"நீங்கள் என் கதையை கேட்கவா இங்கே வந்து இருக்கிறீர்கள்?" என்று ஆச்சரியப்பட்டார் பொன் ஹரிச்சந்திரன். "எனக்கு நினைவு தெரிந்த வரையில் என் கதையை கேட்க யாரும் என்னை தேடி வந்தது இல்லை. நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை". 60 வயதாகும் இவர் தனது வாழ்நாளை, தனது கிராமமான கீழகுயில்குடியில் உள்ளவர்களின் கதைகளையும், 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மதுரை நகரத்தின் கதையையும் சொல்லியே கழித்துள்ளார்.
இவரது கதையை கேட்பவர்கள்: படிப்பறிவற்றவர்கள் முதல் மெத்தப் படித்தவர்கள் வரை உள்ளூர் முதல் வெளியூரிலிருந்து வந்து கேட்கின்றனர். அந்தக் கதைகளை சிலர் விருது வென்ற நாவல்களில் பயன்படுத்தியுள்ளனர், சிலர் அவற்றை திரைப்படங்களாக எடுத்துள்ளனர். இன்னும் சிலர் அவற்றை மானுடவியல் ஆய்வுகளில் பயன்படுத்துகின்றனர். "இப்போதெல்லாம் கல்லூரிகளிலிருந்தும், பல்கலைக்கழகங்களில் இருந்துமே நான் அதிக பார்வையாளர்களை பெறுகிறேன். பேராசிரியர்கள் தங்கள் மாணவர்களை என்னுடைய கதைகளை கேட்க அழைத்து வருகின்றனர். அந்தக் கதைகளில் இருந்து ஒன்றை உங்களுக்கும் சொல்லட்டுமா? என்று கேட்கிறார்.
தாமரை மலர்கள் நிறைந்த ஒரு குலத்திற்கும் பரந்துவிரிந்த சமண குகைகளுக்கும் இடையே அமைந்துள்ள கீழகுயில்குடியில் நாங்கள் அமர்ந்துள்ளோம். இந்த கிராமம் மதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் உள்ளது. அவரை எங்கே சென்றால் பார்க்கலாம் என்று கருப்பசாமி கோவிலில் அமர்ந்திருந்த ஊர் பெரியவர்களிடம் கேட்டோம். டீக்கடையிலோ அல்லது வீட்டிலோ என்றனர். "ஆனால் நீங்கள் இங்கு வந்து இருப்பதால், அவரே இங்கு வருவார் என்றனர். அது போலவே அவரும் தன்னுடைய மிதிவண்டியில் வந்தார்.
அவர் உடனே வந்து எங்களை வாழ்த்திவிட்டு: இந்த கிராமத்திற்கான வழி சற்று சிரமமாக இருந்ததா? என்று கேட்டார். எங்களுடைய முன்னோர் ஆங்கிலேயப் படையின் தாக்குதல்களை தாமதப்படுத்துவதற்காக இப்படி வடிவமைத்து வைத்துள்ளனர் என்றார். அவர்கள் இங்கு வந்து சேர்வதற்கு முன்பு எங்களது ஒற்றர்கள் அவர்கள் வரும் தகவலை அறிவித்திருப்பர். எனவே அவர்கள் இங்கு வரும்போது, அவர்களை எதிர்கொள்ள கிராமம் தயாராக இருக்கும்.





