மலேரிய பரிசோதனைப் பெட்டியை பையில் தேடிக் கொண்டிருந்தார். பைக்குள் மருந்துகளும் இரும்புச் சத்து மாத்திரைகளும் ரத்த அழுத்துப் பரிசோதனை இயந்திரமும் இன்னும் பலவையும் இருந்தன. இரண்டு நாட்களாக அவரை தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருந்த குடும்பத்துப் பெண் படுக்கையில் சோகமாகப் படுத்திருந்தார். அவரின் காய்ச்சல் அதிகரித்துக் கொண்டிருந்தது. பரிசோதனையில் நோய் உறுதியானது.

மீண்டும் பைக்குள் அவர் தேடினார். 500 மில்லி லிட்டர் குளுக்கோஸ் பாட்டிலை எடுத்தார். பெண்ணின் படுக்கையில் ஏறிக் கூரையில் ஒரு பிளாஸ்டிக் கயிறைப் போட்டு, குளுக்கோஸ் பாட்டிலை வேகமாக கட்டி விட்டார்.

ஜார்கண்டின் பஷ்சிமி சிங்பும் மாவட்டத்திலும் அதைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் மருத்துவச் சேவைகளை கடந்த 10 வருடங்களாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் 35 வயது ஜோதி பிரபா கிஸ்போட்டா ஒரு தேர்ச்சி பெற்ற மருத்துவரும் இல்லை. பயிற்சி பெற்ற செவிலியரும் இல்லை. அவர் எந்த ஒரு அரசு ம்ருத்துவமனை அல்லது சுகாதார மையம் ஆகியவற்றுடன் பணியாற்றுபவர் இல்லை. ஆனால் ஒராவோன் பழங்குடியைச் சேர்ந்த இந்த இளம்பெண்தான் உதவிக்கு நாடப்படும் முதல் நபர். பல நேரங்களில் மக்களுக்கான, குறிப்பாக பழங்குடி கிராம மக்களின், கடைசி நம்பிக்கையாகவும் அவர்தான் இருக்கிறார்.

கிராமப்புற இந்தியாவின் சுகாதார சேவகர்களில் 70 சதவிகித பேர் இவரைப் போன்ற RMP-கள்தான். RMP என்றால் பதிவு செய்த மருத்துவப் பணியாளர் என தவறான அர்த்தம் கொடுக்கக் கூடும். ஆனால் கிராமப்புற மருத்துவப் பணியாளர் என்பதற்கான ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமே RMP. இணையான தனியார் சுகாதாரத்தை கிராமப்புற இந்தியாவில் நடத்துவதால், தகுதிப் பெறாத இந்த மருத்துவப் பயிற்சியாளர்கள், கல்விசார் இலக்கியங்களில் ஏளனமாகப் பார்க்கப்படுகிறார்கள். சுகாதாரம் சம்பந்தப்பட்ட அரசுக் கொள்கைகளையும் தெளிவின்மையுடனே அவை அணுகுகின்றன.

RMP-கள் பெரும்பாலும் இந்தியாவின் எந்த மருத்துவக் கவுன்சிலிலும் பதிவு செய்திருப்பதில்லை. ஹோமியோபதி அல்லது யுனானி மருத்துவர்களாக சிலர் பதிவு செய்திருக்கலாம். ஆனால் ஆங்கில மருந்துகளும் கொடுப்பார்கள்.

பிகார் அரசாங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து, வேலைவாய்ப்பற்ற கிராமப்புற மருத்துவப் பயிற்சியாளர்களுக்கான RMP சான்றிதழை அலபதி மருத்துவத்துக்கென ஜோதி பெற்றிருக்கிறார். 10,000 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆறு மாதப் பயிற்சியை அங்கு அவர் எடுத்துக் கொண்டார். அந்த நிறுவனம் தற்போது இல்லை.

Jyoti Prabha Kispotta administering dextrose saline to a woman with malaria in Borotika village of Pashchimi Singhbhum.
PHOTO • Jacinta Kerketta
Jyoti with a certificate of Family Welfare and Health Education Training Programme, awarded to her by the Council of Unemployed Rural Medical Practitioners
PHOTO • Jacinta Kerketta

இடது: ஜோதி பிரபா கிஸ்போட்டா ஒரு பெண்ணுக்குக் குளுக்கோஸ் செலுத்திக் கொண்டிருக்கிறார். வலது: வேலைவாய்ப்பற்ற கிராமப்புற மருத்துவப் பயிற்சியாளர்கள் கவுன்சிலால் கொடுக்கப்பட்ட குடும்பச் சுகாதாரம் மற்றும் சுகாதாரக் கல்விப் பயிற்சித் திட்டச் சான்றிதழுடன் ஜோதி

*****

குளுக்கோஸ் பாட்டில் காலியாகும் வரை ஜோதி காத்திருக்கிறார். பிறகு சில மருந்துகளும் ஆலோசனையும் நோயாளியின் நண்பருக்கு அளிப்பார். மோசமான சாலைகளால் 20 நிமிட நடை தூரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் பைக்கை நோக்கி நாங்கள் நடந்தோம்.

