன. ஓரளவு கிடைக்கப் பெற்ற தரவுகளே மலம் அள்ளும் தோட்டிகளாக லட்சக்கணக்கான தலித்துகள் வேலை செய்வதாக சொல்கின்றன. இதன் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக் கூடும். ‘மலம் அள்ளும்‘ பணியை பெரும்பாலும் பெண்களே செய்கின்றனர்.
சாதி அமைப்பின் மிக மோசமான தண்டனையாக “அசுத்தம்” மிகுந்த இந்த வேலை அவர்களுக்கு தரப்படுகிறது. தீண்டாமையும் அமைப்பு ரீதியிலான அளவீடுகளும் அவர்களின் இருத்தலின் ஒவ்வொரு அங்குலத்தையும் வேட்டையாடுகின்றன. அவர்களின் காலனிகள் கவனமாக ஒதுக்கி வைக்கப்படுகின்றன. பெரும்பாலானோர் சிறுநகரத்திற்கும் பெருநகரத்திற்கும் இடையில் வசிக்கின்றனர். கிராமங்களில் இவை திட்டமிடப்படாத நகரங்கள் ஆகிவிட்டன. சில பெருநகரங்களிலும் இதுபோன்ற குடியிருப்புகள் உள்ளன.
1993ஆம் ஆண்டு மனிதக் கழிவுகளை மனிதகர்ளே அகற்றும் பணிக்கும், உலர் கழிப்பறைகள் (தடைச்) சட்டமும் மத்திய அரசு இயற்றியது. இது மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதை தடை செய்கிறது. பல மாநிலங்களும் தங்கள் பகுதிகளில் இதுபோன்ற நடைமுறைகள் இல்லை என்று மறுக்கின்றன அல்லது அமைதி காக்கின்றன. அவர்களுக்கான மறுவாழ்வுக்கு அளிக்கப்படும் நிதியுதவியை மாநில அரசுகள் பெறுகின்றன. ஆனால் இல்லாத ஒன்றிற்கு எதிராக எப்படி நம்மால் போராட முடியும்? சில மாநிலங்களில் இச்சட்டத்தை ஏற்பதில் அமைச்சரவை அளவில் எதிர்ப்பு கிளம்பின.
பெண்களுக்கு (துப்புரவு பணியாளர்களுக்கு) பல நகராட்சிகள் குறைவான சம்பளமே தருவதால் அவர்களின் பொருளாதார தேவைகளை எதிர்கொள்ள மலம் அள்ளும் வேலைகளை செய்கின்றனர். சில நகராட்சிகள் பல மாதங்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லை.1996ஆம் ஆண்டு ஹரியானாவின் துப்புரவு பணியாளர்கள் இதுபோன்று நடத்தப்படுவதை கண்டித்து பெருந்திரள் போராட்டத்தை நடத்தினர். அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை செயல்படுத்தி சுமார் 700 பெண்களை கிட்டதட்ட 70 நாட்களுக்கு அம்மாநில அரசு பூட்டி வைத்தது. போராட்டக்காரர்களின் ஒரே கோரிக்கை: நேரத்திற்கு எங்கள் சம்பளத்தை கொடு என்பதுதான்.
இப்பணிக்கு சமூக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முடிவுகட்ட சமூக சீர்திருத்தம் அவசியம். சட்டம் ஏதுமின்றி கேரளா அரசு 1950கள், 60களில் மலம் அள்ளும் பணியில் இருந்து விடுவித்து கொண்டது. ஆனால் பொதுமக்களின் ஆதரவும் இதில் முக்கிய பங்காற்றுகிறது.
*தலித் என்ற சொல்லாடல் ஒடுக்கப்பட்டவர்கள் அல்லது தாழ்த்தப்பட்டவர்கள் என்கிறது. சாதிய அமைப்பில் தீண்டத்தகாதவர்களாக அவர்களை சமூகங்கள் நடத்துகின்றன. சட்டப்பூர்வமாக தடைவிதிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகியும் தீண்டாமையும், அதுசார்ந்த செயல்களும் சமூகத்தில் உலவி கொண்டிருக்கின்றன.
தமிழில்: சவிதா