"அனைத்து 32 தொழிற்சங்கங்களும் நவ்ஜவான் [இளைஞர்களை] எந்த தீங்கும் விளைவிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றன. யாரும் எந்த சேதத்தையும் ஏற்படுத்த மாட்டார்கள். யாரும் மோத மாட்டார்கள். நமது இந்த போராட்டத்தை யாரும் கெடுக்கக்கூடாது, ”என்று ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டன. டெல்லி காவல்துறையினர் நமக்கு ஒதுக்கிய அதிகாரபூர்வ வழியை அனைவரும் பின்பற்றுவார்கள். இந்த உலகம் காண நாம் அமைதியாக அணிவகுத்துச் செல்வோம், ”என்று ஒரு டிராக்டரில் வைக்கப்பட்ட ஒலிபெருக்கியின் மீது தலைவர் கூறினார்.
ஜனவரி 26 ஆம் தேதி காலை 9:45 மணியளவில், முண்ட்கா தொழிற்துறை பகுதி மெட்ரோ நிலையத்தை கடந்து டிராக்டர்களின் படை நகர்ந்து கொண்டிருந்தபோது, ஒலிபெருக்கி உயிர் கொண்டது. தலைவர்களின் வேண்டுகோளை அனைவரையும் நிறுத்தி கேட்கும்படி தன்னார்வலர்கள் ஒரு மனித சங்கிலியை உருவாக்க முன்வந்தனர்.
மேற்கு டெல்லியில் உள்ள திக்ரியிலிருந்து காலை 9 மணிக்கு ‘கிசான் மஜ்தூர் ஏக்தா ஜிந்தாபாத்’ (விவசாய தொழிலாளர் ஒற்றுமை வாழ்க) ' கோஷங்களுக்கிடையில் பேரணி தொடங்கியது. இந்த டிராக்டர்களின் படை தவிர, பல போராட்டக்காரர்களும் தன்னார்வலர்களும் நடைப்பயணமாக அணிவகுத்துச் சென்றனர் - சிலர் தேசியக் கொடியைப் பிடித்துக் கொண்டனர், மற்றவர்கள் தங்கள் வேளாண் தொழிற்சங்கக் கொடிகளை ஏந்திச்சென்றனர். "நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருப்பதால், காலில் பயணிப்பவர்களை டிராக்டர்களில் ஏறுமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்று ஒலிபெருக்கியில் பேசும் தலைவர் கூறினார். ஆனால் நடந்து சென்றவர்களில் பலர் நடைப்பயணத்தையே தொடர்ந்தனர்.
அவர்களின் படை சீராக முன்னேறும்போது, முண்ட்கா பகுதியில் வசிக்கும் பலரும் அவர்கள் செல்வதைப் பார்க்க நின்றனர்; சாலைகளின் ஓரங்களில் அல்லது பிரியாயத்தில் நின்று கொண்டுப் பார்த்தனர். பலரும் ஈடு இணையற்ற அணிவகுப்பை தங்கள் தொலைபேசிகளில் பதிவுச்செய்தனர், சிலர் கைக்காட்டினர்; மற்றவர்கள் ’தோல்’ இசைக்கருவியின் இசைக்கு நடனமாடினர்.
முண்ட்காவில் வசிப்பவர்களில் ஒருவர், 32 வயதான விஜய் ராணா. அவர் விவசாயிகள் அவரது இடத்தை கடந்தபோது, அவர்கள் மீது சாமந்தி இதழ்களை தூவ வந்திருந்தார். அவர் கேட்டார், "அரசியல்வாதிகளை மலர்களால் வரவேற்கும்போது, விவசாயிகளை ஏன் அப்படி வரவேற்கக்கூடாது?.” ராணா ஒர் விவசாயிதான், முண்ட்கா கிராமத்தில் 10 ஏக்கரில் கோதுமை, நெல் மற்றும் சுரைக்காய் பயிரிடுகிறார். "விவசாயிகள் வீரர்களுக்கு இணையானவர்கள்," என்று அவர் கூறினார். “இந்த நாட்டின் வீரர்கள் எல்லைகளை விட்டு வெளியேறினால், இந்த தேசத்தை யார் வேண்டுமானாலும் கைப்பற்றலாம். இதேபோல், விவசாயிகள் இல்லை என்றால், நாடு பட்டினி கிடக்கும்.”