பஷ்சிமி சிங்பும் மாவட்டம் தாதுக்கள் நிறைந்த மாவட்டம். ஆனால் மோசமான உள்கட்டமைப்பு கொண்டது. மருத்துவமனைகள், சுத்தமான குடிநீர், கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு முதலிய அடிப்படை வசதிகளும் குறைவுதான். இதுதான் ஜோதியின் வீட்டுக்கான எல்லை. காடுகளும் மலைகளும் சூழந்த பகுதி. மாவோயிஸ்ட் -  அரசு மோதல் இருப்பதாக குறிக்கப்பட்டிருக்கும் பகுதி. அங்கிருக்கும் சில சாலைகளும் பரமாரிப்பற்றவை. மொபைல் மற்றும் இணையத் தொடர்பு மிகக் குறைவு. அடுத்த கிராமத்துக்கு செல்ல வேண்டுமானால் அவர் நடந்து செல்லத்தான் வேண்டும். அவசர நேரங்களில், கிராமவாசிகள் தகவல் சொல்ல ஆளனுப்பி அவரை சைக்கிளில் அழைத்து வரச் செய்வார்கள்.

பஷ்சிமி சிங்பும் மாவட்டத்தின் கொய்ல்கெரா ஒன்றியத்துக்குச் செல்லும் குறுகிய சாலையின் ஓரத்திலுள்ள பொரோதிகா கிராமத்திலொரு மண் வீட்டில் ஜோதி வசிக்கிறார். இந்தப் பழங்குடி வீட்டின் மையத்தில் ஓர் அறை இருக்கிறது. அதைச் சுற்றி எல்லாப் பக்கங்களிலும் தாழ்வாரங்கள் இருக்கின்றன. ஒரு தாழ்வாரத்தின் ஒரு பகுதி சமையலறையாக மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது. கிராமத்தில் மின்சாரப் பற்றாக்குறை உண்டு. வீட்டை இருள் நிறைத்திருந்தது.

கிராமத்தின் பழங்குடி வீடுகளில் அதிக ஜன்னல்கள் இருக்காது. மக்கள் ஒரு சிறு டார்ச் பயன்படுத்துவார்கள். பகல் நேரத்திலும் வீட்டின் ஒரு மூலையில் லாந்தர் விளக்கு இருக்கும். 38 வயது கணவர் சந்தீப் மற்றும் 71 வயது தாய் ஜூலியானா கிஸ்போட்டா மற்றும் சகோதரரின் எட்டு வயது மகன் ஜான்சன் கிஸ்போட்டா ஆகியோருடன் வசிக்கிறார். கணவரும் ஒரு RMP-தான்.

சைக்கிளில் வந்த ஒருவர் ஜோதியை கேட்கிறார். உண்பதை நிறுத்திவிட்டு, பையுடன் கிளம்பி விட்டார். "சாப்பிட்டு விட்டாவது கிளம்பு," என சத்ரி மொழியில் கத்துகிறார் ஜூலியானி அவர் மகள் கிளம்புவதைப் பார்த்து.

Jyoti’s mud house in Borotika village in Herta panchayat
PHOTO • Jacinta Kerketta
A villager from Rangamati village has come to fetch Jyoti to attend to a patient
PHOTO • Jacinta Kerketta

இடது: பொரோதிகாவில் இருக்கும் ஜோதியின் மண் வீடு. வலது: ஒரு நோயாளியிடம் ஜோதியை அழைத்துச் செல்வதற்காக ரங்கமாதி கிராமத்திலிந்து வந்திருப்பவர்

பொரோதிகா, ஹுதுதுவா, ரங்கமாதி, ரோமா, கண்டி, ஒசாங்கா உள்ளிட்ட ஹர்தா பஞ்சாயத்தின் 16 கிராமங்களில் ஜோதி பணிபுரிகிறார். எல்லாமுமே 12 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் அமைந்திருக்கின்றன. சில இடங்களுக்கு அவர் நடந்தே செல்ல வேண்டும். கூடுதலாக ரந்திக்கோச்சா மற்றும் ரோப்கெரா போன்ற பிற பஞ்சாயத்துகளின் கிராமப் பெண்களிடமிருந்தும் ஜோதிக்கு அழைப்புகள் வரும்.

*****

"2009ம் ஆண்டில் நான் முதல் கருவுற்றேன்," என்கிறார் 30 வயதுகளில் இருக்கும் க்ரேசி எக்கா. ஒரு கடினமான சூழலில் ஜோதி செய்த உதவியை ஜோதியின் பொரோதிகா வீட்டிலிருந்து விவரிக்கிறார். "நள்ளிரவில் குழந்தைப் பிறந்தது.

