அருண் ஜாதவின் மாட்டுத் தொழுவம் பெரியது. ஒரு பசு மற்றும் எருமை மாட்டுக்கான தொழுவம் இல்லை. கால்நடைகள் ஒரு கம்பத்தில் கட்டப்பட்டு பரிதாபகர தோற்றத்தில் இருக்கின்றன. “இதற்குப் பின்னால் ஒரு தொழுவமும் எனக்கு உண்டு,” என்கிறார் அருண். “என்னிடமிருக்கும் விலங்குகளின் எண்ணிக்கைக்கு இணையாக தொழுவங்களின் எண்ணிக்கை இருக்கிறது. விரைவில் விலங்குகளின் எண்ணிக்கையை தொழுவங்களின் எண்ணிக்கை தாண்டி விடலாம்.”

மகாராஷ்டிராவின் சங்லி மாவட்டத்தின் அல்சுண்ட் கிராமத்தில் வசிக்கும் 39 வயது அருண் ஒரு காலத்தில் ஏழு பசு மாடுகளையும் நான்கு எருமை மாடுகளையும் வளர்த்தார். “கடந்த 15 வருடங்களில் அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக விற்றுவிட்டேன்,” என்கிறார் அவர். “பத்து ஏக்கர் கரும்பு நிலங்கள் என்னிடம் இருக்கின்றன. பால் உற்பத்தி ஒரு வசதியான இன்னொரு தொழிலாக இருந்தது. ஆனால் இப்போது அதுவே என் கழுத்தை இறுக்கும் சுருக்குக் கயிறாக மாறி விட்டது.”

மேற்கு மகாராஷ்டிராவில் இருக்கும் மாவட்டம் சங்லி. பால் உற்பத்தியின் முக்கிய நாளமாக இருக்கும் மாவட்டம். மாநிலத்தின் பால் உற்பத்தியில் 42 சதவிகிதம் இம்மாவட்டத்திலிருந்து வருகிறது. கிட்டத்தட்ட எல்லா விவசாயிகளும் பசு மாடுகளையும் எருமை மாடுகளையும் வளர்க்கின்றனர். அருண் போன்ற விவசாயிகளுக்கு பால் வருமானம் உபரி வருமானம். பிறருக்கு அதுதான் பிரதான வருமானம். ஆனால் தற்போது பால் விவசாயிகள் தங்களின் உடைமைகளை சுருக்கி வருகின்றனர். பொருளாதார ரீதியாக நஷ்டம் ஏற்படுவதாக சொல்கின்றனர்.

கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மகாராஷ்டிராவில் ஊசலாடும் பால் விலைவாசியை எதிர்த்துத் தொடர் போராட்டங்களை பால் விவசாயிகள் நடத்தி வருகின்றனர். பாலைக் கொட்டியும் வீணடித்தும் இலவசமாகக் கொடுத்தும் போராட்டம் நடத்தினர். கூட்டுறவு சங்கங்களாலும் அரசாலும் பால் கொள்ளளவு செய்யப்படுகையில் அதன் விலை மாறாமல் இருந்ததாக சொல்கிறார் பல போராட்டங்களை நடத்திய அகில இந்திய விவசாயச் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் நவாலே.

“விலைகளை கட்டுப்படுத்தி தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கின்றன. வேளாண் சட்டங்களிலும் இதுதான் பிரச்சினையாக சொல்லப்படுகிறது,” என்கிறார் நவாலே, செப்டம்பர் 2020-ல் ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களைக் குறிப்பிட்டு. கடந்த வருடத்தில் தொடங்கப்பட்ட விவசாயிகளின் போராட்டத்தால் ( பார்க்க: PARI-ன் கட்டுரைகள் ) மூன்று வேளாண் சட்டங்களும் நவம்பர் 29, 2021 அன்று நாடாளுமன்றத்தில் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன.

Arun Jadhav outside his cowshed in Alsund
PHOTO • Parth M.N.
Buffaloes in a shed in the village. Farmers say they are riskier to rear
PHOTO • Parth M.N.

