”இல்லை; இந்த ஊரடங்கு உத்தரவு எங்களுக்கு பொருந்தாது; நாங்கள் ஒரு நாள்கூட விடுப்பு எடுக்க முடியாது. அனைத்துக்கும் மேலாக, பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்; அதற்கு நாங்கள் இந்த நகரத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்”, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தூய்மை பணியாளரான தீபிகா இப்படி கூறுகிறார்.
மார்ச் 22 அன்று, சுகாதார துறைச் சார்த்த ஊழியர்களுக்கு நன்றிக் கூற கூட்டம் கூடியதை தவிர்த்து கிட்டதட்ட மொத்த நாடும் 'மக்கள் ஊரடங்கு’ நாளன்று வீட்டில் இருந்தனர்! நாம் நன்றியுணர்வை வெளிப்படுத்துப்பவர்களுள், நகரத்தைக் கூட்டி பெருகி, சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களும் அடக்கம். “எங்களின் சேவை முன்பை விட இப்போது அதிகம் தேவைப்படுகிறது. நாங்கள் சாலைகளில் இருக்கும் வைரஸை துடைத்து எடுக்கிறோம்”, என்கிறார் தீபிகா.
ஏனைய நாள்கள் போலவே, தீபிகாவும் மற்றவர்களும் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தெருக்களைச் சுத்தம் செய்கின்றனர். மற்ற நாள்களை போல் அல்லாமல், வழக்கத்தை விட விஷயங்கள் மிகவும் மோசமாகின. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்க, அவர்கள் பணியிடங்களுக்கு வர, குப்பை வண்டிகளில் மிகவும் கஷ்டப்பட்டு ஏறி வரவேண்டியுள்ளது. மேலும் சிலர் பணியிடங்களுக்கு வர, பல கிலோமீட்டர்கள் நடக்க வேண்டியுள்ளது. “மார்ச் 22ம் தேதியன்று, என்னுடன் பணி செய்பவர்கள் வெகுதூரத்திலிருந்து வர முடியாததால், வழக்கமான நாள்களில் பெருக்கும் தெருக்களைவிட, அதிகமாக செய்யவேண்டி இருந்தது.” என்று கூறுகிறார் தீபிகா.
இந்த புகைப்படத் தொகுப்பில் இடம்பெற்று இருக்கும் பெண்கள், அண்ணா சாலையில் ஒரு பகுதி, ஆயிரம் விளக்கு மற்றும் ஆழ்வார்பேட்டை போன்ற மத்திய மற்றும் தென் சென்னை பகுதிகளில் வேலை செய்பவர்கள். இவர்கள் பெரும்பாலும், வட சென்னையிலுள்ள தங்களின் வீடுகளிலிருந்து இந்த பகுதிகளுக்கு வர வேண்டும்.
அவர்களுக்கு கிடைக்கும் நன்றியுணர்வு மிகவும் விசித்தரமானது. மார்ச் 24ம் தேதியன்று ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு வெளியான முதல், அவர்கள் விடுப்பில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று அப்பணியாளர்கள் கூறுகின்றனர். சி.ஐ.டி.யுவுடன் இணைந்த சென்னை மாநகராட்சி கழகத்தின் சிவப்புக் கொடி யூனியனின் பொதுச் செயலாளரான பி.ஸ்ரீனிவாசலு கூறுகையில், “அவர்கள் இப்போது விடுப்பு எடுத்தால், பணியை துறக்க நேரிடும் என்று அவர்களுக்கு கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு பேருந்து வசதிகள் செய்யப்பட்டு இருந்தாலும், அது போதுமானதாக இல்லை அல்லது பேருந்து மிகவும் தாமதமாக வருகிறது. இதனால், குப்பைகளுக்காக இருக்கும் லாரிகளில் ஏறி அவர்கள் வர வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இங்கு, தூய்மை பணியாளர்கள் மாதம் ரூ.9000 சம்பாதிக்கின்றனர். ஆனால், சில நேரங்களில், அவர்களின் பயணத்திற்காகவே தினமும் 60 ரூபாய் செலவழிக்கின்றனர். ஊரடங்கு காலத்தில், அரசு பேருந்துகள் அல்லது மாநகராட்சி ஏற்பாடு செய்திருக்கும் வாகனங்கள் கிடைக்காதவர்கள், நடந்தே தான் பணிக்கு வரும் நிலையில் உள்ளனர் .”இப்போதுதான், சென்னை மாநகராட்சி இவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க ஆரம்பித்துள்ளது. ஆனால், அதுவும் நல்ல தரத்தில் இருப்பதில்லை; ஒருமுறை பயன்படுத்தும் முக உறையை கொடுத்துவிட்டு, மறுபடியும் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மலேரியா விரட்டும் ஊழியர்கள் (கொசுக்களை விரட்ட கொசு மருந்து அடிப்பவர்கள்) சிலருக்கு மட்டுமே பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு நல்ல காலுறைகளோ அல்லது கையுறைகளோ அளிக்கப்படுவதில்லை”, என்கிறார் ஸ்ரீனிவாசலு. கொரோனா வைரஸ் தடுப்பு பிரச்சாரத்திற்காக சென்னை மாநகராட்சி, மண்டலம் வாரியாக, குறிப்பிட்ட தொகை ஒதுக்கியுள்ளது. ஆனால், அது இவர்களை வந்தடைய சில காலம் ஆகும்.
