இந்தக் குழு, கிராமப்புறப் பெண்கள் செய்யும் பெரிய அளவிலான பணிகளைச் சித்தரிக்கும் புலப்படும் பணியும் , புலப்படாத பெண்களும் என்ற புகைப்படக் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். அனைத்து புகைப்படங்களும் 1993 மற்றும் 2002 க்கு இடையில் 10 இந்திய மாநிலங்களில் P. சாய்நாத்தால் படமாக்கப்பட்டவை. PARI, பல ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உருவாக்கிய புகைப்படக் கண்காட்சியை இங்கு ஆக்கப்பூர்வமாக டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.
அவர்கள் வாழ்க்கை முறையின் கோர்வை
அந்தப்பெண்மணி காலை நாலரை மணிக்கே எழுந்துவிட்டார். ஒரு மணிநேரம் கழித்து சட்டிஸ்கரின் சர்குஜா காடுகளில் டெண்டு இலைகளை பறித்துக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில், மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆதிவாசிப்பெண்கள் அதே வேலையை செய்துகொண்டிருப்பார்கள். குடும்பம் முழுவதும் குழுவாக இலைகளை பறிக்கும் வேலைகளை செய்கிறார்கள். அந்த இலைகள் பீடி செய்வதற்கு உதவுகிறது.
ஒரு நாளில் 6 பேர் கொண்ட அந்த குடும்பத்தினர் ரூ.90 (1.85 டாலர்) கூலி பெறுகிறார்கள். டெண்டு அதிகம் கிடைக்கும் இரண்டு வாரங்களில், அடுத்த மூன்று மாதங்களில் பெறுவதைவிட, கூடுதலான தொகையை அவர்கள் சம்பாதிப்பார்கள். எனவே அதிகம் கிடைக்கும் அந்த காலங்களில் அவர்களால் முடிந்தளவு கூடுதலாக பறிக்க முயற்சி செய்வார்கள். குறைந்தது 6 வாரங்கள் அவர்களின் வாழ்க்கை முறையே வேறு விதமாக இருக்கும். பெரும்பாலும் இப்பகுதியில் உள்ள அனைத்து குடும்பத்தினரும் காட்டில்தான் இருப்பார்கள். ஆதிவாசிகளின் பொருளாதாரத்திற்கு டெண்டு முக்கியமான ஒன்றாகும்.
அதேபோல் மஹீவா மலர்களும், புளி சேகரிப்பதுமாகும் அல்லது செரோன்ஜி மற்றும் சால் சேகரிப்பதுமாகும். நாட்டின் சில பகுதிகளில் ஆதிவாசிகள், மரம் அல்லாத காட்டிலிருந்து கிடைக்கும் பொருட்களை சார்ந்தே உள்ளார்கள். அவர்களின் பாதி வருமானம் அவற்றிலிருந்தே கிடைக்கிறது. ஆனால், அந்த பொருட்களின் விலையில் சிறிது மட்டுமே அவர்களுக்கு கிடைக்கிறது. மத்திய பிரதேசத்தில் மட்டும் அந்த பொட்களின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடிகள்(412 மில்லியன் டாலர்) ஆகும்.
மாநிலங்கள் காடுகளை அடைத்து வைத்திருப்பதால், சரியான அளவை தெரிந்துகொள்வது கடினம். ஆனால், தேசியளவில், ஒவ்வொரு ஆண்டும், மரங்கள் அல்லாத காடுகளிலிருந்து கிடைக்கும் பொருட்கள் ரூ.15 ஆயிரம் அல்லது 3.09 மில்லியன் டாலர் ஆகும்.
