கடல் சங்குகளை வெட்டி வளையல்கள் செய்வது எப்படி என்று ஷானுவுக்கு முதலில் கற்றுத் தந்தவர் அவரது உறவினர் விஸ்வநாத் சென்.
“வளையல்களில் வடிவம் செதுக்கி முகவர்களுக்கு அனுப்புவேன். அவர்கள் அதை விற்பார்கள். நான் சாதாரண வடிவம் செதுக்கிய வளையல்களை மட்டுமே தயாரிக்கிறேன். வடிவத்தை செதுக்கிய பிறகு அதில் தங்கத்தகடு சுற்றி விற்பனைக்கு அனுப்புகிறவர்களும் உண்டு,” என்று விளக்குகிறார் 31 வயது ஷானு கோஷ். அவர் தமது வயதில் பாதிக்கும் மேற்பட்ட காலம் இந்த வேலையை செய்துவருவதாக இவர் கூறுகிறார்.
மேற்கு வங்கத்தின் 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பாரக்பூரில் உள்ள ஷங்காபானிக் காலனியில் உள்ள பட்டறையில் இருக்கிறார் இந்த சங்கு கைவினைஞர். இந்தப் பட்டறையை சுற்றியுள்ள பகுதியில் ஆங்காங்கே சங்கு வேலைப்பாடு செய்து தரும் பட்டறைகள் உள்ளன. “லால்குத்தி முதல் கோஷ்பாரா வரையில் உள்ள பகுதிகளில் சங்கு கைவினைஞர்கள் கை வளையல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்,” என்கிறார் அவர்.
அந்தமானில் இருந்தும், சென்னையில் இருந்தும் சங்குகளை வரவழைக்கிறார்கள் முகவர்கள். ஒரு வகை கடல் நத்தையின் ஓடுதான் சங்கு ஆகும். இந்த சங்கின் அளவைப் பொறுத்து அது ஊது சங்காகவோ, வளையல் தயாரிப்பதற்கோ அனுப்பப்படும். தடிமனமான, பெரிய சங்குகளில் வளையல் செய்வது எளிது. சிறிய, லேசான சங்குகள் துளையிடும்போது எளிதில் உடைந்துவிடும். எனவே லேசான சங்குகள் ஊது சங்குகளாக பயன்படுத்தப்படுகின்றன. பெரிய சங்குகள் வளையல் செய்யப் பயன்படுகின்றன.
உட்புறம் சங்கு சுத்தம் செய்யப்பட்ட பிறகு வேலை தொடங்குகிறது. சுத்தம் செய்த பிறகு, அதை வெந்நீரில் கந்தக அமிலம் கலந்து கழுவுகிறார்கள். அது முடிந்த பிறகு, பாலிஷ் வேலை தொடங்குகிறது. வளையலில் இருக்கும் சின்ன சின்ன ஓட்டைகள், விரிசல்கள், சமமற்ற பகுதிகள் அடைக்கப்பட்டு, மென்மையாக்கப்படுகின்றன.
சுத்தியலால் உடைக்கப்பட்டு, துரப்பனக் கருவியால் அறுக்கப்பட்டு பிறகே வளையல்கள் தனித்தனியாக பிரிக்கப்படுகின்றன. பிறகு வளையல்கள் கைவினைஞர்கள் கைகளுக்கு வருகின்றன. அவர்கள் அவற்றை தீட்டி, பளபளப்பு ஊட்டுகிறார்கள். “கச்சா சங்கினை உடைக்கும் வேலையில் சிலர் ஈடுபடுகிறார்கள். சிலர் அவற்றில் இருந்து வளையல் செய்யும் வேலையில் ஈடுபடுகிறார்கள். வெவ்வேறு முகவர்களுக்கு கீழ் நாங்கள் வேலை செய்கிறோம்,” என்கிறார் ஷானு.
ஷங்கபானிக் காலனி முழுவதும் சங்குப் பட்டறைகள் நிரம்பியிருக்கின்றன. பெரும்பாலும் இவை ஒவ்வொன்றும் ஒரு படுக்கையறை அளவில் அமைந்துள்ளன. ஷானுவின் பட்டறையில் ஒரே ஒரு ஜன்னல்தான் உள்ளது. சங்கை அறுக்கும்போது கிளம்பும் வெள்ளை தூசி, பட்டறை சுவர்களில் படிந்துள்ளன. ஒரு மூலையில் இரண்டு பட்டை தீட்டும் இயந்திரங்கள் உள்ளன. மற்றொரு மூலையில், பக்குவப்படுத்த வேண்டிய கச்சா சங்குகள் குவிந்துகிடக்கின்றன.
