அக்டோபர் மாதத் தொடக்கத்தில் விளக்குகள் அணைந்ததும் ஏதோப் பிரச்சினை என்பதை ஷோபா சவானின் குடும்பம் உணர்ந்தது. சுதாரிப்பதற்குள் ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து குச்சிகள் மற்றும் இரும்புத்தடிகள் கொண்டு குடும்பத்தில் இருந்த எட்டு பேரையும் ஈவிரக்கமின்றி அடித்தனர். ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் ஏழு பேராகினர். ஷோபாவின் இரண்டு வயது பேரன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அடுத்த நாள் அவர்கள் ஆறு பேராகினர். ஷோபாவின் கணவர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்திருந்தார்.
நள்ளிரவுக்கு சற்று முன்னால் வீட்டுக்குள் அவர்கள் நுழைந்துத் தாக்கினர். உதைத்தனர். 65 வயது ஷோபா, 70 வயது மாருதி, அவர்களின் மகள், மருமகள், பேரன், பேத்தி, சகோதரரின் மனைவி, அவரின் மகள் எனக் குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களையும் அடித்தனர். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்திலுள்ள கிராமத்தின் விளிம்பில் அமைந்திருக்கும் அவர்களின் குடிசையும் ஆட்டுக்கிடையும் எரிக்கப்பட்டன. அந்த இரவில் நடந்த அனைத்தையும் காவல்துறையில் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் ஷோபா குறிப்பிட்டிருந்தார்.
”அந்த இரவில் நாங்கள் மூன்று பேர் வன்புணரப்பட்டோம்,” என்கிறார் ஷோபாவின் 30 வயது மகளான அனிதா. அவர் திருமணம் முடித்தவர். சகோதரரின் 23 வயது மனைவியையும் உடன்பிறந்தவரின் 23 வயது மகளையும் அவர்கள் வன்புணர்ந்ததாக அவர் சொல்கிறார்.
வெறி கொண்ட அந்த கும்பல் அடுத்ததாக அனிதாவின் குடிசைக்குச் சென்றது. தாயின் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவு. இரவுநேரத்தில் அவர்களையும் பீதிக்குள்ளாழ்த்தினர். “இரவு 2 மணிக்கு அவர்கள் எங்களின் வீட்டுக்கு வந்தனர்,” என்கிறார் அனிதா. “ஊரை விட்டு எங்களை விரட்ட அவர்கள் விரும்பினர். எங்களின் மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டது. கால்நடைகளை அபகரித்தனர்.” அவரின் குடிசையையும் அவர்கள் எரித்தனர்.
அவர்கள் தாக்கிக்கொண்டிருக்கும்போது, “நீங்கள் எல்லாம் திருடர்கள். உங்களைப் போன்ற பார்த்திக்கள் எங்கள் கிராமத்தில் இருக்கக் கூடாது,” என சொல்லிக் கொண்டிருந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் ஷோபா.
மகாராஷ்டிராவின் பட்டியல் பழங்குடி சமூகமான பார்த்தி சமூகத்தை சேர்ந்தவர்கள் சாவன்கள். ஒருகாலத்தில் பார்த்திகள் வேட்டைக்காரர்களாக இருந்தவர்கள். காலனிய ஆட்சிக்காலத்தில் குற்றப்பழங்குடிச் சட்டத்தின்படி ‘குற்றப்பழங்குடி’யாக அவர்கள் வரையறுக்கப்பட்டனர். ‘பிறப்பால் குற்றவாளிகள்’ என அவர்கள் கண்காணிக்கப்பட்டனர். அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்திய அரசு குற்றப்பழங்குடி சட்டத்தை ரத்து செய்தது. எனினும் அதற்குப் பதிலாக உருவான, 1952ம் ஆண்டின் திருட்டு வழக்கம் கொண்டவர்களுக்கான சட்டம் (Habitual Offenders Act), அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றவாளி அடையாளத்தை தக்க வைத்தது.
ஒடுக்கப்பட்டு, கல்வியும் வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்டு பார்திக்கள் விளிம்புநிலையிலேயே நீடிக்கின்றனர். பீட் மாவட்டத்தில் வசிக்கும் 5,600 பார்த்தி மக்கள்தொகை (2011 கணக்கெடுப்பு) மீதான தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. “விடுதலைக் கிடைத்த பல ஆண்டுகளுக்குப் பிறகும் பார்த்திகள் குற்றவாளிகளாகவே கருதப்படுகின்ற்னர். கிராமத்தை விட்டு விரட்டவே அவர்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது,” என்கிறார் சித்தார்த் ஷிண்டே. மாவட்ட நீதிமன்றத்தில் ஷோபா சாவனின் வழக்குக்காக அவரது தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் அவர். கோவிட் தொற்றினால் மக்கள் அதிகம் நடமாடக் கூடாது என அதிகாரிகள் விரும்பியபோதும், இக்குடும்பங்கள் வீடுகளை விட்டு விரட்டப்பட்டிருக்கின்றன.
குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் ஆதிக்க மராட்டா சமூகத்தை சேர்ந்தவர்கள். ஷோபா புகார் கொடுத்ததும் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். ”கிராமத்து மக்களுக்கு தொந்தரவு கொடுத்ததால்” பார்த்தி குடும்பங்களை தாக்கியதாக அவர்கள் காவல்துறையிடம் சொல்லியிருக்கின்றனர். வழக்கை விசாரிக்கும் அதிகாரியும் துணை கண்காணிப்பாளருமான விஜய் லகரே இந்தக் கட்டுரையாளரின் அழைப்புகளை ஏற்கவில்லை.
குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர், ஷோபனாவின் மகனான கெதார், தன்னை கத்தியால் தாக்கியதாக கூறினார். கெதார் அப்படிச் செய்ததாக ஷிடேவும் ஒப்புக் கொள்கிறார். ஆனால் அது தாக்குதலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்கிறார். “பார்த்தி குடும்பங்கள் பல ஆண்டுகளாக ஒடுக்குமுறையை எதிர்கொண்டு வருகின்றனர். அதனால்தான் சண்டை வெடித்தது.” தாக்கியவர்கள் காவல்துறையில் புகார் செய்திருக்க வேண்டுமென்கிறார் வழக்கறிஞர். “மாறாக, அவர்கள் குடும்பத்தை தாக்கியிருக்கின்றனர். இரண்டு குடும்ப உறுப்பினர்களை கொன்றிருக்கின்றனர். மூன்று பெண்களை வன்புணர்ந்திருக்கின்றனர். கிராமத்தை விட்டு அவர்களை விரட்டவே இவற்றைச் செய்திருக்கின்றனர்.”
பார்த்திகளுக்கு சொந்தமாக நிலம் இருப்பதை கிராம மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்கிறார் ஷோபாவின் இன்னொரு மகனான கிருஷ்ணா. “எங்களுக்கென இரண்டு ஏக்கர் விவசாய நிலம் எங்களின் வீட்டுக்கு முன்னால் இருக்கிறது. அது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. 4-5 வருடங்களுக்கு முன் அவர்கள் என் தந்தையை தாக்கிக் கையை உடைத்தனர். கால்நடைகளை திருடியதாக எங்கள் மீது பொய்ப் புகார்கள் கொடுத்தனர். எங்களுக்கு இருக்கும் நிலையால் காவல்துறை பல நேரம் எங்களுக்கு ஒத்துழைக்காமல்தான் இருந்திருக்கிறது,” என அவர் விளக்குகிறார்.
சாவன் குடும்பம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை பற்றி மும்பை தினசரியில் பேசும்போது அவர்களை ‘வழக்கமான குற்றவாளிகள்’ எனக் குறிப்பிட்டார் துணைக் காவல் கண்காணிப்பாளர் லகாரே. மும்பை நகரத்தில் டாடா சமூக அறிவியல் நிறுவன ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட பார்த்திகள் பற்றிய ஆய்வு , “பயிற்சி ஏடுகள் யாவும் பார்த்திகளையும் குற்றமரபினர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பிற சமூகத்தினரையும் தொடர் குற்றவாளிகளாகவும் மோசமான நடத்தைக் கொண்டவர்களாகவும் தொடர்ந்து சித்தரிப்பதாக பல காவல் அதிகாரிகள் குறிப்பிட்டனர்,” என்கிறது.
பார்த்திகள் பெரும்பாலும் கிராமத்தின் மேய்ச்சல் நிலங்களில்தான் வாழ்கின்றனர். சிலருக்கு நிலவுரிமை அரசிடமிருந்து கிடைத்துவிட்டது. பலருக்குக் கிடைக்கவில்லை. “கூலி வேலையில்தான் நாங்கள் பிழைக்கிறோம். கோவிட் ஊரடங்குக்கு பிறகு வாழ்க்கை, போராட்டமாக இருக்கிறது. இச்சூழலில் நடத்தப்படுகிற ஒடுக்குமுறை அதிக உளைச்சலைக் கொடுக்கிறது,” என்கிறார் கிருஷ்ணா.