இந்த மிகப்பெரிய டிராக்டர் பேரணி - இந்தியாவின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு - டெல்லியின் மூன்று முக்கிய எல்லைப் புள்ளிகளான திக்ரி (மேற்கில்), சிங்கு (வடமேற்கு) மற்றும் காசிப்பூர் (கிழங்கில்) இருந்து 32 தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டணியால் அழைக்கப்பட்டது. 2020 நவம்பர் 26ம் தேதி முதல் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தங்கியுள்ள அனைத்து தளங்களில் இருந்தும் அழைக்கப்பட்டனர்.
திக்ரியிலிருந்து சுமார் 7,000 டிராக்டர்கள் தொடங்க வாய்ப்புள்ளது என்று குடியரசு தினத்திற்கு முன்பு செய்தியாளர் கூட்டத்தில் காவல்துறையினர் தெரிவித்தனர். பார்தியா கிசான் யூனியனின் (ஏக்தா உக்ரஹான்) செய்தி ஒருங்கிணைப்பாளர் ஷிங்காரா சிங் மான் என்னிடம் கூறினார், அவரது சங்கத்திலிருந்து குறைந்தது 6,000 டிராக்டர்கள் திக்ரியிலிருந்து அணிவகுப்பில் பங்கேற்றன. பஞ்சாப் கிசான் யூனியனின் மாநிலக் குழு உறுப்பினர் சுக்தர்ஷன் சிங் நாட் என்னிடம் கூறியபோது, அவர்கள் பங்கேற்ற டிராக்டர்களின் எண்ணிக்கையை கணக்கிட முடியாது என்றார். பேரணியை அமைதியாக நடத்துவதே அவர்களின் முக்கிய நோக்கம் என்றார். காலை 8:45 மணியளவில் அவர்களின் தொழிற்சங்கத்திலிருந்து அனைத்து டிராக்டர்களும் திக்ரியில் வரிசையாக நின்றன என்று அவர் கூறினார்,. கடைசியாக சில டிராக்டர்கள் திரும்பிய நேரத்தில், மாலை 6 மணி ஆகிவிட்டது. எனவே, யாராலும் எண்ண முடியவில்லை.
திக்ரியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்காக டெல்லி காவல்துறையினர் சுற்றிவளைத்த வழித்தடம் நாங்லோய், நஜாப்கர், ஜரோடா கலன், கே.எம்.பி எக்ஸ்பிரஸ்வே (டெல்லியின் மேற்கு புற எல்லை) வழியாகவும், பின்னர் திக்ரிக்கு திரும்பவும் - மொத்தம் 64 கிலோமீட்டர் அனுமதித்தது. ஆரம்பத்தில், திக்ரி, சிங்கு மற்றும் காசிப்பூர் ஆகிய இடங்களிலிருந்து தொடங்கி மூன்று வழித்தடங்களை டெல்லி காவல்துறை வரைபடமாக்கியது. இருப்பினும், ஷிங்காரா சிங் மான் இயல்பாக, காவல்துறையினருக்கும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் இடையே ஒன்பது வழிகள் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டன என்றார்.
ஆனால் நண்பகலில், பாலத்திற்கு கீழே, நாங்லோய் செளக்கில் முழு குழப்பம் ஏற்பட்டது. நஜாப்கர் - நியமிக்கப்பட்ட பாதையில் அடுத்த இடத்திற்குச் செல்ல வலதுபுறம் திரும்புவதற்குப் பதிலாக, சிலரும், சிறு விவசாயிகளும் சிறு குழுக்களும் நேராக பீராகரி செளக்கை நோக்கி தொடர்ந்து சென்று, மத்திய டெல்லியை அடைய வற்புறுத்தினர். தொண்டர்களும் ஒருங்கிணைப்பாளர்களும் நஜாப்கர் நோக்கி சரியான திருப்பத்தை எடுக்க பேரணியை தொடர்ந்து வழிநடத்தினர்.
சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, டிராக்டர்களில் ஒரு விவசாயி குழு நாங்லோய் செளக்கில் உள்ள தடுப்புகளை உடைத்தனர், இந்த டிராக்டர்களில் சிலவற்றில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர்; கோஷமிட்டனர். உள்ளூர்வாசிகள் தங்கள் மொட்டை மாடிகளில் இருந்து குழப்பத்தை கவனித்தனர், பலரும் இதனை பார்க்க சாலையில் வந்தனர். காவல்துறையினர் குற்றவாளிகளை கண்காணிப்பதாக அறிவித்தனர். நிலைமையை பதிவு செய்ய காவல்துறையினர் ஒரு ட்ரோனை அனுப்பினர்.
இந்த குழப்பங்களுக்கு மத்தியில், டெல்லியைச் சேர்ந்த தன்னார்வலர் குர்தியால் சிங், நாங்லோய் செளக்கின் ஒரு மூலையில் கட்டப்பட்ட ஒரு மேடைக்குச் சென்று, மீண்டும் அனைவரையும் நஜாஃப்கர் செல்லும் சாலையில் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். "நம் கோரிக்கைகள் கேட்கப்பட வேண்டுமென்றால், நாம் சரியான திசையில் செல்ல வேண்டும் [டெல்லி காவல்துறையால் நியமிக்கப்பட்ட வழியைப் பின்பற்றுங்கள்]. இந்த அணிவகுப்பை அமைதியுடனும் அன்புடனும் நடத்துமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.
பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் சேர்ந்துள்ளனர். அருகிலுள்ல பகுதிகளிலிருந்தும் பலர் இணைந்திருந்தனர். நியமிக்கப்பட்ட வழியைப் பின்பற்றி ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்குமாறு அனைவரையும் நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தோம். ஆனால் எல்லோர் மீது ஒரு கண் வைத்திருப்பது கடினம்”, என்று திக்ரியில் முகாமிட்டவர்களில் பஞ்சாப் கிசான் யூனியனின் மாநிலக் குழு உறுப்பினர் ஜஸ்பீர் கவுர் நாட் பின்னர் என்னிடம் கூறினார்.
நாங்லோய் செளக்கில் நண்பகலில் இடையூறு ஏற்பட்ட போதிலும், அளிக்கப்பட்ட பாதையில் அமைதியான அணிவகுப்பு நடந்தது. பஞ்சாப் கிசான் யூனியன், அகில இந்திய கிசான் சபா, மற்றும் பாரதிய கிசான் யூனியன் மற்றும் மற்ற தொழிற்சங்கங்கள் ஆகியவற்றுடன் இணைந்த விவசாயிகளின் டிராக்டர்கள் இதில் அடங்கும். பாரதிய கிசான் யூனியனின் (ஏக்தா உக்ரஹான்) மற்றொரு குழு எதிர் திசையில் இருந்து நஜாப்கர் சாலையில் இணைந்தது. அவர்கள் கே.எம்.பி அதிவேக நெடுஞ்சாலையை எடுத்துக் கொண்டனர் (நியமிக்கப்பட்ட பாதை வட்டமானது - திக்ரியிலிருந்து ஒருவர் நாங்லோய் செளக் அல்லது கே.எம்.பி ஆர்மம் வழியை எடுத்து அதே புள்ளிகளை அடையலாம்).
ஒரு டிராக்டரில் நாங்லோய்-நஜாப்கர் சாலை வழியாகச் சென்ற பலரில், ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தின் சுரேவாலா கிராமத்தைச் சேர்ந்த பூனம் பட்டர் (35) என்பவரும் ஒருவர். அவர் தனது குடும்பத்துடன் ஜனவரி 18ம் தேதி திக்ரிக்கு வந்தார். அப்போதிருந்து, அவர்கள் பகதூர்கரில் (திக்ரி எல்லைக்கு அருகில்) நிறுத்தப்பட்டுள்ள தங்கள் தள்ளுவண்டியில் தங்கியுள்ளனர். இந்த அணிவகுப்பில் பங்கேற்க மட்டுமே டிராக்டர் ஓட்ட கற்றுக்கொண்டதாக கூறும் பூனம் ஓர் இல்லத்தரசி.
