பிரஹலாத் தோகே எப்படியாவது தனது பசுவை காப்பாற்ற முயற்சி செய்து வருகிறார். ஆனால் அதற்கு அவர் தனது மூன்று ஏக்கர் கொய்யாப் பழத்தோட்டத்தைப் பலி கொடுத்தாக வேண்டும்.
“ஒன்றுக்குப் பதிலாக இன்னொன்றை ஈடுகட்டி வருகிறேன். என்னுடைய சேமிப்பு, தங்கம் என எல்லாவற்றையும் செலவழித்துவிட்டேன். ஆனால் இப்போது மரங்களைக் காப்பாற்றுவதற்காக என்னால் தினமும் தண்ணீர் வாங்க முடியாது. ஆகையால் என்னுடைய பசுவைக் காப்பாற்ற முடிவு செய்தேன். இது கடினமான முடிவுதான்” என 7 முதல் 8 அடி உயரமுள்ள தண்ணுடைய கொய்யா மரங்களுக்கு முன் நின்று கண்ணீர் வழிய கூறுகிறார் 44 வயது தோகே.
ஒருமுறை விற்றுவிட்டால் மீண்டும் பசுவை வாங்குவது கடினம். மகராஷ்ட்ரா அரசின் வறட்சி நிவாரண நடவடிக்கையாக, பீட் மாவட்டத்தில் உள்ள அவரது கிராமமான வகோன் தோகின் புறவெளியில் ஏப்ரல் மாதம் கால்நடை முகாம் அமைக்கப்பட்டது. ஒவ்வொன்றும் ஒரு லட்ச ரூபாய் என உள்ளூர் சந்தையில் வாங்கிய இரண்டு கீர் பசுக்கள் உள்பட பிரஹலாத்தின் 12 பசு மாடுகளையும் முகாம்களுக்கு அனுப்பிவிட்டார். ஆனால் மரங்களை கைவிடுவது ஈடுகட்ட முடியாத இழப்பைத் தரும்.
“என்னுடைய மூத்த சகோதரர் நான்கு வருடங்களுக்கு முன்பு லக்னோ சென்ற போது, அங்கிருந்து கொய்யாச் செடிகளை வாங்கி வந்தார்” என்கிறார் அவர். அதை தோட்டமாக வளர்த்தெடுக்க பிரஹலாத்திற்கும் அவரது குடும்பத்திற்கும் நான்கு வருடங்கள் ஆனது. ஆனால், வறண்ட மராத்வாடா பகுதியில் 2018-ல் ஏற்பட்ட மோசமான பருவமழை மற்றும் அடுத்து வந்த தொடர்ச்சியான வறட்சி காரணமாக, அவரால் சவால்களை எதிர்கொள்ள முடியவில்லை.
மாநிலத்தின் சில தாலுகாக்களில் ஒவ்வொரு வருடமும் பஞ்சம் தலைவிரித்தாடினாலும், 2012-13 விவசாயப் பருவம் (2012ல் பருவமழை பொய்த்துப் போனதால், 2013ம் ஆண்டு கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது), அதை தொடர்ந்து 2014-15 மற்றும் 2018-19 ஆண்டுகளில் மராத்வாடா பகுதி முழுவதும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை தொடங்கியது. ஒவ்வொரு கோடை காலத்திலும் தண்ணீர் பற்றாக்குறை நிலவினாலும், 2012-ம் ஆண்டிலிருந்து வானிலை வறட்சி (பருவமழை பொய்த்துப் போனது), விவசாய வறட்சி (காரிஃப் மற்றும் ராபி பயிர்கள் பொய்த்துப் போனது) மற்றும் நீர்நிலை வறட்சி (நிலத்தடி நீர் குறைந்து போனது) போன்றவை மராத்வாடாவில் அதிகரிக்கத் தொடங்கின.
வகோன் தோக் கிராமம் கியோரி தாலுகாவில் உள்ளது. 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மகராஷ்ட்ரா அரசாங்கம் அறிவித்த வறட்சி பாதித்த 151 தாலுகாவில் இதுவும் ஒன்று. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின் படி, 2018ம் ஆண்டு ஜுன் முதல் செப்டம்பர் வரை, 50 சதவிகிதத்திற்கும் குறைவாகவே – 288மிமீ - கியோரியில் மழை பதிவாகியுள்ளது. இதே காலத்தில் நீண்டகால சராசரி மழையளவு 628மிமீ ஆகும். பயிர்களுக்கு மிக முக்கிய மாதமான செப்டம்பரில் சராசரி மழையளவான 170மிமீ-யை விட 14.2மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது.
