“நாங்கள் இன்று பின்வாங்குவதாக இல்லை,” என்கிறார் துகாராம் வலவி. “இந்த அரசு எங்களை தாக்குகிறது. நாங்கள் விவசாயத்திற்கு 10 ஏக்கர் நிலம் கேட்டால், அவர்கள் 10 குண்டா [கால் ஏக்கர்] தான் தருகின்றனர். ஐந்து ஏக்கர் கேட்டால், அவர்கள் மூன்று குண்டா தருவார்கள். எங்கள் நிலமின்றி நாங்கள் எப்படி உண்பது? எங்களிடம் பணமில்லை, வேலையில்லை, உணவுமில்லை.”
வார்லி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 61 வயதாகும் வலவி பல்கார் மாவட்டம் வாடா தாலுக்கா கர்கான் எனும் குக்கிராமத்தில் மூன்று ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். பல்காரின் பல்வேறு கிராமங்களில் இருந்து பங்கேற்றுள்ள (தோராயமாக) 3,000 விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுடன் அவரும் இந்த வார போராட்டத்தில் இணைந்தார்.
செப்டம்பர் 27ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக அவர்கள் வாடாவின் கந்தேஷ்வரி நாகாவில் ஒன்றாக நவம்பர் 26 அன்று சாலை மறியலில் ஈடுபட்டனர், “நாட்டில் வேளாண்மையில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும், விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் நோக்கிலும் இச்சட்டம் கொண்டுவரப்பட்டதாக” சொல்லப்பட்டது. இதன்மூலம், தனியார் முதலீட்டாளர்களுக்கும், உலக சந்தைகளுக்கும் விவசாயத் துறையை திறக்க உள்ளதாக அரசு கூறியுள்ளது. செப்டம்பர் மாதம் முதலே ஹரியாணா, பஞ்சாப், மேற்கு உத்தர பிரதேசம் போன்ற பகுதிகளில் பரவலான போராட்டத்திற்கு இச்சட்டங்கள் வழி வகுத்தன.
ஹரியாணா, டெல்லி எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் சில நாட்களாக தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பல மாநிலங்களிலும் விவசாயிகள் போராடி வருவது சிறிதளவு ஊடக கவனத்தையும் ஈர்த்துள்ளது. மகாராஷ்டிராவில், நாஷிக், பல்கார், ராய்காட் வரை நவம்பர் 25-26ஆம் தேதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் குறைந்தது 60,000 பேர் பங்கேற்றனர். மாவட்டங்களுக்குள் பல்வேறு தாலுக்காக்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
வாடாவில் இந்த வாரம் அனைத்திந்திய கிசான் சபா (ஏஐகேஎஸ்) ஒருங்கிணைத்த பேரணியில் வலவி போன்றோர், நில உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இக்கோரிக்கைகளை சில ஆண்டுகளாகவே மகாராஷ்டிராவின் பழங்குடியின விவசாயிகள் முன் வைத்து வருகின்றனர். தனது நிலத்திற்கு உரிமை கோரி வலவி 15 ஆண்டுகளாக நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கி வருகிறார். “வனத்தில் வேளாண்மை செய்யும் எங்கள் கிராமத்தினருக்கு வனத்துறையினர் அநீதி இழைத்து வருகின்றனர்,” என்கிறார் அவர். “நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடி வருகிறோம். பிணைத்தொகை செலுத்தக் கூட எங்களிடம் பணமில்லை. எங்களைப் போன்ற ஏழைகள் எங்கிருந்து பணத்தை கொண்டு வருவது?”
21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 26ஆம் தேதி வாடா தாலுக்காவில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர். வந்தவர்களில் பெரும்பாலானோர் முகக்கவசம், கைக்குட்டை / சிறிய துண்டு கொண்டு முகத்தை மூடியபடி வந்தனர். போராட்டக்காரர்களுக்கு சில ஏஐகேஎஸ் தன்னார்வலர்கள் முகக்கவசம், சோப்புகளை விநியோகித்தனர்.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறுவது உள்ளிட்ட 21 கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. வன உரிமை சட்டம் 2006 (எஃப்ஆர்ஏ) கடுமையாக நடைமுறைப்படுத்துதல் வேண்டும், பருவம் தவறிய மழைக்கு பயிர் இழப்பீடு அளிக்க வேண்டும், பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் (கோவிட்-19ஐ கருத்தில் கொண்டு), இணைய வழி வகுப்புகளை நிறுத்த வேண்டும் போன்ற பரவலான கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன.
இதுபோன்ற பெருந்தொற்று காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.7,500 உதவித்தொகை கொடுக்க வேண்டும், ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் தலா 10 கிலோ ரேஷன் பொருட்கள் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.
“எங்கள் பகுதியைச் சேர்ந்த சில பெண்கள் வருமானத்திற்காக தினமும் நான்கு மணி நேரம் நடக்கின்றனர்,” என்கிறார் கஞ்சத் கிராமத்தைச் சேர்ந்த ஏஐகேஎஸ் செயற்பாட்டாளரான 54 வயதாகும் ராமா தர்வி. அவரது குடும்பம் இரண்டு ஏக்கர் நிலத்தில் அரிசி, சோளம், கம்பு, கோதுமை பயிரிட்டு வருகின்றனர். “நாள் முழுவதும் வேலை செய்து ரூ.200 பெறுகின்றனர். எங்களிடம் நிலம் உள்ளது, வனத்துறையினர் எங்களை பயிரிட விடுவதில்லை. கோவிட் காலத்தில் ஏற்கனவே எங்களுக்கு வேலையில்லை…”
“வன நிலங்கள் [எஃப்ஆர்ஏ] தான் எங்கள் வாழ்வாதாரம். பல ஆண்டுகளாக பயிரிட்ட நிலத்தை கோரி [உரிமையும் கூட] கோவிட் காலத்திலும் உயிரை பணயம் வைத்துப் போராடி வருகிறோம்,” என்கிறார் 50 வயதாகும் சுகந்தா ஜாதவ்; அவரது குடும்பம் அரிசி, கம்பு, உளுந்து, தானியங்களை இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிடுகின்றது. பலமுறை போராட்டங்கள் செய்தும் அரசு செவி சாய்க்கவில்லை. மீண்டும் தெருக்களில் இறங்கி போராடும் நிலைக்கே அரசு எங்களை தள்ளியுள்ளது.”
தமிழில்: சவிதா