அதிலிருந்து சிறிதளவு மட்டுமே அந்த ஆதிவாசி பெண்ணுக்கும், அவளது குடும்பத்தினருக்கும் கிடைக்கும். அவர்களுக்கு அது வாழ்வாதாரம். அதுவும் கூட அவர்களுக்கு போதியளவாக இருக்காதுதான். இடைத்தரகர்கள், வியாபாரிகள், கடன்கொடுப்பவர்கள்தான் அதன் மூலம் நன்றாக சம்பாதிப்பார்கள். ஆனால், அதை சேகரிப்பவர்கள், அதிலிருந்து பொருட்களை உருவாக்குபவர்கள் மற்றும் சந்தைப்படுத்துபவர்கள் யார்? முக்கியமாக அந்த வேலையை செய்பவர்கள் கிராமப்புறப்பெண்கள். அந்தப்பெண் காட்டிலிருந்து விளையும் பொருட்களை அதிகளவில் சேகரிக்கிறார். மருத்துவ மூலிகைகள் உள்ளிட்டவற்றையும் அவர் காடுகளிலிருந்து சேகரிக்கிறார். ஏற்கனவே அது உலகளவில் பல மில்லியன் டாலர்கள் கிடைக்கும் தொழில். அந்த தொழில் ஏற்றமடையும்போது, அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்க்கையிலும் சரிவு ஏற்படும். அவரது தொழிலை சுரண்டுபவர்கள் அதை உறுதி செய்கிறார்கள்.
காடுகள் அதிகளவில் அழிந்து வருகின்றன. அவரது வேலைகள் கடினமாகின்றன. அவர் காடுகளில் தேடிச்செல்லும் நேரம் அதிகமாகிறது. வேலை நேரம் கூடுகிறது. ஆதிவாசிகளிடையே வறுமை அதிகரிக்கும்போது, அவர்கள் காடுகளில் கிடைக்கும் மரங்கள் அல்லாத பொருட்களை சார்ந்திருக்கிறார்கள். அந்தப்பெண்ணின் பொறுப்பும் கூடுகிறது. ஒடிஷாவில் இந்த வேலையயை செய்யும் பெண்கள் 3 அல்லது 4 மணி நேரங்கள் நடக்கிறார்கள். ஒரு நாளில் 15 மணி நேரங்கள் அல்லது அதற்கும் மேல் உழைக்கிறார்கள். நாட்டில் பல மில்லியின் ஏழை ஆதிவாசி பெண்கள், இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு தங்கள் குடும்ப வறுமையை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இதில் அவர்கள் வன அலுவலர்கள், வணிகர்கள், காவல் துறை பணியாளர்கள் உள்ளிட்டோரின் துன்புறுத்தலுக்கும் ஆளாகிறார்கள். சில நேரங்களில் சட்டங்களும் அவர்களை வதைக்கிறது.
துடைப்பத்தை ஒன்றாக சேர்த்து கட்டும் பெண்கள் ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரத்தைச் சேர்ந்த பெண்கள். மாநிலத்தில் பெரும்பாலான ஆதிவாதிகளின் பாதிக்கும் மேலான வருமானம் காடுகளிலிருந்து அவர்கள் சேகரிக்கும் மரங்கள் அல்லாத பொருட்களிலிருந்து நேரடியாக கிடைப்பதாகும். ஆதிவாசி அல்லாத ஏழை மக்களுக்கும் காடுகளில் உள்ள மரங்கள் அல்லாத பொருட்கள் வாழ்வாதாரத்திற்கு தேவைப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில் உள்ள பந்தல்கந்த்தை சேர்ந்த பெண் பல்துறை திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர் பானைகள் மற்றும் சட்டிகள் மட்டும் செய்பவர் கிடையாது. அது அவர்களின் குடும்ப தொழில். அவர் கயிறு திரிக்கிறார். கூடை மற்றும் துடைப்பம் தயாரிக்கிறார். அவரின் கை வண்ணத்தில் உருவான பொருட்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதுவும் அவர் வசிக்கும் இடத்தில் பெரும்பாலான காட்டுப்பகுதி அழிக்கப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட வகை களிமண் எங்கு கிடைக்கும் என்பது அவருக்கு நன்றாக தெரிகிறது. அவரது அறிவு சிறப்பாக உள்ளது. அவரது வேலைப்பளு, அவரது குடும்பத்தின் நிலை அனைத்தும் திகைக்க வைக்கும் வகையில் உள்ளது.
தமிழில்: பிரியதர்சினி. R.