“பங்கா இரண்டு விஷயங்களுக்கு புகழ்பெற்றது. அமர்பூரிலிருந்து கிடைக்கும் வெல்லம் மற்றும் கட்டோரியாவிலிருந்து கிடைக்கும் டசர் பட்டு“ என்று அப்துல் சத்தார் அன்சாரி கூறுகிறார். கட்டோரியா கிராமத்தைச் சேர்ந்த ஒரு நெசவுத்தொழிலாளி. ஆனால் இரண்டுமே இப்போது குறைந்து வருவதாக அவர் கூறுகிறார்.
அமர்பூர் வட்டத்தில் கட்டோரியாவிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பல்லிகிட்டா கிராமம் உள்ளது. கிராமத்தின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள வெல்ல ஆலையை கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டம் கிடையாது. கரும்பின் கடுமையான வாசமே அந்த இடத்தை நமக்கு எளிதாக காட்டிவிடும்.
பிகார் மாநிலம் பங்கா மாவட்டத்தில் உள்ள இந்த ஆலை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டது என்று ராஜேஷ் குமார் கூறுகிறார். அவரது தந்தை சாதுசரண் கப்ரியாவால் துவங்கப்பட்டது இந்த ஆலை. 12 முதல் 15 தொழிலாளர்களைக்கொண்ட சிறிய கரும்பு ஆலை இது. அவர்கள் நாளொன்றுக்கு ரூ.200 கூலியாகப்பெறுகிறார்கள். காலை 10 மணிக்கு துவங்கும் வேலை மாலை சூரியன் மறையும் நேரத்தில் 6 மணிக்கு முடியும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இயங்குகிறது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் உச்சகட்ட மாதங்களாகும்.
தமிழில்: பிரியதர்சினி. R.