தங்கள் பட்டறையில்
பக்குவம் செய்து பட்டை தீட்டிய சங்கு வளையல்களை முகவர்கள் விற்பனை செய்கிறார்கள். ஆனால்,
ஒவ்வொரு புதன் கிழமையும் சங்கு வளையல்களுக்கான மொத்த விற்பனை சந்தையும் நடக்கிறது.
சில நேரங்களில், குறிப்பாக தங்கத் தகடு சுற்றிய சங்கு வளையல்களை, ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களுக்கு, முகவர்கள் நேரடியாக விற்பனை செய்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக சங்கு பற்றாக்குறை நிலவுவதால், சங்கு வளையல்கள், ஊது சங்குகள் ஆகியவற்றின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறுகிறார் ஷானு. “கச்சாப் பொருட்களின் விலை கொஞ்சம் குறைவாக, கட்டுப்படியாகும் அளவில் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். கச்சாப் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை அரசாங்கம் கவனிக்கவேண்டும்,” என்கிறார் அவர்.
சங்குகளில் இருந்து வளையல்களும், பிற அலங்காரப் பொருட்களும் செய்யும்போது சில உடல்நலச் சிக்கல்களும் ஏற்படுகின்றன. “சங்கினை பட்டை தீட்டும்போது பறக்கும் மாவு போன்ற தூசு, நம் மூக்கிலும், வாயிலும் நுழையும். சில தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம்,” என்கிறார் ஷங்காபானிக் காலனியில் வேலை செய்யும் 23 வயது கைவினைஞர் அபிஷேக் சென். சங்கு வளையல்களும், ஊது சங்குகளையும் வடிவமைக்கிறார் அவர்.
“வேலையின் தன்மையையும், தரத்தையும் பொறுத்து என் வருவாய் மாறுபடும். எவ்வளவு தூரம் சங்கு வளையல் அகலமாகவும், தடிமனாகவும் இருக்கிறதோ அவ்வளவு தூரம் என் கூலி அதிகமாக இருக்கும். சில நாட்களில் எனக்கு 1,000 ரூபாய் வரை கிடைக்கும். சில நாட்களில் வெறும் 350 ரூபாய்தான் கிடைக்கும்.”
32 வயதான சஜல் கடந்த 12 ஆண்டுகளாக சங்குகளை பட்டை தீட்டுகிறார். “நான் இந்த வேலையை செய்யத் தொடங்கியபோது ஒரு ஜோடி வளையலுக்கு பட்டை தீட்ட இரண்டரை ரூபாய் கொடுத்தார்கள். இப்போது நான்கு ரூபாய் கிடைக்கிறது,” என்கிறார் அவர். சங்கு செதுக்கி நகாசு வேலை செய்கிறார் அவர். ஒட்டும் பசையும், துத்தநாக ஆக்சைடும் கலந்த ஒரு கலவையை செய்துவைத்துக் கொண்டு அதை வைத்து சங்கில் உள்ள ஓட்டைகள், விரிசல்களை அடைக்கிறார். ஒரு நாளைக்கு அவர் 300-400 ரூபாய் சம்பாதிக்கிறார்.
“நாங்கள் செய்யும் ஊது சங்கு, வளையல் ஆகியவை அசாம், திரிபுரா, கன்னியாகுமரி, பங்களாதேஷ் ஆகிய இடங்களுக்கு செல்கின்றன. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மொத்த வியாபாரிகள் இங்கு வந்து வாங்குகிறார்கள்,” என்கிறார் சுஷாந்தா தார். சங்குகளின் மேற்புறத்தில் பூக்கள், இலைகள், கடவுள் உருவங்கள் ஆகியவற்றை செதுக்குவதாக கூறுகிறார் இந்த 42 வயது கைவினைஞர். “மாதம் சுமார் 5,000 – 6,000 ரூபாய் சம்பாதிக்கிறோம். இதற்கான சந்தை தேய்ந்துகொண்டிருக்கிறது. கச்சாப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. மழைக் காலத்தில் மொத்தமாக வாங்கும் வாடிக்கையாளர்கள் வரமாட்டார்கள் என்பதால் வருவாய் மிகவும் மோசமாகும்,” என்கிறார் சுஷாந்தா.
“ஒரு நாளைக்கு 50 ஜோடி சங்கு வளையல்கள் செய்தால் எனக்கு 500 ரூபாய் கிடைக்கும். ஆனால், ஒரு நாளில் 50 ஜோடி வளையல்கள் செதுக்குவது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்று,” என்கிறார் ஷானு.
சந்தை வீழ்ச்சி, நிலையற்ற வருமானம், அரசாங்கத்திடம் இருந்து உதவி ஏதும் வராத நிலை ஆகிய காரணங்களால் ஷங்காபானிக் காலனியில் உள்ள அவருக்கும், அவரைப் போன்ற பிற கைவினைஞர்களுக்கும் இந்த தொழிலில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கை இல்லை.
தமிழில்: அ.தா.பாலசுப்ரமணியன்