கிராமத்துக்கு சாலைகளும் போக்குவரத்தும் அந்தச் சமயத்தில் மோசமாக இருந்ததையும் விவரிக்கிறார் கிரேசி. 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்மும் சாய்பசாவுக்கு கிரேசியை அழைத்துச் செல்ல  அரசுச் செவிலியர் ஜரனதி ஹெப்ராமை தொடர்பு கொள்ளும் வரை, ஜோதி மூலிகைகளைச் சார்ந்திருந்தார். புதிதாகப் தாயானவர் மீண்டும் நடமாடத் தொடங்க ஒரு வருடம் ஆகிவிட்டது. "என் குழந்தைக்குப் பாலூட்டக் கிராமத்தின் பிற தாய்மார்களிடம் ஜோதிதான் எடுத்துச் சென்றார்," என்கிறார் அவர். "அவர் இல்லாதிருந்தால் என் குழந்தை பிழைத்திருக்காது."

கிராமத்தில் இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பச் சுகாதார நிலையம் இருந்ததாகச் சொல்கிறார் கிரேசியின் 38 வயது கணவரான சந்தோஷ் கச்சப். ஜோதியின் வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் மையம் இருக்கிறது. எந்த வசதியும் அங்கு இல்லை. "செவிலியர் கிராமத்தில் தங்குவதில்லை. காய்ச்சல் போன்ற சிறு பிரச்சினைகளை பரிசோதிக்க ஊருக்கு வருவார். பின் திரும்பி விடுவார். தினமும் செவிலியர் அறிக்கை அனுப்ப வேண்டும் கிராமத்தில் இணையச் சேவை கிடையாது. எனவே அவர் இங்கு தங்க முடியாது. ஜோதி கிராமத்திலேயே தங்கி இருக்கிறார். அதனால் அவர் அதிகம் பயன்படுகிறார்," என்கிறார் அவர். சுகாதார மையத்துக்கு கர்ப்பிணிகள் செல்வதில்லை. அவர்கள் வீட்டுப் பிரசவத்துக்கு ஜோதியின் உதவியை நாடுவர்.

மாவட்டத்தின் கிராமங்களில் இருக்கும் சுகாதார மையம் எதுவும் இயக்கத்தில் இல்லை. கோய்ல்கெரா ஒன்றியத்தில் இருக்கும் மருத்துவமனை பொரோதிகாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சமீபத்தில் அனந்த்பூர் ஒன்றியத்தில் நிறுவப்பட்ட ஆரம்ப சுகாதார மையம் 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. 12 கிலோமீட்டருக்கான ஒரு சிறுபாதை பொரோதிகாவில் தொடங்கி செரங்க்டே கிராமம் வழியாக சென்று கோயில் ஆற்றில் முடிவுறும். கோடை காலத்தில் மக்கள் ஆழமில்லாமல் இருக்கும் ஆற்றைக் கடந்து அனந்த்பூருக்கு செல்வார்கள். ஆனால் மழைக்காலத்தில் ஆறு கரைபுரண்டு ஓடும். பாதை அடைபட்டுவிடும். ஹெர்தா பஞ்சாயத்துக் கிராமங்களின் மக்கள் 4 கிலோமீட்டர் அதிகமாக இன்னொரு வழியில் பயணித்து அனந்த்பூரை அடைவார்கள்.ஆற்றிலிருந்து அனந்த்பூருக்கு கற்சாலைதான். சின்ன சின்னதாக தார்ச்சாலைகள் எதிர்ப்படும். 10 கிலோமீட்டர் வேகத்தில் காட்டிலிருந்து வீசும் காற்றும் இருக்கும்.

Graci Ekka of Borotika village says, “It was Jyoti who used to take my newborn baby to other lactating women of the village to feed the infant. My baby would not have survived without her.
PHOTO • Jacinta Kerketta
The primary health centre located in Borotika, without any facilities. Government nurses come here once a  week
PHOTO • Jacinta Kerketta

இடது: பொரோதிகா கிராமத்தின் கிரேசி எக்கா சொல்கையில், 'என் குழந்தைக்குப் பாலூட்டக் கிராமத்தின் பிற தாய்மார்களிடம் ஜோதிதான் எடுத்துச் சென்றார். அவர் இல்லாதிருந்தால் என் குழந்தை பிழைத்திருக்காது.' என்கிறார். வலது: எந்த வசதியுமின்றி இருக்கும் பொரோதிகாவின் ஆரம்பச் சுகாதார மையம். அரசுச் செவிலியர்கள் வாரத்துக்கு ஒருமுறைதான் இங்கு வருகிறார்கள்