“ராஜ்பாத்தில், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று, விவசாயிகள் தங்கள் வயல்களில் வேலை செய்வது குறித்து நாடகங்கள் இயற்றப்படுகின்றன. ஆனால் இதுதான் உண்மை. இந்த பேரணியின் மூலம் விவசாயிகள் தாங்கள் இந்த நாட்டிற்கு உணவு வழங்குபவர்கள் என்பதை உண்மையிலேயே காட்டுகின்றனர், ”என்று அவர் கூறினார். “போராட்டம் தொடரும் வரை நான் இங்கேயே இருப்பேன். எல்லோரும் இணைந்தால், அதுதான் சரியானதும் பாராட்டத்தக்கதும் ஆகும்.”
மற்ற டிராக்டர்களில் பெரும்பாலானவை ஆண்களால் இயக்கப்படுகின்றன, அதே நேரத்தில் பெண்கள் குழுக்கள் தள்ளுவண்டிகளில் இருந்தனர். "நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல என்பதைக் காட்ட விரும்புகிறோம். எங்கள் ஒற்றுமையை யாராலும் அசைக்க முடியாது என்பதை நாங்கள் மோடி அரசாங்கத்திற்குக் காட்ட விரும்புகிறோம், ”என்று பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தின் மெஹ்லான் கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்விந்தர் கவுர், தள்ளுவண்டிகளில் ஒன்றில் இருந்தவாறு கூறுகிறார். “இந்த கறுப்பு வேளாண் சட்டங்களை எதிர்த்து நாங்கள் இங்கு வந்துள்ளோம். இந்த சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நாங்கள் திரும்ப மாட்டோம். நாங்கள் எங்கள் போராட்டத்தை அமைதியாக முன்னெடுப்போம், எந்தத் தீங்கும் செய்ய மாட்டோம்.”
விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே அவரும் பிற விவசாயிகளும் எதிர்க்கும் மூன்று சட்டங்கள். 2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன.
விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் மீது இன்னும் பெரியளவில் அதிகாரம் கொண்ட பெரிய நிறுவனங்களுக்கான இடத்தை விரிவுபடுத்துவதன் மூலம் விவசாயிகள் அனைவரும் இந்த மூன்று சட்டங்களையும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்துவதாகவே பார்க்கின்றனர். இந்த சட்டங்கள் விவசாயிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி), விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்கள் (ஏ.பி.எம்.சி), மாநில கொள்முதல் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய முக்கிய அம்சங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. இந்திய அரசியலமைப்பின் 32 வது பிரிவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி, அனைத்து குடிமக்களுக்கும் சட்ட ரீதியான உதவிக்கான உரிமையை முடக்குவதால் ஒவ்வொரு இந்தியனும் பாதிக்கும் என்று இந்த சட்டங்கள் விமர்சிக்கப்படுகின்றன.
ஜஸ்விந்தர் கவுர் நவம்பர் 26 முதல் திக்ரியில் இருக்கிறார். இந்த காலகட்டத்தில், மெஹ்லான் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு இரண்டு முறை மட்டுமே திரும்பிச் சென்றுள்ளார். “நான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் போராட்டம் நடத்தி வருகிறேன். முதலில், எங்கள் கிராமங்களில் போராட்டம் நடத்தினோம். பின்னர், நாங்கள் பாட்டியாலா மாவட்டத்திற்கு சென்று ஐந்து நாட்கள் போராட்டம் நடத்தினோம்., ”என்று அவர் கூறினார். "இந்த குளிரில் ஒரு தாயின் மகன் இங்கு போராட்டம் நடத்தும்போது, அந்த தாய் எப்படி தன் வீட்டிற்குள் உட்கார முடியும்?" என்று அவர் கேட்டார். அவர் குளிர் மற்றும் கோவிட் -19 காரணமாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் போராட்டத் தளங்களிலிருந்து திரும்பிச் செல்ல ‘வற்புறுத்தப்பட வேண்டும்’ என்று தலைமை நீதிபதியின் அறிக்கையை (ஜனவரி 11) குறிப்பிட்டு கேட்கிறார்.
