தங்கள் இரண்டு அறைகள் கொண்ட மண் வீட்டின் கதவருகே பாயில் அமர்ந்துகொண்டு கந்தி டெப்குருவும், அவரது மகள் தன்மதியும் அரிசி உமியை சிவப்பு நூல்கொண்டு பின்னுவதில் மூழ்கியிருந்தனர். பின்னர் மூங்கில் இழைக்கொடியில் கட்டி, ஒன்றாக சேர்த்து மாலையாக தைத்திருந்தனர். இதை கந்தியின் கணவர் கோபிநாத் டெப்குரு, லட்சுமி சிலை செய்வதற்கு பயன்படுத்துவார்.
கோபிநாத் லேசான கயிறு கட்டிய இசை கருவியுடன் வீட்டில் இருந்து வெளியே வருகிறார். கந்தியும், தன்மதியும் நெல் மாலையை தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றனர். அவர் அந்த லேசான கயிறை மீட்டி லட்சுமி புராணத்தில் உள்ள சில வரிகளை பாடுகிறார். “தானியங்களின் கடவுளான லட்சுமி தேவியின் வடிவங்களை நெல்லால் செய்வதையும், அவரின் மகிமையை புகழ்ந்து பாடுவதையும் நாங்கள் பாரம்பரியமாக செய்து வருகிறோம்“ என்று 35 வயதான கந்தி விளக்குகிறார். அவரும், அவரது குடும்பத்தினரும் டெப்குரு அல்லது தேவ்குனியா இனத்தைச் சேர்ந்த பாரம்பரிய கவிஞர்கள். அவர்கள் ஒடிசாவில் உள்ள நுவாபடா மாவட்டத்தில் உள்ள குத்பெஜா கிராமத்தில் வசிக்கின்றனர்.
ஓலைச்சுவடியின் கையெழுத்து பிரதி ஒன்றை என்னிடம் காட்டி, டெப்குரு இனத்தினர், லட்சுமி புராணத்தை தங்களின் முன்னோர்களிடம் இருந்து கற்றதாக 41 வயதான கோபிநாத் கூறுகிறார். லட்சுமி புராணம், பல்ராம் தாசால் இயற்றப்பட்ட 15ம் நூற்றாண்டை சேர்ந்த பாடல். அது பெண்கடவுளான லட்சுமி மற்றும் அவர் ஜகன்நாதரை மணந்துகொண்ட புராணத்தை பற்றி கூறுகிறது. மேலும் அவர் பின்பற்றிய சடங்குகள் மற்றும் விரதங்கள் குறித்து விளக்குகிறது. ஒற்றை மெல்லிய இழை உள்ள லட்சுமி வீணையை இசைத்துக்கொண்டே, கோபிநாத் லட்சுமி புராண பாடலை பாடுகிறார். (அது பிரம்ம வீணை அல்லது டெப்குரு பனா என்றழைக்கப்படுகிறது). டெப்குருக்கள் மூன்றடி நீளமுள்ள இந்தக்கருவியை சுரைக்காய் மற்றும் மூங்கிலால் செய்கிறார்கள்.
லட்சுமி புராணத்தைப்பாடிக்கொண்டே, டெப்குரு குடும்பத்தில் உள்ள ஆண்கள், சிலைகள் வடிப்பது மற்றும் பெண்கடவுளை வழிபடும்போது செய்யப்படும் சடங்குக்கு தேவையான பொருட்கள் தயாரிப்பது என்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். கோயில் வடிவிலான பீடங்கள், பல்லக்கு மற்றும் தேர் பொம்மைகள், கலசங்கள் மற்றும் மற்ற பொருட்களையும், அவர்கள் குடும்பத்து பெண்கள் பின்னிக்கொடுக்கும் நெல் மாலையில் இருந்து செய்கின்றனர். அவர்கள் நெல் அளக்கும் அளவை, பதர் நீக்க காற்றாடி, தாமரை வடிவிலான பொருட்கள், பூச்சாடிகள், சிறிய யானை பொம்மைகள் ஆகியவற்றையும் செய்கின்றனர். “இந்த பாரம்பரிய கலைகளை நாங்கள் எங்கள் முன்னோர்களிடம் இருந்த கற்று பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறோம்“ (இது தன்கால அல்லது தன் லட்சுமி என்று அறியப்படுகிறது) என்று கந்தி கூறுகிறார்.