சக்ரதர்பூர் நகரம் வரை ஒரு பேருந்து முன்பு இருந்தது. ஒரு விபத்துக்குப் பிறகு அந்தச் சேவையும் நின்றுவிட்டது. சைக்கிள்கள், பைக்குகள் அல்லது நடை ஆகியவற்றைதான் மக்கள் சார்ந்திருக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்களால் பயணிக்க முடியாத பாதை அது. மேலும், சுகப்பிரசவம் மட்டும்தான் அனந்த்பூர் ஆரம்பச் சுகாதார மையத்தில் கையாளப்படும். பிரசவம் சிக்கலாக இருந்தாலோ அறுவை சிகிச்சை தேவைப்பட்டாலோ, அனந்த்பூரிலிருந்து இன்னொரு 15 கிலோமீட்டர் தூரம் பெண்கள் செல்ல வேண்டும். அல்லது மாநில எல்லைகளைக் கடந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒடிசாவின் ரூர்கெலாவுக்கு செல்ல வேண்டும்.

“பெண்களுக்கு உடல்நலம் குன்றினால் அவர்கள் படும் துயரை நான் சிறுவயதிலிருந்து பார்த்திருக்கிறேன்,” என்கிறார் ஜோதி. “ஆண்கள் வெளியே (நகரங்களுக்கும் டவுன்களுக்கும்) சம்பாதிக்க சென்றுவிடுவர். டவுன்களும் மருத்துவமனைகளும் கிராமத்திலிருந்து வெகுதூரத்தில் இருக்கின்றன. கணவர்கள் திரும்புவதற்குக் காத்திருப்ப்பதால் பெரும்பாலும் பெண்களின் உடல்நிலை இன்னும் மோசமடையும். பல பெண்களுக்கு, அவர்களின் கணவர்கள் கிராமத்தில் வசித்தாலும் பயனில்லை. ஏனெனில் மது குடித்துவிட்டு, கர்ப்ப காலத்திலும் பெண்களை போட்டு அவர்கள் அடிப்பார்கள்,” என்கிறார் அவர்.

“முன்பு இப்பகுதியில் ஒரு மருத்துவச்சி இருந்தார். பிரசவ காலங்களில் அவர் மட்டும்தான் உதவிக்கு. ஆனால் ஊர் கண்காட்சி ஒன்றில் அவரை யாரோ ஒருவர் பகைக் காரணமாக கொன்று விட்டார். அவருக்குப் பிறகு, அத்தகைய திறன்களுடன் கூடிய பெண் கிராமத்தில் இல்லை,” என்கிறார் ஜோதி.

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு அங்கன்வாடியும் ஒரு பெண்கள் மையமும் உண்டு. கிராமத்தில் இருக்கும் குழந்தைகள் பற்றிய தகவல்கள் அங்கன்வாடியில் இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் ஆரோக்கியம் அங்கு கவனிக்கப்படும். பெண்கள் மையம் கர்ப்பிணிப் பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவும் ஆனால் உணவு, போக்குவரத்து மற்றும் வசிப்பிடம் ஆகியற்றுக்கான செலவை நோயாளி கொடுத்து விட வேண்டும். அதற்குப் பதிலாக மக்கள் ஜோதியை அணுகவே விரும்புகின்றனர். ஏனெனில் வீட்டுக்கு வந்து பரிசோதிக்க ஜோதி கட்டணம் கேட்பதில்லை. மருந்துகளுக்கான பணத்தை மட்டும் பெற்றுக் கொள்கிறார்.

அதுவுமே கூட, வானம் பார்த்த பூமி கொண்ட குடும்பங்களுக்கும் தினக்கூலி வேலை பார்க்கும் குடும்பங்களுக்கும் சிரமம்தான். பஷ்சிமி சிங்புமின் கிராமத்து மக்கள்தொகையில் 80 சதவிகித மக்கள் விவசாயத் தொழிலாளர் வேலை பார்க்கின்றனர் (மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2011). பெரும்பாலான குடும்பத்து ஆண்கள் வேலைக்காக குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா முதலிய இடங்களுக்கு இடம்பெயர்ந்து விடுகின்ற்னர்.

The few roads in these Adivasi villages of Pashchimi Singhbhum are badly maintained. Often the only way to reach another village for Jyoti is by walking there.
PHOTO • Jacinta Kerketta
Jyoti walks to Herta village by crossing a stone path across a stream. During monsoon it is difficult to cross this stream
PHOTO • Jacinta Kerketta

இடது: இந்தப் பழங்குடி கிராமங்களில் இருக்கும் சில சாலைகள் மோசமான பராமரிப்பில் இருக்கின்றன. இன்னொரு கிராமத்துக்கு செல்வதற்கு ஜோதிக்கு பெரும்பாலும் இருக்கும் வழி நடைதான். வலது: ஹெர்தா கிராமத்துக்கு ஓடையின் மீது இருக்கும் கற்பாலத்தைப் பயன்படுத்தி ஜோதி செல்கிறார். மழைக்காலத்தில் இதற்கு வாய்ப்பிருக்காது

*****

நிதி அயோக்கின் வறுமைக்கான பல பரிமாண தேசிய அறிக்கை யின்படி, பஷ்சிமி சிங்பும்மின் கிராம மக்களில் 64 சதவிகித பேர் பல பரிமாணங்களில் ஏழைகளாக இருக்கின்றனர். இங்குள்ள வாய்ப்பு என்பது ஒன்றுதான். அரசின் இலவச சுகாதார வசதிகளை எட்டுதவற்குத் தேவைப்படும் பெரும் செலவு அல்லது ஜோதி போன்ற RMP கொடுக்கும் மருந்துகளின் உயர்ந்த விலை. அவருக்கான கட்டணம் கூட தவணைகளாக கொடுக்கப்படும் சூழல் இருக்கிறது.

தாமதங்களை குறைப்பதற்காக மாநில அரசு, பொதுச் சுகாதாரை வசதிகளுக்கென ‘வாகனங்கள் மற்றும் மையங்கள்’ போன்ற வலைப்பின்னலை மாவட்ட மருத்துவமனைகளின் அழைப்புச் சேவையுடன் கொண்டிருக்கிறது. “மக்கள் வாகனத்துக்காக அழைக்கலாம்,” என்கிறார் ஜோதி, கர்ப்பிணிகளை மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லும் வேனைக் குறிப்பிட்டு. “ஆனால் கர்ப்பிணி பெண் பிழைக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகக் கருதினால் ஓட்டுநர்கள் வர மறுத்து விடுவார்கள். ஏனெனில் ஒரு பெண் வாகனத்தில் இறந்துவிட்டால் ஊர் மக்களின் கோபத்துக்கு ஓட்டுநர்தான் ஆளாவார்.”

அதே சமயம் ஜோதியோ, பெண்கள் வீட்டிலேயே குழந்தைப் பெற்றுக் கொள்ள உதவுகிறார். கட்டணமாக 5,000 ரூபாய் கேட்கிறார். ஒரு குளுக்கோஸ் பாட்டிலுக்கு 700-800 ரூபாய் கேட்கிறார். சந்தையில் அதன் விலை 30 ரூபாய்தான். குளுக்கோஸ் இல்லாமல் மலேரியா சிகிச்சைக்கும் 250 ரூபாய்தான் செலவாகும். நிமோனியா மருந்துகளுக்கு 500-600 ரூபாய் ஆகும். மஞ்சள் காமாலை அல்லது டைஃபாய்டு சிகிச்சைக்கு 2,000 - 3,000 ரூபாய். ஒரு மாதத்தில் ஜோஹி 20,000 வருமானம் ஈட்டுகிறார். அதில் பாதி மருந்துகள் வாங்கச் சென்று விடுவதாகச் சொல்கிறார்.

2005ம் ஆண்டு பிரதிச்சி அறக்கட்டளை பிரசுரித்த அறிக்கை யின்படி, கிராமப்புற இந்தியாவில் கவலை தரும் விதத்தில் மருத்துவப் பயிற்சியாளர்களுக்கும் மருந்து நிறுவனங்களுக்கும் இடையில் இருக்கிறது. “ஆரம்ப சுகாதார மையங்களிலும் பிற சுகாதார மையங்களிலும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால், பெரிய அளவிலான தனியார் மருந்துச் சந்தை பெரும் பணத்தை எந்த விதிமுறையும் இல்லாததால் எளிய மக்களிடமிருந்து பறிக்கிறது,” என்கிறது அறிக்கை.

Jyoti preparing an injection to be given to a patient inside her work area at home.
PHOTO • Jacinta Kerketta
Administering a rapid malaria test on a patient
PHOTO • Jacinta Kerketta

இடது: ஒரு நோயாளிக்கு செலுத்தவென ஊசியை தயார் செய்கிறார் ஜோதி. வலது: மலேரியப் பரிசோதனை செய்கிறார்

ஜார்கண்டின் முதல்வரால் உருவாக்கப்பட்ட மாநிலச் சுகாதாரக் கட்டமைப்பு பற்றிய ஆய்வு , விநியோகத்திலும் பெறுவதிலும் மாநில சுகாதாரம் கொண்டிருக்கும் மோசமான நிலையைத் தருகிறது. இந்திய பொதுச் சுகாதார தரத்தின்படி மாநிலத்தில் 3,130 சுகாதார துணை மையங்களும் 769 ஆரம்பச் சுகாதார மையங்களும் 87 சமூக சுகாதார மையங்களும் குறைவாக இருக்கிறது. ஒவ்வொரு லட்ச மக்களுக்கும் மாநிலத்தில் 6 மருத்துவர்களும் மூன்று செவிலியரும் ஒரு பரிசோதகரும் மட்டும்தான் இருக்கின்றனர். 27 படுக்கைகள் மட்டும்தான் இருக்கின்றன. தனித்திறன் மருத்துவர்களுக்கான இடங்களில் 85 சதவிகிதம் காலியாக இருக்கிறது.

பத்தாண்டுகளாக சூழலில் முன்னேற்றம் இல்லை. 2013-14-க்கான ஜார்க்கண்ட் பொருளாதாரக் கணக்கெடுப்பின்படி , ஆரம்பச் சுகாதார மையங்களில் 65 சதவிகிதமும் துணை மையங்களில் 35 சதவிகிதமும் சமூக மையங்களில் 22 சதவிகிதமும் குறைவாக இருக்கிறது. தனித்திறன் மருத்துவர்கள் இல்லாதிருப்பது பிரச்சினைக்குரிய விஷயமென அறிக்கைக் குறிப்பிடுகிறது. மகப்பேறு மருத்துவர்கள், பெண் நோய் மருத்துவர்கள், குழந்தைகளுக்கான மருத்துவர்கள் எண்ணிக்கை சமூக சுகாதார மையத்தில் 80-லிருந்து 90 சதவிகிதம் குறைவாக இருப்பதாக அறிக்கைக் குறிப்பிடுகிறது.

இன்றும் கூட, மாநில மக்கள்தொகையின் கால்வாசி மருத்துவமனை பிரசவ சிகிச்சையை எட்ட முடியாத இடத்தில் இருக்கின்றனர். 5,258 மருத்துவர்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது. மாநிலத்தின் 3 கோடியே 29 லட்ச மக்கள்தொகைக்கு (2011 கணக்கெடுப்பு), 2,306 மருத்துவர்கள்தான் மொத்த பொதுச் சுகாதார மையங்களிலும் இருக்கின்றனர்.

இத்தகைய ஏற்றத்தாழ்வு நிறைந்த சுகாதாரக் கட்டமைப்பில் RMP-கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றனர். வீட்டுப் பிரசவங்களையும் பிரசவத்துக்குப் பின்னான பராமரிப்பையும் ஜோதி கையாளுகிறார். கர்ப்பிணிகளுக்குத் தேவையான இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் மருந்துகளைக் கொடுக்கிறார். பெரிய மற்றும் சிறிய தொற்றுகளையும் சிறு காயங்களையும் அவர் கையாளுகிறார். உடனடி மருத்துவ கவனமும் அளிக்கிறார். அவசர மருத்துவமும் அளிக்கிறார். பிரச்சினைக்குரிய சூழல்களில் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு நோயாளிக்கு பரிந்துரைக்கிறார். போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்கிறார். அல்லது அரசுச் செவிலியருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கிறார்.

*****

ஜார்க்கண்டின் கிராமப்புற மருத்துவப் பயிற்சியாளர்கள் சங்க உறுப்பினரான விரேந்திர சிங், பஷ்சிமி சிங்புமில் மட்டும் 10,000 RMP-கள் இருப்பதாகக் கூறுகிறார். அதில் 700 பேர் பெண்கள். “அனந்த்பூரில் உள்ளதைப் போன்ற புதிய ஆரம்பச் சுகாதார மையங்களில் மருத்துவர்கள் இல்லை,” என்கிறார் அவர். “மொத்த இடத்தையும் செவிலியர்கள்தான் நிர்வகிக்கின்றனர். ஜோதி போன்ற RMP-கள்தான் கிராமங்களை பராமரிக்கின்றனர். ஆனால் அரசிடமிருந்து அவர்களுக்கு எந்த ஒத்துழைப்பும் கிடைப்பதில்லை. ஆனால் அவர்கள் பகுதியிலுள்ள மக்களை புரிந்து கொள்கிறார்கள். அவர்களுடனேயே தங்குகிறார்கள். பொதுமக்களுடன் அவர்கள் தொடர்பில் இருக்கின்றனர். அவர்களின் பணியை எப்படி நீங்கள் நிராகரிக்க முடியும்?,” எனக் கேட்கிறார் அவர்.

Susari Toppo of Herta village says, “I had severe pain in my stomach and was bleeding. We immediately called Jyoti."
PHOTO • Jacinta Kerketta
Elsiba Toppo says, "Jyoti reaches even far-off places in the middle of the night to help us women."
PHOTO • Jacinta Kerketta
The PHC in Anandpur block
PHOTO • Jacinta Kerketta

இடது: ஹெர்தா கிராமத்தின் சுசாரி தொப்போ சொல்கையில், 'என்னுடைய வயிறு பயங்கரமாக வலித்தது. ரத்தப்போக்கும் இருந்தது. உடனே ஜோதியை அழைத்தோம்.' என்கிறார். நடுவே: எல்சிபோ தொப்போ சொல்கையில், 'பெண்களுக்கு உதவ தூரத்து இடங்களுக்கும் ஜோதி சென்று விடுவார்,' என்கிறார். வலது: அனந்த்பூரில் இருக்கும் ஆரம்பச் சுகாதார மையம்

ஹெர்தா கிராமத்தின் 30 வயது சுசாரி தொப்போ, 2013ம் ஆண்டு முதல் குழந்தை கருவுற்றிருந்தபோது, குழந்தை அசைவது நின்றுவிட்டது எனச் சொல்கிறார். “வயிறு பயங்கரமாக வலித்தது. ரத்தப்போக்கும் இருந்தது. உடனே ஜோதியை அழைத்தோம். முழு இரவும் அடுத்த நாளும் கூட அவர் எங்களுடன் தங்கியிருந்தார். அந்த இரண்டு நாட்களில் அவர் ஆறு குளுக்கோஸ் பாட்டில்களை, நாளுக்கு மூன்று என ஏற்றினார். இறுதியில் சுகப்பிரசவம் நேர்ந்தது.” குழந்தை ஆரோக்கியமாக இருந்தது. 3.5 கிலோ எடை இருந்தது. ஜோதிக்கு 5,500 ரூபாய் கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால் குடும்பத்திடம் இருந்ததோ வெறும் 3,000 ரூபாய்தான். மிச்சப் பணத்தைப் பிறகு வாங்கிக் கொள்ள அவர் ஒப்புக் கொண்டார் என்கிறார் சுசாரி.

ஹெர்தாவில் 30 வயதுகளில் இருக்கும் எலிசாபா தொப்போ, மூன்று வருடங்களுக்கு முன் அவருக்கு நேர்ந்த அனுபவத்தை நினைவுகூர்கிறார். “இரட்டை குழந்தைகளை கருவுற்றிருந்தேன். என் கணவர் வழக்கம் போல் குடிபோதையில் இருந்தார். சாலைகள் மோசமாக இருக்குமென்பதால் நான் மருத்துவமனைக்கு போக விரும்பவில்லை,” என்கிறார் அவர். பிரதான சாலைக்குக் கூட, நான்கு கிலோமீட்டர் தூரம் வயல்கள் மற்றும் குட்டைகளின் வழியாக பயணித்துச் செல்ல வேண்டும் என்கிறார் அவர்.

எலிசபாவின் வலி, அவர் வெளிக்குச் சென்றிருந்த இரவுப்பொழுதில் தொடங்கியது. அரை மணி நேரம் கழித்து வீடு திரும்பியபோது, அவரின் மாமியார் வலி குறையப் பிடித்து விட்டார். ஆனாலும் வலி தொடர்ந்தது. “பிறகு ஜோதியை அழைத்தோம். அவர் வந்து மருந்துகள் கொடுத்தார். அவரால்தான் இரட்டைக் குழந்தைகள் வீட்டிலேயே சுகப்பிரசவத்தில் பிறந்தன. பெண்களுக்கு உதவவென நடு இரவில் பல தூரங்களுக்குக் கூட அவர் பயணித்திருக்கிறார்,” என்கிறார் அவர்.

RMP-கள் எல்லாவற்றுக்கும் குளுக்கோஸ் ஏற்றுவார்கள். ஜார்கண்ட் மற்றும் பிகாரில் எல்லாவித குறைபாடுகளுக்கும் RMPகள் குளுக்கோஸ் ஏற்றுவதாக பிரதிச்சி அறிக்கைக் குறிப்பிடுகிறது. தேவையில்லை, விலை உயர்ந்தது என்பது மட்டுமில்லாமல் சில நேரங்களில் சிக்கல்களையும் அவை ஏற்படுத்தி விடும்  என்கிறது அந்த ஆய்வு. “நேர்காணல் செய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர்கள், குளுக்கோஸ் உடலில் ரத்தத்தை அதிகரித்து, உடனடியாக சத்தையும் வலி நிவாரணத்தையும் அளிப்பதால், குளுக்கோஸ் ஏற்றாமல் எந்த சிகிச்சையும் அளிக்க முடியாது என்பதை வலுவாக பதிவு செய்தனர்,” எனக் குறிப்பிடுகிறது அறிக்கை.

இது ஒரு ஆபத்தான வேலை. ஆனால் ஜோதிக்கு அதிர்ஷ்டம் இருந்தது. அவரின் 15 வருட பணிக்கால அனுபவத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை எனக் கூறுகிறார். “ஒரு நோயாளியைக் கையாளுவதில் சந்தேகம் இருந்தால், உடனே அவரை நான் மனோகர்பூர் ஒன்றிய மருத்துவமனைக்கு அனுப்பி விடுவேன். அல்லது வாகனத்தை அழைக்க அவர்களுக்கு உதவுவேன். அல்லது அரசுச் செவிலியரை தொடர்பு கொள்ள உதவுவேன்,” என்கிறார் அவர்.