மார்ச் 2020ல் அறிவிக்கப்பட்ட கோவிட் ஊரடங்குக்கு பிறகு பார்த்திகள் எண்ணற்ற கஷ்டங்களை எதிர்கொண்டனர். “சாதாரண காலங்களிலேயே யாரும் அவர்களை நம்பி வேலை கொடுக்க மாட்டார்கள். கோவிட்டுக்கு பிறகு வேலைகள் குறைந்தது. தேவை உள்ளவர்கள் அதிகமாகினர். அச்சூழலில் பார்த்திகளுக்கு வாய்ப்பு என்பதே இல்லை. சமூகம் அவர்களை பகலில் சுதந்திரமாக நடமாட அனுமதிப்பதில்லை. காவலர்கள் இரவில் அவர்களை அனுமதிப்பதில்லை,” என்கிறார் ஷிண்டே. விளிம்புநிலைச் சமூகங்களுக்கு எதிரான ஒடுக்குமுறை வழக்குகளில் பிரதானமாக இயங்குபவர் அவர்.
தினக்கூலி வேலை தேடுபவர்கள் பார்த்திகள். கரும்பு வெட்டவோ செங்கல் சூளையில் வேலை பார்க்கவே அவ்வப்போது இடம்பெயர்வார்கள். சிலர் நிரந்தரமாக மும்பை, புனே போன்ற பெருநகரங்களுக்கு இடம்பெயர்வார்கள். சொத்துகள் இல்லாமையும் வறுமையும் காவல்துறை மற்றும் கிராமத்தினரின் தொடர் ஒடுக்குமுறையும் பார்த்தி குடும்பங்களை அவர்களின் சொந்த ஊர்களிலிருந்து வெளியேறி நகரத்துக்குச் செல்ல வைப்பதாக டாடா நிறுவன ஆய்வு குறிப்பிடுகிறது.
ஊரடங்கு முடிந்து நவம்பர் 2020-ல் பீட் மாவட்ட செங்கல் சூளைகள் திறக்கப்பட்டதும் சிர்சாலா டவுனைச் சேர்ந்த வித்தால் பவார் வேலைக்கு சேர்ந்தார். “எங்களைத் தவிர அனைத்து செங்கல் சூளை தொழிலாளர்களும் ஒப்பந்ததாரரிடமிருந்து முன்பணம் பெறுவார்கள்,” என்கிறார் அவர். “பார்த்திகள் என்பதால் தினக்கூலியாகத்தான் (ரூ.300) எங்களுக்கு பணம் கொடுக்கப்படும். பொதுத்தளத்தில் கலக்க பல ஆண்டு காலமாக நாங்கள் முயன்றாலும், குற்றவாளிகளாகத்தான் நாங்கள் நடத்தப்படுகிறோம்.”
சொந்தமாக நிலமில்லாத 45 வயது வித்தால், விவசாயிகளையும் செங்கல் சூளை ஒப்பந்ததாரர்களையும்தான் வேலைக்கு சார்ந்திருக்கிறார். “எப்போதும் எங்களை சந்தேகத்துடன்தான் பார்ப்பார்கள்,” என்கிறார் அவர். “கிராம மக்கள் எங்களை ஏற்றுக் கொள்ள பல ஆண்டுகளாக முயன்று கொண்டிருக்கிறோம்.”
2020ம் ஆண்டின் ஊரடங்கு காலங்களில், ஐந்து பேர் கொண்ட வித்தாலின் குடும்பம் அரசு கொடுத்த இலவச உணவுப் பொருட்களைக் கொண்டு சமாளித்தது. ஆனால் அதற்குப் பிறகு நிலைமை சிக்கலானது. தினக்கூலி வேலை கிடைக்கவில்லை. தொற்றுக்கு முன் வாரத்தில் 4-5 நாட்கள் வித்தாலுக்கு வேலை கிடைத்துவிடும். ஆனால் இப்போது வெறும் 2-3 நாட்கள் வேலைதான் கிடைக்கிறது. அவரின் வார வருமானம் ரூ.1200லிருந்து ரூ.600 ஆக குறைந்துவிட்டது.
அவருக்கு இருக்கும் பிரச்சினைகளில் உச்சமாக ‘வெளியேற்ற நோட்டிஸ்’ அவருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. வித்தாலின் குடும்பத்துடன் சேர்ந்து பத்து குடும்பங்கள் பீட்-பார்லி நெடுஞ்சாலைக்கு அருகே இருக்கும் ஒரு சிறு நிலத்தில் வசிக்கின்றனர். மகாராஷ்டிராவின் தொழில்துறை மேம்பாட்டு வாரியத் திட்டத்துகாக அந்த நிலம் பயன்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.
“எங்கே நாங்கள் செல்வது?” எனக் கேட்கிறார் வித்தால். “அதிகாரிகளை நாங்கள் கேட்டபோது, எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் என்கின்றனர்,” என்கிறார் அவர்.
