25 மீட்டர் உயர மரத்தின் உச்சியில் இருந்து “நகருங்க... இல்லாட்டி அடிபடும்“ என்று கீழே பார்த்து சத்தம் போடுகிறார் ஹுமாயூன் ஷேக்.
கீழே யாரும் இல்லை என்று உறுதி செய்துகொண்டு வளைந்த கத்தியைக் கொண்டு நாசூக்காக ஓர் இழுப்பு இழுக்கிறார். தட தடவென்று தேங்காய்கள் மழையாகக் கொட்டுகின்றன.
சில நிமிடங்களில் வேலையை முடித்துக்கொண்டு அவர் கீழே இறங்கிவிட்டார். ஏறி இறங்குவதற்கு அவருக்குத் தேவைப்பட்டது நான்கே நிமிடங்கள்தான். பாரம்பரியமான தேங்காய் பறிப்பவர்களைப் போல அல்லாமல், ஓர் இயந்திரத்தை பயன்படுத்தியதால்தான் அவரால் இத்தனை வேகமாக ஏறி இறங்க முடிந்தது.
ஒரு ஜோடி கால்களும், கால் தாங்கியும் இணைந்தது போல இருக்கிறது அவர் பயன்படுத்தும் கருவி. அந்தக் கருவியோடு சேர்த்துக் கட்டப்பட்ட கயிறு மரத்தைச் சுற்றிக்கொண்டுள்ளது. இதன் உதவியோடு ஏதோ படிக்கட்டில் ஏறுவது போல மரத்தில் ஏறுகிறார் ஹுமாயூன்.
“(இந்தக் கருவியைப் பயன்படுத்தி) எப்படி மரம் ஏறுவது என்று நான் ஓரிரு நாளில் கற்றுக்கொண்டேன்” என்கிறார் அவர்.
மேற்கு வங்க மாநிலம், நதியா மாவட்டத்தில் உள்ள கோல்சந்த்பூர் கிராமத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவரான ஹுமாயூன் சொந்த ஊரில் தென்னை மரம் ஏறிப் பழக்கப்பட்டவர். அதனால், அவரால் எளிதாகக் கற்றுக்கொள்ள முடிந்தது.
“இந்தக் கருவியை 3,000 ரூபாய்க்கு வாங்கினேன். பிறகு இங்குள்ள என் நண்பர்களோடு சென்று சில நாட்களுக்கு இதைப் பழகினேன். விரைவிலேயே நான் தனியாக இதனை பயன்படுத்தத் தொடங்கினேன்,” என்கிறார் அவர்.
எப்போதும் அவருக்கு ஒரே மாதிரி வருமானம் வருவதில்லை. “சில சமயம் நான் ரூ.1,000 சம்பாதிப்பேன். சில நேரம் ரூ.500 கிடைக்கும். வேறு சில நேரம் எதுவுமே கிடைக்காது,” என்கிறார் அவர். ஒரு வீட்டில் எத்தனை மரங்கள் ஏறவேண்டுமோ அந்த எண்ணிக்கையைப் பொறுத்து கூலி நிர்ணயிக்கிறார் ஹுமாயூன். “ஒரு வீட்டில் இரண்டே மரங்கள்தான் இருக்கின்றன எனில் ஒரு மரத்துக்கு ரூ.50 வாங்குவேன். நிறைய மரங்கள் இருந்தால் ஒரு மரத்துக்கு 25 ரூபாய் வாங்குவேன்,” என்கிறார் அவர். “எனக்கு மலையாளம் தெரியாது. ஆனால், ஒரு மாதிரி சமாளித்து பேரம் பேசிவிடுவேன்,” என்கிறார் அவர்.
“(மேற்கு வங்கத்தில்) எங்கள் ஊரில் இது மாதிரி கருவி இல்லை,” என்று கூறும் அவர், கேரளாவில் இது பிரபலமாகிவருவதாக கூறுகிறார்.
ஒரு ஜோடி காலும், கால் தாங்கியும் இணைந்தது போல இருக்கிறது அவர் பயன்படுத்தும் கருவி. அந்தக் கருவியோடு இணைக்கப்பட்ட நீண்ட கயிறு மரத்தை சுற்றிச் செல்கிறது. இதன் உதவியோடு, படிக்கட்டு ஏறுவது போல எளிதாக மரம் ஏறுகிறார் ஹுமாயூன்
(2020ம் ஆண்டின் தொடக்கத்தில்) கொரோனா பெருந்தொற்று தாக்குவதற்கு முன்பு கேரளா வந்தார் ஹுமாயூன். “முதலில் இங்கு வந்தபோது வயல்களில் தினக்கூலித் தொழிலாளியாக வேலை செய்தேன்,” என்று நினைவுகூர்கிறார் அவர்.
“வேலை செய்வதற்கு கேரளா சிறந்த ஊர் (காம் காஜ் கேலியே கேரளா அச்சா ஹை),” என்பதால் தாம் கேரளா வந்ததாக கூறுகிறார் அவர்.
“பிறகு கொரோனா வந்துவிட்டதால். நாங்கள் திரும்பிப் போக வேண்டியதாகிவிட்டது,” என்கிறார் ஹுமாயூன்.
2020 மார்ச் மாதம் கேரள அரசாங்கம் ஏற்பாடு செய்த ஒரு ரயிலில் அவர் மேற்கு வங்கம் திரும்பினார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் அவர் மீண்டும் கேரளா வந்தார். அப்போது அவர் தேங்காய் பறிப்பவராக வேலை செய்யத் தொடங்கினார்.
தினமும் காலை 5.30 மணிக்கு விழிக்கும் அவர் காலையில் முதல் வேலையாக சமைக்கிறார். “நான் காலையில் சாப்பிடுவதில்லை. ஏதேனும் கொஞ்சம் நொறுக்குத் தீனி சாப்பிட்டுவிட்டு வேலைக்குப் போய்விட்டு திரும்பி வந்து சாப்பிடுவேன்,” என்று விளக்குகிறார் அவர். ஆனால், இத்தனை மணிக்குத்தான் திரும்பி வருவார் என்று உறுதியாக கூறமுடியாது.
“சில நாட்களில் காலை 11 மணிக்கெல்லாம் திரும்பிவிடுவேன். சில நாட்களில் திரும்பிவர பிற்பகல் 3 - 4 மணி ஆகும்,” என்கிறார் அவர்.
மழைக்காலங்களில் அவரது வருவாய் ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும். ஆனால், இந்தக் கருவி இருப்பது அவருக்கு உதவியாக இருக்கிறது.
“இந்தக் கருவி இருப்பதால் மழைக்காலத்தில் மரம் ஏறுவது எனக்குப் பிரச்சனை இல்லை,” என்கிறார் அவர். ஆனால், மழைக்காலத்தில் தேங்காய் பறிப்பதற்கு வெகு சிலரே ஆட்களை அழைப்பார்கள். “வழக்கமாக மழை பெய்யத் தொடங்கிவிட்டால் எனக்கு வேலை குறைவாகத்தான் வரும்,” என்று கூறுகிறார் அவர்.
இதனால்தான், மழைக்கால மாதங்களில் குடும்பத்தைப் பார்க்க கோல்சந்த்பூர் போய்விடுகிறார் ஹுமாயூன். இவரது குடும்பத்தில் இவரது மனைவி ஹலீமா பேகம், இவரது தாய், மூன்று குழந்தைகள் என்று இவரைத் தவிர ஐந்து பேர் இருக்கிறார்கள். 17 வயதான ஷன்வர் ஷேக், 11 வயது சாதிக் ஷேக், 9 வயது ஃபர்ஹான் ஷேக் ஆகிய மூவருமே பள்ளியில் படிக்கிறார்கள்.
“குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே புலம்பெயரும் தொழிலாளி அல்ல நான். கேரளாவில் 9-10 மாதம் இருக்கிறேன். (மேற்கு வங்கத்தில் உள்ள) வீட்டுக்கு இரண்டு மாதம் மட்டுமே செல்கிறேன்,” என்று கூறும் இவருக்கு, குடும்பத்தைப் பிரிந்திருக்கிற மாதங்களில் அந்த ஏக்கம் இருக்கிறது.
“தினமும் குறைந்தது மூன்று முறையாவது வீட்டுக்கு அழைத்துப் பேசுவேன்,” என்று கூறுகிறார் ஹுமாயூன். வீட்டு உணவுக்காகவும் அவர் ஏங்குகிறார். “வங்காளத்தில் சமைப்பது போல என்னால் உணவு சமைக்க முடியாது. ஏதோ சமாளிக்கிறேன்,” என்கிறார்.
“இப்போது, இன்னும் நான்கு மாதத்தில் (ஜூன் மாதம்) வீட்டுக்குப் போவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.”
மொழிபெயர்ப்பு: அ.தா.பாலசுப்ரமணியன்.