வெயில் நிறைந்த பகல் பொழுதில் 39 வயது சுனிதா ராணி உள்ளிட்ட சுமார் 30 பெண்கள் பெருமளவில் திரண்டு தங்களது உரிமைக்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “வேலை உறுதி, ஊதியம் நிச்சயமல்ல“ என்கிறார் சுனிதா. “போக மாட்டோம், போக மாட்டோம்” என்று இந்தப் பெண்கள் முழக்கமிடுகின்றனர்.

சிவப்பு நிற சீருடையணிந்து டெல்லி-ஹரியாணா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சோனிபட் நகர அரசு பொது மருத்துமனையின் வெளியே புல்வெளியில் அமர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தினர். தரை விரிப்பில் அமர்ந்தபடி சுனிதா ராணி அரசுக்கு வைக்கும் தங்களின் கோரிக்கைகளைப் பட்டியலிடுகிறார்.

இந்த பெண்கள் யாவரும் ஆஷாவைச் சேர்ந்தவர்கள். அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயல்பாடுகள் எனும் ஆஷா நாட்டின் தேசிய கிராம சுகாதார இயக்கத்தின் கீழ் செயல்படுகிறது. இந்திய கிராமப்புற மக்கள் தொகையுடன் நாட்டின் பொது சுகாதார அமைப்பும் இணைந்து இதனை செயல்படுத்துகிறது. நாடெங்கும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் சுகாதாரம் தொடர்புடைய தேவைகள், அவசர உதவிகளை அளிக்கும் முதன்மைப் பணியாளர்களாக உள்ளனர்.

ஊட்டச்சத்து, துப்புரவு, தொற்று நோய், காச நோய் நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளச் செய்வது உள்ளிட்ட 12 வகையான முதன்மைப் பணிகளுடன் 60 துணைப் பணிகளையும் அவர்கள் செய்ய வேண்டும்.

இவற்றுடன் இன்னும் பல பணிகளை அவர்கள் செய்ய வேண்டும். “பிரசவகால பராமரிப்பு, குழந்தை பிறப்பு புள்ளி விவரங்கள் போன்ற பணிகளை செய்வதற்கு தான் எங்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர்“ என்கிறார் சுனிதா. சோனிபட் மாவட்டத்தின் 2,593 மக்கள்தொகை கொண்ட நாதுப்பூர் கிராமத்தை கவனித்து வரும் மூன்று ஆஷா பணியாளர்களில் இவரும் ஒருவர்.

ASHA workers from Sonipat district on an indefinite strike in March; they demanded job security, better pay and a lighter workload
PHOTO • Pallavi Prasad

மார்ச் மாதம் முதல் தொடர் போராட்டத்தில் சோனிபட் மாவட்ட ஆஷா பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பணிப் பாதுகாப்பு, நல்ல ஊதியம், பணிச்சுமையை குறைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்

பிரசவத்திற்கு முந்தைய, பிந்தைய பராமரிப்புகளுடன் அரசின் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள், கருத்தடைகள், கருவுறுவதற்கு இடையேயான இடைவெளி கடைப்பிடித்தல் போன்றவை குறித்தும் ஆஷா பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். 2006ஆம் ஆண்டு 1000 குழந்தைகளில் 57 குழந்தைகள் என இறந்த விகிதத்தை ஆஷா பணியாளர்களின் செயல்பாடுகளால் 2017ஆம் ஆண்டு 33 ஆக குறைத்துள்ளனர். 2005-06 முதல் 2015-16 வரையிலான காலத்தில் பிரசவத்திற்கான பராமரிப்பு என்பது 37 சதவீதத்திலிருந்து 51 சதவீதமாகவும், மருத்துவமனையில் பிரசவம் என்பது 39 சதவிகிதத்திலிருந்து 79 சதவீதமாகவும் அதிகரித்துள்ளன.

“எங்கள் பணிகளை நாங்கள் நன்றாக செய்துள்ளோம், இன்னும் செய்வோம், ஆனால் கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புவதையே அதிகம் செய்து வருகிறோம்“ என்கிறார் சுனிதா.