மராத்வாடாவையும் சேர்த்து எட்டு மாவட்டங்களைக் கொண்ட அவுரங்கபாத் டிவிஷன் முழுவதும், நீண்டகால சராசரி மழையளவான 721மிமீ-யை விட 2018ம் ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை 488மிமீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது. செப்டம்பர் மாதத்தில், இப்பகுதியில் நீண்டகால சராசரியான 177மிமீ மழையளவை விட வெறும் 24மிமீ (அல்லது 14 சதவிகிதம்) மழையே பெய்துள்ளது.
2018-ல் மோசமான பருவமழை காரணமாக அக்டோபர்-டிசம்பரில் காரிஃப் அறுவடை சிறப்பானதாக இல்லை. இந்த வருட பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ராபி அறுவடையும் இருக்காது. சொட்டு நீர் பாசனத்திற்காகவும் தனது நான்கு கிணற்றை ஆழப்படுத்தவும் ரூ. ஐந்து லட்சத்தை (தன்னுடைய சேமிப்பைக் கொண்டும், தனியார் வங்கி மற்றும் உள்ளூர் விவசாய கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கியும்) தோகே செலவு செய்திருந்தாலும் அவை எதுவும் பலனளிக்கவில்லை.
பிரஹலாத், அவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் தந்தைக்கும் சேர்த்து சொந்தமாக 44 ஏக்கர் உள்ளது; அதில் 10 ஏக்கர் அவரது பெயரில் உள்ளது. குடும்பத்தின் மொத்த நிலமும் வறண்டு போய் உள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்பு, ஒரு ஏக்கரில் கோடைகால நறுமண மலரான மல்லியை நட்டு வைத்தோம். “மல்லிப்பூக்கள் மூலம் எங்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஆனால் அவையெல்லாம் வயலுக்கு செலவாகிவிட்டது.” இப்போது மல்லிச்செடியும் வாடிவிட்டது.
கடந்த 15 வருடங்களில் இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்க அதிகரிக்க, அதை சமாளிக்கும் தோகேயின் முயற்சியும் அதிகரித்தது. வேறு வேறு பயிர்கள், பலவகையான நுட்பங்கள், கரும்பு சாகுபடியை நிறுத்தியது, நீர்ப்பாசனத்தில் முதலீடு செய்தது என அவரும் பலவற்றை முயன்று பார்த்தார். ஆனால் ஒவ்வொரு வருடமும் மோசமடைந்து வரும் தண்ணீர் பிரச்சனை தனது திறனை சோதிப்பதாக அவர் கூறுகிறார்.
பிரஹலாத்தின் நான்கு கிணறுகளும் 2018 நவம்பரில் வறண்டு விட்டது. இந்த வருடத்தில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை, வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறை தண்ணீர் வாங்கியுள்ளார். ஆனால் 5000 லிட்டர் தண்ணீரின் விலை ரூ. 500-லிருந்து 800 ரூபாயாக உயர்ந்து விட்டது. (மே இறுதிக்குள் ரூ. 1000 வரை உயர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது).
வருடம் முழுவதும் இங்கு தண்ணீர் லாரிகளை பரவலாக பார்க்க முடியும். கோடை காலத்தில் இன்னும் அதிகமாக பார்க்கலாம். கடினமான எரிமலைப் பாறைகளின் மேல்தான் மராத்வாடா பகுதி அமைந்துள்ளது. இதன் காரணமாக போதுமான மழைநீர் நிலத்தடிக்குள் இறங்காது. அதுபோல் நிலத்தாடி நீரும் போதுமான அளவு ஊற்றெடுக்காது. மேலும் இப்பகுதி மழை மறைவு பிரதேசமாக இருப்பதால், 600மிமீ மேல் இங்கு மழை பதிவாகாது.
