சான்டல் ஆதிவாசிகளால் இசைக்கப்படும் பனம் மற்றும் காப்குபி ஆகிய இரண்டு இசைக்கருவிகளின் இசையும் மேற்கு வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்தில் உள்ள சாட்டினாவின் ஆதிவாசி குடியிருப்புகளின் தெருக்களில் எப்போதும் உரத்து, தனித்துவமாக ஒலித்துக்கொண்டே இருக்கும் இசையாகும். இது அவர்களின் மண்ணோடு கலந்த ஒன்றாகும்.
தற்போது அந்த ஸ்ருதியும், மெல்லிசையும் மறைந்து வருகிறது.
“நாங்கள் இந்த இசைக்கருவிகளை பெரும்பாலும் விழாக்களின்போது இசைப்போம்“ என்று 42 வயதான கணேஷ் சோரன் கூறுகிறார். இவர் ராஜ்நகர் தொகுதியில் உள்ள சான்டல் குடியிருப்பில் வசிப்பவராவார். விவசாய கூலித்தொழிலாளியும், பனம் வாசிப்பவரும் ஆவார். உண்மையில் இவர்தான் ஒரு குறிப்பிட்ட வடிவ இரட்டை கம்பி காப்குபி கருவியை உருவாக்கியவர். அதை அவரும் வாசிக்கிறார். ஒற்றைக்கம்பி பனம் கருவி பழமையான இசைக்கருவியாகும். அது சான்டல் மற்றும் மற்ற ஆதிவாசி குழுக்களின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் பெற்ற கருவியாகும்.
நீர், காடு, நிலம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள் அவரின் இசையில் வெளிப்படும்
“நாங்கள் பனம் கருவியை சிது கன்கு விழாவில் வாசிப்போம்“ என்று 46 வயதான ஹோப்பன் சோரன் கூறுகிறார். அவரும் சாட்டினாவில் ஒரு விவசாய கூலித்தொழிலாளி ஆவார். 1855ம் ஆண்டு சான்டல் தலைவர்கள் முன்னெடுத்த பிரிட்டிசுக்கு எதிரான கிளர்ச்சிக்குப் பின்னர் அந்த விழா சிது முர்மு மற்றும் கன்கு முர்மு என்று அழைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசு அவர்களின் கைதுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கியது. அந்த காலத்தில் மிகப்பெரிய தொகை இது. இதுவே அவர்களின் சவால் எவ்வளவு கடுமையானது என்பதை காட்டுகிறது. கிளர்ச்சி என்பது அவர்கள் ரத்தத்திலே ஊறியது. 15 ஆயிரம் முதல் 60 ஆயிரம் சான்டல் வில்வித்தை வீரர்கள் பிரிட்டிசின் குண்டுகளுக்கு பலியாகியிருப்பார்கள். அவர்களின் நினைவாகவும், அவர்களுக்கு மரியாதையளிக்கும் வகையிலுமே விழாக்களில் இந்த பனம் கருவி இசைக்கப்படுகிறது.
“எங்கள் பால்ய காலத்தில், புகழ்பெற்ற பனம் இசைக்கலைஞர்கள் இருந்தார்கள். அவர்களின் இசையை நாங்கள் வானொலியில் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். அதை கவனித்து, அவர்கள் உருவாக்கும் சப்தம் மற்றும் மெல்லிசையை கேட்டு நாங்கள் அந்த கருவியை உருவாக்குவது மற்றும் வாசிப்பதை கற்றுக்கொண்டோம்.
