‘இங்கு உயரமான இடம் கோயில். அதிலிருக்கும் சிலை கழுத்தளவு நீரில் மூழ்கியுள்ளது. எங்கும் நீர் சூழ்ந்துள்ளது! காய்ந்த நிலம் எங்கிருக்கும் என உள்ளூர் மக்கள் தேடிச் செல்லும் நேரத்தில், ஒரு குடும்பம் மட்டும் வீட்டை பாதுகாக்க வேண்டும் என அங்கே தங்கிவிட்டது. கோயிலுக்குள் உள்ள மேலடுக்கில் மூன்று அறைகள் கொண்ட மாளிகையில் 67 குழந்தைகளும், 356 பெரியவர்களும் இருந்தனர். நாய்கள், பூனைகள், ஆடுகள், கோழிகள் போன்ற வீட்டு விலங்குகளும் இருக்கின்றன…’

1924ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தை அடிப்படையாகக் கொண்டு தகழி சிவசங்கரப் பிள்ளையின் சிறுகதையான ‘வெள்ள’த்தில் வரும் தொடக்க வரிகள் இவை.

வானிலிருந்து நீர் கொட்டுவது, ஆறுகளில் ஓடுவது, வெள்ளம் சூழ்ந்த வீடுகள், வயல்கள் போன்றவற்றை குழந்தைகள் வரைந்தனர். வெள்ளத்தால் ஏற்பட்ட அச்சத்தையே அவர்களின் கலைபடைப்பு பேசியது.

இந்தாண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் எதிர்பாராத கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் என்பது கேரளா நூற்றாண்டில் காணாதது. 100 ஆண்டுகளுக்கு பிறகு இதே காட்சிகள் உருவாகியுள்ளன.

PHOTO • V. Sasikumar
PHOTO • V. Sasikumar

இடது: கிராமங்களுக்கு பல நிறுவனங்கள் உணவு, குடிநீர் கொண்டுவந்தன. வலது: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 362 குடும்பங்களுக்கு உறைவிடமாக மாறிய மகாதேவிகாத் கிராம அரசுப் பள்ளி

ஜூலை மத்தியில் குட்டநாடு பகுதியில் (கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம், பத்தனம் திட்டா மாவட்டங்களில்) முதலில் வெள்ளம் ஏற்பட்டது - நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து அச்சமூட்டியது - பள்ளிகள், அரசு அலுவலகங்கள் நிவாரண முகாம்கள் ஆகின.

கார்த்திகாபள்ளி தாலுக்காவில் உள்ள மகாதேவிகாத் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி முகாமிற்கு ஜூலை 28ஆம் தேதி சென்றிருந்தேன். ஒருகாலத்தில் இப்பள்ளியில் நான் படித்திருக்கிறேன்; 2018 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 362 குடும்பங்களுக்கு உறைவிடமானது.

முகாமில் இருந்தவர்களில் அருகமை கிராமங்களைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்களின் 23 குழந்தைகளும் இருந்தனர். முகாமில் இருந்த பெரும்பாலானோர் மனஅழுத்தத்துடன் காணப்பட்டனர். அடுத்தநாள் பள்ளிக்கு ஓவியம் தீட்டுவதற்கான பொருட்களை நான் வாங்கிச் சென்றேன். காகிதங்கள், பேனாக்கள், கிரயான்களை நான் விநியோகித்தபோது பிள்ளைகள் ஆர்வத்துடன் திரண்டு கொண்டனர். உடனடியாக அவர்கள் வண்ணங்கள் நிறைந்த வீடுகள், வயல்வெளிகள், சூரியன், பறவைகள், மரங்கள், மேகங்கள், பட்டாம்பூச்சிகள், செடிகள், மனிதர்கள் மற்றும்… நீரை வரைந்தனர். குழந்தைகளின் ஓவியங்களைப் பார்த்த சில தாய்மார்கள் கண் கலங்கினர்.


PHOTO • V. Sasikumar
PHOTO • V. Sasikumar

இடது: ஆகஸ்ட் 24ஆம் தேதி ஓணம் நாளில் பள்ளிச் சுவரில் குழந்தைகளின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. வலது: நீர் வடியத் தொடங்கியதும் பல குடும்பங்கள் முகாம்களை விட்டு வெளியேறின

ஓணம் திருநாளான ஆகஸ்ட் 24ஆம் தேதி பள்ளிச் சுவரில் ஓவியங்களை நாங்கள் காட்சிப்படுத்தினோம் – இருள் சூழ்ந்த, ஆரவாரமற்ற இந்த வருடம், வண்ண ஓவியங்கள் அந்நாளை ஒளிப்படுத்தின.