இடது: மாட்டுத்தொழுவத்துக்கு வெளியே அருண் ஜாதவ். வலது: கிராமத்தின் தொழுவத்தில் எருமை மாடுகள். அவற்றை வளர்ப்பது பிரச்சினையைத் தருவதாக சொல்கின்றனர் விவசாயிகள்

அகமது நகரைச் சேர்ந்த நவாலே, தனியார் முதலீட்டில் பால் துறை செழித்திருக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். “மகாராஷ்டிராவின் பால் துறையில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்குகின்றன. யதார்த்தத்தில் இத்தகைய ஒரு போட்டி விவசாயிகளுக்கான பால் விலையை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை,” என்கிறார் அவர். அதற்குப் பதிலாக கடுமையான ஏற்ற இறக்கங்களை பால் விலையில் விவசாயிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு லிட்டரின் பால் விலை 17 ரூபாயிலிருந்து 32 ரூபாய் வரை ஏறி இறங்குகிறது.

க்ரைசில் என்ற சந்தை ஆய்வு நிறுவனம் செப்டம்பர் 2021-ல் வெளியிட்ட ஓர் ஆய்வு ப்படி, மகாராஷ்டிராவின் தனியார் நிறுவனங்கள் ஒரு நாளில் 123-127 லட்சம் லிட்டர் பாலைக் கொள்முதல் செய்கின்றன. 1991ம் ஆண்டின் தாராளமயமாக்கலுக்குப் பிறகு பால்துறையில் தனியார் அனுமதிக்கப்பட்டது. 1992ம் ஆண்டில் பால் உற்பத்தி, பதனிடுதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றை ஒழங்கமைக்க பால் மற்றும் பால் பொருட்கள் ஆணை அறிமுகப்படுத்தப்பட்டது. பால் பதனிடும் அளவில் அந்த ஆணைக் கொண்டிருந்த வரம்பு 2002ம் ஆண்டில் தளர்த்தப்பட்டது. விளைவாக, விலைவாசி ஏற்ற இறக்கம் தொடங்கியது.

புனே மாவட்டத்தின் ஷிரூர் டவுனில் இருக்கும் உர்ஜா பால் என்னும் தனியார் நிறுவனத்தின் மேலாளர் பிரகாஷ் கட்வால், மகாராஷ்டிராவின் பால் விவசாயிகளுக்கு ஏன் தனியார் முதலீடு உதவவில்லை என விளக்குகிறார். “முன்பு, பால் வணிகத்தில் ஈடுபட்டோர் பாலை பாக்கெட்டாக போடுவதில் கவனம் செலுத்தினர். விளைவாக ஆறு மாதம் விலைகள் மாறாமல் இருக்கும் நிலை இருந்தது. விவசாயிகளும் நுகர்வாளர்களும் பயனடைந்தனர்.” விதி தளர்த்தப்பட்ட பிறகு, சர்வதேசப் பால் சந்தையின் கொழுப்பு நீக்கிய பால் பொடி விலையின் ஏற்ற இறக்கம் உள்ளூர் சந்தையின் விலைகளை பாதிக்கத் தொடங்கின.

விதித் தளர்வுக்குப் பிறகு, பால் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படும் பால் பொடி ஆலைகளின் எண்ணிக்கை இந்தியச் சந்தையில் அதிகமாகியிருக்கிறது. “பால் பொடி மற்றும் வெண்ணெய் ஆகியவற்றைச் சார்ந்து இயங்கும் நிறுவனங்களால் ஏற்ற இறக்கத்தை வாரத்துக்கு ஒருமுறை சந்திக்கும் விலைவாசி, ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் பாலின் விலையை மாற்றுகிறது. கிட்டத்தட்ட சூதாட்டம் போலாகிறது,” என்கிறார் கட்வால். “பெருநிறுவனங்கள் பால் விலையைக் கட்டுப்படுத்துகின்றன. அரசியல் பின்புலமும் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் பால் விவசாயிகள் அவர்களின் உற்பத்திச் செலவுகளையேனும் மீட்கிறார்களா என்பதைப் பற்றி எவரும் யோசிப்பதே இல்லை.”

Milk production used to be a convenient side business for sugarcane farmers like Arun Jadhav.
PHOTO • Parth M.N.
Arun's mother, Mangal , outside their hut
PHOTO • Parth M.N.