கணேஷ் சோரனின் காப்குபியை கேட்டால், அது வரலாற்றுக்கு மீண்டும் நம்மை அழைத்துச்செல்கிறது. அவருக்கு, அவர் உருவாக்கிய சப்தங்கள் அல்லது இசை சான்டல்களின் சுதந்திர போராட்டம் மற்றும் நீர், காடு மற்றும் நிலம் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. இந்த பிரச்னைகள் தற்போதும் உள்ளது. கணேஷ் மற்றும் ஹோப்பன் இருவரும் உள்ளூர் நில உரிமையாளரின் வயல்களில் வேலை செய்கின்றனர். இந்தப்பகுதியில் நாளொன்றுக்கு கொடுக்க வேண்டிய கூலித்தொகை ரூ.260. ஆனால், அவை அலுவல் ரீதியான கோப்புகளில் மட்டுமே உள்ளது. உண்மையில் அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.100 முதல் ரூ.200 மட்டுமே வழங்கப்படுகிறது. அவர்களுக்கு அரிதாகவே கிடைக்கும் கொத்தனார் வேலைக்கு ரூ.260 தினக்கூலி கிடைக்கிறது. மேற்கு வங்கத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டத்திற்கான கூலித்தொகை ரூ.240 ஆகும். இதில் உண்மையில் அவர்களுக்கு ரூ.182 முதல் ரூ.202 கிடைக்கிறது. ஆனால், ஆண்டுக்கு 25 நாட்கள் மட்டுமே இந்த வேலை அவர்களுக்கு கிடைக்கிறது.
ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் அல்லாத வேலைக்கு, இந்தப்பகுதியில் கூலி அதிகமாக இருந்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். ஆனால், அது ஆண்டுதோறும் குறைந்துவருகிறது. 2011ம் ஆண்டு ரூ.240 நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கனவே குறைத்து வழங்கப்பட்டு வந்த கூலித்தொகை, தொற்று மற்றும் அதனைத்தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், பெரியளவில் குறைக்கப்பட்டது. எனினும், நல்ல பருவமழையுடன் தற்போதைய சிறப்பான வேளாண் பணிகளால், அவர்களுக்கு ரூ.240 மீண்டும் கிடைக்கிறது. சில நாட்கள் அல்லது சில வாரங்கள் வேலை கிடைக்கிறது.
ஒவ்வொரு பனம் மற்றும் காப்குபியும் தனித்தன்மை கொண்டதாக உள்ளது. அதை உருவாக்குபவரின் படைப்புத்திறன் அதில் வெளிப்படுகிறது. அதனால், அந்தக்கருவியின் அமைப்பு, அதை உருவாக்கியவர் மற்றும் வாசிப்பவரின் தன்மையைப்பொறுத்து மாறுபடுகிறது. ஹோப்பனின் பனம் கருவி உளி மற்றும் கோடரி போன்ற ஆயுதங்களைப்பயன்படுத்தி மிகவும் சிக்கலானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கணேஷ் சோரனின் பனம் விசித்திர அழகுடையதாக உள்ளது. தேங்காய் சிரட்டைகள், விலங்கின் தோல், உடைக்க முடியாத கம்பு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டு வித்யாசமாக உள்ளது.
கொல்கத்தா ரவீந்திரநாத் பாரதி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பழங்குடி இசைக்கலைஞர் டாக்டர் நிபேதிதா லகிரியைப் பொறுத்தவரை, “பனம் ஒற்றைக்கம்பி இசைக்கருவி, வயலின் குடும்ப வகையைச்சார்ந்ததான ஒன்றாக இருக்கும். வில் மூலம் இசைக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். அதிலிருந்து தாள இசை தோன்றும். கைகளால் மீட்டக்கூடிய இசைக்கருவிகளைப்போல் நேரடியாக கைகளால் மீட்ட முடியாது. இது சார்டபோன் போன்றதொரு இசைக்கருவி. வில் போன்ற அமைப்பிற்கு தேவையான கம்பி, இழைகள் அல்லது குறிப்பிட்ட விலங்குகளின் ரோம முடி கொண்டு கட்டியிருப்பார்கள். அந்த வில் வைத்து மட்டுமே இதை இசைக்க முடியும். பான்டூர் பனம், பெலி பனம் என பல்வேறு வகை பனம் கருவிகளை வங்காளம் முழுவதும் நீங்கள் பார்க்கலாம். அதை வடிவமைப்பவர்கள், தங்களின் சொந்த பாணி மற்றும் தனித்தன்மையுடன் செய்திருப்பார்கள்.