இந்த கவிஞர்கள் நுவாபடா மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் பயணம் செய்து லட்சுமி புராண கதைகளை கூறிவருகின்றனர். ஒவ்வொரு முறை அவர்கள் கதையை விவரிப்பதற்கு மூன்று மணி நேரங்கள் ஆகும். ஆனால், மர்கசீரா மாதத்தில் (நவம்பர் – டிசம்பர்) இந்த கதை சொல்லும் நேரம் 4 முதல் 5 மணி நேரம் வரை செல்லும். டெப்குருக்கள் தங்கள் பார்வையாளர்களுக்கு நன்னெறி கருத்துக்களையும் கதைகளின் இடையே கூறுவார்கள். திருமணமாகி வீட்டில் உள்ள பெண்களை சந்தித்து, விரதங்களை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், பெண்கடவுளுடன் தொடர்புடைய சடங்குகள் குறித்து விளக்குவதாக கூறுகின்றனர். சில நேரங்களில் அவர்கள் நாடக அடிப்படையிலான உரையை கற்பிப்பார்கள். அது லட்சுமி புராண சுவங்கா என்றழைக்கப்படும்.
“இந்த வேலை கடினமான ஒன்றுதான், ஆனாலும், நமது பாரம்பரியத்தை காப்பதற்காக இதைச்செய்ய வேண்டும். நாங்கள் ஒவ்வொரு கிராமமாகச் சென்று டெப்குரு பனாவை, லட்சுமி புராண பாடல்களை பாடி இசைத்து காட்டுவோம். நாங்கள் லட்சுமியின் சிலைகள் மற்றும் பொருட்களை வழங்கி பெண்களை, கடவுளை வழிபட ஊக்குவிப்போம்“ என்று கோபிநாத் கூறுகிறார்.
அவர்கள் கொடுக்கும் பொருட்களின் அளவிற்கு ஏற்ப கவிஞர்கள் ரூ.50 முதல் ரூ.100 வரை ஒவ்வொரு பொருளுக்கும் பணம் பெறுகிறார்கள் அல்லது நெல், தானியங்கள் மற்றும் காய்கறிகளை பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் டெப்குருக்குள் ஏதேனும் திரும்ப கிடைக்கும் என்று இதை செய்வதில்லை. “பெண்கள் ஊக்குவிக்கப்பட்டு, லட்சுமியின் பக்தையாவதே தங்களுக்கு கிடைக்கும் பலனாகும்“ என்று கோபிநாத்தின் உறவினர், அவர் பெயரும் கோபிநாத்தான் கூறுகிறார். 60 வயதான அவரும், கோபிநாத்தின் குடும்பத்தினருடன், நுவாபடாவின் கரியர் வட்டத்தில் உள்ள குத்பெஜா கிராமத்தில் வசிக்கிறார்.
இந்த கவிஞர்கள் நுவாபடா மாவட்டத்திற்குள் பயணம் செய்து லட்சுமி புராணத்தை விளக்கி கூறி வருகின்றனர்
கந்தி, நாளொன்றுக்கு 40 மாலைகள் செய்கிறார். கோபிநாத் 10 சிலைகள் செய்கிறார். அவர்கள் யாசமாகப்பெறும் நெல்லை பயன்படுத்துகின்றனர். மூங்கில் தண்டுகள் கிராமத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் அல்லது குத்பெஜாவுக்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து எடுத்துக்கொள்வார்கள். சில நேரங்களில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் செங்கல் சூளை மற்றும் கட்டுமான வேலைகளிலும் கந்தி ஈடுபடுவார். அறுவடை காலங்களில் கிராமத்தில் உள்ள விவசாயிகளின் நெல் வயல்களிலும் வேலை செய்வார்.