இடது: அருண் ஜாதவ் போன்ற கரும்பு விவசாயிகளுக்கு பால் உற்பத்தி வசதியான இன்னொருத் தொழிலாக இருந்தது. வலது: குடிசைக்கு வெளியே அருணின் தாய், மங்கல்

”பால் சுரக்கும் காலத்தில் ஒரு பசு ஒரு நாளில் 11-12 லிட்டர் பால் கொடுக்கும். அதற்குப் பிறகு எட்டு லிட்டராக அந்த அளவு குறையும்,” என்கிறார் அருணின் தாயான 65 வயது மங்கல். “ஒரு லிட்டர் 24-25 ரூபாய் என்கிற விலையில் பால் விற்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் நான்கு கிலோ மாட்டுத் தீவனம் நாங்கள் வாங்க வேண்டும். ஒரு கிலோ 22-28 ரூபாய் ஆகும்,” என்கிறார் அவர்.

சராசரியாக 10 லிட்டர் விற்று ஒருநாளில் 250 ரூபாய் அருணால் ஈட்ட முடியும். “குறைவான விலை மாட்டுத் தீவனம் வாங்கினால் கூட, ஒரு நாளுக்கு 88 ரூபாய் செலவாகும். லாபம் 160 ரூபாய். பசு மாடுகளுக்கு ஆகும் மருத்துவச் செலவை கணக்கில் வைக்காமல் சொல்லியிருக்கிறேன்,” என்கிறார் அவர். “யாருடைய நிலத்திலாவது நான் விவசாயக் கூலியாக வேலை பார்த்தால் கூட ஒரு நாளில் 300 ரூபாய் கிடைக்கும்.”

எருமை மாடுகளை வளர்ப்பது அதிகப் பிரச்சினைகள் கொண்டது என்கிறார் அல்சுண்டைச் சேர்ந்த 28 வயது கரும்பு விவசாயியான பாரத் ஜாதவ். மாடுகள் நான்கைந்து மாதங்களுக்கு பால் சுரக்காத காலம் உண்டு. “வருமானமின்றி அவற்றைப் பராமரிக்க வேண்டும்,” என்கிறார் அவர். “எருமை மாட்டின் பால் லிட்டருக்கு 35 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. எருமை மாடுகள் ஒருநாளில் ஆறு லிட்டருக்கு மேல் பால் கறக்காது.” விலைவாசி ஊசலாட்டம் பாரத்துக்கு துயரை அளிக்கிறது. எனவே அவர் பால் விற்பனையை நிறுத்தி விட்டார். “நான்கு எருமை மாடுகள் இருந்தன. அடிமாட்டு விலைக்கு அவற்றை இரண்டு வருடங்களுக்கு முன் விற்றுவிட்டேன்.”

2001-02-ல் இருந்ததை விட 91 சதவிகிதம் மகாராஷ்டிராவின் பால் உற்பத்தி 2018-19-ல் அதிகரித்திருக்கிறது. 11,655,000 டன்களாகியிருக்கிறது. பால் விவசாயிகள் நல்ல நிலையில் இருக்கும் குஜராத்துடன் ஒப்பிட்டால், 2001-02 தொடங்கி 2018-19ம் வருடத்துக்கு இடைப்பட்ட காலத்தில் 147 சதவிகிதம் பால் உற்பத்தி உயர்ந்திருக்கிறது. 300 தனியார் நிறுவனங்கள் இயங்கும் மகாராஷ்டிரா போலல்லாமல், குஜராத்தில் மொத்தப் பாலையும் ஒரு நிறுவனம் மட்டும்தான் கொள்முதல் செய்கிறது: அமுல் நிறுவனம்.

மஹாராஷ்டிராவின் பால் துறையில் ஏற்பட்டுள்ள சீர்கேட்டிற்கு ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம் என தொழில்துறை தலைவர்கள் கூறுகின்றனர். மேம்பட்ட ஒருங்கிணைப்புக்கான அவர்களின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 2020-ல், முதல்வர் உத்தவ் தாக்கரே ஓர் ஆலோசனைக் குழுவை உருவாக்கினார். அரசுக்கு ஆலோசனை வழங்கவென தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனப் பிரதிநிதிகள் உள்ளடக்கியக் குழு.

The empty shed at Bharat Jadhav's home.
PHOTO • Parth M.N.
Bharat sold all his buffaloes two years ago
PHOTO • Parth M.N.

பாரத் ஜதாவின் வீட்டில் இருக்கும் காலி மாட்டுத் தொழுவம். பாரத் (வலது, பைக் ஓட்டுபவர்) இரண்டு வருடங்களுக்கு முன் எல்லா எருமை மாடுகளையும் விற்றுவிட்டார்

அக்குழுவின் உறுப்பினராக கட்வால் இருக்கிறார். “மூன்று துறைகள் பால் வணிகத்தில் இப்போது இயங்குகின்றன: கூட்டுறவு, அரசு மற்றும் தனியார்,” என்கிறார் அவர். “உற்பத்தியில்  70 சதவிகிதத்துக்கும் அதிகமான பாலை தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. மிச்சத்தை கூட்டுறவு நிறுவனங்கள் வாங்கிக் கொள்கின்றன. அரசின் பங்கு பொருட்படுத்தத்தக்க அளவில் இல்லை. பாலின் விலை 20 ரூபாய்க்கும் கீழே குறையும்போது மட்டும் அரசு தற்காலிகமாகத் தலையிட்டு, விவசாயிகள் தங்களுக்கு எதிராக வாக்களித்துவிடாமலிருப்பதை உறுதி செய்யும் வகையில் சில சலுகைகள் வழங்கும்.” தனியார் பால் பொடி ஆலைகள் பால் விலைகளை கட்டுப்படுத்துவதாக சொல்கிறார் பால் உற்பத்தியாளர் மற்றும் பதனிடுவோர் நலக் கூட்டமைப்பின் செயலாளராகவும் இருக்கும் கட்வால். அந்த அமைப்பில் கூட்டுறவு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் இருக்கின்றன.

தனியார் நிறுவனங்களுடன் நேர்ந்த கசப்பான அனுபவத்தால் மகாராஷ்டிராவின் பால் விவசாயிகள், நவம்பர் 2020-ல் வேளாண் துறையில் தனியாரை அனுமதிக்கவென கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துத் தொடங்கிய விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தனர்.

டிக் டொக் என்கிற பெயரில் ஒரு சிறு டீக்கடை நடத்தும் 29 வயது பால் விவசாயியான ராகுல் கலாண்டே என் கையிலிருந்து பேனாவைச் சுட்டிக்காட்டி,” இதை எவ்வளவு கொடுத்து வாங்கினீர்கள்?” எனக் கேட்டார்.

“ஐநூறு ரூபாய்,” என பதிலளித்தேன்.

“இந்தப் பேனாவின் விலையை யார் நிர்ணயித்தது?” எனக் கேட்டார்.

“இதை உற்பத்தி செய்த நிறுவனம்,” என்றேன்.

“ஒரு நிறுவனம், அது தயாரிக்கும் பேனாவை எந்த விலைக்கு விற்க வேண்டுமென முடிவெடுக்க முடிகிறபோது, கடின உழைப்பைச் செலுத்தி நாங்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கான விலையை எங்களால் ஏன் நிர்ணயிக்க முடியவில்லை? என்னுடைய பொருளின் விலையை ஏன் ஒரு தனியார் நிறுவனம் முடிவு செய்கிறது?” எனக் கேட்கிறார் கலாண்டே. “இங்கு பால் 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு (2020-ன் கோவிட் ஊரடங்கின்போது), ஒரு லிட்டருக்கு 17 ரூபாயாக இருந்தது. ஒரு பிஸ்லெரி நீர் பாட்டில் கூட 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஊசலாட்டத்திலேயே எப்படி நாங்கள் இருக்க முடியும்?”

Rahul Galande says farmers should get to decide the prices of the milk they produce.
PHOTO • Parth M.N.
Cans of milk at Arun Jadhav's shop. More than 70 per cent of the milk produced in Sangli is procured by private companies
PHOTO • Parth M.N.