“நாங்கள் தினந்தோறும் புதிய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்கிறார் ஜகவுலி கிராமத்தைச் சேர்ந்த 42 வயதாகும் ஆஷா பணியாளர் நீத்து. “ஒரு நாள் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு தேவையுள்ளோர் குறித்த கணக்கெடுப்பு எடுக்குமாறு துணை செவிலியர் (அவரிடம் தான் ஆஷா பணியாளர்கள் அறிக்கை அளிக்க வேண்டும்) சொல்வார், அடுத்த நாள் மருத்துவமனையில் நடக்கும் பிரசவங்கள் குறித்த தகவல்களை சேமிப்பது, அதேநாளில் அனைவரின் இரத்த அழுத்தத்தை பதிவு செய்வது (புற்றுநோய், நீரிழிவு, இதய நோய் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கான தேசிய திட்டத்தின் அங்கம்), அதற்கு அடுத்த நாள் தேர்தல் ஆணையத்திற்காக வாக்குச்சாவடி அளவிலான கணக்கெடுப்புகள் எடுக்கச் சொல்வார்கள். இது ஒருபோதும் முடிவதில்லை.”

உடல் சுகவீனம் அல்லது பண்டிகைக் கால விடுமுறையுடன் 2006ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 700 வாரங்கள் இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சொல்கிறார் நீத்து. 8,259 பேர் வசிக்கும் கிராமத்தில் அவருடன் ஒன்பது ஆஷா பணியாளர்கள் உள்ளனர். அவர் இரத்தசோகை விழிப்புணர்வு இயக்கத்தை முடித்துவிட்டு போராட்டம் நடக்கும் இடத்திற்கு ஒரு மணி நேரம் தாமதாக வந்தார். கிராமங்களில் வீடு வீடாகச் சென்று பசுக்கள், எருமைகள் கணக்கெடுப்பு என எந்த நேரத்திலும் கணக்கெடுப்பு பணிகளையே அவர்கள் அதிகம் செய்கின்றனர்.

“2017ஆம் ஆண்டு நான் ஆஷாவில் சேர்ந்தது முதல் வேலைகள் மூன்று மடங்கு அதிகமாகிவிட்டன. பெரும்பாலானவை அலுவலகப் பணிகள்தான்“ என்கிறார் 39 வயதாகும் ஆஷா பணியாளர் சவி காஷ்யப். அவர் சிவில் மருத்துவமனையிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஹல்கார் கிராமத்திலிருந்து போராட்டத்தில் பங்கேற்க வந்துள்ளார். “அரசு கொடுக்கும் ஒவ்வொரு புதிய கணக்கெடுப்புப் பணியையும் முடித்தபிறகு நாங்கள் எங்களுக்கான பணியை தொடங்க வேண்டும்.“

'We don’t even have time to sit on a hartal,' says Sunita Rani; at meetings, she notes down (right) the problems faced by co-workers
PHOTO • Pallavi Prasad
'We don’t even have time to sit on a hartal,' says Sunita Rani; at meetings, she notes down (right) the problems faced by co-workers
PHOTO • Pallavi Prasad

'போராட்டத்தில் அமர்வதற்கு கூட எங்களுக்கு நேரம் கிடையாது' என்கிறார் சுனிதா ராணி. சக பணியாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அவர் (வலது) குறிப்பெடுக்கிறார்

திருமணமான 15 ஆண்டுகளில் மருத்துவமனைக்குக் கூட சவி தனியாக சென்றதில்லை. 2016ஆம் ஆண்டு அவரது கிராமத்தில் நடைபெற்ற ஆஷா பணியாளர்களை தேர்வு செய்யும் பயிற்சிப் பட்டறையில் சவியும் பங்கேற்றார். பயிற்சிப் பட்டறைகளுக்குப் பிறகு சமூக சுகாதார தன்னார்வலர்களாக விரும்பிய, குறைந்தது 8ஆம் வகுப்பு வரை படித்த, 18 முதல் 45 வயதிற்குட்பட்ட திருமணமான மூன்று பெண்களின் பெயர்கள் இறுதிசெய்யப்பட்டன.