கியோரி தாலுகாவில் இருக்கும் பரந்த தரிசு நிலங்களுக்கு மாறாக இடை இடையே கரும்பு வயல்வெளிகளும் (சில நில உரிமையாளர்களின் கிணறுகள் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. மற்றவர்களோ வெளியிலிருந்து தண்ணீர் வாங்குகிறார்கள்) உள்ளது. இப்பகுதியில் கோதாவரி ஆற்றின் கரையோரத்தில் திராட்சை மற்றும் இதர பழத்தோட்டங்களும் தீவனப் பயிர்களும் உள்ளன. ஆனால் ஆற்றை தாண்டியுள்ளப் பகுதிகளான மேல்புற டெக்கான் பீடபூமியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையை பார்க்க முடியவில்லை.
“மூன்று மாதங்களாக நான் தண்ணீர் வாங்கினேன். ஆனால் இப்போது என் பணம் எல்லாம் செலவாகிவிட்டது” எனக் கூறுகிறார் பிரஹலாத். தனது கொய்யாப் பழத்தோட்டத்தை காப்பாற்ற கந்து வட்டிக்காரர்களிடம் அதிக வட்டியில் கடன் வாங்கக் கூடாது என்ற முடிவில் அவர் இருக்கிறார். “5000 லிட்டர்களுக்கு 800 ரூபாய்! இது கட்டுப்படியாகாது. எங்கள் கிராமத்தில் யாரிடமும் இந்தளவு பணம் இல்லை. என்னுடைய செடிகள் போலவே நானும் கடனில் வீழ்ந்து அழிந்து போவேன்” என்கிறார்.
தனது கொய்யாப் பழத்தோட்டத்தை வறண்டு விடாமல் பாதுகாக்க எவ்வுளவோ முயற்சித்தும், ஏப்ரலில் அதை கைவிட்டு விட்டார் தோகே. தற்போது மழைக்காக காத்திருக்கிறார். ஆனால் ஜூன் மாதம் மழை பெய்யும்போது, கோடை வெயிலை தாங்க முடியாமல் அவரது பழத்தோட்டம் வாடி வதங்கிவிடும்.
நன்கு வளர்ந்த 1100 கொய்யா மரங்கள் மூலம் எப்படியும் இந்தக் குளிர்காலத்தில் பிரஹலாத்திற்கு ரூ. 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை கிடைக்கும். கொய்யா மரங்கள் நட்டதிலிருந்து நான்கு அல்லது ஐந்து வருடங்களில் பழம் கொடுக்க ஆரம்பிக்கும். எல்லா செலவுகளும் போக, அவருக்கு நல்ல லாபம் கிடைக்கும். சில மரங்கள் சிறிய பழங்களை கொடுத்தாலும், வெயிலில் அவை உலர்ந்த கரி போல் கருப்பாக மாறிவிடுகின்றன. “இதைப் பாருங்கள். இவைப் பிழைத்திருக்க வாய்ப்பில்லை” என கையில் உலர்ந்த பழங்களின் கிளையை வைத்துக்கொண்டு, கீழே விழுந்து கிடக்கும் உலர்ந்த இலைகளில் நடந்த படியே நம்மிடம் கூறுகிறார்.
தோகே போல் பலரும் மராத்வாடா பகுதியில் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் போராடி வருகிறார்கள். பர்காஜேக்கு சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. தண்ணீர் பிரச்சனைக் காரணமாக சில காலத்திற்கு முன்பே கரும்பு பயிரிடுவதை நிறுத்திவிட்டார். 2018ம் ஆண்டு ஜூன்-ஜூலையில் சோயாபீனை பயிரிட்டார். ஆனால் அதில் எந்த லாபமும் கிடைக்கவில்லை. ராபி பருவ விதைப்பு இல்லாததால், அவரால் கம்பும் சோளமும் பயிரிட முடியவில்லை. வழக்கமாக தனது கால்நடைகளுக்கான தீவனத்திற்காக இதை பயிரிடுவார்.
பீட் மாவட்டத்தில், இந்த வருடம் ஜூன் 3 வரை 933 கால்நடை முகாம்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அதில் 4,04,197 விலங்குகளோடு 603 முகாம்கள் செயல்பாட்டில் உள்ளதாக அவுரங்காபாத் டிவிஷனல் ஆணையர் கூறுகிறார். அவுரங்காபாத் டிவிஷனில் உள்ள எட்டு மாவட்டங்களில் மொத்தமாக 1,140 கால்நடை முகாம்களுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் 750 முகாம்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. பர்பானி, நேண்டட் மற்றும் லத்தூர் மாவட்டங்களில் ஒரு கால்நடை முகாமுக்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை, செயல்பாட்டிலும் இல்லை.