இன்றைய நாள்களில் தூய்மை பணியாளர்கள் காணும் காட்சியாக இங்கிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் மிகவும் காலியான, அபரிதமான அமைதியாக இருக்கும் தெருக்கள், இறுக்கமாக மூடப்பட்ட கதவுகள் மற்றும் ஜன்னல்களுமே இருக்கின்றது. “அவர்களின் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று வராமல் இருக்க நாங்கள் வெயிலில் உழைக்கிறோம். ஆனால், எங்கள் குழந்தைகளின் நலன் பற்றி யார் சிந்திக்கிறார்கள்?”, அவர்களில் ஒருவர் கேட்கிறார். ஊரடங்கு பிறகு, தெருக்களில் போடப்படும் குப்பைகள் குறைந்திருந்தாலும், வீட்டிலிருந்து போடப்படும் குப்பைகள் அதிகமாகியுள்ளன. “இந்நிலையில், நாங்கள் குப்பைகளை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையாக பிரிக்கமுடியாது. நாங்கள் மாநகராட்சியிடம் அப்பணியை தற்காலிகமாக நிறுத்திவைக்க கோரி இருக்கிறோம்”, என்கிறார் ஸ்ரீனிவாசலு. ஏனென்றால், இந்த ஊரடங்கு காலத்தில், தூய்மை பணியாளர்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைப்பது கூட மிகவும் கடினமாக இருக்கிறது. “முன்னர், அவர்கள் எந்த காலனிகளில் பணி செய்கிறார்களோ, அங்குள்ளவர்கள் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுப்பார்கள். ஆனால், இப்போது பலரும் அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க மறுக்கின்றனர்”.
ஸ்ரீனிவாசலு கூறுகையில், “தமிழ்நாட்டில் இரண்டு லட்ச தூய்மை பணியாளர்கள் உள்ளனர். சென்னையில் மட்டும் கிட்டதட்ட 7,000 முழுநேர ஊழியர்கள் உள்ளனர்; ஆனால், இன்னும் இது மிகவும் குறைவான எண்ணிக்கையே . “2015 வெள்ளம் வந்த அடுத்த வருடமே வர்தா புயல் வந்தது நினைவிருக்கிறதா? சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப 13 மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள், சென்னைக்கு வந்து இருபது நாள்கள் பணி செய்தார்கள்! ஒரு மாநிலத்தின் தலைநகருக்கே இந்த நிலை எனில், மற்ற மாவட்டங்களில் மிகவும் குறைவான பணியாளர்களே இருப்பார்கள். ”
ஓய்வு காலத்திற்கு முன்னர், தூய்மை பணியாளர்கள் இறப்பது மிகவும் பொதுவான ஒரு விஷயமே. “எங்களிடம் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை; அதனால் எப்போதும் ஏதோ ஒரு தொற்று நோய் பரவுவதற்காக வாய்ப்புகள் உள்ளது. சாக்கடைகளைச் சுத்தம் செய்ய அதில் இறங்குபவர்கள் சிலர், மூச்சுதிணறல் காரணமாக இறக்கின்றனர். தமிழ் நாட்டில் பிப்ரவரி மாதத்தில் மட்டும், சாக்கடைகளில் குறைந்தபட்சம் ஐந்து பேராவது இறந்திருப்பார்கள்.
“நாங்கள் தெருக்களைச் சுத்தமாக வைத்துகொண்டு, தொற்றிலிருந்து காப்பாற்றுவதால், அவர்கள் எங்களுக்கு கடன்பட்டிருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். செய்தி தொலைக்காட்சி ஊடகம் எங்களை பேட்டி காண்கின்றன. ஆனால், நாங்கள் இதை தான் எப்போதும்செய்துக்கொண்டிருக்கிறோம்.” என்கிறார்.
“நாங்கள் எப்போதும் இந்த நகரத்தை சுத்தமாக வைத்திருக்கும் வேலையைத்தான் செய்துக்கொண்டிருக்கிறோம். அதற்காக எங்கள் வாழ்வை பணயம் வைத்திருக்கிறோம். அவர்கள் இப்போதுதான் எங்களுக்கு நன்றி கூறுகின்றனர். ஆனால், நாங்கள் எப்போதும் அவர்களின் நலன் மீது அக்கறை கொண்டுள்ளோம்.”
இந்த ஊரடங்கு காலத்தில், தூய்மை பணியாளர்கள் வேலை செய்ய கூடுதல் சம்பளம் ஏதுவும் அளிக்கப்படுவதில்லை.
அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இதோ.தமிழில்: ஷோபனா ரூபகுமார்