கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு குளிர்கால காலை வேளையில் அமைதியான வனவிலங்கு முகாமில் அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்தில் கோண்டு ஓவியக் கலைஞரான மிதிலேஷ் குமார் சியாம் தனது பளிச்சிடும் வண்ண ஓவியங்களை ஒரு பெரிய மர மேசையில் விரித்து வைத்திருந்தார். அவர் மத்திய பிரதேசத்தின் கன்ஹா தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள பதங்கரில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாம்னி கிராமத்தில் உள்ள முகாமுக்கு காலையில் தனது குடும்பத்தின் பழைய காரில் வந்து சேர்ந்தார்.
அவரது தெளிவான மற்றும் நுணுக்கமான ஓவியங்களில் மரங்கள், பறவைகள், புலிகள் மற்றும் பிற வனவிலங்குகள் இருந்தன மேலும் அவரது கோண்டு சமூகத்தின் வளமான புராணங்களும், நவீனத்துவத்தின் யதார்த்தங்களும் இருந்தன. "சிலநேரங்களில் நான் எங்கள் நாட்டுப்புறக் கதைகளின் அடிப்படையில் வரைகிறேன். இது எங்களது பிரதான தெய்வமான பாதா தேவ் ('எல்லாம் வல்ல இறைவன்') பாணாவாக (மூன்று நரம்புகள் கொண்ட இசைக்கருவி) உருவகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் எனது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விசயங்கள் மற்றும் நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டு அவற்றை வரைகிறேன். என் கற்பனையில் இருந்தும் என் கனவில் இருந்தும் கூட நான் சித்திரம் வரைகிறேன்", என்கிறார் 27 வயதாகும் மிதிலேஷ்.
மற்ற கோண்டு சித்திர கலைஞர்களைப் போலவே மிதிலேஷும், உள்ளே நிரப்பப்படும் நுணுக்கமான சித்திரங்களுக்கு தனக்கென ஒரு பாணியை வைத்திருக்கிறார் - அது ஒரு ஓவியத்தில் பெரிய வடிவங்களில் புள்ளிகள், கோடுகள் மற்றும் சிறிய வளைவுகளைக் கொண்டு நிரப்புவதாகும். பண்டிகை காலங்களில் கோண்டுகள் தங்களின் மண் வீட்டின் முகப்பை பாரம்பரியமாக சித்திரம் வரைந்து அழகுபடுத்துவது வழக்கம் இது அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்று அவர்கள் நம்புகிறார்கள் என்று என்னிடம் கூறினார். இப்படி அவர்களின் தெய்வங்கள், புராணங்கள் மற்றும் புனைவுகளை விளக்கும் சுவரோவியம் 'கோண்டு பிட்டி சித்திரா' என்று அழைக்கப்படுகிறது. "இதற்கு நாங்கள் பயன்படுத்தும் வர்ணங்கள் இயற்கையிலேயே கிடைக்கக்கூடியது - செடிகளின் இலைகளில் இருந்து பச்சை, பந்து பூவிலிருந்து ஆரஞ்சு, சூரியகாந்தியில் இருந்து மஞ்சள், ரோஜாவிலிருந்து அடர் இளஞ்சிவப்பு, மாட்டுச்சாணத்திலிருந்து (கோபரிலிருந்து) அரக்கு, வெண்சாந்திலிருந்து வெள்ளை மற்றும் கருப்பு களிமண்ணிலிருந்து கருப்பு ஆகியவை பெறப்படுகிறது", என்று அக்கலைஞர் விளக்குகிறார்.பட்டியில் பழங்குடியினராக வகைப்படுத்தப்பட்டுள்ள கோண்டுகள் மத்திய இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் - சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வசித்து வருகின்றனர் - ஆனால் மிக அதிகமாக மத்தியபிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். "நாங்கள் கோண்டு (அனிமிசம்) மற்றும் இந்து பண்டிகைகள் இரண்டையுமே கொண்டாடுகிறோம்", என்று மிதிலேஷ் கூறுகிறார். "ஆகஸ்ட் மாதம் ஹரியாலி பண்டிகையை நல்ல அறுவடை வேண்டி கொண்டாடுகிறோம், செப்டம்பர் மாதத்தில் நவகாவாயே என்னும் அறுவடை திருவிழாவை கொண்டாடுகிறோம், வசந்த காலத்தில் கோலி பண்டிகையையும், தீபாவளியும் கூட நாங்கள் கொண்டாடுகிறோம்", என்று கூறினார்.
மிதிலேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கோண்டு பழங்குடியில் பர்தான் குழுவைச் சேர்ந்தவர்கள். முன்னொரு காலத்தில் பர்தான் கோண்டுகள் பாணர்களாக நாட்டுப்புறக் கதைகளையும், மத காவியங்களையும், பாடல் வழியாக மூன்று நரம்புகள் கொண்ட பாண இசைக் கருவியைக் கொண்டு பாடி விவரித்தனர், அதற்காக அவர்கள் இச்சமூகத்தினரிடையே பெரிதும் மதிக்கப்பட்டனர். அவர்களின் கதைகளை பல தலைமுறைகளாக வாய்வழியாகக் கூறி பாதுகாத்து வந்தனர். ஆனால் இப்போது அச்சமூகத்தில் பல இளைஞர்கள் சித்திரம் வரைவதற்கு முற்பட்டுள்ளனர். "இன்று அக்ரலிக் வண்ணங்களை பயன்படுத்தி காகிதம் அல்லது கேன்வாஸில் எங்களது கதைகளை சித்திரங்களாக வரைகிறோம்", என்று மிதிலேஷ் கூறுகிறார்.
இந்தச் சித்திர வழிக் கதை சொல்லலை அவர் ஒரு தசாப்தத்திற்கு மேலாக செய்து வருகிறார். மிதிலேஷ் தனது 14 வயதில் இருந்து சித்திரங்கள் தீட்டத் தொடங்கினார், ஓவியரான அவரது மூத்த சகோதரி ராதா தேக்கத்திடமிருந்து இக்கலைக்கான நுணுக்கங்களை அவர் கற்றுக் கொண்டார். 1980களில் பாரம்பரியம் கொண்ட சுவர் ஓவியத்தை காகிதம் மற்றும் கேன்வாஸில் மாற்றிய ஜங்கர் சிங் சியாம் (1962 - 2001) அவர்களின் பேரப்பிள்ளைகளாகிய இவர்கள் அவரது அடிச்சுவடினைப் பின்பற்றி வருகின்றனர். அவரது படைப்புகள் ஜங்கர் கலம் என்று அழைக்கப்பட்டது- ஜங்கர் அதைப் படைத்தவரின் பெயரின் பேரிலும் கலம் என்பது கலைஞர்கள் வரைய பயன்படுத்தும் பேனாவின் பெயராலும் அவ்வாறு அழைக்கப்பட்டது. இக்கலை வடிவம் இப்போது காகிதம் மற்றும் கேன்வாஸில் வரையப்படுகிறது, இதுவே இந்தியாவிலும் உலகெங்கிலும் கோண்டு கலை என்று பரவலாக மக்களால் அறியப்படுகிறது. (இதன் வளர்ந்து வரும் புகழ் சவால்களையும் சந்திக்கத்தான் செய்கிறது கோண்டு அல்லாத கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஓவியங்கள் பெரும்பாலும் சந்தேகத்திற்கு இடமின்றி வாங்குபவர்களிடம் கோண்டு கலை என்று கூறி விற்கப்படுகிறது இதனால் உண்மையான கலை படைப்புகளுக்கான சந்தையை அது சேதப்படுத்துகிறது).எங்களது தாத்தாவின் வேலை பிரபலமடைந்தது அவரது பணி சுமை அதிகரித்தது அதனால் அவர் தனது குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் இந்த கிராமத்தில் இருக்கும் அவரது நண்பர்கள் ஆகியோரை உதவிக்கு பயன்படுத்தி வந்தார் என்று மிதிலேஷ் விளக்குகிறார். "விரைவில் அவரிடம் பயிற்சி பெற்றவற்கள் தாங்களே சொந்தமாக சித்திரம் தீட்ட துவங்கினார் பின்னர் அவர்களும் மற்றவர்களுக்கு கற்பித்தனர்". இன்று பதங்கரில் உள்ள 213 வீடுகளில் கிட்டத்தட்ட 80% வீட்டில் குறைந்தது ஒரு ஓவியராாவது இருக்கின்றனர் அவர்களில் பாதிப் பேர் பெண்கள், என்று மிதிலேஷ் மதிப்பிடுகிறார். அவரது மனைவி ரோசினியும் ஒரு ஓவியரே. "ஆரம்பத்தில் அவர் எனக்கு உதவியாளராக இருந்தார் ஆனால் இப்போது அவர் தனது சொந்த சித்திரங்களை உருவாக்குகிறார்", என்று அவர் கூறுகிறார்.
மிதிலேஷின் A4 அளவிலான காகிதம் மற்றும் கேன்வாஸில் வரையப்பட்ட சித்திரங்கள் பொதுவாக சுமார் 2,000 ரூபாய்க்கு விற்கப்படும் A3 அளவிலான சித்திரங்கள் 4,000 ரூபாய் வரை விற்பனையாகும். "ஒவ்வொரு கலை படைப்புகளை உருவாக்கி முடிக்க எனக்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகும்", என்று அவர் கூறுகிறார். ஆனால் விற்பனை அவ்வப்போது மட்டுமே நடப்பதால் அவரது வருவாயில் மாறுபாடு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். பெரும்பாலான அவரது ஓவியங்கள் கன்ஹா தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள தங்கும் விடுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் தான் விற்பனையாகிறது. ஒரு சிலர் அவர் தனது சித்திரங்களை காண்பித்துக் கொண்டிருக்கும் இந்த முகாமை போன்ற முகாம்களில் பதங்கரின் ஓவியர்களுக்கு அவர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தவும் விற்கவும் இடம் கொடுத்து வருகின்றனர். சில நேரங்களில், அர்ப்பணிப்புள்ள பார்வையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் நேரடியாக பதங்கருக்கு செல்கின்றனர் அது "கலைஞர்களின் கிராமம்" என்று புகழப்படுகிறது.
மிதிலேஷும் அவரது சக ஓவியக் கலைஞர்களும் ரிசார்ட்டுகள் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும் போது அவர்களுடன் சுமார் 100 - 150 ஓவியங்களை எடுத்துக் கொள்கின்றனர். ஆண் மற்றும் பெண் என பல கலைஞர்களின் ஓவியங்கள் ஒன்றாக குவிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கும் பிற வாங்கக்கூடிய நபர்களுக்கும் காட்டப்படுகின்றன. வனவிலங்கு முகாமில் சுமார் பிற்பகல் 3 மணி அளவில் மிதிலேஷ் தனது பழைய மாருதி 800 காரில் வீடு திரும்புகிறார். சாதாரணமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த வனவிலங்கு சரணாலயத்தில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே அதைச் சுற்றியுள்ள தங்கும் விடுதிகளும் இந்த மாதங்களில் மூடப்பட்டு இருக்கும்.வேண்டுகோளுக்கிணங்க சித்திரம் தீட்டிக் கொடுப்பது மிதிலேஷின் மற்றொரு வருமான ஆதாரம் ஆகும் - அவர் அவ்வப்போது வீடுகளில் சுவர் ஓவியங்களை வரைந்து கொடுக்கிறார். ஒரு முறை, மற்ற இரண்டு கோண்டு கலைஞர்களுடன் அகமதாபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டின் சுவர்களில் சித்திரங்களை வரைந்து அலங்கரித்தனர். அதை செய்து முடிக்க அவர்களுக்கு ஒரு மாதம் ஆனது மேலும் மொத்தமாக அவர்கள் 2.5 லட்சத்தை சம்பளமாக பெற்றனர். இத்தகைய பணிகள் மிதிலேஷுக்கு மிகவும் தேவைப்படும் கூடுதல் வருமானத்தை கொண்டு வருகின்றன, ஆனால் அவை மிகக் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன.
சில சமயங்களில் போபாலில் உள்ள பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாடு கூட்டமைப்பும், சண்டிகரில் உள்ள கலாகிராம் போன்ற கலைகளை ஊக்குவிக்கும் அமைப்புகள் அவரது ஓவியங்களுக்கு தேவை ஏற்படுத்தும். புதுதில்லியில் அரசு நடத்தும் கைவினை அருங்காட்சியம் போன்ற இடங்களில் கண்காட்சிகளில் ஓவியங்களை விற்பனை செய்வது மற்றொரு வழி. ஆனால் இத்தகைய வாய்ப்புகள் அடிக்கடி கிடைப்பதில்லை மேலும் அதில் விற்பனைக்கான உத்தரவாதமும் இல்லை என்று மிதிலேஷ் கூறுகிறார், 2013 ஆம் ஆண்டில் கைவினை அருங்காட்சியகத்தில் ஒருமுறை தனது கலையை காட்சிப்படுத்தவும் விற்கவும் அழைக்கப்பட்டதாக கூறுகிறார். நான் கண்காட்சியில் ஒரு மாதம் முழுவதும் அமர்ந்திருந்து ஒரே ஒரு ஓவியத்தை மட்டுமே விற்ற காலமும் இருக்கிறது என்று அவர் நினைவு கூர்ந்தார். அவரது மிகப்பெரிய ஓவியம் 5 × 4.5 அடி, அது 2018ம் ஆண்டில் தில்லியில் ஒரு மேல்தட்டு ஹோட்டலில் ஒரு கண்காட்சியில் ஒரு புரவலர் என்னிடம் வாங்கினார். அந்த கேன்வாஸை செய்து முடிக்க அவருக்கு ஒரு மாதம் பிடித்தது.
சில மாதங்களில் மிதிலேஷின் கலை அவருக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை ஈட்டிக் கொடுக்கும். ஒரு நல்ல மாதத்தில் அந்த தொகையை விட இரண்டு மடங்கு அவர் சம்பாதிப்பார். அவரது வருமானத்தின் பெரும்பகுதி வீட்டுச் செலவுகள் மற்றும் பேனாக்கள், மை, அக்ரலிக் வர்ணம் மற்றும் துணி வகைகள், தூரிகைகள், காகிதம் மற்றும் கேன்வாஸ் போன்ற கலை பொருட்களுக்காக செலவிடப்படுகிறது.இருப்பினும் மிதிலேஷ் மற்றும் பதங்கரிலுள்ள பிற கலைஞர்களுக்கு கலை பொருட்களை வாங்குவது சிரமமாகத்தான் இருக்கிறது. கிழக்கு மத்திய பிரதேசத்தில் உள்ள திண்டோரி மாவட்டத்தின் கரஞ்சியா வட்டத்தில் அமைந்துள்ள இவர்களின் கிராமத்துக்கான இணைப்பு மோசமானதாக தான் இருக்கிறது (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இதை பதங்கர் மால் என்று பட்டியலிட்டுள்ளது) இதன் மூலம் அறியப்படுவது என்னவென்றால் போபாலுக்கு செல்வதற்கு இவர்கள் சுமார் 500 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும் என்பதாகும் - அதுவும் 4 முதல் 5 மணி நேர பேருந்துப் பயணம் முதலில் ஜபல்பூருக்கு பின்னர் அங்கிருந்து ஏழு முதல் எட்டு மணி நேர பயணம் போபாலுக்கு. சில மாதங்களுக்கு முன்பு தான் தனது கிராமத்தில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஜபல்பூரில் கலைப் பொருட்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன என்று மிதிலேஷ் கூறுகிறார்.
பதங்கரின் கலைஞர்களுக்கு கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளுக்காக நகரங்களுக்கு செல்வதை மோசமான குண்டும் குழியுமான சாலைகள் கடினமாகக்குகின்றன. பதங்கரில் வசிப்பவர்கள் பொதுவாக விவசாயம் அல்லது விவசாயக் கூலித் தொழிலுடன் இந்தக் கலைப் பணியையும் செய்கின்றனர். ஒரு சிலர் தான் அதை வைத்து சிறிய வருவாய் ஈட்டுவதற்காக அவர்கள் கலையை பயன்படுத்துகின்றனர். மிதிலேஷ் ஒரு முழு நேர ஓவியக் கலைஞர். அவரது குடும்பத்தினர் தங்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை ஒரு விவசாயிக்கு நெல், சோயா பீன்ஸ் மற்றும் பிற பயிர்களை விளைவிப்பதற்காக குத்தகைக்கு கொடுத்துள்ளனர், விளைச்சலில் பாதியை இவர்கள் பெற்றுக் கொள்வர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு மிதிலேஷ் தனது கான்கிரீட் வீட்டிற்கு சென்றார், அது அவரது தாயாருக்கு மாநில அரசின் ஒரு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டது. அங்கு அவர், ரோசினி, அவர்களது 4 வயது மகள் மற்றும் அவரது தாய் மற்றும் தாத்தாவுடன் வசித்து வருகின்றார். அவரது குடும்ப வீடு ஒரு மண் வீடு, அது கோண்டு பிட்டி சித்திராவால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டிற்கு குறைந்தது 60 வயது இருக்கும் இன்னமும் அப்படியே இருக்கிறது. "இதை ஒரு அருங்காட்சியமாக ஒரு நாள் நான் மாற்றுவேன் என்று நம்புகிறேன்", என்று அவர் கூறுகிறார்.
தமிழில்: சோனியா போஸ்