வெள்ளம் குறித்தும் குழந்தைகள் எழுதினர். அவற்றின் சில டைரி குறிப்புகள் மலையாளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளன:

வெள்ளத்தின் குறிப்பேடு

“மெல்ல நான்குபுறமும் நீர் சூழத் தொடங்கியது. எங்கள் வீட்டையும், முற்றத்தையும் அடைந்தது. பெரிய மீன்பிடி படகில் வந்த மீட்புப் பணியாளர்கள் எங்கள் அனைவரையும் வெளியேற்றினர். எங்கள் வீட்டை விட்டுச் செல்ல மனமில்லை. ஆனால் நீரின் அளவு இன்னும் அதிகரிக்க கூடும் என்ற அச்சத்தில், மீட்புப் பணியாளர்களுடன் சென்றோம். எங்களை பையிப்பாட் பாலத்தில் இறக்கிவிட்டனர். அங்கு கேஎஸ்ஆர்டிசி [கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம்] பேருந்து பிடித்து மகாதேவிகாத் பள்ளிக்கு சென்றோம். இங்கு வந்தவுடன் எங்களுக்கு உணவும், உடைகளும் கொடுத்தனர். நாங்கள் உண்டுவிட்டு உறங்கினோம். அடுத்தநாள் காலை உணவாக உப்புமாவும், மதியத்திற்கு சாதமும் கொடுத்தனர். இரவிலும் அரிசி உண்டு மீண்டும் உறங்கினோம். எங்களுக்கு நேரத்திற்கு உணவு கிடைத்தது. முகாமில் நாங்கள் மகிழ்ச்சியாக தங்கினோம்.”

- அபிஜித் எஸ் , 13, ஆலப்புழா மாவட்டம் ஹரிபாத் வட்டாரத்தில் உள்ள சேருத்தானா-அய்யபிரம்பு கிராமம்.

PHOTO • V. Sasikumar
PHOTO • V. Sasikumar
PHOTO • V. Sasikumar
PHOTO • V. Sasikumar

குழந்தைகளின் கலைப்பணி. மேல் இடது: அபிஜித் எஸ். (13 வயது, 9ஆம் வகுப்பு), வீயாபுரம் கிராமம். மேல் வலது: ஆகாஷ் எம். (14 வயது, 9ஆம் வகுப்பு), சேருத்தானா கிராமம். கீழ் இடது: ஆர்யா பி. (12 வயது, 7ஆம் வகுப்பு), நெடுமுடி கிராமம். கீழ் வலது: அரோமால் பி. (8வயது, 3ஆம் வகுப்பு), நெடுமுடி கிராமம்

“சுதந்திர தினத்தன்று எங்கள் வீட்டில் வெள்ளம் ஏற்பட்டது. எனது வீட்டிற்குள் நீர் புகுந்ததும் விடுமுறை கிடைக்கும் என மகிழ்ந்தேன். என் தாயும், தந்தையும் வீட்டு உபயோகப் பொருட்களை உயர்வான இடத்தில் வெள்ள நீர் புகாத இடத்தில் வைத்தனர். எங்கள் கட்டில் மூழ்கியதும் உயரத்தில் உள்ள எங்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றோம். அங்கும் வெள்ளம் வந்தது. நாங்கள் அங்கிருந்து புறப்பட்டபோது கழுத்தளவு நீர் இருந்தது. சேருத்தான ஆற்றை நாங்கள் அடைந்தபோது மீட்பு படகுகளுக்காக எங்கள் அண்டை வீட்டார்கள் பாலத்தில் காத்திருப்பதை கண்டோம். படகுப் பயணம் அச்சமூட்டியதால் பயத்தில் அழுதேன். பக்தியுடன் வேண்டிக் கொண்டேன். சேருத்தானா பாலத்திலிருந்து பேருந்து பிடித்து இப்பள்ளிக்கு வந்தோம்.”

- அதுல் மோகன், 10, ஆலப்புழா மாவட்டம் ஹரிபாத் வட்டாரம் சேருத்தானா கிராமத்தைச் சேர்ந்தவர்

“ வெள்ளம் எங்களுக்கு பல கஷ்டங்களை கொடுத்தது. எங்கள் வீட்டின் அனைத்து பொருட்களும் இப்போது தண்ணீரில் மூழ்கியுள்ளன.

- அபிஜித் பி., 10, ஆலப்புழா மாவட்டம் ஹரிபாத் வட்டாரம் சேருத்தானா கிராமத்தைச் சேர்ந்தவர்

PHOTO • V. Sasikumar
PHOTO • V. Sasikumar


PHOTO • V. Sasikumar
PHOTO • V. Sasikumar

மேல் இடது: அஸ்வதி பைஜூ (வயது 9, வகுப்பு 4), நெடுமுடி கிராமம். மேல் வலது: அபிஜித் பி. (வயது 10, வகுப்பு 5), சேருத்தானா கிராமம். கீழ் இடது: ஆதித்யன் பைஜூ (வகுப்பு 9, வகுப்பு 4), நெடுமுடி கிராமம். கீழ் வலது: அகிலேஷ் எஸ். (வயது 6, வகுப்பு 1), நெடுமுடி கிராமம்