கோபிநாத்தின் உறவினர்கள் இரண்டு டெப்குரு குடும்பத்தினர் மட்டும் குத்பெஜாவில் வசிக்கின்றனர். நுவாபடா முழுவதுமே எங்கள் இனத்தைச்சார்ந்த 40 குடும்பத்தினர் மட்டுமே உள்ளனர் என்று கோபிநாத் கூறுகிறார். ஒடிசாவில் இவர்கள் மேலும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள்.
கடந்த காலங்களில், முக்கியமாக தாழ்த்தப்பட்ட இந்து குடும்பத்தினர், டெப்குருக்களை லட்சுமி பாராயணம் செய்வதற்கு அழைப்பார்கள். உயர் சாதி பெண்கள் பெரும்பாலும் லட்சுமி சிலைகளை அவர்களிடம் இருந்த வாங்கிக்கொள்வார்கள். குறிப்பாக மார்கசிரா மாதத்தில் இது அதிகம் நடைபெறும். ஒரு காலகட்டத்திற்கு மேல், அவர்களின் பாரம்பரியத்தை தலித் மற்றும் ஆதிவாசிகளும் ஏற்றுக்கொண்டனர். (பாடல்கள் தீண்டாமைக்கு எதிராக பேசுகிறது).
கோபிநாத் தனது சைக்கிளில் காலையில் கிளம்பினால், மாலையில் வீடு திரும்புவார். ஆனால், அவர் தொலை தூரத்திற்கு சென்றால், ஓரிரு நாட்கள் அங்கேயே தங்கிவிடுவார். அவரது உறவினரும், மூத்தவருமான மற்றொரு கோபிநாத், அவரது பழைய மோட்டார் சைக்கிள் மூலம் அதிக தொலைவையும் எளிதாக கடந்துவிடுவார்.
கடந்த காலங்களில் கோபிநாத்தின் பயணங்களில் கந்தியும் சேர்ந்துகொள்வார். அவர்களின் 13 வயது மகள் தன்மதி மற்றும் 10 வயது மகள் பூமிசுதாவை குத்பெஜா அரசு பள்ளியில் சேர்த்ததால், 7 – 8 ஆண்டுகளுக்கு முன்னர் அதுவும் நின்றுவிட்டது. “கல்வி இலவசம் என்பதால், நாங்கள் அவர்களை பள்ளிக்கு அனுப்புகிறோம். அவர்கள் படிக்க வேண்டும். அதே நேரத்தில் எங்களின் பாரம்பரிய கலையையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் எங்களுக்கு அதுதான் அடையாளத்தை கொடுக்கிறது“ என்று கந்தி கூறுகிறார். பள்ளியின் மதிய உணவுத்திட்டமும், அவர்கள் பள்ளி செல்வதை தீர்மானிக்கும் காரணியாக அமைகிறது. அவர்களின் 4 வயது மகளான ஜமுனா, உள்ளூர் அங்கன்வாடி மையத்திற்குச் செல்கிறார்.
டெப்குருக்களின், நெல் மூலம் கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் பாரம்பரியம் அருகி வருகிறது. இதற்கு அரசிடம் இருந்து ஆதரவு கிடைக்க வேண்டும் என்று கந்தி கூறுகிறார். வங்கிக்கடன், கிராமப்புற வீட்டு வசதி போன்ற திட்டங்கள் இன்னும் அவர்களை எட்டவில்லை. “அரசு எங்களுக்கு கலைஞர்கள் அடையாள அட்டை வழங்குகிறது“ என்று கந்தி கூறுகிறார். “ஆனால், எந்த ஆதரவும் வழங்காமல் அதனால் என்ன பலன்?“ என்று அவர் கேட்கிறார்.
இந்த செய்திக்கு உதவிய, காரியரைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் அஜித்குமார் பாண்டாவுக்கு இந்த நிருபர் நன்றி கூறுகிறார்.
இந்த செய்தியின் ஒரு பதிப்பு,
இந்திய பத்திரிக்கை மையத்தின்
கிராஸ் ரூட்சில் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாத பிரசுத்தில் பிரசுரிக்கப்பட்டது.
தமிழில்: பிரியதர்சினி.R