கணேஷ் சோரனுடைய காப்குபி பழங்குடியினரின் கருவிகளுள் மாறுபட்ட கருவி, கோமோக்கின் முன்னோடி, பெங்கால் நாட்டுப்புறக்கலையின் ஒரு முக்கிய கருவி. அவர் டோல் கருவி (மேளம்), அவரது மகனின் பொம்மையும் வைத்து இதை உருவாக்கியிருந்தார். அதன் ஸ்ருதி, தனது மகனின் வெகுளித்தனமாக சிரிப்பைப்போன்றும், அதன் தாளம் காடுகளை நினைவூட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். “எனது மனதை புதிதாகவும், இனிமையாகவும் வைத்துக்கொள்ள நான் இரண்டு இசைக்கருவிகளையும் 15 ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். ஒரு காலத்தில் எனது கடினமான வேலைகளை முடித்துவிட்டு வந்து ஓய்வாக சிறிது நேரம் வாசிப்பேன். அதை மற்றவர்களும் வந்து கேட்டு ரசிப்பார்கள். ஆனால், இன்று அவர்களுக்கு இசை கேட்க, பொழுதுபோக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதனால், இந்த வயதானவனை யாரும் கவனிக்க விரும்பவில்லை“ என்று அவர் கூறுகிறார்.
அவர்களின் கிராமத்தைச் சேர்ந்த நிறைய ஆண்கள் கொத்தனார்களாக, தினக்கூலிகளாக பல்வேறு நகரங்களில் பணிசெய்கிறார்கள். அதில் சிலர் இப்போது பனம் கருவியை எடுத்துச்சென்று வாசிப்பார்கள். ஆனால், பெரும்பாலானோர் இந்த பழங்கால இசைக்கருவியை வாசிக்க கற்றுக்கொள்வதற்கு முன்வருவதில்லை என்று கணேஷ் மற்றும் ஹோப்பன் இருவரும் கூறுகின்றனர். “இந்த கருவியில் தனித்தன்மையான இசையை உருவாக்கக்கூடிய திறன் உள்ளவர்கள் கொஞ்சம் பேர்களே இந்த கிராமத்தில் எஞ்சியுள்ளனர்“ என்று ஹோப்பன் கூறுகிறார்.
“உள்ளூர் பள்ளியில் கற்றுக்கொடுக்க முடியும் என்றால், சில விருப்பமுள்ள மாணவர்கள் இருக்கக்கூடும். அவர்களுக்கு கற்றுக்கொடுக்கலாம்“ என்று கணேஷ் கூறுகிறார். “ஆனால், இந்த தலைமுறையில் செல்போன்களிலும், ஆன்லைனிலும் ஒரே ஒரு பொத்தானை அழுத்தி அனைத்து வகை இசைகளையும் கேட்க முடிகிறது. எனில், அவர்கள் எவ்வாறு இந்தக்கருவிகளை வாசிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
கணேசோ அல்லது ஹோப்பனோ போன் வாங்கவோ அல்லது வைத்திருக்கவோ முடியுமா?
கணேஷ் மற்றும் ஹோப்பன் இருவரும் தங்களின் பொருளாதார சூழலுடன், பனம் இசைப்பது குறையும் நேரத்தை ஒப்பிடுகின்றனர். அவர்கள் ஏழையான வேளாண் கூலித்தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு அதிக நேரம் வேலை செய்கின்றனர். “நான் பனம் வாசிக்க நினைத்தால், எனது முழு குடும்பமும் பல நாட்கள் பட்டினி கிடக்க நேரிடும்“ என்று கணேஷ் கூறுகிறார்.
“அந்த இசை எங்கள் பசித்த வயிறுகளை நிரப்பாது“ என்று ஹோப்பன் கூறுகிறார்.
தமிழில்: பிரியதர்சினி. R.