சவிக்கு ஆர்வமும், தகுதியும் இருந்தது. ஆனால் அவர் கணவர் மறுத்துவிட்டார். அவரது கணவர் பஹல்கரின் இந்திரா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியர்கள் குழுவில் உள்ளார். வாரத்திற்கு இரண்டு நாள் இரவுப் பணிக்கு செல்கிறார். “எங்களுக்கு இரண்டு மகன்கள். நானும் என் கணவரும் வேலைக்காக வெளியே சென்றுவிட்டால் பிள்ளைகளை யார் கவனித்துக் கொள்வது என என் கணவர் கவலைப்பட்டார்“ என்கிறார் சவி. சில மாதங்களில் எங்களுக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. என்னை வேலைக்கு சேர கையெழுத்துப் போடச் சொல்லிவிட்டார். அடுத்த ஆள்சேர்ப்பு முகாமில் சவி விண்ணப்பித்து 4,196 பேர் வசிக்கும் பஹல்கர் கிராம சபையால் ஐந்து ஆஷா பணியாளர்களில் ஒருவராக உறுதி செய்யப்பட்டார்.

“நாங்கள் ஒரு விஷயத்தை வகுத்துக் கொண்டோம். அவர் இரவுப் பணியாக இருந்தால், யாருக்காவது பிரசவ வலி வந்து மருத்துவமனைக்கு அழைத்தால் ஆம்புலன்சிற்கு அல்லது மற்ற ஆஷா பணியாளரை அழைத்துவிடுவேன். பிள்ளைகளை தனியாக விட்டுச் செல்ல முடியாது அல்லவா“ என்கிறார் சவி.

பிரசவ வலியில் தவிக்கும் பெண்களை பாதுகாத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என்பது ஆஷா பணியாளர்களின் பல்வேறு பணிகளில் ஒன்று. கடந்த வாரம், பிரசவ வலி வந்துவிட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு ஒரு பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்தது. என்னால் போக முடியவில்லை என்கிறார் சோனிபட் ராய் தாலுக்காவில் உள்ள பாத் கல்சாவைச் சேர்ந்த ஆஷா பணியாளர் ஷீத்தல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே வாரத்தில் ஆயுஷ்மான் முகாமை நடத்துமாறு என்னிடம் கூறியிருந்தனர் என்கிறார் 32 வயதாகும் ஷீத்தல். ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனாவைத் தான் அவர் குறிப்பிடுகிறார். முகாமில் சிக்கிய அவரிடம் அரசின் சுகாதாரத் திட்டத்திற்குத் தகுதியான தன் கிராமத்தினரின் படிவங்கள், பதிவேடுகள் பை நிறைய இருந்துள்ளன. அனைத்து பணிகளையும் விட ஆயுஷ்மான் யோஜனாவிற்கு முன்னுரிமை தருமாறு அவருக்கு துணை செவிலியரிடம் இருந்து உத்தரவு வந்திருந்தது.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இங்கு வந்தது முதல் அப்பெண்ணிடம் (கர்ப்பிணி) பேசி நம்பிக்கையை வளர்த்திருந்தேன். அவரது மாமியாரிடம் அனுமதி பெற்று குடும்பக் கட்டுப்பாடு குறித்து ஆலோசனைகளை அப்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் வழங்கினேன். குழந்தை பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் காத்திருக்கவும், கருவுற்ற காலத்திலும் அப்பெண்ணுடன் இருந்தேன். நான் அப்போதும் அவருடன் இருந்திருக்க வேண்டும்“ என்கிறார் ஷீத்தல்.

அவரின்றி மருத்துவமனைக்கு செல்ல தயங்கிய அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் அரை மணி நேரம் தொலைப்பேசியில் பேசி, அவர்களுக்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அனுப்பியுள்ளார். “நாங்கள் கட்டமைத்த நம்பிக்கை இங்கு உடைந்துவிடுகிறது“ என்கிறார் சுனிதா ராணி.