மாநில வருவாய்த் துறை தரும் தகவலின் படி, மகராஷ்ட்ராவில் மிகவும் மோசமாக வறட்சி பாதித்த 10 மாவட்டங்களில் 1540 கால்நடை முகாம்கள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான கால்நடைகளுக்கு தண்ணீரும் தீவனமும் வழங்கப்படுகிறது.
மகராஷ்ட்ராவை ஆளும் பாஜக தலைமையிலான அரசாங்கத்தை பல விஷயங்களுக்காக குறை கூறுகிறார் தோகே. “பாஜகவிற்கு நெருக்கமான கிராமத்தினருக்கு கடன் தள்ளுபடியும் புதிதாக கடனும் கிடைக்கிறது. நான் எதிர்கட்சியின் ஆதரவாளனாக இருப்பதால் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. வறட்சி நிவாரண விநியோகத்திலும் எனக்கு இதே கதிதான் நேர்ந்தது” என குற்றம் சுமத்துகிறார்.
பிரஹலாத்திற்கும் அவரது மனைவி – விவசாயியும் இல்லத்தரசியுமான - தீபிகாவிற்கும் மூன்று குழந்தைகள். தியானேஸ்வரி 12ம் வகுப்பு முடித்திருக்கிறாள், நாராயன் பத்தாம் வகுப்பு படிக்கிறான், இளைய மகன் விஜய் ஏழாம் வகுப்பு செல்கிறான். “அவர்களை நிச்சியம் படிக்க வைப்பேன்” என்கிறார் தோகே. ஆனால் அவரால் விஜையின் பள்ளிக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை (அவன் படிக்கும் தனியார் பள்ளியின் 2018-19 கல்வியாண்டிற்குரிய கட்டணம் ரூ. 20,000). இதனால் அவனின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. “கடந்த ஒரு வாரமாக என்னுடைய பசுக்களில் ஒன்று நோய்வாய்ப்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்க நிறைய பணம் செலவழித்துவிட்டேன்” என்கிறார்.
செலவுகளை சமாளிப்பது மிகவும் சோர்வடையச் செய்கிறது. தனது கால்நடைகளை காப்பாற்ற வேண்டும், அதே சமயத்தில் குடும்பத்தின் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும். “இது கடினமான நேரம். ஆனால் இதுவும் கடந்து போகும் என்பது எனக்கு தெரியும்” என நம்மிடம் அவர் கூறுகிறார்.
இதற்கிடையில் மராத்வாடா முழுவதும் குளங்கள், நிலத்தடி நீர்மட்டம், சிறிய மற்றும் நடுத்தர அணைகள், கிணறுகள் மற்றும் ஆழ்குழாய்க் கிணறுகள் என அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக வறண்டு வருகின்றன. மராத்வாடாவில் உள்ள பல குடும்பத்தினர் அவுரங்காபாத், புனே அல்லது மும்பைக்கு புலம்பெயர்ந்திருப்பார்கள் அல்லது கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டிருப்பார்கள். மீனவ சமுதாயத்தினர் தள்ளாட்டத்தில் உள்ளனர். அதே நிலைமையில்தான் கால்நடைகளை வைத்திருக்கும் மேய்ப்பர்களும் உள்ளனர்.
பல நாட்களாக தான் தூங்கவில்லை எனக் கூறும் பிரஹலாத், தன்னுடைய வீட்டிலிருந்து அரை கிமீ தூரமேயுள்ள தோட்டத்திற்கு கூட சில நாட்களாக செல்லவில்லை. கால்நடை முகாமுக்கும் நெடுஞ்சாலைக்கு மறுபக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்குமே அலைந்து கொண்டிருக்கிறார். “தினமும் நான் 16 மணி நேரம் உழைக்கிறேன்” என தனது கைவிடப்பட்ட பண்ணையில் நடந்துகொண்டே அவர் நம்மிடம் கூறுகிறார். பணமும் தண்ணீரும் இல்லாத போது, உங்களால் என்ன செய்துவிட முடியும் என்கிறார்.
தமிழில்: வி கோபி மாவடிராஜா