இடது: தாங்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கான விலையை விவசாயிகளே தீர்மானிக்க வேண்டும் என்கிறார் ராகுல் கலாண்டே. வலது: அருண் ஜாதவின் கடையில் இருக்கும் பால் குப்பிகள். சங்லியில் தயாரிக்கப்படும் பாலில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமான அளவை தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன

பால் விவசாயிகள் பிழைக்கவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கையில் வேளாண் தொழில் மட்டும் செழிப்பாக இருப்பதாக சொல்கிறார் அருண். “மாட்டுத் தீவனத்தின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றின் விலையும் அதிகரிக்கிறது. ஆனால் அந்த விதி பாலுக்கு மட்டும் பொருந்துவதில்லை.”

ஓர் உத்தரவாதமான விலை இல்லாததால் பால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர் என்கிறார் கலாண்டே. “ஏன் விவசாயிகள் கரும்புகளை விளைவிக்கின்றனர்,” எனக் கேட்கும் அவரே அக்கேள்விக்கு பதிலும் அளிக்கிறார். “ஏனெனில் அதற்கென உத்தரவாதமான சந்தையும் விலையும் இருக்கின்றன. பாலுக்கும் எங்களுக்கு அத்தகைய உத்தரவாதம் வேண்டும். அரசின் ஆதார விலை கொடுக்கப்பட வேண்டும். வேளாண் சட்டங்களால் அதைத்தான் விவசாயிகள் இழக்கவிருந்து தில்லியில் போராடினார்கள். எந்தக் கட்டுப்பாடும் இன்றி தனியார் நிறுவனங்களை அனுமதித்தால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கும் மகாராஷ்டிர பால் விவசாயிகளின் கதிதான் நேரும்.”

கூட்டுறவுத் துறையில் தலையிட்டு பால் விலைகளை அரசு சரி செய்யலாம் என்கிறார் நவாலே. “ஆனால் தனியார் நிறுவனங்கள் செய்வதைப் பற்றி அது ஒன்றுமே சொல்வதில்லை,” என்கிறார் அவர். “பெரும்பாலான பால் உற்பத்தியை தனியார்தான் கொள்முதல் செய்கிறது என்பதாலும் விவசாயிகளுக்கென அரசு செய்யக்கூடிய உதவிகள் குறைவாகவே இருக்கின்றன. பாலை கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்கள் அவற்றின் செல்வாக்கை  பயன்படுத்துகின்றன. விலைகள் ஏறாத வண்ணம் பார்த்துக் கொள்கின்றன. சந்தையை அவை கட்டுப்படுத்தி வானளவு லாபங்களை ஈட்டுகின்றன.”

மார்ச் 2020-ன் கோவிட் ஊரடங்குக்கு முன், ஒரு லிட்டர் பசும்பாலை 29 ரூபாய்க்கு விவசாயிகள் விற்றுக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகிறார் நவாலே. “மும்பையில் நீங்கள் அதை 60 ரூபாய்க்கு வாங்கினீர்கள்,” என்கிறார் அவர். “ஊரடங்குக்குப் பிறகு, விலைகள் சரிந்தன. விவசாயிகள் பசும்பாலை 17 ரூபாய்க்கு விற்கும் நிலை நேர்ந்தது. ஆனால் நீங்கள், மும்பையில் 60 ரூபாய்க்கு தொடர்ந்து கொள்முதல் செய்கிறீர்கள். இத்தகைய முறையால் யாருக்கு ஆதாயம் ஏற்படுகிறது? நிச்சயமாக விவசாயிக்கு இல்லை.”

தமிழில் : ராஜசங்கீதன்

Parth M.N.

২০১৭ সালের পারি ফেলো পার্থ এম. এন. বর্তমানে স্বতন্ত্র সাংবাদিক হিসেবে ভারতের বিভিন্ন অনলাইন সংবাদ পোর্টালের জন্য প্রতিবেদন লেখেন। ক্রিকেট এবং ভ্রমণ - এই দুটো তাঁর খুব পছন্দের বিষয়।

Other stories by Parth M.N.
Translator : Rajasangeethan

রাজাসংগীতন চেন্নাইবাসী লেখক। এক প্রখ্যাত তামিল খবরের চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করেন।

Other stories by Rajasangeethan