“ எங்கள் வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால் ஆகஸ்ட் 15ஆம் தேதி என்னால் பள்ளிச் செல்ல முடியவில்லை. நீர்மட்டம் குறையும் என நினைத்தேன். ஆனால் அப்படி ஆகவில்லை. நீர் மெல்ல உயரத் தொடங்கியது. மாலையிலும் அதே நிலைதான். இரவில் நீர் உயராதது எங்கள் அதிர்ஷ்டம். அடுத்தநாள் காலை 6 மணிக்கு எங்கள் வீட்டிற்குள் வெள்ள நீர் சூழ்ந்தது. முதலில் சமையலறை, பிறகு வரவேற்பறை, அறைகள்… என எங்கும். எங்கள் இரண்டாவது அறையை பாதியளவு வெள்ளம் சூழ்ந்ததும், நாங்கள் தாத்தாவின் இளைய சகோதரர் வீட்டிற்கு சென்றோம். இரண்டு-மூன்று நாட்கள் அங்கு தங்கினோம். மூன்றாவது நாள் எங்கள் உறவினர்கள் வந்தனர். அதே மாலையில் என் தந்தையின் சகோதரர் வீட்டையும் வெள்ளம் சூழ்ந்தது. இரண்டு குழுக்களாக அனைவரும் பிரிந்து சேருத்தானா பாலத்திற்குச் சென்று மீட்புப் படகுகளை பிடித்தோம். பையிப்பாட் பாலம் அருகே இறக்கிவிடப்பட்டோம். பிறகு கேஎஸ்ஆர்டிசி பேருந்தை பிடித்தோம். நாங்கள் [மகாதேவிகாத் பள்ளிக்கு] வந்தபோது யாருமில்லை. முகாமில் நாங்கள்தான் முதல் ஆள். தூங்குவதற்கான இடத்தைக் கண்டுபிடித்தோம். கொஞ்ச நேரத்தில் அப்பமும், மாட்டுக்கறி குழம்பும் சாப்பிட கிடைத்தது. இரவில் யாரும் தூங்கவில்லை…”

- ஆகாஷ் எம். 14, ஆலப்புழா மாவட்டம் ஹரிபாத் வட்டாரம் சேருத்தானா-அய்யபரம்பு கிராமம்

PHOTO • V. Sasikumar
PHOTO • V. Sasikumar

அதுல் பாபுவின் (8, வகுப்பு 3) ஓவியம், நெடுமுடி கிராமம் (இடது), கெளரி மாதவ் (7, வகுப்பு 2) புளிங்குன்னு கிராமம் (வலது)

“எங்கள் வீடு வெள்ளத்தில் [ஜூலையில்] மூழ்கி ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. நாங்கள் அருகிலுள்ள வீட்டில் வைக்கப்பட்டோம். இம்மாதம் [ஆகஸ்ட்] வீட்டையும் வெள்ளம் சூழ்ந்தது. மிகவும் கஷ்டப்பட்டு இரவை சமாளித்தோம். அடுத்தநாள் காலை நீர்மட்டம் உயர்வதை நாங்கள் கண்டோம். அனைவரும் அச்சத்தில் அழுதனர். காவல்துறை மாமாக்கள் பெரிய வாகனங்களில் வந்து எங்களை மீட்டனர். காலர்கோட்டில் நாங்கள் இறக்கிவிடப்பட்டோம். நாங்கள் எங்கு செல்வது என தெரியாமல் அதிர்ச்சியடைந்தோம். காயம்குலத்தில் உள்ள தனது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவோம் என பாட்டி சொன்னார். எனவே நாங்கள் பெரிய வாகனத்தை எடுத்து அங்கு சென்றோம். முகாமை நிர்வகித்த இரக்கம் நிறைந்த பெண்கள் இப்பள்ளிக்கு எங்களை அனுப்பினர். அதிலிருந்து இப்போது வரை எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை.”

- அஷ்வதி பைஜூ , 9, ஆலப்புழா மாவட்டம் சம்பகுலம் வட்டம், நெடுமுடி கிராமம்

PHOTO • V. Sasikumar


PHOTO • V. Sasikumar

ஆலப்புழா மாவட்டம் மகாதேவிகாத் பள்ளியில் உள்ள நிவாரண முகாமில் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள்.
மேல் (இடமிருந்து வலம்) : அக்ஷய் ஆர், ஆகாஷ் ஆர். அபினவ் பி. அபிஷேக், ஆரோமல் பிரதீப், அதிரத், அஸ்வதி பைஜூ.
கீழே: (இடமிருந்து வலம்) : அதுல் மோஹன், அபினவ் அனீஷ், ஆகாஷ் ஆர்., அபிமன்யு, அனீஷ் எம்., அபினவ் பி., அவனி பைஜூ

2018, ஆகஸ்ட் 29ஆம் தேதி மஹாதேவிகாத் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன. அங்கு தஞ்சமடைந்திருந்த குடும்பங்களில் சிலர் குழந்தைகளுடன் தங்கள் கிராமங்களுக்கு திரும்பினர், மற்றவர்கள் வேறு நிவாரண முகாமிற்குச் சென்றனர்.

தமிழில்: சவிதா

V. Sasikumar

V. Sasikumar is a 2015 PARI Fellow, and a Thiruvananthapuram-based filmmaker who focuses on rural, social and cultural issues.

Other stories by V. Sasikumar
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha