மைய காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 அன்று, ஜுகோ-காரியனைச் சேர்ந்த 21 வயது வாஜித் அகமது அகங்கர், தன் நண்பர்களுடன் தோசாமைதானத்தில் நடைபெறும் மூன்று நாள் திருவிழாவுக்குப் புறப்பட்டார். அந்த அழகான புல்வெளியில் வெடிக்காமல் கிடந்த ஒரு ஷெல் திடீரென வெடித்தது. அதில் சிக்கிய வாஜித் சடலமாக வீட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். (’குதிரையில் சவாரிசெய்யும் இளவரசனைப்போல’ வீட்டிலிருந்து வாஜித் கிளம்பியதாக அவரின் தந்தை விவரித்தார்.) மற்ற மூவரும் படுகாயம் அடைந்தனர்.
கொண்டாட்டங்கள் துக்கமாக மாறிவிட்டன. இது, காஷ்மீரின் கடந்த காலம் அப்படியே தொடர்கிறது என்பதன் இன்னுமொரு நினைவூட்டல்.
ஓராண்டுக்கு முன்னர் இதே ஆகஸ்ட் மாதத்தில், பட்காமின் காக் வட்டாரம், சுங்லிபோரா கிராமத்தைச் சேர்ந்த முகமது அக்ரம் ஷேக், ஜஷ்-இ-தோசாவின் முக்கியத்துவத்தை என்னிடம் கூறினார். அது, 2015ஆம் ஆண்டு முதல் இந்தப் புல்வெளியுடன் தொடர்புடைய திருவிழா. ஜம்மு காஷ்மீர் அரசும் சுற்றுலாத் திருவிழாவின் ஒரு பகுதியாக இந்த விழாவை மேம்படுத்துகிறது.
இந்த மைதானம் ஊர் மக்களுக்கே திரும்பக் கிடைத்ததை இந்தத் திருவிழாவில் கொண்டாடுகிறார்கள் என்று அவர் விவரித்தார். ஐந்து பத்தாண்டுகளாக மைதானத்தை இராணுவத்தின்வசம் இருந்தது. சூட்டுப் பயிற்சித் தளமாக இதைப் பயன்படுத்திய இராணுவம், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 2014 இல் இடத்தை காலிசெய்தது.
சாவு பயமில்லாமல் காயத்துக்கோ மிரட்டலுக்கோ அஞ்சாமல் அலைந்துதிரிவதற்கான சுதந்திரத்தை ஊர்மக்கள் கொண்டாடினார்கள். அலைகுடிச் சமூகம் என்பதால் தங்களின் வாழ்வாதாரத்துக்காகவும்கூட! புல்வெளியை காலிசெய்வதை நிம்மதிப் பெருமூச்சுடன் அவர் விவரித்தார்.
ஆனால், இந்த சுதந்திரம் என்பது எவ்வளவு மாயையானது, அது இராணுவமயமாக்கத்தின் மூலம் நிலக்காட்சியை மாற்றியமைக்கும், நிலத்தையே முழுவதுமாக நம்பியிருக்கும் மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரத்தை அது எந்த அளவுக்கு கடுமையாக பாதிக்கும் என்பதை 2018 ஆகஸ்ட் சம்பவம் காட்டிவிட்டது.
தோசா மைதானமானது சுமார் 10,000 அடி உயரத்தில், பீர்பஞ்சால் குன்றுகளால் சூழப்பட்ட, அடர்ந்த காடுகளுடன் பிணைக்கப்பட்ட அற்புதமான ஓர் ஆல்பைன் புல்வெளி. கோடைக்கால மாதங்களில் குஜ்ஜார், பக்கர்வால், சோப்பன் போன்ற அலைகுடி, இடையர் சமூகத்தினரால் மேய்ச்சல் நிலமாக நீண்டகாலம் பயன்படுத்தப்பட்டது. மொகலாயர்கள்கூட இந்தப் புல்வெளியை பூஞ்ச் பள்ளத்தாக்கு வழியாக 13,000 அடி பாஸ்மை காலி கணவாய் வழியாகக் கடந்துசெல்வார்கள் என்று நாட்டார் கதைகளில் கூறப்படுகிறது.
1964 ஆம் ஆண்டில், iந்தப் புல்வெளியில் 69 சதுர கிமீ பரப்பை துப்பாக்கிச் சூடு, பீரங்கிப் பயிற்சி மேற்கொள்ள இராணுவம் பயன்படுத்திக்கொள்ளலாம் என ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதனால் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன ஆகும் என்பதை அது கண்டுகொள்ளவில்லை.
ஆண்டுதோறும் மார்ச்-ஏப்ரல்வாக்கில் பனி உருகுவது வசந்தகாலம் வருவதைக் காட்டக்கூடியது. அப்போது, புல்வெளியின் மேய்ச்சல் பகுதிகளை நோக்கி இடையர் சமூகத்தினர் செல்லத் தொடங்குவார்கள். அதேசமயத்தில், இராணுவத்தின் பீரங்கிப் பயிற்சியும் தொடங்கும். ராக்கெட் எறிகணைகள், கையெறி குண்டுகள், மோர்ட்டார் துப்பாக்கிகள் ஆகியவற்றை இதில் கையாளுவார்கள். ஒரு மலைச் சரிவிலிருந்து இன்னொரு மலைச்சரிவில் உள்ள இடத்தை இலக்கு வைப்பார்கள். இதில் வெடிக்காதவற்றை நூற்றுக்கணக்கில் அப்படியே புல்வெளியில் கைவிடப்படும்.
மலைச் சரிவுகள், பசுமையான புல்வெளிகளைப் பார்த்தபடி, காக் வட்டாரத்தில் உள்ள அழகிய கிராமம், சீதா ஹரான். அரசின் முடிவால் தங்கள் சமூகத்தினர் தாங்கவேண்டிய சுமைகளைப் பற்றி பலவிதமாக மக்கள் சொல்கிறார்கள். புல்வெளியின் தோக் எனப்படும் தரைக்கீழ் மரவீட்டில் முகாமிட்டிருந்தார் ஊர்த் தலைவரான குலாம் மொகைதுன் ஷேக். அவரும் அவருடைய மனைவியும், மரணத்தின் விளிம்பிலும் கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்ட்டத்திலும் எப்படி ஊர் மக்கள் வளர்ந்துவந்தோம் என்பதை மதியஉணவின்போது கூறினார்கள். "நாங்கள் வெளியாள்களாக இல்லாதபோதும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கூட்டிச்செல்லும்போதும் எங்கள் பெண்கள் விறகை எடுக்கச் செல்லும்போதும், இராணுவத்தினர் தடுத்து நிறுத்தி, சோதனைசெய்வார்கள்; விரைவாகச் செல்லும்படி துரத்தப்படுவோம்."என்றனர்.
வாழ்வாதாரத்திற்காக புல்வெளியையே முழுமையாக நம்பியிருந்த மக்களை, தவறாக செலுத்தப்பட்ட, இலக்குதவறிய எறிகணைகள் சாகடித்தன என்றார் குலாம். மற்ற சமயங்களில் வெடிக்காத பொருள்கள் படுவதால் அவை வெடித்துச் சிதறின. ஒருவர் மரத்தை வெட்டும்போது அவரது கோடாரி ஒரு கீழே கிடந்த எறிகணை மீது பட்டு வெடித்ததில் அவரது கை துண்டிக்கப்பட்டது. இன்னொருவர், மூலிகைகளைப் பறிப்பதற்காக மண்ணைத் தோண்டியபோது கைவிரல்களை இழந்தார். எறிகணை வீச்சால் கால்நடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஒரு முறை ஒரே வெடிப்பில் 60 செம்மறி ஆடுகளும் மேய்ப்பவரின் கண்முன்னால் சிதறடிக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்தது என்பதை நினைவுகூர்ந்தார் குலாம்.
இந்த ஊரில் மட்டும் நான்கு பேர் கொல்லப்பட்டனர் - இரண்டு பெண்களின் உடல்கள், வெடிக்காத குண்டுகள் பட்டிருக்கலாம்... காட்டுப்பகுதியில் கிடந்தன. துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் இறந்துபோயினர்" என்றார் குலாம்.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விவரம், தோசாமைதானத்தில் இத்தனை ஆண்டுகளில் குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 43 பேர் ஊனமாக்கப்பட்டுள்ளனர் என்கிறது. சுமார் 4,800 பேர் வசிக்கும் சுங்லிபோராவில் அதிகபட்சமாக 37 பேர் எனப் பதிவாகியுள்ளது.
இதில் குழந்தைகளும் அடக்கம். 2014 மே 19 அன்று, ஏழு வயது சிம்ரன் பரே உற்சாகமாக வீட்டிற்கு வந்தாள். அப்போது, புல்வெளியில் கிடைத்த ஒரு பையை எடுத்துக்கொண்டு விளையாடித் தொடங்கினாள். அதில் வெடிக்காத குண்டுகள் இருந்தன. அவை வெடித்து அந்தக் குழந்தையின் உடலைத் துண்டுதுண்டாகச் சிதறடித்தது; அவளுடைய ஐந்து வயது தம்பி ஃபயாஸின் காலையும் கிழித்தது.
சுங்லிபோராவின் முன்னாள் தலைவர் முகமது அக்ரம் ஷேக், ஒரு தச்சர். துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சித்தளத்தை எதிர்த்து உருவான தோசாமைதான மீட்பு முன்னணியின் துணைத் தலைவரும்கூட. அவருடைய பேச்சில் தனிப்பட்ட உணர்வுரீதியான, உடல்ரீதியான வடுக்களைப் பற்றி சொன்னார்: "1990 இல் என் அண்ணன் அப்துல் கரீமை இழந்தபோது நான் ஒரு சிறுவன். அவனுக்கு வயது 23 தான்; அப்போதுதான் நிச்சயம் ஆகியிருந்தது. கோடை விடுமுறையில் தோசாமைதானத்தில் இருந்தேன். அவர் எனக்கு பள்ளிக்கூடப் புத்தகங்களை வாங்கிவந்து கொடுத்துவிட்டு, கால்நடைகளை மேய்க்கச் சென்றார்.”
திடீரென ஒரு துப்பாக்கிச்சூடு.. சுடப்பட்ட இடத்திலேயே கரீம் இறந்துபோனார். காக் காவல்நிலையத்தினர் முதல் தகவல் அறிக்கையை பதிய மறுத்தனர். சூட்டுப்பயிற்சியால்தான் கொலை நிகழ்ந்தது என்றோம். " நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டார், ஆனால் இந்தக் கொலையை கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இல்லை. காவல்துறையும் இராணுவமும் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தன.”
இப்போது முகமது அக்ரமுக்கு 40 வயது; 2003 ஜூலை 15 அன்று சூட்டுத்தாக்குதலில் காயமடைந்தார். அவர் தன் கால்சட்டையைச் சுருட்டிவிட்டு காலில் உள்ள ஒரு நீண்ட வடுவைக் காண்பித்தார். "அப்போதுதான் நான் திருமணம் செய்துகொண்டிருந்தேன். புல்வெளிக்குப் போயிருந்தேன். ஒரு தலைமை ஆசிரியரும் மற்ற சிலரும் எங்களைப் பார்க்கவந்திருந்தனர். நாங்கள் தேநீர் குடித்துக்கொண்டிருந்தோம். திடீரென, எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையின் ஒரு குழு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியைத் தொடங்கியது. எங்களுக்கு பக்கத்தில் ஒரு எறிகணை வந்துவிழுந்து வெடித்தது..” என்றார் முகமது அக்ரம். நல்லவேளை, தக்க சமயத்தில் மருத்துவ சிகிச்சை கிடைத்தது; இல்லாவிட்டால் அவருடைய காலை வெட்டி எடுக்கவேண்டியதாக இருந்திருக்கும்.
சுங்லிபோராவைச் சேர்ந்த குலாம் அகமது என்னிடம் விவரித்தார். ”கொலைகள், ஊனமாக்கப்படுவதை ஆகியவற்றுடன், குழந்தைகளும் முதியவர்களும் இந்தப் பயிற்சியால் மிகவும் அவதிக்குள்ளாகினர். கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டது. பள்ளி நேரத்தில்தான் சூட்டுப் பயிற்சியும் நடத்தப்படும். காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை பூம்பூம்பூம் என துப்பாக்கிகளின் வெடிப்புச்சத்தமும் எறிகணைகளின் வீச்சும் நீடிக்கும். சிறுபீரங்கியின் பலத்த சூட்டுத்தாக்குதலால் பள்ளிக்கூடக் கட்டடங்கள் ஆடி அதிர்ந்துபோயின. குழந்தைகள் மன அழுத்தத்துக்கு ஆளாகினர். சிலருக்கு காதுகேட்காமல் போனது. ஒருமுறை இலக்கு தவறிய எறிகணை ஒன்று சில்-பிராசில் இருக்கும் பள்ளிக் கட்டடத்துக்கு அருகில் விழுந்தது. திராங், காக், சீதாஹரன் ஆகிய ஊர்களில் வீடுகள் விரிசல்விட்டோ சன்னல் கண்ணாடிகள் உடைந்தோ சேதமாகின.
மேலும், பெருமளவில் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டது. பனி உருகும்போதோ கன மழையின்போதோ கால்வாய்களிலும் நீரோடைகளில் குண்டுகள் அடித்துச்செல்லப்படும். இவைதான், பட்காம் மாவட்டத்தின் முதன்மையான நீராதாரங்கள். கைவிடப்பட்ட குண்டுகள் வெடித்து புதர்கள் தீப்பிடித்து, வயல்களில் பெருங்குழிகளை உண்டாக்கின.
குலாம் அகமதுவுக்கு இன்னுமொரு பிரச்னையாலும் வருத்தம். வெடிபொருள்களில் வைக்கப்படும் வேதிப்பொருள்களே அதற்குக் காரணம். “முன்பெல்லாம் கொக்குகள், நீளக்கால் கொக்குகள், காட்டுக்கோழிகள் என பலவகையான பறவைகள் இங்கே இருந்தன. சூட்டுப்பயிற்சித் தளம் உண்டாக்கிய சூழல்பாதிப்பால் அவை எல்லாம் இப்போது இல்லவே இல்லை. ஏராளமான மூலிகைச் செடிகளும் அழிக்கப்பட்டுவிட்டன என்றே தோன்றுகிறது.” என்கிறார் குலாம்.
இந்தக் கொலைக்களத்தை ஒரு தவிர்க்கமுடியாத ஆபத்தாக ஆண்டாண்டுகாலமாக ஊர்மக்கள் ஏற்றுக்கொண்டு இருந்தனர். ஆனால், மற்றவர்களுக்கு இப்படியான துயர நிலைமை ஏற்பட்டால் அவர்களுக்கு காப்பீடு உண்டு. சூட்டுத்தாக்குதலால் கால்நடைகள், பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு கோரமுடியுமா என்பதில் இவர்களுக்கு குழப்பம் இருந்தது. 1938 ஆம் ஆண்டு துப்பாக்கிச் சுடுதல், பீரங்கிப் பயிற்சிச் சட்டத்தில் இதற்கான எந்த வழிகாட்டலும் இல்லை. அதனால் எத்தனையோ ஆண்டுகளாக முதல் தகவல் அறிக்கையும் பதியப்படவில்லை; இழப்பீட்டுக்காக எதுவும் செய்யமுடியாது.
2013இல்தான் ஊர்மக்கள் ஒன்றாகச் சேர்ந்து தோசாமைதான பாதுகாப்பு முன்னணி என்பதைத் தோற்றுவித்து, கூட்டாகப் போராடினார்கள். மருத்துவர் குலாம் ரசூல் ஷேக் என்பவரால் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. நான் அவரை ஸ்ரீநகரில் சந்தித்துப் பேசினேன். இளம் வயதில் மலையேற்றம் சென்றபோதே தனக்கு பட்காமில் இப்படியொரு சூட்டுப் பயிற்சித் தளம் இருப்பது தெரிந்தது என்று கூறினார். "ஏராளமான மரங்கள் விழுவதைப் பார்த்திருகிறேன். அப்போதெல்லாம் மரங்களை வெட்டவேண்டாம் என்றும் சூழல்சார்ந்த சுற்றுலா பக்கம் மாறுமாறும் மக்களிடம் கேட்டுக்கொள்வேன். தன்னை மீறி எதுவும் இல்லாதபடிக்கு மிகமிக அழகான இந்த வட்டாரத்தில்,சூட்டுப் பயிற்சி காரணமாக சூழல் சுற்றுலா பற்றி எதையும் கேட்கமுடியாது என்பதை அறிந்து கலங்கிப்போனேன்.” என்றார் அருத்துவர் இரசூல் சேக்.
நடமாடும் மருத்துவ சேவையில் பணியாற்றிய அரசு மருத்துவரான ரசூல், சுங்லிபோராவில் விதவைகள் அதிகமிருப்பதையும் சூட்டுப்பயிற்சித் தளத்தால்தான் அவர்களின் கணவர்கள் உயிரிழந்தனர் என்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தார். சூட்டுப் பயிற்சி காரணமாக ஒரே குடும்பத்தில் மூன்று ஆண்கள் இறந்துள்ளனர் என்பதைக் கேள்விப்பட்டபோது, அவர் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டார்.
1969 முதல் சூட்டுப்பயிற்சித் தளத்தின் பாதிப்புகள் பற்றி தகவல் உரிமைச் சட்டத்தின்படி மருத்துவர் ரசூல் விவரங்களைத் திரட்டினார். தகவல் உரிமை ஆர்வலர்களின் வலைப்பின்னல் மூலம் இதைச் செய்த அவர், காஷ்மீரில் தகவல் உரிமைக்கான பிரச்சாரத்திலும் முன்னோடியாக ஆனார். இந்தப் பயிற்சித் தளத்தால் ஏற்பட்ட இறப்புகள், உடல் ஊனங்கள், இராணுவத்துக்கு குத்தகைக்குத் தரப்பட்ட நிலம் பற்றிய விவரங்களை அவர் பெற்றார்.
ஆரம்பத்தில் மக்கள் இராணுவம், அரசாங்கத்துக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க அஞ்சினார்கள். 2010-2011 காஷ்மீர் முழுவதும் ஊராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் புதிய உத்தி ஒன்று உருவாக்கப்பட்டது. சூட்டுப் பயிற்சித் தளத்தைக் கடுமையாக எதிர்த்தவர்கள், புல்வெளியிலிருந்து இராணுவத்தை காலிசெய்ய வைக்க விரும்புவோர் இந்தத் தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதன் பிறகு, தோசாமைதானம் தொடர்பான பிரச்னைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ஊராட்சிகள் உதவின.
"துப்பாக்கிச்சூடு காரணமாக கணவர்களை இழந்த பெண்கள் அதிகமாக இருந்தனர். கடினமான சூழல்களில் அவர்கள் தனித்துநின்று பிள்ளைகளை வளர்க்க வேண்டியிருந்தது. அவர்கள் இரந்தும் வாழ்க்கையை நடத்தினர்; மசூதிகளுக்கு முன்பாக அவர்கள் யாசகம் கேட்டு அமர்ந்திருப்பார்கள். ஆனால் அவர்களில் பலர் இயல்பாகவே வலிமையானவர்கள். அவர்களில் பலரை ஊராட்சித் தேர்தலில் நிற்கும்படி வலியுறுத்தினோம். எடுக்கப்படவேண்டிய முடிவுகளைப் பற்றி அவர்கள் வெளிப்படையாகவும் உறுதியாகவும் பேசினார்கள்.” என்கிறார், ஸ்ரீநகரின் ஊரக வளர்ச்சி, சுற்றுச்சூழல் பள்ளியின் செயல் இயக்குநர் லுப்னா சையத் காத்ரி. இந்த நிறுவனம், தோசாமைதானத்தில் சமூக அளவிலான சுற்றுலாவை நடத்திவருகிறது. இவர், பக்கர்வால், குஜ்ஜார் இனத்தவரிடையே ஆண்டுக்கணக்கில் பணியாற்றி வருகிறார்.
தோசாமைதான கிராமக் குழுக்கள் அமைக்கப்பட்டதுமே, 64 கிராமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 52 ஊர்த்தலைவர்களும், கையோடு, சூட்ப் பயிற்சித் தளத்துக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்திட்டனர். ஒன்றாகச் சேர்ந்து தோசாமைதானப் பாதுகாப்பு முன்னணியை உருவாக்கினர்.
தகவல் உரிமைச் சட்டப்படி தெரியவந்த முக்கியமான ஒரு தகவல், புல்வெளியின் குத்தகையை 90 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்ல, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை புதுப்பிக்கவேண்டும் என்பதே! அடுத்த புதுப்பித்தலுக்கான ஆண்டு 2014. குத்தகையைப் புதுப்பிக்கக்கூடாது என அப்போதைய தேசிய மாநாட்டுக் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்த ஒரு தீவிர பிரச்சாரம் தொடங்கப்பட்டது. ஸ்ரீநகரில் மாதத்துக்கு இரு முறைகளாவது இந்த விவகாரத்துக்காக போராட்டங்கள் நடத்தப்பட்டன. உள்ளூர் ஊடகங்களும் தேசிய ஊடகங்களும் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டன.
சூட்டுப் பயிற்சியால் உடல்பாகம் இழந்த, ஊனமடைந்த அதிகமான ஆண்கள் காக்கிலும் ஸ்ரீநகரிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டனர்
இறுதியில் 2014 ஏப்ரல் 18 அன்று, இராணுவம் புல்வெளியைக் காலிசெய்தது. கைவிடப்பட்ட குண்டுகளை அகற்றவும் அந்த இடத்தைத் தூய்மைப்படுத்தவும் 83 நாள் இயக்கம் தொடங்கப்பட்டது. அப்போது ஊடகங்களில் இது மிகவும் பாராட்டப்பட்டது. ஆனால், அப்போது சொல்லிக்கொண்ட அளவைவிடக் குறைவாகவே வெற்றி கிடைத்திருக்கிறது என்றே தெரிகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நிகழ்ந்த வாஜித் அகமது அகங்கரின் மரணத்துக்குப் பின்னர் புதிய இயக்கம் தொடங்கப்பட வேண்டும் என்றும் தோன்றுகிறது.
உயிரிழப்புகள், சுற்றுச்சூழல் சேதாரத்துக்கு போதுமான இழப்பீடு, தோசாமைதானத்தைச் சுற்றிய கிராமங்களில் ஊரகச் சுற்றுலாவுக்கு அரசு ஆதரவு ஆகியவை தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகளாக இருக்கின்றன.
தோசாமைதானப் பாதுகாப்பு முன்னணி, எஸ்.ஆர்.டி.இ. ஆகியவை, 2017 மார்ச்சில் இழப்பீடு தொடர்பாக ஸ்ரீநகர் உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடுத்தன. அதைத் தொடர்ந்து, மாநில அரசால் இழப்பீட்டுத் தொகை வரையறுக்கப்பட்டது. (இந்தத் தொகை குறித்து தெளிவாகத் தெரியவில்லை) ஆனால், இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.
ஊரக சுற்றுலாவுக்கான ஒரு கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது; காஷ்மீரிய சமூகத்தின் பாரம்பரிய நம்பிக்கைகளுக்குள் பெண்களுக்கு புதிய வாழ்வாதார வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது என்கிறார் காத்ரி. " பெண்கள் குதிரை வீரர்களாக ஆகமுடியாது, கைவினைப்பொருள்கள், உள்ளூர் உணவுவகைகளை அவர்கள் விற்பதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
குல்மார்க், பகல்காம் போன்ற இடங்களில் பரவலாக இருக்கும் சுற்றுலா பாணியில் கிராமமக்கள் நம்பவில்லை என்கிறார், முகமது அக்ரம். அவர்கள் பெரும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள். நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, பெரிய ஓட்டல்களைக் கட்டி, லாபம் ஈட்டுகிறார்கள். ”இந்த பாணியால் கிராமவாசிகளை பாத்திரம் கழுவும் ஆள்களாக மட்டுமே வைத்திருக்கும். வேறு எதுவும் கிடைக்காது. கூடவே, சுற்றுச்சூழல் பாதிப்பையும் உண்டாக்குவார்கள். " - முகமது அக்ரம்.
ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கின ஒட்டுமொத்த மோசமான சூழலும் சுற்றுலாத் துறையை கடுமையாக பாதித்துள்ளது. இந்தப் புல்வெளியில் இன்னும் பல அபாயங்கள் மறைந்திருக்கக்கூடும் என அண்மையில் ஏற்பட்டிருக்கும் அச்சம், இராணுவமயமாக்கப்பட்ட இந்த வட்டாரத்தில் இன்னும் பல சவால்களைச் சந்திக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
காக்கில் உள்ள ஒரு சிறு உணவகத்துக்குச் சென்றபோது, மாடிக்குப் போய் மலைகள், புல்வெளியின் அழகான காட்சியைப் பார்க்குமாறு அதன் உரிமையாளர் என்னிடம் வலியுறுத்தினார். "இன்னும் நிறைய சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என நம்பிதான் நான் இதை விரிவுபடுத்தி இந்த இடத்தை அழகாக மேம்படுத்தினேன். ஆனால், இங்கு கூட்டமாக வருபவர்கள் யாரென்றால், சுற்றிவளைப்புக்காகவும் தேடுதலுக்காவும் வரும் இராணுவத்தினர்தான்..." என்றார்.
தமிழில்: தமிழ்கனல்