“எங்களின் படை தொடர் வண்டியை இரண்டு குழுக்களாகப் பிரிந்துகொண்டு தாக்கியது. ஒரு குழுவுக்கு ஜி.பி. லத் பாபுவும், இன்னொரு குழுவுக்கு நானும் தலைமை தாங்கி இந்தச் செயலை முன்னெடுத்தோம். தொடர்வண்டிப் பாதையில் பாறைகளை அடுக்கி நாங்கள் வண்டியை நிறுத்தினோம். அங்கேதான் நீங்கள் இப்பொழுது நின்ன்று கொண்டிருக்கிறீர்கள். வண்டியை பின்னோக்கி செலுத்தாமல் தடுக்கும் பொருட்டுப் பின்புறம் பாறாங்கற்களை அடுக்கி வைத்து தடையை ஏற்படுத்தினோம். எங்களிடம் துப்பாக்கிகள் இல்லை, எங்களின் அரிவாள்கள், லத்திகள் தவிர்த்து பெரிய ஆயுதங்கள் எதுவும் இல்லை. இரண்டே இரண்டு பழைய நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன. தொடர்வண்டியின் தலைமைக் காவலரிடம் துப்பாக்கி இருந்தது. ஆனால், அவர் நாங்கள் செய்தவற்றில் திகைத்துப் போனார். அவரை எளிதாக அடக்கிவிட்டோம். ஆங்கிலேய அரசு அதிகாரிகளுக்குக் கொடுக்க வைத்திருந்த சம்பளப்பணம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டு அதைப் பத்திரப்படுத்தினோம்.” என விவரிக்கிறார் கேப்டன் பாவு லத். (பாவு (BHAU) என்றால் மராத்தி மொழியில் அண்ணா என்று அர்த்தம்).
அந்தச் சாகசம் நிகழ்ந்து 73 வருடங்கள் ஆகிவிட்டன என்றாலும் நேற்று நடந்ததைப் போலக் கண்களில் பரவசம் ததும்ப ‘கேப்டன் அண்ணா’ லத் விவரிக்கிறார். தற்போது 94 வயதாகும் ராமச்சந்திர ஸ்ரீபதி லத் பாவு ஆங்கிலேய அதிகாரிகளுக்குச் சம்பளம் கொண்டு போன புனே-மிராஜ் தொடர்வண்டி மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை அசரவைக்கும் துல்லியத்தோடு விவரிக்கிறார். “இவ்வளவு தெளிவாக அவர் பேசி பல நாட்கள் ஆகிவிட்டது’ என முணுமுணுக்கிறார் அவரின் தொண்டர்களில் ஒருவரான பாலசாகேப் கணபதி ஷிண்டே. அவரும், பாபு லத்தும் இணைந்து தீரமிகுந்த துஃபான் சேனையை ஜூன் 7, 1943 அன்று இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கு வழிநடத்திய இடத்தில் நிற்கிறார். தொன்னூறுகளில் நிற்கும் அவரை ‘கேப்டன் அண்ணா’ என்று அழைத்தால் அவர் புது வேகம் பெற்றவராக மாறிவிடுகிறார்.
அந்தச் சாகசத்துக்குப் பிறகு அது நிகழ்ந்த இடமான சத்தாரா மாவட்டத்தின் ஷேனொலி கிராமத்துக்கு எழுபது ஆண்டுகள் கழித்து முதன்முறையாக மீண்டும் இப்பொழுதுதான் வருகிறார். சில கணங்கள், தன்னுடைய பழைய நினைவுகளில் மூழ்கி நிகழ்காலம் மறந்து நிற்கிறார். பிறகு நினைவுகள் வேகமாக அலையடிக்கின்றன. தன்னுடைய இணைந்து போரிட்ட தோழர்களின் பெயர்களை நினைவுகூர்கிறார். “எந்தப் பணத்தைத் தனிநபர்கள் யாருக்கும் நாங்கள் தரவில்லை. எங்கள் தேவைகளுக்கு எடுத்துக்கொள்ளவும் இல்லை. அதைச் சத்தாராவில் நடத்தப்பட்ட பிராதி சர்க்கார் அரசின் செலவுகளுக்குக் கொடுத்தோம். அப்பணம் ஏழைகள், வறியவர்களின் தேவைகளுக்குப் பயன்பட்டது.” என்று நமக்குத் தெரியப்படுத்துகிறார்.
“நாங்கள் தொடர்வனடியை கொள்ளையடித்தோம் என்பது தவறானது. அது அப்பாவி மக்களிடமிருந்து ஆங்கிலேயரால் கொள்ளையடிக்கப்பட்ட பணம். அதை மீட்டு மக்களிடம் மீண்டும் கொடுத்தோம்.” என்று கடுகடுக்கிறார். அவரின் இந்த வார்த்தைகள் 2௦1௦-ல் இறந்து போன ஜி.டி.பாபு என்னிடம் சொன்ன அதே வார்த்தைகளை எதிரொலித்தன.