'In just three years, since I became an ASHA in 2017, my work has increased three-fold', says Chhavi Kashyap
PHOTO • Pallavi Prasad

'மூன்றாண்டுகளில், 2017ஆம் ஆண்டு ஆஷாவில் நான் சேர்ந்தது முதல் எனது வேலைகள் மூன்று பங்கு அதிகரித்துவிட்டது' என்கிறார் சவி காஷ்யப்

ஒருவழியாக ஆஷா பணியாளர்கள் பணிக்கு சென்றால், தேவையான அடிப்படை வசதிகள் இருப்பதில்லை. மருத்துவக் கருவிகள் கிடைப்பதில்லை. பாராசிட்டாமல் மாத்திரைகள், கர்ப்பிணிகளுக்கான இரும்பு, கால்சியம் மாத்திரைகள், வாய்வழி மீள்நீரூட்டும் கரைசல் (ORS), ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள், கர்ப்ப கால கருவிகள் போன்ற அவசியமான பொருட்களும் கூட கையிருப்பு இருப்பதில்லை. “எங்களிடம் எதுவும் கொடுப்பதில்லை, தலைவலிக்கு கூட மருந்துகள் கிடையாது. ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அவர்களுக்கு தேவையான கருத்தடைகளை அறிந்து குறிப்பெடுத்து அவற்றை துணை செவிலியரிடம் கொடுப்போம்“ என்கிறார் சுனிதா. இணைய வழியில் அரசின் பதிவேட்டில் சோனிபட் மாவட்டத்தில் ஆஷா பணியாளர்களுக்கு 1,045 மருத்துவக் கருவிகளுக்கு பதிலாக வெறும் 485 மருத்துவ கருவிகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன.

ஆஷா பணியாளர்கள் பெரும்பாலும் தங்களது சமூக உறுப்பினர்களிடம் வெறும் கையுடன் தான் செல்ல வேண்டி இருக்கும். “சில சமயம் அவர்கள் இரும்புச் சத்து மாத்திரைகள் கொடுப்பார்கள். கால்சியம் மாத்திரை இருக்காது. கருவுற்ற பெண்கள் இரண்டையும் சேர்த்து தான் சாப்பிட வேண்டும். சில சமயம் ஒரு கர்ப்பிணிக்கு 10 மாத்திரைகள் மட்டுமே கொடுப்பார்கள். அது 10 நாட்களில் தீர்ந்துவிடும். எங்களிடம் வந்து கேட்கும்போது அவர்களுக்கு கொடுப்பதற்கு ஒன்றும் இருக்காது“ என்கிறார் சவி.

சில சமயம் தரம் குறைவான பொருட்களை தருவார்கள். ”சில மாதங்களுக்கு எதையும் கொடுக்காமல், திடீரென மாலா-என் (Mala-N) மாத்திரைகள்(சுரப்பி மற்றும் கருத்தடை மாத்திரைகளின் கலவை) நிறைந்த பெட்டியை கொடுப்பார்கள். அது செயலிழப்பதற்கு ஒரு மாதம் முன்பு கொடுத்து முடிந்தவரை விநியோகித்து விடவும் என உத்தரவு வரும்” என்கிறார் சுனிதா. மாலா-என் மாத்திரைகள் பயன்படுத்திய பெண்களின் கருத்துகளை ஆஷா பணியாளர்கள் பதிவு செய்தாலும் அவற்றை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

போராட்டம் தொடங்கி மதிய வேளை வந்ததும், 50 ஆஷா பணியாளர்கள் திரண்டிருந்தனர். மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவிற்கு அருகே உள்ள டீக்கடையில் டீ வாங்கினர். டீக்கு யார் பணம் கொடுப்பது என்று யாராவது கேட்ட போது, எனக்கு ஆறு மாதங்களாக சம்பளம் வரவில்லை என நீத்து கிண்டலாக சொல்கிறார். NRHM 2005 கொள்கைப்படி, ஆஷா பணியாளர்கள் தன்னார்வலர்கள் தான். அவர்கள் செய்யும் பணிகளின் எண்ணிக்கையை பொறுத்தே ஊதியம் அளிக்கப்படும். அவர்கள் செய்யும் பல்வேறு பணிகளில் ஐந்து மட்டுமே 'வழக்கமான, தொடர்ச்சியான' பணிகள் என வகுக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்காக மாதந்தோறும் மொத்தமாக ரூ. 2000 தருவதற்கு 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால் அந்த ஊதியமும் நேரத்திற்கு வருவதில்லை.