சங்ரூரில், அவரது குடும்பம் ஏழு ஏக்கர் விளைநிலங்களில் முக்கியமாக கோதுமை மற்றும் நெல் பயிரிடுகிறது. "நாங்கள் பல [பிற] பயிர்களையும் வளர்க்கலாம்," என்று அவர் கூறினார். “ஆனால், எம்எஸ்பி விகிதங்கள் கோதுமை மற்றும் நெல்லுக்கு மட்டுமே நிர்ணயிக்கப்படுகின்றன. எனவே, நாங்கள் மற்ற பயிர்களை பயிரிட மாட்டோம்.” ஒருமுறை, அவரது குடும்பம் பட்டாணியை வளர்ந்தது என்று அவர் நினைவுப்படுத்தி கூறுகிறார். “நாங்கள் அந்த பட்டாணியை கிலோவுக்கு இரண்டு ரூபாய்க்கு விற்றோம். அதன் பிறகு, நாங்கள் கோதுமை மற்றும் நெல் தவிர வேறு எந்த பயிர்களையும் பயிரிட்டதில்லை. ஆனால் இவற்றில் கூட எம்.எஸ்.பி-க்கு அரசு உத்தரவாதம் அளிக்கவில்லை என்றால், நாங்கள் எங்கு செல்வோம்?”.
அதே தள்ளுவண்டியில் 24 வயதான சுக்வீர் சிங் இருந்தார், அவரும் மெஹலன் கிராமத்திலிருந்து வந்திருந்தார், அங்கு அவரது குடும்பத்தினர் ஆறு ஏக்கர் விவசாய நிலங்களை வைத்திருக்கிறார்கள். "ஒரு குவிண்டால் மக்காச்சோளத்திற்கு 1,800 ரூபாய் நிர்ணயித்ததாக அரசாங்கம் கூறுகிறது," என்று அவர் கூறினார். “ஆனால் நான் அதை ஒரு குவிண்டாலுக்கு 600 ரூபாயக்கு விற்றிருக்கிறேன். இந்த விகிதத்திற்கு மேல் எங்கள் கிராமத்தில் உள்ளவர்களிடம் அதிகமாக விற்று இருக்கிறீர்களா என்று கேட்டு பாருங்கள். இதுதான் எங்கள் நிலைமை. எம்.எஸ்.பி மீது அரசாங்கம் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்றால் என்ன ஆகும்? அதனால்தான் எங்கள் உரிமைகளை கோருவதற்காக நாங்கள் சாலைகளில் வந்துள்ளோம்."
பாரதிய கிசான் யூனியனின் (ஏக்தா உக்ரஹான்) இரு உறுப்பினர்களான ஜஸ்விந்தர் மற்றும் சுக்வீருடன் நான் பேசிக் கொண்டிருந்தபோது, வேறொரு டிராக்டரிலிருந்து ஒருவர் தங்கள் தொழிற்சங்கத் தலைவர் அனைவரையும் திரும்பி வரச் சொல்கிறார் என்று அவர்களிடம் கூற வந்தார்.
'நாங்கள் எங்கள் போராட்டத்தை அமைதியாக முன்னெடுப்போம், எந்தத் தீங்கும் செய்ய மாட்டோம்' என்றார். கீழே இடது: பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுக்வீர் சிங், 'சிலர் தவறு செய்ததால் நாங்கள் திரும்பி வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டோம்' என்றார். கீழ் வலது: கனன் சிங், 'மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய நாங்கள் இங்கு வந்தோம்' (புகைப்படங்கள்: நவீன் மேக்ரோ)
மதியம் 2.30 மணியளவில், நான் அவர்களின் தள்ளுவண்டியில் இருந்து வெளியேறும்போது, அவர்கள் தங்கள் முகாம்களுக்குத் திரும்புவதற்காக தென்மேற்கு டெல்லியில் உள்ள ஜரோடா கலான் குடியிருப்பு பகுதிக்கு அருகே யு-டர்ன் எடுத்தனர். குடியிருப்பு பகுதி நாக்லோய்-நஜாப்கர் சாலையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதற்குள், திக்ரியிலிருந்து மொத்தம் 27 கிலோமீட்டர் தூரத்திற்கு டிராக்டர் படை சென்றது.
மதியம் சுமார் 12 மணியளவில், பிரிந்து செல்லும் டிராக்டர்களில் குறைந்தது நான்கு அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையில் முன்னேறுவதை நான் கண்டேன். அப்போது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் பிற்பகல் 2 மணியளவில், சிங்கு மற்றும் காசிப்பூரில் பிரிந்த விவசாயிகள் மற்றும் மற்ற குழுக்கள் ஐ.டி.ஓ மற்றும் செங்கோட்டையை அடைந்துவிட்டதாக செய்தி வரத் தொடங்கியபோது, திக்ரியில் உள்ள சில குழுக்களும் முன்னேறிச் சென்று செங்கோட்டைக்குச் செல்ல வலியுறுத்தின. அப்போதுதான் காவல்துறையினருக்கும் இந்த குழுக்களின் உறுப்பினர்களுக்கும் இடையே மோதல்கள் தொடங்கின. காவல்துறையினர் குறுந்தடிகள் மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகள் கொண்டும் பதிலடி கொடுத்தனர். இது மாலை 4:30 மணி வரை தொடர்ந்தது.
மாலை 4 மணியளவில் நாங்லோய் செளக்கிற்கு அருகில் இருந்த பாரதிய கிசான் யூனியனின் (ஏக்தா உக்ரஹான்) டிராக்டர்கள். கே.எம்.பி எக்ஸ்பிரஸ்வே ஆர்மில் இருந்து திக்ரியில் உள்ள தங்கள் முகாம்களுக்கு திரும்ப முடிவு செய்தார்.
ஜரோடா கலன் குடியிருப்பு பகுதிக்கு அருகே தனது டிராக்டரில் வாகன நெரிசலில் சிக்கிய, சங்ரூர் மாவட்டத்தின் ஷெர்பூர் தொகுதியைச் சேர்ந்த 65 வயதான கனன் சிங் கூறுகிறார், “நாங்கள் இப்போது இரண்டு மாதங்களுக்கும் மேலாக சாலைகளில் வசித்து வருகிறோம். மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்ய நாங்கள் இங்கு வந்திருந்தோம். அது நடந்தால் மட்டுமே நாங்கள் பஞ்சாப்பிற்கு புறப்படுவோம். ”
இரவு 8 மணியளவில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் ஒன்றிய முன்னணியான சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் பிற விவசாய தலைவர்கள் வன்முறைக்கும் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று, அந்த சம்பவங்களை கடுமையாக கண்டித்தனர். "இன்று நடந்த விரும்பத்தகாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகளை நாங்கள் கண்டிக்கிறோம், வருந்துகிறோம், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களிடமிருந்து எங்களை பிரித்துக் கொள்கிறோம். எங்கள் எல்லா முயற்சிகளும் இருந்தபோதிலும், சில அமைப்புகளும் தனிநபர்களும் போராட்ட வழியை மீறி கண்டிக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டுள்ளனர். சமூக விரோத சக்திகள் ஊடுருவல் இல்லையெனில், இது அமைதியான போராட்டமாக இருந்திருக்கும், ”என்று அவர்கள் ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.
"தவறு செய்த சிலரால் நாங்கள் திரும்பி வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டோம்", என்று சுக்வீர் பின்னர் என்னிடம் கூறினார். “அவர்கள் எங்கள் மக்கள் அல்ல. இதுபோன்ற எதையும் செய்ய நாங்கள் டெல்லிக்கு வரவில்லை. இந்த கருப்பு சட்டங்களை ரத்து செய்ய மட்டுமே நாங்கள் வந்துள்ளோம். ”
"நாளை அரசாங்கம் இந்த சட்டங்களை ரத்து செய்தால் நாங்கள் கிளம்பிவிடுவோம்”, என்று பஞ்சாப் கிசான் யூனியனின் மாநில குழு உறுப்பினர் ஜஸ்பீர் கவுர் நாட் கூறினார். "நாங்கள் ஏன் அப்போதும் தங்கப் போகிறோம்? இந்த கருப்பு சட்டங்களை ரத்து செய்வதற்காகத்தான் நாங்கள் இங்கு போராட்டம் நடத்தி வருகிறோம்.”
அட்டைப்படம்: சத்யராஜ் சிங்தமிழில்: ஷோபனா ரூபகுமார்