துஃபான் சேனை (சூறாவளி அல்லது புயற்படை) பிராதி சர்க்கார் என்கிற அரசின் போர்ப்படை ஆகும். பிராதி சர்க்கார் இந்திய விடுதலைப்போரின் பிரமிக்க வைக்கும் அத்தியாயம் ஆகும். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தாக்கத்தில் எழுந்த ஆயுதக்குழுவான இவர்கள் சத்தாராவில் ஒரு மாற்று அரசாங்கத்தைப் பிராதி சர்க்கார் என்கிற பெயரில் நடத்தினார்கள். அப்பொழுது சத்தாரா தற்போதைய சங்கிலி மாவட்டத்தையும் உள்ளடக்கி பெரிய மாவட்டமாக் இருந்தது. இந்தப் பகுதி மக்களால் தங்களின் அரசாங்கம் பார்க்கப்பட்ட இந்த அரசு குறைந்தபட்சம் 15௦ கிராமங்களில் பரவி இருந்தது. அது அறுநூறு கிராமங்களில் பரவி இருந்தது என்கிறார் கேப்டன் அண்ணா. அவர்கள் ஆங்கிலேய ஆட்சியைத் தூக்கி எறிந்தார்கள். “இதைத் தலைமறைவு அரசாங்கம் என்று எப்படிச் சொல்கிறார்கள்? நாங்கள் தான் இங்கு ஆட்சி செய்தோம். ஆங்கிலேயர்கள் இங்கே நுழைய முடியவில்லை. துஃபான் சேனையைக் கண்டு அஞ்சிய காவல்துறை இங்கே காலெடுத்து வைக்கவில்லை.” எனக் கர்ஜிக்கிறார்.
1942 வருடப் புகைப்படத்தில் கேப்டன் அண்ணா (வலது) 74 வருடங்கள் கழித்து
அவரின் இந்த வாதம் உண்மையானது. பிராதி சர்க்காரை பெருமைமிகு கிராந்திசின்ஹ் நானா பாட்டீல் தலைமையேற்று நடத்தினார். அது தான் கட்டுப்படுத்திய கிராமங்களில் அரசை நடத்தியது. உணவுப் பொருள் வழங்கல், விநியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டது. ஒருங்கிணைந்த விவசாய அமைப்பை உருவாக்கியது, நீதி பரிபாலனம் செய்தது. கந்துவட்டிக் காரர்கள், அடகுக்கடை நடத்தியவர்கள், பண்ணையார்கள் என்று ஆங்கிலேயருக்கு அணுக்கமாக இருந்தவர்களை அது தண்டித்தது. “சட்டம், ஒழுங்கு எண்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. மக்கள் எங்கள் பக்கம் இருந்தார்கள்.” என்கிறார் கேப்டன் அண்ணா. துஃபான் சேனை ஆங்கிலேய ஆயுதக்கிடங்குகள், தொடர்வண்டிகள், கருவூலங்கள், அஞ்சல் நிலையங்கள் ஆகியவற்றைத் தாக்கியது. கிடைத்த பணத்தைக் கொண்டு பெரும் அவதிக்கு உள்ளாகி இருந்த விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு நிவாரணங்களை விநியோகித்தார்கள்.
கேப்டன் அண்ணா சில சமயம் சிறைப்படுத்தப்பட்டார். ஆனால், மக்களிடம் அவருக்கு இருந்த ஆதரவு சிறை காவலர்கள் அவரை மரியாதையோடு நடத்தும்படி செய்தன. “மூன்றாவது முறை நான் அயுந்த் சிறைக்குச் சென்ற பொழுது ராஜாவின் மாளிகையில் விருந்தனர் போல நடத்தப்பட்டேன்” எனப் பெருமிதப்படுகிறார்.
1943-1946 வரை பிராதி சர்க்கார், அதன் புயற்படை சத்தாராவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்திய விடுதலை உறுதியானதும் அந்தப் புயற்படை கலைக்கப்பட்டது.
“நீங்கள் துஃபான் சேனையில் எப்பொழுது சேர்ந்தீர்கள்” என்று கேட்டதும் உசுப்பேறியவராக, “நான் தான் அந்தச் சேனையை உருவாக்கினேன்” என்கிறார்.. அவரின் வலது கரமான ஜி.டி.பாபு லத் அதன் பீல்ட் மார்ஷல். கேப்டன் அண்ணா அதன் செயற்படைத் தலைவர். தங்களின் வீரர்களோடு ஆங்கிலேய அரசுக்கு அவமானம் தருகிற வகையில் பெரும் வெற்றி பெற்றார்கள். இதே காலத்தில் இதைப் போன்ற எழுச்சிகள் வங்கம், பீகார், உத்தரப் பிரதேசம், ஓடிஸா ஆகிய பகுதிகளில் எழுந்து ஆங்கிலேய அரசின் கைமீறிப் போய்க்கொண்டு இருந்தன.
குண்டல் பகுதியில் 1942 / 1943 வருடகாலத்தில் எடுக்கப்பட்ட துஃபான் சேனையின் படம
கேப்டன் அண்ணாவின் வரவேற்பறையில் நினைவுப்பரிசுகள், கேடயங்கள் நிரம்பியிருக்கின்றன. அவரின் அறையில் எளிமையான அவரின் சொத்துக்கள் இருக்கின்றன. அவரை விடப் பத்து வயது இளையவரும், அவரின் மனைவியுமான கல்பனா, “இவருக்கு எங்களின் வயல் எங்கே இருக்கிறது எனத் தெரியாது. நான் ஒற்றை மனுஷியாகக் குழந்தைகள், வீடு, வயல் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டேன். ஐந்து குழந்தைகள், 13 பேரக்குழந்தைகள், 11 கொள்ளுப்பேரர்கள் என்று எல்லாவற்றையும் நானே கவனித்துக் கொண்டேன். அவர் தஸ்காவ்ன், அயுந்த், எரவாடா சிறைகளில் சில காலம் இருந்தார். விடுதலையானதும் கிராமங்களுக்குச் சேவை செய்யப்போய் விடுவார். நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டேன்.” எனப் பட்டவர்த்தனமாகப் பேசுகிறார்.
சத்தாரா, சங்கிலி பகுதியை சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயரை குண்டலில் உள்ள தூண் பட்டியல் போடுகிறது. கேப்டன் அண்ணாவின் பெயர் இடது பக்கத்தில் ஆறாவதாக தோன்றுகிறது. கல்பனா லத், கேப்டன் அண்ணாவின் மனைவி அவர்களின் வீட்டில் நின்றபடி பேசுகிறார்
பிராதி சர்க்கார், துஃபான் சேனை ஆகியவை இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு மகத்தான தலைவர்களை மகாராஷ்ட்ராவில் இருந்த வழங்கின. நானா பாட்டில், நாக்நாத் நாயக்வாதி, ஜி.டி.பாபு, ஜி.டி.பாபு லத், கேப்டன் பாஹு மற்றும் பலர் இந்தப் பட்டியலில் அடக்கம். இதில் பலர் போதுமான அங்கீகாரத்தைப் பெறவில்லை. இந்தப் படையில், அரசில் பல்வேறு அரசியல் சக்திகள் செயல்பட்டன. இதில் பலர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக இருந்தார்கள்/ஆனார்கள். நானா பாட்டீல் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஆனார். இரண்டாவது பொதுத் தேர்தலில் சத்தாரா நாடாளுமன்ற தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேப்டன் பாவ், லத் ஆகியோர் விவசாயிகள், தொழிலாளிகள் கட்சியில் இணைந்தார்கள். எனினும், மாதவராவ் மானே போன்ற இன்னும் பல போராட்ட வீரர்கள் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தார்கள். இந்தப் போராட்டத்தில் பங்குபெற்ற வாழும் விடுதலை வீரர்கள் அப்பொழுதைய சோவியத் யூனியன், அது ஹிட்லரை எதிர்த்துக் கம்பீரமாக நின்றது ஆகியவை தங்களின் எழுச்சிக்கு உரமூட்டின என்று பெருமையோடு குறிப்பிடுகிறார்கள்.
94 வயதில் தோய்வடைந்து போயிருந்தாலும் அவர் கடந்த காலத்தைக் கச்சிதமாக நினைவுக்குக் கொண்டு வருகிறார். “கடைக்கோடி மனிதனுக்கு விடுதலை கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் கனவு கண்டோம். அது ஒரு அழகிய கனவு. நாங்கள் விடுதலை பெற்றோம். அதற்காகப் பெருமிதப்படுகிறேன். எனினும், கடைக்கோடி மனிதனின் கண்ணீர் துடைக்கும் எங்கள் கனவு ஈடேறவில்லை. பணம் படைத்தவன் ஆள்கிறான். இதுவே நாங்கள் போராடிப் பெற்ற விடுதலையின் நிலை.”
கேப்டன் அண்ணாவுக்கு மனதளவிலாவது புயற்படை வாழ்கிறது. “துஃபான் படை இன்னமும் மக்களுக்காகக் காத்திருக்கிறது. அவர்களுக்கு ஒரு தேவை ஏற்படுகிற பொழுது அது மீண்டும் எழும்.”