Jyoti seeing patients at her home in Borotika
PHOTO • Jacinta Kerketta
Giving an antimalarial injection to a child
PHOTO • Jacinta Kerketta

இடது: பொரோதிகாவில் வீட்டில் நோயாளிகளைப் பார்க்கும் ஜோதி. வலது: மலேரியா தடுப்பூசியை ஒரு குழந்தைக்கு செலுத்துகிறார்

ஜோதி அவரது திறமைகளை உறுதிப்பாட்டால் மட்டுமே கற்றுக் கொண்டார். அவர் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது தந்தை இறந்துபோனார். அவரின் படிப்பு நின்றுபோனது. “அந்த நாட்களில் நகரத்திலிருந்து திரும்பிய பெண் ஒருவர், எனக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி பாட்னாவுக்குக் கொண்டுச் சென்று ஒரு மருத்துவ தம்பதியிடம் விட்டார். வீட்டைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் வேலை. ஒருநாள் நான் அங்கிருந்து ஓடி வந்து கிராமத்துக்கு திரும்பி விட்டேன்,” என நினைவுகூர்கிறார் ஜோதி.

பிறகு அவர், அனந்த்பூர் ஒன்றியத்திலிருந்து ஒரு கான்வெண்ட் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். “அங்குதான், கன்னியாஸ்திரிகள் பணிபுரிவதைப் பார்த்து, செவிலியர் வேலை கொடுக்கும் திருப்தியையும் சந்தோஷத்தையும் நான் புரிந்து கொண்டேன்,” என்கிறார் அவர். “அதற்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை. என் சகோதரர் எப்படியோ ஒரு 10,000 ரூபாய்க்கு ஏற்பாடு செய்தார். அலபதி மருத்துவத்துக்கான கிராமப்புற மருத்துவப் பயிற்சியாளர் படிப்பை ஒரு தனியார் நிறுவனத்தில் நான் படித்தேன்.” கூடுதலாக ஜார்கண்ட் கிராமப்புற மருத்துவப் பயிற்சியாளர்கள் சங்கத்திலும் அவர் சான்றிதழ் பெற்றிருக்கிறார். கிரிபுரு, சாய்பசா மற்றும் கும்லா ஆகிய இடங்களில் இருந்த பல மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு உதவியாளராகப் பணியாற்றிய பிறகு, சொந்தமாக பணி தொடங்க அவர் கிராமத்துக்குத் திரும்பினார்.

ஹெர்தா பஞ்சாயத்தில் பணிபுரியும் அரசுச் செவிலியரான ஜரானதி ஹெப்ராம் சொல்கையில், “வெளியாராக இருந்தால் இப்பகுதியில் பணிபுரிவது கஷ்டம். ஜோதி பிரபா கிராமத்தில் பணிபுரிகிறார். மக்களுக்கும் உதவி கிடைக்கிறது,” என்கிறார்.

“அரசுச் செவிலியர்கள் மாதத்துக்கு ஒருமுறை கிராமத்துக்கு வருகின்றனர்,” என்கிறார் ஜோதி. “ஆனால் அவர்களிடம் மக்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அங்கு அவர்கள் செல்வதில்லை. இங்கிருக்கும் மக்களுக்கு கல்வியறிவு இல்லை. எனவே நம்பிக்கையும் நடத்தையும்தான் அவர்களுக்கு மருந்துகளை விட முக்கியம்.”

கிராமப்புற பதின்வயது மற்றும் இளம்பெண்கள் பற்றிய செய்திகளளிக்கும் PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின் தேசிய திட்டம், இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் ஒரு பகுதி ஆகும். இத்தகைய விளிம்புநிலை குழுக்களின் சூழலை சாதாரண மக்களின் வாழ்வனுபவங்களை கொண்டு ஆராய்வதற்கான முன்னெடுப்பு.

இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய வேண்டுமா? [email protected] மற்றும் [email protected] மின்னஞ்சல்களில் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழில் : ராஜசங்கீதன்

Jacinta Kerketta

জসিন্তা কেরকেট্টা ওরাওঁ আদিবাসী সম্প্রদায় থেকে আগত গ্রামীণ ঝাড়খণ্ড ভিত্তিক স্বতন্ত্র লেখক এবং রিপোর্টার। জসিন্তা একজন কবি। আদিবাসী সম্প্রদায়গুলির নিরন্তর সংগ্রাম তথা তাঁদের প্রতি নেমে আসা অবিচার ও বৈষম্য তাঁর কবিতায় মূর্ত হয়ে ওঠে।

Other stories by Jacinta Kerketta
Illustration : Labani Jangi

২০২০ সালের পারি ফেলোশিপ প্রাপক স্ব-শিক্ষিত চিত্রশিল্পী লাবনী জঙ্গীর নিবাস পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়। তিনি বর্তমানে কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেসে বাঙালি শ্রমিকদের পরিযান বিষয়ে গবেষণা করছেন।

Other stories by Labani Jangi
Translator : Rajasangeethan

রাজাসংগীতন চেন্নাইবাসী লেখক। এক প্রখ্যাত তামিল খবরের চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করেন।

Other stories by Rajasangeethan