அவரின் 60 வயது உறவினரான குலாம் பாய், சிர்சாலாவில் அவரின் குடும்பத்துடன் நாற்பது ஆண்டுகளாக வசித்து வருகிறார். ஆனால் இப்போதும் கிராமவாசிகள் அவர்களை சந்தேகத்துடன்தான் பார்க்கின்றனர். “நம்பிக்கையே இல்லாதபோது புது இடத்தில் நாங்கள் எப்படி ஏற்கப்படுவோம் அல்லது தங்க அனுமதிக்கப்படுவோம்? அதுவும் கோவிட் காலத்தில்?” எனக் கேட்கிறார் அவர். “40 வருடங்களாக இங்கு இருக்கிறேன். ஆனால் இப்போதும் நான் ஆக்கிரமித்து வசிப்பதாகதான் பார்க்கப்படுகிறேன். இந்த வயதில் நான் எங்கே செல்வேன்?”
வித்தாலுக்கும் குலாமுக்கும் குடும்ப அட்டைகள் இருக்கின்றன. வாக்காளர் அட்டைகள் இருக்கின்றன. மின்சாரக் கட்டணம் கூட அவர்கள் கட்டுகின்றனர். ஆனாலும் நிர்வாகத்தால் அவர்களை சுலபமாக அப்புறப்படுத்தி விட முடியும். காரணம், அவர்கள் தங்கியிருக்கும் நிலம் அவர்களுக்கு சொந்தமானது அல்ல.
சுதந்திரத்துக்கு பிறகு பல கொள்கைகளும் நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டபோதும் விளிம்புநிலைச் சமூகங்களுக்கான நிலவிநியோகத்தில் வெற்றுப் பேச்சுகளை மட்டும்தான் அரசுகள் பேசிக் கொண்டிருக்கின்றன. மேய்ச்சல் நிலங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்துவதென மகாராஷ்டிரா அரசு 2011-ல் முடிவெடுத்தது. பி.ஆர்.அம்பேத்கர் அரசு நிலங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என தலித்களுக்கு அறைகூவல் விடுத்த 1950களுக்குப் பிறகு தலித்கள் மற்றும் ஒடுக்கப்பட்டச் சமூகங்கள் குடியேறிய இடங்கள்தான் ‘ஆக்கிரமிப்புகள்’ எனக் குறிக்கப்படுகிறது. தலித்களின் பொருளாதார நிலை முன்னேற நிலவுரிமை முக்கியமென அம்பேத்கர் நம்பினார்.
“நாங்கள் முதலில் வந்தபோது இந்த நிலத்தில் சில மரங்களும் புதர்களும் இருந்தன,” என்கிறார் குலாம். “நாங்கள்தான் இந்த நிலத்தை திருத்தி, வாழத் தகுந்தததாகவும் விவசாயத்துக்கு ஏற்றதாகவும் மாற்றினோம். இப்போது நாங்கள் தூக்கியெறியப்படுவதை பற்றி எவருக்கும் கவலையில்லை.”
குலாம் சொல்வது உண்மைதான்.
ஷோபா சாவனின் குடும்பத்தில் மிஞ்சியிருப்போர் அச்சத்துக்குள்ளாகியிருப்பதைப் பற்றி கிராமத்தில் இருக்கும் எவருக்கும் கவலை இல்லை. அக்டோபர் மாதம் அவர்களின் குடும்பம் தாக்கப்பட்ட பிறகு, பல திசைகளுக்கு குடும்பம் சிதறிப் போனது. 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இன்னொரு மகளுடன் ஷோபா வசிக்கிறார். கெதாரின் வசிப்பிடம் தெரியவில்லை. அவரது தொலைபேசி அணைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இரவுக்கு பிறகு அவரை யாரும் பார்க்கவில்லை. அனிதா கிராமத்திலேயே தங்கி விட்டார். ஆனால் கிராமவாசிகளிடமிருந்து விரோதப் பார்வை எதிர்படும்போது அவர் தப்பித்து விடுகிறார். வழக்கை தொடர்ந்து நடத்த அனைவரும் விரும்புகின்றனர். அதற்கும் அவர்கள் விலை கொடுக்க வேண்டி வருமா? காலம்தான் பதில் சொல்லும்.
அக்டோபர் மாதம் தாக்குதலுக்குள்ளாகிய குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் பாதுகாப்புக் கருதி மாற்றப்பட்டிருக்கின்றன
இக்கட்டுரை புலிட்சர் மையத்தின் சுயாதீன இதழியல் மானியம் பெறும் செய்தியாளரின் கட்டுரைத் தொடரின் பகுதி
தமிழில் : ராஜசங்கீதன்