செய்து முடிக்கும் வேலைகளுக்கு ஏற்ப ஆஷா பணியாளர்களுக்கு ஊதியம் அளிக்கப்படுகிறது. ஆறு மாதம் முதல் ஒன்பது மாதங்களுக்கு காச நோயாளிகளுக்கு தடுப்பு மருந்து கொடுத்தால் ரூ. 5000 வரை அதிகபட்சம் கொடுக்கப்படுகிறது. ஓஆர்எஸ் பாக்கெட் விநியோகத்திற்கு ரூ.1 தரப்படுகிறது. பெண்களுக்கான கருத்தடைக்கு குடும்பக் கட்டுப்பாட்டு உதவித் தொகை அளிக்கப்படுகிறது. கருத்தடை சிகிச்சைக்கு அழைத்து வந்தால் ரூ. 200-300 வரை அளிக்கப்படும். அதுவே ஆணுறை விநியோகத்திற்கு ஒரு பாக்கெட்டிற்கு ரூ.1 கொடுக்கப்படும். கருத்தடை மாத்திரை, அவசர கால கருத்தடை மாத்திரைக்கு ரூ. 1 அளிக்கப்படும். சிக்கல் நிறைந்த, அதிக நேரம் எடுத்துக் கொள்ளும், மிகவும் அவசியமான குடும்பக் கட்டுப்பாட்டு ஆலோசனைக்கு ஊதியம் கிடையாது.

Sunita Rani (centre) with other ASHA facilitators.'The government should recognise us officially as employees', she says
PHOTO • Pallavi Prasad

சுனிதா ராணி (நடுவில்) பிற ஆஷா பணியாளர்களுடன். 'எங்களை அரசு அதிகாரப்பூர்வமாக பணியாளர்களாக அங்கீகரிக்க வேண்டும்' என்கிறார் அவர்

பல்வேறு தேசிய அளவிலான, பிராந்திய போராட்டங்களுக்குப் பிறகு, பல்வேறு மாநிலங்களில் ஆஷா பணியாளர்களுக்கு என நிலையான உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. மாநில வாரியாக இதில் வேறுபாடு உள்ளது. கர்நாடகாவில் ரூ. 4000, ஆந்திரப் பிரதேசத்தில் ரூ. 10,000, ஹரியாணாவில் 2018 ஜனவரி முதல் தலா ரூ. 4000 மாநில அரசின் உதவித் தொகையாக அளிக்கப்படுகிறது.

NRHM கொள்கைப்படி, ஆஷா பணியாளர்கள் ஒரு நாளுக்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் வரைக்கும் வாரத்தில் நான்கு முதல் ஐந்து நாட்கள் வேலை செய்யலாம்.  ஆனால் கடைசியாக எப்போது வார விடுப்பு எடுத்தோம் என்பது எங்கள் யாருக்கும் நினைவில் இல்லை. ஆனால், பொருளாதார ரீதியாக எங்களுக்கு எந்த பிரயோஜனமாவது இருக்கிறதா? என்று உரக்க கேட்கிறார் சுனிதா. பல பெண்களும் குரல் எழுப்புகின்றனர். சிலருக்கு 2019 செப்டம்பர் முதலே மாநில அரசின் மாதாந்திர உதவித் தொகை கிடைக்கவில்லை என்கின்றனர். மற்றவர்களுக்கு பணி சார்ந்த உதவித்தொகை எட்டு மாதங்களாக கொடுக்கப்படவில்லை என்கின்றனர்.

பெரும்பாலானோர் தங்களுக்கு சேர வேண்டிய தொகைக்கான ஆதாரங்களையும் இழந்துவிட்டனர். “மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து தேக்கமடைந்து தான் வெவ்வேறு நேரங்களில் பணம் வருகிறது. எந்த பணம் நிலுவையில் உள்ளது என்பதே மறந்துவிடுகிறது“ என்கிறார் நீத்து. நிலுவைத் தொகையால் பலரும் சொந்த நெருக்கடிகளையும் சந்திக்கின்றனர். நேரம் கடந்த வேலை, அதிக நேரம் வேலை, முறையற்ற ஊதியம் போன்றவற்றால் குடும்பத்தினரின் அச்சுறுத்தலுக்கும் ஆளாகின்றனர். சிலர் குடும்ப அழுத்தம் காரணமாக விலகிக் கொள்கின்றனர்.

நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, பல்வேறு துணை மையங்களில் தரவுகளை சேகரிக்க செல்வது போன்றவற்றிற்கு சொந்த செலவில் தினமும் ரூ. 100-250 வரை ஆஷா பணியாளர்கள் செலவிடுகின்றனர். ”குடும்பக் கட்டுப்பாட்டு கூட்டங்களுக்கு கிராமப் பெண்களை வெயில் அதிகமுள்ள நாட்களில் அழைத்தால் குளிர்பானங்கள், சிற்றுண்டிகள் வாங்கித் தர வேண்டும். இதற்காக ரூ.400-500 வரை செலவிட வேண்டி உள்ளது. நாங்கள் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்யாவிட்டால் பெண்கள் வர மாட்டார்கள்” என்கிறார் ஷீத்தல்.

இரண்டரை மணி நேரம் நீடித்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள்: ஆஷா பணியாளர்களுக்கு என சுகாதார அட்டை, அரசுடன் பட்டியலில் சேர்க்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் அவர்களின் குடும்பத்தினருக்கும் மருத்துவ சேவை அளிக்க வேண்டும். ஓய்வூதியத்தை உறுதி செய்ய வேண்டும். இரண்டு பக்கங்களுக்கு குறுகிய அட்டவணைகள் கொண்ட படிவத்திற்கு பதிலாக தனித் தனி படிவங்கள் அளிக்க வேண்டும். துணை மையங்களில் அலமாரிகள் அளிக்க வேண்டும். இதனால் அவர்கள் வீடுகளில் ஆணுறைகள், நாப்கின்களை சேகரிக்கும் அவசியம் ஏற்படாது. ஹோலிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, வீட்டு அலமாரியில் வைக்கப்பட்டுள்ள பலூன் வேண்டும் என்று நீத்துவின் மகன் கேட்டுள்ளான். அவர் வீட்டு அலமாரியில்  ஆணுறைகளை சேமித்து வைத்திருந்தார்.

அனைத்திலும் முதன்மையாக மரியாதையுடன், அங்கீகாரத்துடன் நடத்த வேண்டும்.

Many ASHAs have lost track of how much they are owed. Anita (second from left), from Kakroi village, is still waiting for her dues
PHOTO • Pallavi Prasad

அவர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை குறிப்புகளை பெரும்பாலான ஆஷா பணியாளர்கள் தொலைத்துவிட்டனர். கக்ரோய் கிராமத்தைச் சேர்ந்த அனிதா (இடது பக்கத்திலிருந்து இரண்டாவது), இப்போது அவரது நிலுவைக்காக காத்திருக்கிறார்

மாவட்டத்தின் பல மருத்துவமனை பிரசவ அறைகளில், ஆஷாவினர் உள்ளே வரக் கூடாது என்ற வாசகத்தை நீங்கள் பார்க்கலாம் என்கிறார் சவி. பலருக்கும் பிரசவ வலி ஏற்பட்டு நள்ளிரவு நேரத்தில் கூட நாங்கள் உடன் சென்றுள்ளோம். அவர்களுக்கு தன்னம்பிக்கை இருக்காது என்பதுடன் எங்கள் மீதான நம்பிக்கையால் அங்கேயே இருக்க சொல்வார்கள். ஆனால் நாங்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. இங்கிருந்து வெளியே போ என்று மருத்துவமனை பணியாளர்கள் சொல்கின்றனர். எங்களை தகுதி குறைந்தவர்களாக நினைக்கின்றனர் என்கிறார் அவர். பல முதன்மை மற்றும் சமூக நல கூடங்களில் காத்திருப்பு அறை இல்லாத காரணத்தால், பல ஆஷா பணியாளர்கள் பிரசவத்திற்கு வந்திருக்கும் குடும்பத்தினருடன் இரவிலும் தங்க வேண்டி இருக்கிறது.

மதியம் 3 மணி இருக்கும். போராட்டக் களத்தில் பெண்கள் எழத் தொடங்கிவிட்டனர். அவர்கள் பணிக்கு செல்ல வேண்டும். அனைவரும் கலையலாம் என்கிறார் சுனிதா: “அரசு நம்மை அதிகாரப்பூர்வ பணியாளர்களாக ஏற்க வேண்டும், தன்னார்வலர்களாக அல்ல. கணக்கெடுப்பு எனும் சுமைகளை நீக்க வேண்டும். இதனால் நம் பணிகளை நாம் செய்யலாம். நாம் கேட்கும் தொகையை அவர்கள் அளிக்க வேண்டும்.”

இப்போது பல ஆஷா பணியாளர்களும் கிளம்புகின்றனர். “வேலை அதிகம், சம்பளம் குறைவு” என சுனிதா கடைசியாக முழங்கினார். “போக மாட்டோம், போக மாட்டோம்” என முன்பை விட அதிக சத்தம் கேட்டது. நம் உரிமைகளுக்கு குரல் கொடுத்து போராட்டத்தில் அமரக் கூட நமக்கு நேரம் இல்லை, முகாம்கள், கணக்கெடுப்புகளுக்கு இடையே போராட்டத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று தலையை துப்பட்டாவால் மூடிக் கொண்டு சிரித்தபடி சொல்கிறார் ஷீத்தல். வீடுகளுக்கு சென்று கணக்கெடுக்கும் பணிக்கு அவர் தயாரானார்.

முகப்பு ஓவியம்: ப்ரியங்கா போரர் தொழில்நுட்பத்தில் பல விதமான முயற்சிகள் செய்வதன் மூலம் புதிய பொருட்களையும் வெளிப்பாடுகளையும் கண்டடையும் நவீன ஊடக கலைஞர். கற்றுக் கொள்ளும் நோக்கிலும் விளையாட்டாகவும் அவர் அனுபவங்களை வடிவங்களாக்குகிறார், அதே நேரம் பாரம்பரியமான பேப்பர் பேனாவிலும் அவரால் செயல்பட முடியும்.

பாப்புலேஷன் ஃபுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் ஆதரவுடன் பாரி மற்றும் கவுண்டர் மீடியா டிரஸ்ட்டின் இந்த தேசிய அளவிலான செய்தி சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பதின் வயது மற்றும் இளம் பெண்களின் வாழ்வியலை அவர்களது குரல்கள் மற்றும் அனுபவங்களின் வாயிலாக பதிவு செய்வதே இதன் நோக்கம்.

இக்கட்டுரையை மீண்டும் பிரசுரிக்க வேண்டுமா? [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் நகலை (கார்பன் காப்பி) [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் எழுதி அனுப்புங்கள்.

தமிழில்: சவிதா

Anubha Bhonsle

২০১৫ সালের পারি ফেলো এবং আইসিএফজে নাইট ফেলো অনুভা ভোসলে একজন স্বতন্ত্র সাংবাদিক। তাঁর লেখা “মাদার, হোয়্যারস মাই কান্ট্রি?” বইটি একাধারে মণিপুরের সামাজিক অস্থিরতা তথা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ারস অ্যাক্ট এর প্রভাব বিষয়ক এক গুরুত্বপূর্ণ দলিল।

Other stories by Anubha Bhonsle
Pallavi Prasad

পল্লবী প্রসাদ মুম্বই-ভিত্তিক একজন স্বতন্ত্র সাংবাদিক, ইয়ং ইন্ডিয়া ফেলো এবং লেডি শ্রী রাম কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক। তিনি লিঙ্গ, সংস্কৃতি এবং স্বাস্থ্য ইত্যাদি বিষয়ের উপর লেখেন।

Other stories by Pallavi Prasad
Illustration : Priyanka Borar

নিউ-মিডিয়া শিল্পী প্রিয়াঙ্কা বোরার নতুন প্রযুক্তির সাহায্যে ভাব এবং অভিব্যক্তিকে নতুন রূপে আবিষ্কার করার কাজে নিয়োজিত আছেন । তিনি শেখা তথা খেলার জন্য নতুন নতুন অভিজ্ঞতা তৈরি করছেন; ইন্টারেক্টিভ মিডিয়ায় তাঁর সমান বিচরণ এবং সেই সঙ্গে কলম আর কাগজের চিরাচরিত মাধ্যমেও তিনি একই রকম দক্ষ ।

Other stories by Priyanka Borar
Editor : Hutokshi Doctor
Series Editor : Sharmila Joshi

শর্মিলা জোশী পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার (পারি) পূর্বতন প্রধান সম্পাদক। তিনি লেখালিখি, গবেষণা এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত।

Other stories by শর্মিলা জোশী
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha